பார்ப்பனப் பக்கம்

'பார்ப்பனப் பக்கம் என்பது பார்ப்பனர் புரியும் தொழில், பாங்குப் பகுதி. இதனைத் தொல்காப்பியம் அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்று குறிப்பிடுகிறது. [1] [2] இதனைத் தொல்காப்பியர் வாகைத்திணையின் ஏழு பகுதிகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.

ஆறு வகை

தொகு

இதற்கு உரை எழுதும் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன என்று குறிப்பிடுகிறார். மேலும்
ஒழுக்கத்தான் மிகுதல் வாகையாம்
எனவும் குறிப்பிடுகிறார். இந்த ஆறுக்கும் இவர் மேற்கோள் பாடல்களையும் தருகிறார். அவற்றுள்

நீர் நாண நெய் வழங்கியும்,
எண் நாணப் பல வேட்டும்

சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் வாழ்ந்தான் எனக் காட்டும் ஆவூர் மூலங்கிழார் பாடல் [3] குறிப்பிடத்தக்கது. மற்றும்

ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக
மன்னர் ஏவல் செய்ய
வேள்வி முற்றிய வயவாள் வேந்தே [4]

வேட்பித்தல் பணிக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

இரண்டு துறை

தொகு

புறப்பொருளுக்கு இலக்கணம் கூறும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலும் இதனை வாகைத்திணையில் வரும் இரண்டு துறைகளில் குறிப்பிடுகிறது.

ஒன்று, பார்ப்பன முல்லை - இரு பெரு வேந்தர்களுக்கிடையே போர் மூளும்போது, நான்மறை ஓதும் பார்ப்பான், இருவரும் சினத்தைப் பொறுத்துக்கொண்டு இணைந்திருக்க வேண்டும் என்று எடுத்துக் கூறி இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பது பார்ப்பன முல்லை என்று குறிப்பிடுகிறது. [5] [6] இந்தக் கருத்தினை விளக்கும் எடுத்துக்காட்டுப் பாடல் ஒன்றினை இவர் தாமே பாடி உரையாகக் காட்டியுள்ளார். [7]

மற்றொன்று பார்ப்பன வாகை - வேள்வி செய்து சிறப்புப் பெற்ற பார்ப்பான் ஒருவன் வீடுபேற்று வெற்றியினைப் பெற மற்றவர்கள் அவனுக்காக வேள்வி செய்து அவனுக்குச் சிறப்பினை உண்டாக்குவது இது. [8] இதற்கு எடுத்துக்காட்டாக இந்த ஆசிரியர் தாமே பாடிய பாடல் ஒன்றினை உரையில் இணைத்துள்ளார். [9] இந்தச் செயலுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது பாலைக் கௌதமனார் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாடிப் பெற்ற பரிசலைக் குறிப்பிடலாம். [10]

பதிற்றுப்பத்து குறிப்பு

தொகு

பாலைக் கௌதமனார் என்னும் புலவர் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னனுக்கு அறிவுரை வழங்கும்போது ஓதும்போதும், பிறரை ஓதச் செய்யும்போதும், வேள்வி செய்யும்போதும், பிறரை வேள்விப் பணியில் ஈடுபடுத்தும்போதும், பிறருக்கு வழங்கும்போதும், பிறரிடமிருந்து ஏற்கும்போதும் அந்தணரைப் பின்பற்றவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். [11]

திருக்குறள் குறிப்பு

தொகு

திருக்குறளில் அறுதொழிலோர் என்னும் தொடர் வருகிறது. [12] இதற்கு உரை எழுதும் பரிமேலழகரும் அவருக்கு முந்தைய உரையாசிரியர்களும் அறுதொழிலோரை அந்தணர் எனவே குறிப்பிடுகின்றனர். அறுதொழில் என்பதற்குப் பரிமேலழகர் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் குறிப்பிடும் ஆறு தொழில்களை அப்படியே வழிமொழிகிறார்.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. புறத்திணையியல் 16
  2. பார்ப்பனர் - உயர்திணை
    பார்ப்பனம் - பார்ப்பனர் செய்யும் தொழில் - அஃறிணை
    அஃறிணை முன் ஒற்று மிக்கது
  3. புறநானூறு 166
  4. புறநானூறு 26
  5. கால் மலியும் நறுந் தெரியல் கழல் வேந்தர் இகல் அவிக்கும்
    நான் மறையோன் நலம் பெருகும் நடுவு நிலை உரைத்தன்று. புறப்பொருள் பெண்பாமாலை 172
  6. அகத்திணையில் முல்லை என்பது ஆற்றியிருப்பதைக் குறிக்கும். அதுபோலப் புறத்திணையிலும் இருபெரு வேந்தர் பொறுமையுடன் இருப்பதைக் குறிக்கும் என்பதாகக் கொண்டு இந்தத் திணைக்கு இந்த ஆசிரியர் 'முல்லை' என்னும் பெரைச் சூட்டியுள்ளார்
  7. ஒல்லெனீர் ஞாலத் துணர்வோ விழுமிதே
    நல்லிசை முச்செந்தீ நான்மறையோன் - செல்லலும்
    வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை
    என்றன்றி மீண்ட திலர் .
  8. கேள்வியால் சிறப்பு எய்தியானை
    வேள்வியான் விறல் மிகுத்தன்று. புறப்பொருள் வெண்பாமாலை 163
  9. ஓதங் கரைதவழ்நீர் வேலி யுலகினுள்
    வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும்-ஏதம்
    சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த
    விடுசுடர் வேள்வி யகத்து.
  10. பாடிப் பெற்ற பரிசில்:'நீர் வேண்டியது கொண்மின்' என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார். (பதிற்றுப்பத்து மூன்றாம்பத்து பதிகம்)
  11. ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல்,
    ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும்
    அறம் புரி அந்தணர் வழி மொழிந்து ஒழுகி, (பதிற்றுப்பத்து 24)
  12. ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
    காவலன் காவான் எனில் (திருக்குறள் 560)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்ப்பனப்_பக்கம்&oldid=3229982" இலிருந்து மீள்விக்கப்பட்டது