பாஞ்சாலக்குறிச்சி கோட்டை

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் ஊருக்கு வடக்கே இரண்டு கல் தொலைவில் இருந்த ஒரு தரைக் கோட்டையாகும்.

திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் உள்ள பாஞ்சாலங்கறிச்சி பழைய கோட்டையின் படம்
பாஞ்சாலக்குறிச்சி புதிய கோட்டை

இந்தக் கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரும், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு உயிரிழந்த வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோர் வாழ்ந்த கோட்டையாகும். இது 35 ஏக்கருக்குமல் பரப்பளவு கொண்டது. இந்தக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி ஊருக்கு மையத்தில் அமைந்திருந்தது. இந்தக்கோட்டை ஐந்நூறு அடி நீளமும், முந்நூறு அடி அகலமும் கொண்டதாக இருந்தது. இந்தக்கோட்டையின் முதன்மைவாயில் தெற்குநோக்கி இருந்தது. இந்த கோட்டையின் சுவர்கள் மண்ணால் கட்டப்பட்டவை ஆகும். இது கீழே அகலமாகவும், மேலே போகப்போக சரிவாகவும் சுமார் பனிரெண்டு அடி உயரத்துடனும், அடிப்பாகத்தின் அகலம் சுமார் பதினைந்து அடியும் உச்சியில் மூன்று அடியும் அகலம் கொண்டதாக இருந்தது. இக்கோட்டை இரட்டைச் சுவர்களாக கட்டப்பட்டு இடையில் கம்பு, உமி, வரகு, வைக்கோல் முதலியவற்றால் அடைக்கப்பட்டதாக இருந்தது. இதனால் கோட்டைச்சுவரை எளிதில் உடைக்க இயலாது. கோட்டையின் சுவர் வெளிப்புறம் செங்குத்தாகவும் உட்புறம் அதிகச்சரிவாகவும் கட்டப்பட்டிருந்தது. கோட்டையின் நான்கு மூலைகளிலும் கொத்தளங்கள், நடுவில் நடுவில் அலங்கங்களும், சிறுசிறு கொத்தளங்களும் இருந்தன. இந்த வெளிக்கோட்டைக்கு உள்ளே ஒரு காரைக்கோட்டையும் இருந்தது. வெளிக்கோட்டையைச் சுற்றி ஒரு இலந்தை முள்வேலியும் இருந்தது. இது ஆஙகிலேயர்களால் அப்போது தகர்க்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. தற்போது இக்கோட்டையின் அடிபாகம் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த எஞ்சிய அடிப்பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புதிய கோட்டை தொகு

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் வடிவமைப்பை ஒத்த கோட்டையை பழைய கோட்டைக்கு அருகில் 1974 இல் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி ஆறு ஏக்கர் பரப்பளவில் எழுப்பினார். இந்தக்கோட்டை கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி கோயில் சுற்றிலும் மதில்சுவர் போன்றவற்றுடன் கட்டப்பட்டது. உள்ளே கட்டபொம்மனின் வரலாற்றை விளக்கும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையம் செயல்படுகிறது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாதுறையின் பராமரிப்பில் இயங்கிவருகிறது.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. பராமரிப்பில்லாத பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, செய்தி தி இந்து தமிழ், 3 ஞாயிறு 2015
  2. "கள்வனின் காவியம்". wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கட்டபொம்மன் நினைவுக் கோட்டை, திருச்செந்தூர்". Native Planet Tamil. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)