பாரத் தேயிலை தோட்டம்

பாரத் தேயிலை தோட்டம் (ஆங்கிலம்: Bharat Tea Plantation, மலாய் மொழி: Ladang Teh Bharat) என்பது மலேசியாவின் பகாங் மாநிலத்திலுள்ள கேமரன் மலையில் தேயிலை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.[1] 1933-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது ஒரு நிறுவனமாக இருந்தாலும், பாரத் தேயிலை தோட்டம் என்றே பரவலாக அழைக்கப்படுகிறது. மலேசியாவில் பெரிய அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இரண்டாவது இடம் வகிக்கிறது.

கேமரன் மலை பாரத் தேயிலைத் தோட்டம்

கேமரன் வேளி (Cameron Valley) எனும் வணிகச் சின்னத்தில் தேயிலை உற்பத்தி செய்யப் படுகிறது. தானா ராத்தாவில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவிலும், ரிங்லெட்டில் இருந்து ஆறு கி.மீ. தொலைவிலும் அந்தத் தோட்டம் இருக்கிறது. தற்சமயம் மலேசியாவில் மட்டும் அல்ல, உலக அளவிலும் இந்த பாரத் நிறுவனம் பிரசித்தி பெற்று விளங்குகிறது.[2]

இந்த நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த சுபர்சாத் பான்சால் அகர்வால் என்பவரால், 1933-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. படிப்படியாக வளர்ச்சி கண்டு, இப்போது பாரத் குழுமம் (Bharat Group of Companies) எனும் பெயரில் 15 நிறுவனங்களைக் கொண்டுள்ளது.[3] அவற்றில் பாரத் தேயிலை தோட்டம், உலகப் புகழ் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.[4]

2008-ஆம் ஆண்டில், டத்தோ ஸ்ரீ பிரிஜ்கிசோர் அகர்வால் அறவாரியத்தையும் (Dato Sri Brijkishore Agarwal Foundation) தோற்றுவித்தது. இந்த அறவாரியம் கேமரன் மலையில் வாழும் மாணவர்களுக்கு கல்வியுதவித் தொகையை வழங்கி வருகிறது. இதுவரையில் 40 மாணவர்கள் கல்வியுதவி பெற்றுள்ளனர்.[5]

வாழ்க்கை உயர்படி நிலை தொகு

பாரத் குழுமத்தின் நிறுவனரான சுபர்சாத் பான்சால் அகர்வால், வட இந்தியாவிலுள்ள, உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் 1893-ஆம் ஆண்டு பிறந்தவர். 1910-இல், தைப்பிங் நகரில் மளிகைக் கடை வைத்து இருந்த அவருடைய மாமாவிற்கு உதவி செய்வதற்காக இந்தியாவில் இருந்து வந்தார். பின்னர், சில ஆண்டுகள் கழித்து தாப்பா நகருக்கு இடம் மாறினார்.

அங்கே ஒரு சின்ன ரப்பர் தோட்டத்தை வாங்கினார். அந்தக் காலகட்டத்தில் கேமரன் மலைக்குச் செல்ல ஒரு சாலையை நிர்மாணித்து வந்தார்கள். சாலை நிர்மாணிப்பில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மளிகைச் சாமான்களை விநியோகம் செய்வதற்கு ஒரு மளிகைக் கடையைத் தோற்றுவித்தார்.

பிரிஜிசோர் அகர்வால் தொகு

1933-இல் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்ட போது, தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, ஒரு தனியார் தொழிற்சாலைக்கு தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து விற்று வந்தார்கள். 1937-இல் சுபர்சாத் பான்சால் அகர்வால் காலமானார். அப்போது அவருடைய மகன் பிரிஜிசோர் அகர்வாலுக்கு ஒன்பது வயது.

பின்னர், பிரிஜிசோர் அகர்வால் இந்தியாவிற்குச் சென்று தன்னுடைய மேற்கல்வியைத் தொடர்ந்தார். இடைபட்ட காலத்தில், நிறுவனர் சுபர்சாத் பான்சாலின் சகோதரர்களான நாந்கிசோர், கைலாஸ்சந்த் ஆகிய இருவரும் பாரத் தேயிலைத் தோட்டத்தின் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டனர். 1952-ஆம் ஆண்டு, தன்னுடைய 20-ஆவது வயதில் கல்வியை முடித்துக் கொண்டு மலாயாவிற்குத் திரும்பிய பிரிஜிசோர் அகர்வால், பாரத் தேயிலைத் தோட்டத்தின் தலைமைப் பதவியை ஏற்றார்.

அந்தச் சமயத்தில், தேயிலைப் பதனீட்டுத் தொழிற்சாலை கேமரன் மலை விவசாய ஆய்வு மையத்தின் பார்வையில் இருந்தது. ஓர் ஒப்பந்த அடிப்படையில் அந்தத் தொழிற்சாலை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர், பாரத் தேயிலைத் தோட்ட நிறுவனம் சொந்தமாகத் தேயிலையைப் பதனீடு செய்து பெட்டிகளில் அடைத்து காட்டு மான் (“CHOP RUSA”) சின்னத்தில் விநியோகம் செய்தது.[6]

தானா ராத்தா சாலிமார் தோட்டம் தொகு

1963-இல், பத்தாண்டுகள் கழித்து, தானா ராத்தா சாலிமார் தோட்டத்தை, பாரத் தேயிலைத் தோட்ட நிறுவனம் வாங்கியது. பின்னர், அங்கேயே தேயிலையைப் பதனீடு செய்யும் தொழிற்சாலையும் கட்டியது. இந்தக் காலகட்டத்தில் பாரத் நிறுவனத்தின் தேயிலைப் பொருட்கள் நாடளாவிய நிலையில் பிரபலம் அடையத் தொடங்கின. தேயிலை மொத்த வியாபாரிகளின் ஆதரவும் கிடைத்தது.

கேமரன் மலையின் வளமைத் ததும்பிய குன்றுச் சரிவுகளில், பாரத் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்கு 1,600 ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

ஒவ்வோரு வாரமும் 70,000 கிலோ தேயிலைக் கொழுந்துகள் பறிக்கப் படுகின்றன.[7] 40 ஹெக்டர் பரப்பளவு கொண்ட தேயிலை நிலப் பகுதியில் வேலை செய்ய 40 தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

டத்தோ கேசவ் - டத்தோ விநோத் தொகு

தேயிலை உற்பத்தியின் தரக்கட்டுப்பாடு விஷயத்தில், பாரத் தேயிலைத் தோட்ட நிறுவனம் மிகக் கட்டுப்பாடாக இருந்ததால், கேமரன் வேளி தேயிலையின் நற்பெயரும் உயர்ந்தது. மற்ற பிரபலமான தேயிலை உற்பத்தி நிறுவனங்களுடன் போட்டி போடவும் முடிந்தது.[8]

1965-ஆம் ஆண்டு, பிரிஜிசோர் அகர்வாலுக்கு டத்தோ பட்டம் வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டது. பிரிஜிசோர் அகர்வால் 2006-ஆம் ஆண்டு காலமானார். அதன் பிறகு அவருடைய பிள்ளைகளான டத்தோ கேசவ், டத்தோ விநோத் ஆகிய இருவரும் பாரத் குழுமத்தை ஏற்று நடத்தி வருகின்றனர்.[9] பாரத் குழுமத்திற்கு செலாமா, பீடோர், கோலா லிப்பிஸ் ஆகிய இடங்களில் 500 ஏக்கர் பரப்பளவில் எண்ணெய்ப் பனைத் தோட்டங்களும் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Bharat Tea Plantation is located somewhere between Habu (Ringlet) and Tanah Rata.
  2. "Initially a supplier of tea leaves to leading Malaysian and international brands, today the company is growing its retail presence with popular brands like Cameron Valley". Archived from the original on 2015-03-25. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
  3. "GROUP OF COMPANY". Archived from the original on 2014-10-13. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
  4. "The company has greatly advanced since its inception in 1933 in the scenic Cameron Highlands, by Shuparshad Bansal Agarwal". Archived from the original on 2015-03-25. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
  5. "Set up in 2008 by Dato Kesav and Dato Vinod Agarwal, to honour the memory of their father, the foundation offers non-binding scholarships to students in the Cameron Highlands". Archived from the original on 2015-03-27. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
  6. In 1952, with Dato Brijkishore Agarwal at the helm, Bharat took over the factory at the Agricultural Research Centre in Cameron Highlands on a contract basis.
  7. An astonishing 70,000kg of green tea leaves is handpicked each week across 642ha of Bharat’s plantation — the equivalent of 3,143 cups of tea at retail outlets across Malaysia.
  8. Cameron Bharat Platations became a favored and important supplier of bulk tea to major tea blenders including famous well-established tea brand names in Malaysia.
  9. "Dato Seri Brijkishore passes away, and his sons Dato Kesav and Dato Vinod continue to run the business together". Archived from the original on 2015-03-27. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்_தேயிலை_தோட்டம்&oldid=3850826" இலிருந்து மீள்விக்கப்பட்டது