பாவாடைராயன்
பாவாடைராயன் தமிழ் மக்களின் காவல் தெய்வங்களில் முக்கியமான ஆண் காவல் தெய்வம் ஆகும். தமிழகக் கிராமப்புறங்களில் மிகவும் கொண்டாடப்படும் தெய்வங்களில் குறிப்பிடத்தக்கவர். பார்வதியின் அவதாரமான அங்காளபரமேஸ்வரியின் மகனாக போற்றப்படும் தெய்வமும் இவராகும். தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான அங்காளபரமேஸ்வரி ஆலயங்களில் அன்னையின் மடியில் அமர்ந்திருக்கும் சிறப்பு பெற்ற காவல் தெய்வம் பாவாடைராயன் மட்டுமே.[1][2][3]
தொன்ம வரலாறு
தொகுசிவனின் பரதேசி வாழ்க்கை
தொகுபுராண காலத்தில் உலகை ஆளும் சக்தி தேவி, பார்வதியாக அவதாரம் எடுத்தார். அப்போது சிவபெருமானைப் போலவே படைப்பு கடவுளான பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. அதனால் குழம்பிய பார்வதி தேவி, தமது கணவர் சிவபெருமான் என்று நினைத்து பிரம்மனின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். பின்னர், உண்மையை அறிந்து வருந்திய பார்வதி, பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருப்பதனால் தானே இந்த குழப்பம் என்று எண்ணி, சிவனை வணங்கி, பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்து விடுமாறு வேண்டினாள். அதை ஏற்று சிவனும் பிரம்மனின் ஒரு தலையைக் கொய்துவிட்டார். பிரம்மன், ஒரு பிராமணன் என்பதால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிட்டது. மேலும், நான்கு தலையுடன் இருந்த பிரம்மன், தன்னுடைய ஐந்தாவது தலை சிவனின் கைகளிலே ஒட்டி கொள்ளட்டும் என்றும், பரதேசி கோலத்தில் ஊர் ஊராக திரிந்து பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்றும் சாபம் அளித்தார். அந்த சாபத்தினால், சிவன் பரதேசி கோலத்தில் ஊர் ஊராக சுற்றி திரிந்து பிச்சை எடுத்து உண்டார். எனினும், அவருக்கு கிடைக்கும் பிச்சை உணவில் பாதியை, அவர் கையில் ஒட்டி இருந்த பிரம்மனின் தலையான கபாலம் உட்கொண்டுவிடும். இதனால் சிவன் கடும் பசியுடனும், கையில் ஒட்டி கொண்ட கபாலத்துடனும் ஊர் ஊராக சுடுகாடு முழுவதும் அலைந்து திரிந்து சாம்பலில் படுத்து உறங்கினார்.
பாவாடைராயன் தோற்றம்
தொகுஅந்த கால கட்டத்தில், கல்விக்காடு என்ற தலத்தின் தலைவனாக இருந்தவன் பெத்தாண்டவன். பல இடங்களுக்கும் சென்று கொள்ளை அடித்து, குடிகளைச் சாய்த்து, அதன் மூலம் கிடைக்கும் பொருட்களை, தமது குடிமக்களுக்கு வழங்கி ஆட்சி புரிந்து வந்தான். எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்த பெத்தாண்டவனுக்கு, தமது குலம் தழைக்க ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆகவே, அவனும் அவனது மனைவி பெத்தாண்டச்சியும், தங்களுக்குக் குழந்தை வேண்டி தினமும் சிவனைப் வணங்கி வந்தனர். அப்போது ஒரு நாள், பரதேசி கோலத்தில் திரிந்து கொண்டிருந்த சிவன், அவர்கள் வீட்டு வாசலில் நின்று பிச்சை வேண்டினார். வந்திருப்பவர் சிவன் என்று பெத்தாண்டச்சிக்கு தெரியவில்லை. ஆனாலும் பரதேசி வடிவத்தில் இருந்த சாமியார் முகத்தில் இருந்த சிவ களையைக் கண்டாள். உடனே தங்கள் குலம் தழைக்கக் குழந்தைப் பேறு வேண்டுமென அவரிடம் வேண்டினாள். அந்த வேண்டுதலுக்கு செவி சாய்த்து, விபூதியை வழங்கிய சிவன், அதை உண்டால் அவர்கள் குலம் தழைக்க ஒரு புத்திரன் பிறப்பான், அவனால் வம்சம் புகழ் அடையும், அவனும் உலகப்புகழ் பெற்றவனாக விளங்குவான் என்றும் ஆசீர்வதித்து சென்றார்.
சிவனின் வாக்குப்படி, சிறிது காலம் கழித்து பெத்தாண்டவன் - பெத்தாண்டச்சி தம்பதிக்கு அழகும், களையும் நிறைந்த ஆண் புத்திரன் ஒருவன் பிறந்தான். அவனுக்கு தங்கள் ஊரை காப்பவன் என்று பொருள்படும், "கல்விகாத்தான்" என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
அவனுடைய ஐந்தாவது வயதில், அவனுக்கு கல்வி, கலை, வீர விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் அனைத்தும் அளிக்கப்பட்டது. அவன், அவை அனைத்திலும் ஆர்வத்துடன் கற்று தேர்ந்தான். அவனுக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன், தந்தை பெத்தாண்டவன் மக்களைக் காப்பதற்காக, குலத்தொழிலை ஏற்றுகொள்ளப் பணித்தான். ஆனால், கொள்ளை அடிப்பது, குடிகளை சாய்ப்பது, உயிர்களை கொல்வது போன்ற பழி நேரும் தொழில்களை செய்வதற்கு கல்விகாத்தானுக்கு மனமில்லை. தந்தையை எதிர்த்துப்பேச முடியாமலும், அவருடைய ஆத்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமலும் அங்கிருந்து தப்பித்துக் கால் போனபோக்கில் ஓடினான்.
அங்காளியின் ஆணை
தொகுஓடினவன் அடர்ந்த வனப்பகுதிக்குள் வந்தான். அமாவாசை இரவு என்பதால் சூழ்ந்திருந்த இருட்டாலும், காட்டு மிருகங்கள் எழுப்பிய சத்தத்தாலும் பயந்து தவித்த பொழுது, கண்ணை பறிக்கும் சோதி ஒன்றைக் கண்டான். கொள்ளிவாய் பிசாசாக இருக்குமோ என அவன் அஞ்சிய பொழுது ஒரு பெண் குரல், ”மகனே! அஞ்சாதே! நான் தான் ஆதி சக்தியான அங்காளபரமேஸ்வரி! உனக்கு நான் துணை புரிவேன்” என்றொலித்தது. மேலும் அக்குரல் இரவு முடிவதற்குள், தனக்கு (அங்காள பரமேசுவரி) ஒரு ஆலயம் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்தவும் அவனைப் பணித்தது. அன்னையின் ஆசியுடன் அந்த வேண்டுதலை கல்விகாத்தான் நிறைவேற்றி எழுப்பிய ஆலயமே மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயமாக விளங்குகிறது.
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயம்
தொகுஇதனால் உள்ளம் மகிழ்ந்த அன்னை அங்காளபரமேஸ்வரி, அவனிடம் மேலும் ஒரு சோதனை வைத்தாள். அதையும் ஏற்ற கல்விகாத்தான் தன்னுடைய குடலையும் உள்நாக்கையும் பிடுங்கி அன்னை தனது கரத்தால் தொட்டு வைத்த பாவாடையில் சமர்ப்பித்தான். அம்மன் அவனைத் தனது மகனாக ஏற்றுத் தூக்கி முத்தமிட, அவனுக்கு அம்மனின் ஆங்கார சக்தி உடல் முழுவதும் பரவி தெய்வ அம்சம் கிடைக்க பெற்றான். அம்மன் அவனுக்கு பாவாடைராயான் என்றும் பெயர் சூட்டினாள்.
குலதெய்வமான பாவாடைராயன்
தொகுஅங்காளபரமேஸ்வரி தனது கோயில்களில் எல்லாம் பாவாடைராயனுக்கும் சன்னதி இருக்கும், பக்தர்கள் ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு வழிபடுவார்கள், அவன் பாமர மக்கள் பலருக்குக் குலதெய்வமாக விளங்குவான் என்று பாவாடைராயனுக்கு வரம் அளித்தாள். மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தின் உள் பிரகாரத்தில் அம்மனுக்கு அருகிலேயே அமர்ந்து பாவாடைராயன் பக்தர்களுக்கு அருள்தருகிறார். மேலும், கோயிலுக்கு வெளியே அம்மனுக்கு எதிரே தமது மனைவியரான முத்துநாச்சியார் மற்றும் அரியநாச்சியாருடன் காவல் புரிகிறார்.
பருதேசியப்பரும் பாவாடைராயரும்
தொகுபாவாடைராயன் ஒருமுறை சிவனை சிறைவைத்தாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது. பரதேசி கோலத்தில் ஊர் ஊராக திரிந்த சிவன், ஒரு நாள் இரவு நேரத்தில் சிதம்பரத்தை அடுத்துள்ள வல்லம்படுகை என்ற ஊருக்கு வந்துள்ளார். அப்போது அங்கே காவல் செய்து கொண்டிருந்த பாவாடைராயன், சிவனை வேற்று நாட்டு உளவாளி என்று நினைத்து சிறையில் அடைத்து விடுகிறார். மறுநாள் காலையில், அவரை விசாரணை செய்வதற்காக பாவாடைராயன் வந்தார். சிறையில், தனது சுயரூபத்தில் இருந்த சிவனை கண்டு திகைத்து போன பாவாடைராயன், மனம் வருந்தி சிவனின் பாதம் பணிந்து மன்னிப்பு கோரினார். சிவனும் மன்னிப்பு அளித்தார். எனினும் மனம் வருந்திய பாவாடைராயனைக் கண்ட சிவன், அவன் மனம் நிம்மதி அடையும் வகையில், இந்தத் தலத்தில் தனக்கு காவல் தெய்வமாக இருக்கும் வரம் அளித்தார். அன்று முதல், அங்கு பருதேசியப்பராக சிவனும், அவருக்கு காவல் தெய்வமாக பாவாடைராயனும், வணங்குபவர்களுக்கு அருள்தருகின்றனர்.
அற்புதங்கள்
தொகுஇந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், 17-ம் நூற்றாண்டில் கடலூர் மாவட்டத்தில் ரயில் பாதை அமைக்க தொடங்கினர். அப்போது வல்லம்படுகை பருதேசியப்பர் பாவாடைராயர் சந்நிதியை இடித்து விட்டு அங்கே ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, கோயிலுக்கு முன்னர், சிறிது தூரம் வரை தண்டவாளங்கள் பதிக்கப்பட்டன. மறுநாள், கோயிலை இடிக்க முடிவு செய்து, அந்த இடத்தில் பதிப்பதற்காக தண்டவாளங்கள் கொண்டு வரப்பட்டன. அதற்கு மறுநாள், அங்கு போடப்பட்டிருந்த தண்டவாளங்கள் அனைத்தும் வேறு இடத்தில் தூக்கி வீசப்பட்டுகிடந்தன. அதை அறியாத அதிகாரிகள், மீண்டும் தூக்கி வீசப்பட்ட தண்டவாளங்களை அதே இடத்தில் கொண்டு வந்து போட்டனர். மறுபடியும், முன்பு போலவே தண்டவாளங்கள் பெயர்ந்து தூக்கி வீசப்பட்டுகிடந்தன. எனினும் மீண்டும் அந்த இடத்தில் தண்டவாளங்கல் பதிப்பதற்காக பள்ளம் தோண்ட ஆணை இட்ட ஆங்கிலேய பொறியாளரின் கண் பார்வை பறிபோனது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆங்கிலேய அதிகாரிகள், கோயிலை இடிக்கும் திட்டத்தைக் கைவிட்டு, கோயிலுக்கு சற்றுத் தள்ளி ரயில் பாதை திட்டத்தை மாற்றி அமைத்தனர். மேலும், சிவனின் காவல் தெய்வமாக விளங்கிய பாவாடைராயனின் கோபமே இதற்கு காரணம் என்று அறிந்து கொண்ட அதிகாரிகள், அவரது கோபத்தைத் தணிக்கும் வகையில், அவரது வாகனமான வெள்ளைக் குதிரை சிலை ஒன்றை கோயிலில் அமைத்து பரிகாரம் தேடிக்கொண்டனர்.
சிறப்புகள்
தொகுகாவல் தெய்வங்களிலேயே யாருக்கும் இல்லாத சிறப்பு பாவாடைராயனுக்கு மட்டுமே உண்டு. பொதுவாக, காவல் தெய்வங்கள் அனைத்தும் கோயில் பிரகாரங்கள் மற்றும் வெளிப்புறங்களில் மட்டுமே அமைக்க பட்டிருக்கும். ஆனால், பாவாடைராயனுக்கு மட்டுமே அங்காளபரமேஸ்வரியின் மடியில் குழந்தையாக அமர்ந்திருக்கும் சிறப்பு உண்டு. மேலும் அங்காளபரமேஸ்வரி, தமது மகனாகவே பாவாடைராயனை ஏற்றுக்கொண்டு தமது மடியில் இடம் கொடுத்துள்ளார்.
ராயன்புரம் ராயபுரமான கதை
தொகுபாவாடைராயன் ஒருமுறை சிவனை சிறைவைத்தாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது. பரதேசி கோலத்தில் ஊர் ஊராக திரிந்த சிவன், ஒரு நாள் இரவு நேரத்தில் சிதம்பரத்தை அடுத்துள்ள வல்லம்படுகை என்ற ஊருக்கு வந்துள்ளார். அப்போது அங்கே காவல் செய்து கொண்டிருந்த பாவாடைராயன், சிவனை வேற்று நாட்டு உளவாளி என்று நினைத்து சிறையில் அடைத்து விடுகிறார். மறுநாள் காலையில், அவரை விசாரணை செய்வதற்காக பாவாடைராயன் வந்தார். சிறையில், தனது சுயரூபத்தில் இருந்த சிவனை கண்டு திகைத்து போன பாவாடைராயன், மனம் வருந்தி சிவனின் பாதம் பணிந்து மன்னிப்பு கோரினார். இருந்தாலும், சிவபெருமானை சிறைவைத்ததால், சிவ நிந்தனை ஆகிவிட்டது. இந்த சிவ நிந்தனையிளிருந்து விடுபட, சிவபெருமானிடம் பரிகாரம் வேண்டினான் பாவாடைராயன்.அதை கேட்டு மனம் இறங்கிய ஈசன், வடக்கில் ஆதிபுரிக்கு (தற்போதைய திருவொற்றியூர்) அருகே, பனஞ்சாலை என்ற தலம் ஒன்று உள்ளது. அங்கு பனைம்மர நிழலில் காளி தேவி, அருவமாக இருந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள். அங்கே சென்று நீ அவளுக்கு காவல் செய்தால் சிவா நிந்தனை அகலும் என்று கூறினார்.
அதை கேட்ட பாவாடைராயன், பனஞ்சாலையை அடைந்தான். சிவன் கூறியபடி, பனைமர நிழலில் காளியின் சிரித்த குரலை கேட்டு மகிழ்ந்து, அந்தத் திசையை நோக்கி வணங்கினான். காளியும் ஆசி வழங்கினால். அதனா, பாவாடைராயன் தமது படை, பட்டாளம் என அனைவரையும் அழைத்து வந்து பனஞ்சோலையில் குடி அமர்த்தி, அங்கே காளிக்கு காவலனாகப் பனி செய்து கொண்டு வருகிறான்.
பாவாடைராயனும் அவனுடைய மக்கள் அனைவரும் குடிகொண்ட இடத்திற்கு ராயன்புரம் என பெயர் உருவானது. அதுவே பின்னர் ராயபுரமாக மாறியது. காளி தேவிக்கு பாவாடைராயன் காவல் புரிந்த இடம் தற்போதய "ராயபுரம் கல்மண்டபனம் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்"
போகர் பாடலில் பாவாடைராயன்
தொகுபோகர் 7000 சப்த காண்டம் 5633 ஆம் பாடல்[4]
- காணவே ஜெபதபத்தி லிருந்துகொண்டு
- கருவான பிரணவத்தை வுச்சரித்தால்
- பூணவே ஏவல்பில்லி சூனியங்கள்
- பொல்லாத கறுப்பண்ணன் யேவல்சண்டி
- தோணவே பாவாடைராயன் காத்தன்
- தோறாத பிரணவத்தால் எல்லாஞ்சித்தி
- வேணதொரு மாடனது வசியத்தாலே
- வெட்டவெளி தேவதைகள் கைக்குள்ளாச்சே.
மாரியம்மன் தாலாட்டில் பாவாடைராயன்
தொகுபாவாடை ராயனைப் பற்றி மாரியம்மன் தாலாட்டில் ஐந்து இடங்களில் வருகின்றது.
"பாவாடைராயனைத் தான் பத்தினியே தானழையும்" என இரு இடங்களிலும்,
"பாவாடைராயனும் தான் பக்கத்திலே கொலுவிருந்தார்" என்றொரு இடத்திலும்,
"பாவாடை ராயனும் பல தேவரும் வாழி" என்றொரு இடத்திலும் வருகிறது.
வழிபாடுகள்
தொகுநடுகல் மற்றும் மரங்களையே பாவாடைராயனாக வழிபடும் வழக்கம் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே பாவாடைராயனுக்குத் தனியாக ஆலயங்கள் உள்ளன.
பாவாடைராயன் எழுந்தருளியுள்ள ஆலயங்கள்
தொகு- அருள்மிகு ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி சமேத ஶ்ரீ பெரியாண்டவர் திருக்கோயில், காகனம்,திருவண்ணாமலை மாவட்டம்.
- அருள்மிகு மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி ஆலயம், அனுமந்தை, விழுப்புரம் மாவட்டம்.
- உலகாளும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், பட்டனர் கிராமம்,நாவர்குளம், விழுப்புரம் மாவட்டம்.
- அருள்மிகு ஸ்ரீ பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம், வல்லம்படுகை, சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், புட்லூர், திருவள்ளூர் மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், சூளை, சென்னை.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், ராயபுரம் கல்மண்டபம்,சென்னை.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், சென்ட்ரல், சென்னை.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்.
- அருள்மிகு ஸ்ரீ பாவாடைராயர் ஆலயம், மதுராந்தகநல்லூர், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
- அருள்மிகு ஸ்ரீ பாவாடைராயர் ஆலயம், எரிமேடு, பூதங்குடி, கடலூர் மாவட்டம்.
- அருள்மிகு ஸ்ரீ பொன்முடியார் ஆலயம், கோணமலை, வீரமாபுரி கிராமம், திருவண்ணாமலை மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், முத்தனாம் பாளையம், திருப்பூர் மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், சூரக்குழி, ஆண்டிமடம் அருகே, அரியலூர் மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், கோடாலிகருப்பூர், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், வானாதிராஜபுரம், கடலூர் மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், துறையூர், திருச்சி மாவட்டம்.
- அருள்மிகு ஸ்ரீ பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம், உடையார்பாளையம் பேருந்து நிலையம் அருகே, அரியலூர் மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், திருப்பனிபேட்டை, திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்.
- அருள்மிகு கோட்டூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், கோட்டூர், திருவாரூர் மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், கூவத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், வேளுக்குடி, திருவாரூர், தஞ்சை மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், அச்சுதம்பேட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்,வைத்தீஸ்வரன்கோயில்,சீர்காழி,
நாகை மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்,வளையமாதேவி ,கடலூர் மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்,நெய்வேலி,கடலூர் மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்,குறிஞ்சி பாடி,கடலூர் மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்,நெய்வேலி,கடலூர் மாவட்டம்.
- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்,குச்சிப்பாளையம், விழுப்புரம் மாவட்டம்.
வெளிநாட்டில் பாவாடைராயன் ஆலயம்
தொகு- ஓம் ஸ்ரீ மஹா பாவாடைராயன் ஆலயம், கோலா செலங்கோர், மலேசியா.
- அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், கோலா செலங்கோர், மலேசியா.
மேற்கோள்கள்
தொகு- ↑ Bastin, Rohan (2002-12-01). The Domain of Constant Excess: Plural Worship at the Munnesvaram Temples in Sri Lanka (in ஆங்கிலம்). Berghahn Books. p. 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78920-367-7.
- ↑ V, Sriram (2015-02-20). "The night of the dead" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/metroplus/the-night-of-the-dead/article6916283.ece.
- ↑ State), Madras (India; Bahadur.), B. S. Baliga (Rao (1957). Madras District Gazetteers (in ஆங்கிலம்). Superintendent, Government Press. p. 133.
- ↑ "போகர் 7000 சப்த காண்டம் 5615 ஆம் பாடல்". Archived from the original on 2016-09-21. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- பாவாடைராயன் பரணிடப்பட்டது 2016-09-23 at the வந்தவழி இயந்திரம்
- நடுகல் கூறும் தமிழரின் வாழ்வு நெறிகள், ஆ. நந்திவர்மன்
- சூளை அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்
- ராயன்புரமான ராயபுரம்.
- http://bogar-siddhar.blogspot.in