பிளாட்டீயா முற்றுகை

பெலோபொன்னேசியன் போர் சமர்

பிளாட்டியா முற்றுகை (Siege of Plataea) என்பது கிமு 429-427 இல் பெலோபொன்னேசியன் போரின் போது நடந்த ஒரு முற்றுகை ஆகும். மோதலின் தொடக்கத்தில், தீப்ஸ்கள் போயோட்டியா மற்றும் அட்டிகா இடையே எல்லையில் உள்ள ஏதெனிய கூட்டாளி நகர அரசான பிளாட்டியாவை தாக்கினர். நகரத்தைக் கைப்பற்ற தீப்சின் ஆரம்ப கால முயற்சி தோல்வியடைந்தது. ஆனால் கிமு 429 இல் தீப்சுகளின் கூட்டாளிகளான எசுபார்த்தாவின் அரசர் இரண்டாம் ஆர்க்கிடாமசின் தலைமையில் நகரத்தை முற்றுகையிட்டனர். ஏதென்சின் உதவி கிடைக்காததால், பிளாட்டியர்கள் இறுதியாக கிமு 428 இல் சரணடைந்தனர். பிளாட்டியா தீப்சுகளால் தரைமட்டமாக்கப்பட்டது. மேலும் கிமு 338 இல் மக்கெடோனின் இரண்டாம் பிலிப் காலம்வரை நகரம் புதுப்பிக்கபடவில்லை.

தீபன் மீது முதல் தாக்குதல்

தொகு

துசிடிடீசின் கூற்றுப்படி, இரண்டு முன்னணி தீப்சின் தளபதிகளின் தலைமையில் 300 தீப்ஸ்கள் கொண்ட ஒரு சிறு ஆயுதப் படை, புயலார்ந்த காலநிலையில், நிலவொளி இல்லாத இருண்ட இரவில் பிளாட்டியாவிற்குள் துரோகிகள் சிலரின் உதவியோடு நுழைந்தனர். (இவர்களுக்கு அடுத்து ஒரு பெரிய தீப்ஸ்களின் படை வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அன்று பெய்த கடும் மழையால் பெரிய படை வருவதில் தாமதம் ஏற்பட்டது.) உள்ளே நுழைந்த தீப்சின் அந்த சிறிய படையும் தளபதிகளும் யாரையும் துன்புறுத்தவில்லை. ஆனால் பிளாட்டியாவின் அனைத்து குடிமக்களையும் தீப்சின் கூட்டாளிகளுடன் சேருமாறு வற்புறுத்த முயன்றனர். சனநாயகத் தலைமை இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டது. ஆனால் படையெடுத்து வந்த படைகள் சிறிய எண்ணிக்கையிலானவர்கள், தெருக்களையும், வழிகளையும் சரியாக அறியாதவர்கள், மோசமான வானிலை, இருள் ஆகிய சாதகமான அம்சங்கள் காரணமாக அவர்களை வெல்ல முடியும் என்று பிளாட்டியர்கள் உணர்ந்தனர். இதன் பின்னர் பொதுமக்கள் அவர்களை தாக்கத் தொடங்கினர். பெண்களும், அடிமைகளும் கூட போரில் பங்கேற்ற அரிய நிகழ்வுகளில் ஒன்றாக இது ஆனது. குடிமக்களால் 300 தீபன்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். எஞ்சிய தீபன்களில் பலர், நகரின் வாயில்களில் ஒன்றை உடைக்க கோடரியை வழங்கிய ஒரு பிளாட்டியன் பெண்ணின் உதவியுடன் தப்பிச் சென்றதாக துசிடிடீஸ் தெரிவிக்கிறார். சிலர் நகரின் சுவரில் ஏறி குதித்து தப்ப முயன்றனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் வீழுந்து இறந்தனர். மற்றவர்கள் ஒரு பெரிய திறந்திருந்த கட்டிடத்திற்குள் நுழைந்தனர், அதை அவர்கள் நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதை என்று தவறாகக் கருதினர். பிளாட்டியர்கள் அவர்கள் அனைவரையும் கட்டடத்திற்குள் வைத்துப் பூட்டினர். பின்னர் அவர்களைக் கொன்றனர்.

இதற்கிடையில் இரண்டாவதாக புறப்பட்ட பெரிய தீப்சின் படை மோசமான வானிலை, அசோபோஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் போன்றவற்றால் உரிய நேரத்தில் வந்து சேர இயலவில்லை. தாமதமாக வந்த படைகள் உள்ளை நடந்த நிகழ்வுகளைக் கேள்விப்பட்டு, சுவர்களுக்கு வெளியே வாழ்ந்துவந்த பிளாட்டியர்களைப் பிடித்து தன்னுடன் வைத்துக் கொண்டது. பிளாட்டியர்கள் இதை ஆட்சேபித்தார்கள். அதற்கு இரண்டாவது படையினர் உள்ளே பிடித்து வைத்துள்ள தீப்சியர்களை விடுவிப்பதாக வாக்களித்தால் தாங்கள் பிடித்துவைத்துள்ள பிளாட்டியர்களை விடுவித்துவிட்டுச் செல்வதாக வாக்களித்தனர். பிளாட்டியர்கள் இதற்கு ஒப்புக் கொண்டனர். தீப்சியர்களும் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிளாட்டியர்களை விடுவித்துவிட்டு ஊர் திரும்பினர். அவர்கள் போன பிறகு தங்கள் பிடியில் எஞ்சி இருந்த தீப்சியர்களை பிளாட்டியர்கள் விடுவிடாமல் கொன்றுவிட்டர். வாக்கு மீறி நடந்துகொண்டதாக தீப்சியர்கள் பிளாட்டியர்கள் மீது குற்றம் சாட்டினர். ஆனால் பிளாட்டியர்கள் தாங்கள் அப்படி எந்த வாக்கும் அளிக்கவில்லை என்று கூறினர்.

படையெடுப்பாளர்கள் நகரத்திற்குள் நுழைந்த பிறகு பிளாட்டிய அத்தகவலைத் தன் ஆதரவு நாடான ஏதென்சுக்கு தெரிவிக்க ஒரு தூதரை அனுப்பியது. அந்த இரவின் பிற்பகுதியில் இரண்டாவது தூதுவரும் ஏதெனியர்களுக்கு அப்போதைய தகவல்களை வந்து தெரிவித்தார். அதன்பிறகு ஏதெனியர்கள் ஒரு தூதரை பிளாட்டியாவுக்கு அனுப்பி கைதிகளை கொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர். ஆனால் அவர் வந்து சேர்வதற்கும் பிளாட்டியர்கள் கைதிகள் அனைவரையும் கொன்றுவிட்டிருந்தனர். தீப்சியர்கள் மீண்டும் படையெடுத்து வந்தால் சமாளிக்க ஏதுவாக ஒரு காவல் படையை பிளாட்டியாவுக்கு ஏதெனியர் அனுப்பினர். மேலும் போர் புரிய முடியாத பெண்கள், குழந்தைகள், வயதான ஆண்கள் ஆகியோரை அட்டிகாவிற்கு வரவழைத்துக் கொண்டனர்.

துசிடிடீஸ் (புத்தகம் II.1–6) இதுபற்றி குறிப்பிடும்போது இந்த நிகழ்வுகளின் போது, தீப்ஸ் மற்றும் அதன் போயோடியன் கூட்டாளிகள் தங்கள் மொத்த இராணுவத்தில் 10 விழுக்காட்டிற்கும் மேலாக இழந்தனர். இது பெலோபொன்னேசியன் போரின் தொடக்கத்தை காட்டியது. இது இன்னும் 27 ஆண்டுகள் நீடிக்கும் போராரின் தொடக்கமானது.

எசுபாத்தன் தலையீடும், முற்றுகையும்

தொகு

இந்த நிகழ்வுகள் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோடையில், எசுபார்த்தாவின் மன்னர் இரண்டாம் ஆர்க்கிடமஸ் பிளாட்டியாவுக்கு எதிராக பெலோபொன்னேசியப் படையை வழிநடத்தி, அவர்களின் பயிர்களை அழிக்கத் தொடங்கினார். கிரேக்க பாரசீகப் போரின் போது பிளாட்டியர்கள் தீரம் மிக்க செயல் புரிந்தனர் அதனால் ஸ்பார்டான்கள் அவர்களைப் பாதுகாத்து அவர்களை சுதந்திரமாக வைத்திருப்பதாக உறுதியளித்து சத்தியம் செய்தனர். கிமு 479 இல் ஸ்பார்டன் தளபதி பௌசானியாஸ் தாங்கள் பிளாட்டியா புனித பூமியில் இருப்பதாகவும், அதை ஒருபோதும் தாக்கக்கூடாது என்றும் ஆணையிட்டார்.[1] அதை ஸ்பார்டான்களுக்கு நினைவுபடுத்தும் ஒரு அறிவிப்பை பிளாட்டியர்கள் அனுப்பினர். ஸ்பார்டான்களிடம் தாங்கள் கோரும் பாதுகாப்பிற்கு ஈடாக பிளாட்டியர்கள் நடுநிலை வகிக்கவேண்டும் என்று பதிலளித்தனர். ஏதென்சைக் கலந்தாலோசித்த பிறகு, பிளாட்டியா ஸ்பார்டன் முன்மொழிவை நிராகரித்தது மற்றும் தங்களின் பாதுகாப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளை ஆர்வத்துடன் செய்யத் தொடங்கியது. ஸ்பார்டான்கள் பின்னர் விரைவாக நகரத்தை முற்றுகையிட்டனர், மேலும் பல புதுமையான, ஆனால் தோல்வியுற்ற தந்திரோபாயங்களைக் கையாண்டனர். இந்த முயற்சிகளில் தோல்வியுற்றதால், ஸ்பார்டான்கள் பிளாட்டியா நகரத்தைச் சுற்றி ஒரு கோட்டைக் கோட்டைக் கட்டி அவர்களின் போக்குவரத்தை தடுத்தனர். அந்தச் சுவர்களைக் காக்க போதுமான துருப்புக்களை நிறுத்தினர்.

தொடர் முற்றுகை

தொகு

அடுத்த ஆண்டின் குளிர்காலத்தில் பிளாட்டியர்கள் அவநம்பிக்கையான சூழ்நிலையாக உணர்ந்தனர். அவர்கள் ஸ்பார்டான்கள் மற்றும் போயோட்டியார்களால் தொடர்ந்து முற்றுகைக்கு ஆளாயினர். மேலும் ஏதென்சின் உதவி எதுவும் வருமா என்று தெரியத நிலையில் இருந்தனர். அவர்களின் கிடங்குகள் கவலையான முறையில் குறைந்த பொருட்களைக் கொண்டதாக இருந்தது. எனவே அவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள ஒரு அவநம்பிக்கையான திட்டத்தை உருவாக்கினர். இந்தத் திட்டம் ஸ்பார்டான் பாதுகாப்புகளை உடைத்து தப்பிப்பதை நோக்கமாக கொண்டது. முதலில் அனைத்து ஆண்களும் இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும் என எண்ணினர். ஆனால் ஆபத்து மிக அதிகமாக இருந்ததால், இறுதியில் 220 பேர் மட்டுமே செல்ல ஒப்புக்கொண்டனர். அதன்படி அவர்கள் ஒரு இருண்ட, புயல் இரவுக்காகக் காத்திருந்து, திட்டத்தைச் செயல்படுத்தினர். அதன்படி பாதுகாவலர்களை ஆச்சரியப்படும்படி பிடித்து, 212 பேர் தப்பிக்க முடிந்தது. துசிடிடீஸ் எழுதுகிறார், "முக்கியமாக மோசமான புயல்தான் அவர்கள் தப்பிக்க உதவியது."

சரணடைதல்

தொகு

மீதமுள்ள பிளாட்டியர்கள் இறுதியாக அடுத்த ஆண்டு கோடையில் ஸ்பார்டான்களிடம் சரணடைந்தனர். ஏனெனில் அவர்களிடம் இருந்த அனைத்து பொருட்களும் தீர்ந்துவிட்டிருந்தன. மேலும் உதவி வரும் என்ற எந்த நம்பிக்கையும் இழந்தனர். அவர்கள் ஸ்பார்டான்கள் நியாயமான விசாரணைக்கு உட்படுத்துவார்கள் என்று நம்பினர். லேசிடெமோனியர்கள் (ஸ்பார்டன்ஸ்) "அனைவரையும் நியாயமாக விசாரிப்போம்" என்றும், "குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுவர்" என்றும் உறுதியளித்திருந்தார்.

ஆனால், பிளாட்டியன் கைதிகள் நீதிபதிகள் முன் நிறுத்தப்படபோது, எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை; மன்னிப்பு கேட்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஸ்பார்டான்கள் ஒவ்வொரு கைதியிடமும் லேசிடெமோனியர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுக்கு போரில் ஏதேனும் சேவை செய்தீர்களா என்று வெறுமனே கேட்டார்கள். அதற்குக் கைதிகள் ஒரு விவாதத்திற்குப் பிறகு இறுதியில் "இல்லை" என்று பதிலளிக்க வேண்டியிருந்தது.

இவ்வாறான விசாரணைக்குப் பிறகு ஸ்பார்டான்கள் 200 க்கும் மேற்பட்ட பிளாட்டியன் போர்க் கைதிகளைக் கொன்றனர் "அவர்களில் 25 பேர் ஏதெனியர்கள்" துசிடிடீஸ் கூற்றின் படி, இறுதியில் தீபன்கள் முழு நகரத்தையும் அழித்தனர்.

பின்விளைவுகளும் பிளாட்டியாவின் புனரமைப்பும்

தொகு

கிமு 387 வரை பிளாட்டியா பகுதியை தீப்ஸ் அரசு ஆக்கிரமித்தது. முற்றுகையின் போது தப்பி வந்தவர்களுக்கு ஏதென்ஸ் அடைக்கலம் கொடுத்தது. கொரிந்தியப் போரில் தீப்ஸ்கள் தோற்கடிக்கப்பட்டனர். மேலும் கிமு 387 அன்டால்சிடாஸ் அமைதி உடன்பாடின்படி தீப்ஸ் அதன் போயோட்டியன் கூட்டணியைக் கலைக்க வேண்டியானது. இது 386 இல் பிளாட்டியாவை மறுகட்டமைப்பு செய்வதை சாத்தியமாக்கியது. இருப்பினும், தீப்சின் மறுமலர்ச்சி மற்றும் எபமினோண்டாஸ் தீபஸ் மேலாதிக்கத்தை உருவாக்கியதன் மூலம், தீபஸ்கள் 373 இல் மீண்டும் பிளாட்டியாவை அழித்தனர்.

கிமு 338 இல், மாசிடோனின் இரண்டாம் பிலிப் செரோனியா போரில் தீப்ஸ்களை தோற்கடித்த பிறகு, அவர் பிளாட்டியாவை "பாரசீகர்களை எதிர்ப்பதில் கிரேக்க வீரத்தின் சின்னமாக" மீண்டும் நிறுவினார். அவரது மகன், பேரரசர் அலெக்சாண்டர் கிமு 335 இல் தீப்சை முழுவதுமாக அழித்தார். அதன் பிரதேசம் போயோட்டியா நகரங்களுக்கு இடையில் பிரித்தளிக்கப்பட்டது புனரமைக்கப்பட்ட பிளாட்டியா இந்த பிராந்திய பிரிவில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

குறிப்புகள்

தொகு
  1. Thucydides: Der Peloponnesische Krieg, II, 71 (2), translated and edited by Helmut Vretska and Werner Rinner. Reclam, Stuttgart, Germany, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-15-001808-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாட்டீயா_முற்றுகை&oldid=3439823" இலிருந்து மீள்விக்கப்பட்டது