புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு
புனித சவேரியார் பேராலயம் என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முதன்மை கத்தோலிக்க ஆலயமாகும். கோட்டாறு மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இது விளங்குகின்றது. 1544 இல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறித்தவ மதத்தை பரப்ப வந்த புனித சவேரியாரால் இந்த ஆலயம் சிறிப அளவில் நிறுவப்பட்டது. இன்று இது விரிவடைந்து பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் பூதஉடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்பப்படுவதால் இந்த ஆலயத்தை பொதுமக்கள் கேட்ட வரம் தரும் கோட்டாறு சவேரியார் கோயில் என்று அழைக்கின்றனர்.[1][2][3]
வரலாறு
தொகுகி.பி. 1542ல் மறைபரப்பிற்காக இந்தியாவிற்கு வந்த சவேரியார், கி.பி. 1544ம் ஆண்டு பூவாரிலிருந்து பள்ளம் என்ற கடற்கரை ஓரமாக வசித்து வந்த முக்குவர் இன மக்களில் சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரை கத்தோலிக்க கிறித்தவ மதத்திற்கு மனம்திருப்பினார். அன்று வணிக நகரமாக இருந்த கோட்டாற்றில் மனம் திரும்பிய மக்கள் வழிபடுவதற்காக ஒரு சிறிய மாதா கோவிலை திருவிதாங்கூர் மன்னனின் உதவியோடு நிறுவினார்.
- ஆலய ஆவணங்களின் படி இவ்வாலயம் கி.பி. 1600ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
- கி.பி. 1603ம் ஆண்டு இத்தாலியைச் சார்ந்த பாதிரியார் அந்திரயோசு புச்சரியோ என்பவர் மரத்தாலும் களிமண்ணாலும் இவ்வாலயத்தை விரிவாக்கம் செய்தார்.
- கி.பி. 1713 ம் ஆண்டு இவ்வாலயம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு கல்லினால் கட்டப்பட்டது.
- கி.பி. 1806ம் ஆண்டு கொல்கத்தாவைச் சார்ந்த பொறியாளரால் நுணுக்கமான வேலைப்பாடமைந்த ஆலய பீடம் உருவாக்கப்பட்டது.
- கி.பி. 1865ம் ஆண்டு இவ்வாலயம் தற்போதைய நிலைக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
- மே 26,1930 அன்று இவ்வாலயம் கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு கோட்டாறு மறைமாவட்டம் உருவாக்கத்தின் போது பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டது.
- சவேரியார் இந்தியாவிற்கு வந்த 400 ம் ஆண்டையொட்டி கி.பி. 1942ம் ஆண்டு மணிக்கூண்டும் லூர்து மாதா கெபியும் திறந்து வைக்கப்பட்டது.
- கி.பி. 1952 ம் ஆண்டு ஆலயத்தை மேலும் சிறிது விரிவாக்கி சவேரியார் கட்டிய மாதா ஆலயம், கோவிலின் உட்பகுதியில் வருமாறு மாற்றியமைக்கப்பட்டது.
இவ்வாலயம் சாதி, இன மற்றும் மொழியைக் கடந்து பல்லாயிரகணக்கான மக்களை ஈர்த்து வருகின்றது. இவ்வாலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 24ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரையிலான 10 நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது. இத்திருவிழாவின் இறுதி நாளன்று கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு தமிழக அரசால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.
சான்றுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "St. Francis Xavier's Cathedral, Kottar, Tamil Nadu, India". www.gcatholic.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
- ↑ J.S.Michael,B.A., `Kumari Maavatta Devaalayankal` (Tamil), Vittal Process, Tirunelveli & Kalveedu, Nagercoil, 1971. Page:1
- ↑ Agur C.M., `Church History of Travancore`, Madras,1903. Reprint: Asian Educational Services, New Delhi, 1990, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0594-2. Page208.