Pollachi nasan
பொள்ளாச்சி நசன்
தமிழ்நாடு - சிதம்பரத்தில் 15-9-1952 இல் பிறந்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விலங்கியல் முதுகலைப் பட்டம் பெற்றேன். வேலை கிடைக்காத 6 ஆண்டுக் காலத்தில் பல்வேறு பணிகளைச் செய்ததுதான் எனக்கான நுட்பத்தின் வாயில்களாக அமைந்தன. அடித்தட்டில் உள்ள மக்களுக்காக உதவ வேண்டும் என்ற எண்ணத்தை இவை தந்தன.
ஆசிரியருக்கான பட்டப்படிப்பை 1980 இல் முடித்ததால் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக பதவி ஏற்றேன். பொழுது போக்காக விடுதலைப் பறவை என்ற உருட்டச்சு இதழைத் தொடங்கினேன். விடுதலைப் பறவை இதழ்வழி திரு வல்லிக் கண்ணன் நண்பரானார். இதழ் உருவாக்குவதற்கான - உருட்டச்சுக்கான இயந்திரம் - என்னால் செய்யப்பட்ட எளிமையான இயந்திரமே. அப்பொழுது எனக்கு வந்த மாற்று இதழ்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். சேகரித்தேன். அறையின் அளவு பெரிதாகிக் கொண்டே இருந்தது. படித்தவை, தொகுத்தவை என்னுள் இதழ்களுக்கான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உந்துதலை அளித்தது. அதுவே சிற்றிதழ்ச் செய்தி என்ற இருமாத இதழ் தொடங்கவும் - தற்பொழுது வெளியிடுகிற தமிழம் வலையின் - இதழ்கள் பகுதி - தொடங்கவும் அடித்தளமாயின.
தற்பொழுது ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன், இந்த நிறுவனத்தின் வழியாகப் பெற்ற விரிவான, நுட்பமான, உளவியல் வழியிலான - கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள் - பாடத்திட்டங்கள் ஆய்வு - ஆராய்ச்சி - உருவாக்குதல் - என்கிற தொடர் உழைப்பே - நம் தமிழ் மக்களுக்கான பாடத்திட்டத்தை ஆக்குவதற்கான ஊக்கத்தையும், வழிகாட்டுதல்களையும் தந்தது, இந்தப் பட்டறிவே - தமிழம் இணைய தளத்தில் - கல்வி ஆராய்ச்சிகள் பகுதிகளையும், கல்வி வினாக்கள், கல்வித் தொழில் நுட்பக் கருவிகள் உருவாக்குதல் - ஆகியவை பற்றி எழுதுவதற்குப் பின்புலமாக இருந்தன.
2003 ஆகஸ்டில் தமிழம் வலை ( www.thamizham.net ) தொடங்கப்பட்டது. இணைய தளத்தின் பக்கங்கள் - வடிவமைப்பிற்காக அலைந்து அலைந்து - பொருளும் - நேரமும் வீணாவது கண்டு - நாமே ஏன் இணையப் பக்கங்களை வடிவமைக்கக்கூடாது - என்ற வினாவோடு தேடிய பொழுது - தமிழில் திருநாவுக்கரசு எழுதி - நர்மதா பதிப்பகம் வெளியிட்ட ரூ35 க்கான HTML வடிவமைப்பது எப்படி என்ற புத்தகமே - என் ஆசிரியராக இருந்து என் இணையதள வடிவமைப்பைத் தொடங்கி வைத்தது. ஒவ்வொரு 20 நாள்களிலும் தொடர்ச்சியாக இடைவிடாது புதிய செய்திகளைத் திரட்டி அதை இணையத்தில் இணைத்து வந்தேன். ஒவ்வொரு இரவும் நள்ளிரவு 2 - 3 மணிவரை இயங்க வேண்டியதாயிற்று. சோர்வு ஏற்படும் பொழுதெல்லாம் எனக்கு வருகிற மின்அஞ்சல்கள் அன்போடு என்னை ஊக்குவிக்க - இணையதளத்தின் பயணம் - மேலும் மேலும் முனைப்போடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
1999 களில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள் தியாகு அவர்களின் முயற்சியால் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டன. தமிழின் மீது கொண்ட பற்றுதலாலும், தமிழகத்தில் தமிழ் புறக்கணிக்கப் படுகிறதே என்கிற வேதனையாலும் தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளியை பொள்ளாச்சி சூளேசுவரன்பட்டியில் தொடங்கினேன். இன்றுவரை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஆண்டு 150 மாணவரக்கள் படிக்கிறார்கள். இங்கு படிக்கும் முதல் வகுப்பு மாணவர் தமிழ்ச் செய்தித்தாளை அந்த ஆண்டு இறுதியில் படிப்பார். இந்த மாணவர்களிடம் கண்டறிகிற புதிய கண்டுபிடிப்புகள் - கல்வி ஆய்வுகள் - pdf கோப்புகளாக்கப்பட்டு தமிழம் வலையில் இணைக்கப்படுகிறது.
என்னைப் பற்றி நானே எழுதிய இந்த வரிகள் - உங்களை ஊக்குவித்து உங்களையும் - தொடர்ச்சியாக இயங்க வைக்க உதவுமானால் நான் மிகவும் மகிழ்வேன். தமிழம் வலை - என் கண்டறிதல்கள் அனைத்தையும் பதிவு செய்கிறேன். யார் வேண்டும்ானாலும் எதை வேண்டுமானாலும் வலையிறக்கிப் பயன்படுத்தலாம். என் அனுமதி எதையும் எதிர்பார்க்க வேண்டாம். இது என் அன்பான வேண்டுகோள்.
எனது முழுப்பெயர் - மணிப்பிள்ளை நடேசன் - (ம.நடேசன்) என் பெயரில் உள்ள "டே" எழுத்தை நானே எடுத்துக் கொண்டேன். பெயரிலும் என்னை "டே" என்று அழைக்க வேண்டாம் என்பதற்காகவே - ஆகவே தான் - பொள்ளாச்சி நசன் -