பரிகம் (யோகம்)
இந்திய சோதிடத்தில் பரிகம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பத்தொன்பதாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 240° 00' தொடக்கம் 253° 20' வரை "பரிகம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பரிகம்" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "பரிகம்" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.
சமசுக்கிருத மொழியில் பரிகா (Parigha) என்பது இரும்புச் சட்டம் என்னும் பொருள் அமைந்தது. மங்கலமானது அல்ல எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் சனி. ஆட்சித் தேவதை விசுவகர்மன்.[1]