சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணத்தாயன்

சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணத்தாயன் ஒரு வள்ளல்.
பார்ப்பனக் குடியில் பிறந்தவன்.
சோழநாட்டில் வாழ்ந்தவன்.
இவன் காலத்தில் சோழநாட்டை ஆண்டவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
ஆவூர் மூலங்கிழார் இந்தக் கிள்ளிவளவன், இந்த விண்ணத்தாயன் ஆகிய இருவரையும் பாடியுள்ளார்.
மற்றும்

நன்மாறன் (பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்)
சாத்தன் (பாண்டியன் கீரஞ்சாத்தன்)
ஆதி (மல்லி கிழான் காரியாதி)

ஆகியோரும் இப் புலவரால் பாடப்பட்ட சமகாலத்தவர்.

பூச்சாற்றூர்
சோழநாட்டில் காவிரி ஆற்றிலிருந்து பிரியும் முடிகொண்டான் ஆற்றின் கரையில் உள்ள ஊர் பூச்சாற்றூர். - டாக்டர் உ.வே.சாமிநாதையர் குறிப்பு
கவுணியன்
கவுள் = கன்னத்தின் உட்பகுதி, கடைவாய்
நெடுங்கழுத்துப் பரணர் கழுத்து உறுப்பால் பெயர் பெற்ற புலவர். அதுபோல இந்தப் புலவர் கவுள் உறுப்பால் பெயர் பெற்ற புலவர்.
விண்ணத்தாயன்
பூதத்தனார் என்னும் பெயர் போல விண்ணத்தாயன் என்பதும் ஐம்பூதங்களில் ஒன்றான விண்ணைக் கொண்டு அமைந்த பெயர்.
பூதங்கள் ஐந்து என்று திருக்குறள் குறிப்பிடுகிறது.[1]
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் இந்தப் பூதங்கள் ஐந்தும் நமக்கு வெளியிலும், உடலுக்குள்ளும் இருக்கின்றன. இந்த உண்மையை உணர்ந்தவன் பூதத்தன்.

விண்ணத்தாயன் பண்புகள் [2] தொகு

விண்ணத்தாயனின் முன்னோர்
பார்பனர் எவ்வாறு வாழ்ந்தனர் என்பது இங்குக் காட்டப்படுகிறது.
சிவநெறியாளர்
சிவன் நீண்ட சடைமுடி உடையவன்.
அவன் நன்றாக ஆராய்ந்து பார்க்கப்பட்டவன்.
சிவன் முதுமுதல்வன். முதியவர்களுக்கெல்லான் முதிர்ந்தவன்.
விண்ணத்தாயனின் முன்னோர் சிவபெருமான் வாக்கின் வழியில் நடந்துவந்தவர்.
நான்மறை வழியில் ஒழுகுபவர்
நான்மறை வழியைக் கடைப்பிடித்தவர்கள்.
ஆறு சமயங்களை உணர்ந்தவர்
ஆறு சமய நெறிகளையும் உணர்ந்தவர்கள்.
(ஆறு சமையங்களில் ஒன்று பௌத்தம் ஆகையால் விண்ணத்தாயனின் முன்னோரே புத்தர் காலத்துக்குப் பிந்தியவர்கள் எனத் தெரிகிறது.)
21 துறைகளில் தெளிந்தவர்
சோமவேள்வி 7, அவிர்வேள்வி7, பாகவேள்வி 7, ஆக 21 வேள்வித்துறைகள்.
இப்படிப்பட்ட நெஞ்சுரம் படைத்தவர்களின் வழித்தோன்றலாக வந்த மருகன் இந்த விண்ணத்தாயன்.
விண்ணத்தாயன் தோற்றம்
இடப்பக்கத் தோள்மீது பூணூலுக்கு மேலே ஆண்மானின் தோலைப் போட்டிருப்பான்.
இடப்பக்கத் தோளிலிருந்து வலப்பக்க மருங்குல் வரை தொங்கும்படி பூணூல் அணிந்திருப்பான்.
விண்ணத்தாயனின் துணைவியர்
இவனது துணைத்துணைவியர் அறம் என்னும் வலைக்குள் கட்டுப்பட்டுக் கிடந்து இவன் சொற்படி நடந்துகொள்வர்.
வேள்வி செய்தவன்
நீர் ஓடுவது போல நெய்யை ஊற்றி எண்ணிக்கைக்கு வராத அளவில் பல வேள்விகளை இவன் செய்தான். காட்டிலும், நாட்டிலும், ஈரேழ் இடங்களிலும் வேள்வி செய்தான்.
விருந்தோம்புபவன்
இவனது ஊருக்குச் சென்றால் இவன் அனைவரையும் விருந்தோம்பிப் பாதுகாப்பான்.
ஊர்
விண்ணத்தாயன் காவிரியாற்றுப் படப்பை(படுகை)யில் இருந்த ஊரில் வாழ்ந்தவன்.
குடாஅது பொன்படு நெடுவரை
குடகு நாட்டு மலையைப் பொன்படு நெடுவரை என்றனர். அங்கு மழை பொழிந்தால் காவிரியில் பொன் கொழிக்கும்.
புலவர் வாழ்த்து
இவனிடம் சென்ற புலவர் ஆவூர் மூலங்கிழார் இவன் அளித்த உணவை உண்டும், தின்பண்டங்களைத் தின்றும், ஊர்திகளில் ஏறி உலாவியும் மகிழ்ந்து ஆடிப்பாடிக் களித்திருந்ததாகக் குறிப்பிடுகிறார். தன் ஊருக்குத் திரும்பும்போது மூங்கில் வளரும் இமயமலை போல நிலைத்த புகழுடன் இவன் வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.

அடிக்குறிப்பு தொகு

  1. திருக்குறள் 271 பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்
  2. புறநானூறு 166