பாரிட் சூலோங் படுகொலை
பாரிட் சூலோங் படுகொலை (ஆங்கிலம்: Parit Sulong Massacre; மலாய்: Pembunuhan Parit Sulong) என்பது மலேசியா, ஜொகூர், பாரிட் சூலோங் பகுதியில், 1942 சனவரி 22-ஆம் தேதி, 45-ஆவது இந்தியப் படை; 8-ஆவது ஆஸ்திரேலிய தரைப்படையைச் சேர்ந்த 150 போர்வீரர்கள் சப்பானிய இராணுவத்தின் 25-ஆவது படைப்பிரிவினரால் கொல்லப்பட்ட நிகழ்வைக் குறிப்பதாகும்.
பாரிட் சூலோங் படுகொலை Parit Sulong Massacre Pembunuhan Parit Sulong | |
---|---|
மூவார் போர் —இரண்டாம் உலகப் போர் | |
26 செப்டம்பர் 1945; சப்பானியர்களால் படுகொலை செய்யப்பட்ட 8-ஆவது ஆஸ்திரேலிய தரைப்படை; 45-ஆவது இந்தியத் தரைப்படை வீரர்களின் சில தளவாடப் பொருட்கள் இடதுபுறத்தில் காணப்படுகின்றன. | |
இடம் | பாரிட் சூலோங், ஜொகூர், மலேசியா |
ஆள்கூறுகள் | 1°58′54″N 102°52′42″E / 1.98167°N 102.87833°E |
நாள் | 26 செப்டம்பர் 1945 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | 45-ஆவது இந்தியப் படை; 8-ஆவது ஆஸ்திரேலிய தரைப்படை |
தாக்குதல் வகை | போர்க் கைதிகள் படுகொலை |
ஆயுதம் | துப்பாக்கிச் சூடு; சமுராய் கத்திகள் |
இறப்பு(கள்) | 150 |
தாக்கியோர் | 25-ஆவது சப்பானிய இராணுவம்: |
நோக்கம் | பழி வாங்குதல் |
இந்தப் படுகொலைக்கு மூல காரணமாக இருந்த சப்பானிய படைத் தலைவர் தக்குமா நிசிமுரா (General Takuma Nishimura). இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததும், அவர் மீது போர்க் குற்றம் சுமத்தப் பட்டது.
சிங்கப்பூரில் நடந்த சூக் சிங் படுகொலைக்கும் இவர் தான் காரணம் என்றும் பின்னர் தெரிய வந்தது. பப்புவா நியூ கினி மானுஸ் தீவில் இவர் மீது விசாரணை நடத்தப் பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பொது
தொகு1942 சனவரி 20-ஆம் தேதி காலை 7:00 மணிக்கு 8-ஆவது ஆஸ்திரேலிய தரைப்படை மற்றும் 45-ஆவது இந்தியப் படை வீரர்கள் பகிரியில் இருந்து வெளியேறத் தொடங்கியது. இவர்களுக்கு சார்லஸ் ரைட் ஆண்டர்சன் என்பவர் படைத் தலைவராக இருந்தார். அந்த இரு படைப் பிரிவுகளிலும் ஏழு அதிகாரிகள் மற்றும் 190 பேர் இருந்தனர். கூடுதலாக இரண்டு இந்தியப் பிரிவுகளும் இருந்தன. ஐம்பது வாகனங்களில் காயமடைந்தவர்கள், வெடிமருந்துகள் மற்றும் சொற்ப உணவுப் பொருட்களுடன், போர் முனையில் இருந்து வெளியேறினர்.
1942 சனவரி 20 அன்று, பின்வாங்கிக் கொண்டிருந்த நேச நாட்டு வீரர்கள் மீண்டும் மீண்டும் சப்பானியர்களால் தாக்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் இறுதியில் மாலை நேரத்தில் ஓர் அடர்ந்த காட்டில் அடைக்கலம் அடைந்தனர். மறுநாள் சனவரி 21-ஆம் தேதி காலை 9:30 மணிக்கு பாரிட் சூலோங் கிராமத்தின் புறநகரை அடைந்தனர்.[1]
பாரிட் சூலோங் கிராமம்
தொகுஇந்தக் கிராமம் சனவரி 19 வரையில் நேச நாடுகளின் கைகளில் இருந்தது. அந்த நேரத்தில் கிராமத்தைப் பாதுகாத்து வந்த பிரித்தானியப் படையினர் காட்டுக்குள் பின்வாங்கிச் சென்றுவிட்டனர். அந்தக் கட்டத்தில் கிராமம் முழுமையும், சப்பானியர்களின் பிடியில் இருந்தது. பின்வாங்கும் நேச நாட்டு வீரர்களைத் தாக்க சப்பானியர்கள் தயாரானார்கள். அந்த நேரத்தில் பின்வாங்கும் நேச நாட்டுப் படைகளிடம் வெடிமருந்துகள், உணவு மற்றும் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தன.[1]
11:00 மணிக்கு, சார்லஸ் ரைட் ஆண்டர்சன் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தி, கிராமத்தைக் கைப்பற்ற முடிந்தது, இருப்பினும் உள்ளூர் பாலம் மற்றும் பின்வாங்குவதற்கான சாலைகள் சப்பானியர்களின் கைகளில் இருந்தன. மாலை 5:00 மணிக்கு, இறக்கும் தருவாயில் இருந்தவர்கள் ஏற்றப்பட்ட இரண்டு மருத்துவ வாகனங்களை, பாலத்தில் செல்லுமாறு ஆண்டர்சன் உத்தரவிட்டார். இருப்பினும், பாலத்தில் இருந்த சப்பானிய அதிகாரி அந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.[1]
பாலத்தைக் கைப்பற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், திடகாத்திரமான அனைத்து வீரர்களையும் காட்டுக்குள் கலைந்து சென்று, நேச நாட்டுப் பாதுகாப்பில் இருக்கும் இடங்களுக்குத் திரும்பும்படி உத்தரவிடப்பட்டது. அந்தச் சமயத்தில், ஏறக்குறைய 150 ஆஸ்திரேலிய மற்றும் இந்திய வீரர்கள் நகர முடியாத அளவுக்கு பலத்த காயம் அடைந்த நிலையில் இருந்தனர். அவர்கள் ரேவி இசுனேலிங் எனும் அதிகாரியின் கீழ் சப்பானிய படைகளிடம் சரணடைய விடப்பட்டனர்.[2][3]
போர்க் கைதிகள் மீதான கொடுமைகள்
தொகுபடைத் தலைவர் ஆண்டர்சன் மற்றும் அனைத்து உடல் திறன் கொண்ட வீரர்களும் வெளியேறியதும், ரேவி இசுனேலிங் சப்பானியர்களை அணுகி, இறக்கும் தருவாயில் இருந்த வீரர்களுடன் சரணடைய முன்வந்தார். ஏறத்தாழ 150 ஆஸ்திரேலிய மற்றும் இந்திய வீரர்கள் போர்க் கைதிகளானார்கள். போர்க் கைதிகளான அவர்கள் உடனடியாக அடிக்கப்பட்டனர்; மற்றும் நகர முடியாதவர்கள் கொல்லப்பட்டனர்.
எஞ்சியிருந்த வீரர்கள் அருகிலுள்ள கட்டிடத்திற்குள் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு நெரிசலான அறைகளில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ கவனிப்பு மற்றும் தண்ணீர் மறுக்கப்பட்டனர. இந்த நேரத்தில், அரச சப்பானிய வீரர்கள், இந்திய வீரர்கள் சிலரின் தலைகளை துண்டித்தனர். மற்றும் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[3]
சிறிது நேரத்திற்குப் பிறகு, எஞ்சியிருந்த வீரர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியே தள்ளப்பட்டனர. அங்கு அவர்கள் துப்பாக்கிக் கட்டைகளால் அடிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் சாலையின் நடுவில் கம்பியால் கட்டப்பட்டு இயந்திரத் துப்பாக்கியால் சுடப்பட்டனர். உயிருடன் இருந்த போர்க் கைதிகள் சிலரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்கப்பட்டது.[4]
பென் எக்னி
தொகுஎஞ்சியிருந்த போர்க் கைதிகள் கம்பியால் பிணைக்கப்பட்டு பாலத்தின் மீது நிற்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவரைச் சுட்டதும் மீதமுள்ளவர்கள் அப்படியே ஆற்றில் விழுந்து மூழ்கினர்.[5]
கொல்லப்பட்ட 150 போர்க்கைதிகளில் பென் எக்னி (Lt Ben Hackney) எனும் ஒரே ஓர் ஆஸ்திரேலிய வீரர் மட்டும் உயிர்பிழைத்துக் கொண்டார். இறந்து விட்டது போல போலியாக நடித்து உயிர்த் தப்பிக்க முடிந்தது. மீண்டும் கைது செய்யப்படுவதற்கு முன்பு, இரண்டு உடைந்த கால்களுடன் ஆறு வாரங்கள் கிராமப்புறங்களில் தலைமறைவாக வாழ்ந்தார்.[6]
தக்குமா நிசிமுரா
தொகுபென் எக்னி மீண்டும் கைது செய்யப்பட்டு சப்பானிய போர்க் கைதிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டார். மேலும் மோசமான சயாம் மரண இரயில்பாதை கட்டுமானத்தில் தொழிலாளர் படையில் வேலை செய்தார். இவரும் உயிர் பிழைத்த மற்ற இருவரும், நேச நாட்டு போர்க்குற்ற விசாரணையாளர்களிடம் படுகொலை தொடர்பான சான்றுகளை வழங்கினார்கள்.
பாரிட் சூலோங் படுகொலைக்கு மூலகாரணமான தக்குமா நிசிமுரா பின்னர் சிங்கப்பூரில் சப்பானியப் படைகளுக்குப் பொறுப்பேற்றார். சிங்கப்பூரில் நடந்த சூக் சிங் படுகொலையில் அவர் மறைமுகமாக ஈடுபட்டார். தக்குமா நிசிமுரா 1942-இல் சப்பானிய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். போருக்குப் பின்னர், அவர் சூக் சிங் படுகொலை தொடர்பாக பிரித்தானிய இராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
தூக்குத் தண்டன
தொகுஅவர் சப்பானுக்குத் திரும்பிச் செல்லும் போது, ஆங்காங்கில் உள்ள ஒரு கப்பலில் ஆஸ்திரேலிய இராணுவக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பாரிட் சூலோங் படுகொலை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டார்.[7]
பப்புவா நியூ கினி மானுஸ் தீவில் இவர் மீது விசாரணை நடத்தப் பட்டது. பாரிட் சூலோங்கில் போர்க்கைதிகள் மீதுதுப்பாக்கிச் சூடு நடத்தவும், உடல்களை அழிக்கவும் நிசிமுரா உத்தரவிட்டார் எனும் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 1951 ஜூன் 11 அன்று தூக்கிலிடப்பட்டார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Warren, Alan (2002). Britain's Greatest Defeat: Singapore, 1942. United Kingdom: Hambledon Continuum. pp. 172–175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1852855975.
- ↑ Blackburn, Kevin (2012). The Sportsmen of Changi. Australia: Newsouth Publishing. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781742233024.
- ↑ 3.0 3.1 Pike, Francis (2016). Hirohito's War: The Pacific War, 1941-1945. United Kingdom: Bloomsbury Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781350021228.
- ↑ Russell Braddon, 1951, The Naked Island, Penguin Books, Melbourne, p. 101.
- ↑ Smith, Colin (2005). Singapore Burning: Heroism and Surrender in World War II. United Kingdom: Penguin Books Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780141906621.
- ↑ Tony Stephens, "The killing field at The Bridge" (Sydney Morning Herald, 13 September 2004). Access date: 16 February 2007.
- ↑ Ian Ward, Snaring the Other Tiger (Media Masters Publishers, Singapore, 1996); Dictionary of New Zealand Biography, "Godwin, James Gowing 1923 - 1995". Access date: 16 February 2007
- ↑ Hadley, Gregory.; Oglethorpe, James. (April 2007). "MacKay's Betrayal: Solving the Mystery of the "Sado Island Prisoner-of-War Massacre"". The Journal of Military History 71 (2): 441–464. doi:10.1353/jmh.2007.0118. https://archive.org/details/sim_journal-of-military-history_2007-04_71_2/page/441.
- Braddon, Russell, 1951, The Naked Island, Penguin Books, Melbourne,
- Findlay, Iain, 1991, Savage Jungle – An Epic Struggle for Survival, Simon & Schuster, Sydney.
- MacKay's Betrayal: Solving the Mystery of the "Sado Island Prisoner-of-War Massacre" The Journal of Military History - Volume 71, Number 2, April 2007, pp. 441-464 பரணிடப்பட்டது 2 மார்ச்சு 2017 at the வந்தவழி இயந்திரம்
- Gilbert Mant, 1996, Massacre at Parit Sulong, Kangaroo Press, Kenthurst.
- Silver, Lynette, 2004, The Bridge at Parit Sulong – An Investigation of Mass Murder, The Watermark Press, Boorowa. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-949284-65-3.
- Wigmore, Lionel, 1957, The Japanese Thrust – Australia in the War of 1939-1945, Australian War Memorial, Canberra.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Parit Sulong Massacre தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Bedi, Harchand Singh (2015). "The Game of Love: Battle of Malaya". sikhnet.com.