களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்

(களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் வேளாவிக்கோமான் பதுமன்தேவியாருக்கும் பிறந்தவர்.[1] இவரது தமையன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். இவர் வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு சேரநாட்டை ஆண்டார். இவர் பனை நாரால் புனைந்த முடியும், களங்காயால் கட்டிய கண்ணியும் கொண்டு முடிசூட்டிக்கொண்டதால்[2] இப்பெயர் பெற்றான் என்று பதிற்றுப்பற்றின் பழைய உரையாசிரியர் கூறுவர்.[1]இவர் எழில் மலைப் பகுதியை ஆண்ட நன்னன் என்ற அரசருடன் போர் புரிந்து வெற்றி கண்டவர். நெடுமிடல் பசும்பூட் பாண்டியனையும் வெற்றி கொண்டவர்.[3] சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைப் பாடுகிறது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ....சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்.... எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். [4]. பதுமன் தேவி வேள் அரசனின் மகள்.

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

களங்காய்க்கண்ணி விளக்கம்

தொகு
  • களாக்காய் போன்ற கருநிற மணிகளையும், முத்துக்களையும் பொன் இழைகளில் கோத்து பட்டுத்துணியில் வைத்துத் தைத்துச் செய்த மாலை. இந்த மாலையை இவன் தலைமுடியாக (தலைப்பாகை போன்ற மகுடம்) அணிந்துகொண்டிருந்தான். [5]
  • எழுமுடி மார்பன் [6]

காலம்

தொகு

பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.

செயல்கள்

தொகு

பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், "......இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்....." [7]என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார். இந்த நன்னன் கடம்பு மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட அரசன். சிறந்த வள்ளல். கடம்பின் பெருவாயில் இவனது தலைநகர். போர் வாகைப்பெருந்துறை என்னுமிடத்தில் நடைபெற்றது.

பதிற்றுப்பத்து பாடல் தரும் செய்திகள்

தொகு
  • நன்னனை வென்று அவனது காவல்மரமான வாகைமரத்தை வெட்டி வீழ்த்தினான். இந்த வெற்றிக்குப் பின்னர் நேரி மலையைத் தொழுதான். [8]
  • நெடுமிடல், கொடுமிடல் ஆகியோரை வென்றான். [9]
  • தோட்டி மலையை வென்றான். [10]
  • தன் மக்கள் குடிபெயர்வதைத் தடுத்தான். [11] [12]
  • வண்டன் காவல் புரிந்த தூங்கெயில் போல் செல்வ வளம் மிக்கவன். [13]
  • நகைவர்க்கு (மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் கலைஞர்களுக்கு) அரண். [14]
  • இவன் மனைவி செம்மீன் (அருந்ததி விண்மீன்) போலக் கற்புடையவள். [15]

அடிக்குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கக. மாநகர்ப் புலவர்கள் -2. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 63.
  2. ஒளவை சு., துரைசாமி (2002). சேரமன்னர் வரலாறு. பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ்,சென்னை.
  3. https://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=293&pno=48
  4. புலியூர்க் கேசிகன், 2005. பக்.194
  5. வாலிதின் நூலின் இழையா நுண்மயிர் இழைய … சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின் இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்து அவிர் இழை தைஇய நார்முடி - பதிற்றுப்பத்து 39
  6. பதிற்றுப்பத்து 40
  7. புலியூர்க் கேசிகன், 2002. பக். 189 (அகநானூறு 199)
  8. பதிற்றுப்பத்து 40
  9. பதிற்றுப்பத்து 32
  10. பதிற்றுப்பத்து 38
  11. துளங்குகுடி விழுத்திணை திருத்தி – பதிற்றுப்பத்து 31
  12. துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி – பதிற்றுப்பத்து 32
  13. பதிற்றுப்பத்து 31
  14. பதிற்றுப்பத்து 31, 37
  15. பதிற்றுப்பத்து 31

உசாத்துணைகள்

தொகு
  • புலியூர்க் கேசிகன், பதிற்றுப்பத்து தெளிவுரை, புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).
  • புலியூர்க் கேசிகன், அகநானூறு மணிமிடை பவளம் தெளிவுரை, பாரிநிலையம், சென்னை, 2002 (ஏழாம்பதிப்பு)