இறைவாக்கினர் பாரூக்கு (எபிரேயம்: ברוך בן נריה " பேறுபெற்றவர் ") என்பவர் கி.மு. 6ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றான பாரூக் நூலின் ஆசிரியர் இவர் ஆவார். இந்த நூல் விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும்[1], பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) [2] அதிகாரப்பூர்வமாக இறையேவுதல் பெற்ற நூலாக ஏற்கப்பட்டது.

பாரூக்கு இறைவாக்கினர். விவிலிய படிம ஓவியம். காலம்: 17ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: உருசியா.

பெயர் தொகு

பாரூக்கு என்னும் இந்நூல் செப்துவசிந்தா பதிப்பில் கிரேக்க மூல மொழியில் Barùch (Βαρούχ) என்றும் இலத்தீனில் Baruch என்றும் உள்ளது. எபிரேயத்தில் இது בָּרוּךְ (Barukh, Bārûḵ) என்னும் பெயர் ஆகும். இதற்கு "பேறுபெற்றவர்" என்பது பொருள்.

வரலாற்றுச் சுருக்கம் தொகு

இவர் இறைவாக்கினர் எரேமியாவின் செயலர் என்பது மரபு வழிச் செய்தி. எரேமியா நூலின் படி இவரின் தந்தை நேரியா ஆவார்.[3] அதே நூலில் யூதாவின் அரசனான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கினை எரேமியா சொல்லச் சொல்ல பாரூக்கு அவற்றை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவைத்து, எரேமியாவின் கட்டளைக்கிணங்க நோன்பு நாளன்று, யூதர்களின் கோவிலுக்கு சென்று அங்குக் குழுமியிருந்த மக்களின் செவிகளில் விழும்படி, தான் எழுதிவைத்த ஆண்டவரின் சொற்களை ஏட்டுச்சுருளினின்று படித்துக்காட்டினார்.[4] இக்காரியம் செய்ய மிகக்கடினமானதாக இருப்பினும், இதனை மனம்தலராமல் பாரூக்கு செய்துமுடித்தார்.

இவரும் எரேமியாவும் பாபிலோனிய மன்னன் எருசலேமின் மீது படையெடுத்து அதன் அரசனையும் நாட்டினரையும் நாடு கடத்தியதை தம் கண்களால் கண்டனர். கடவுளையும் அவரது திருச்சட்டத்தையும் கைவிட்டமையே இஸ்ரயேலர் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டதற்குரிய காரணம்; எனவே அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுக் கடவுள்பால் மனந்திரும்பி, உண்மை ஞானமாகிய திருச் சட்டத்தைக் கடைப்பிடித்து நடந்தால், கடவுள் அவர்களது அடிமைத்தனத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து, அவர்களுக்கு மீட்பை அருள்வார் என்னும் செய்தியை இவரின் நூல் வலியுறுத்துகிறது. வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட ஐந்து சிறிய தனித்தனிப் பகுதிகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, கி.மு.முதல் நூற்றாண்டில் தனி நூலாகப் பாரூக்கின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளன என சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. கார்த்தேசு சங்கம்
  2. திரெந்து பொதுச் சங்கம்
  3. எரேமியா 36:4
  4. எரேமியா 36 அதிகாரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரூக்கு&oldid=2764923" இலிருந்து மீள்விக்கப்பட்டது