புனைகதை அல்லது புனைவு என்பது, உண்மை அல்லாத கதைகளைக் குறிக்கும். அதாவது புனைகதைகள் கற்பனையாக உருவாக்கப்படுபவை. எனினும், புனைகதைகள் முழுமையாகவே கற்பனையாக இருக்கவேண்டும் என்பதில்லை. புனைகதைகளில் உண்மையான மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள் என்பன இடம் பெறுவதுண்டு. எல்லாப் புனைகதைகளும் கலைத்துவம் கொண்டவையாக இருப்பதில்லை எனினும், புனைகதை என்பது ஒரு கலை வடிவமாக அல்லது பொழுதுபோக்கு வடிவமாகவே பார்க்கப்படுகின்றது.

புனைகதையின் வகைகள்

தொகு

நடப்பியல் சார்ந்த புனைகதைகள்

தொகு

நடப்பியல் சார்ந்த புனைகதைகள் கற்பனையானவை எனினும் உண்மையாக நடக்கக்கூடியவை. அவற்றில் இடம்பெறும் நிகழ்வுகள், இடங்கள், மனிதர்கள் போன்றவை உண்மையானவையாகவே இருக்கவும் கூடும். உண்மைசார்ந்த புனைகதைகள், அதனை வாசிப்பவர்கள் தாம் உண்மையான நிகழ்வுகளையே வாசிப்பதான உணர்வைப் பெற வைப்பன.

நடப்பியல் சாராத புனைகதைகள்

தொகு

நடப்பியல் சாராத புனைகதைகளில் இடம்பெறும் நிகழ்வுகள், அல்லது பாத்திரங்கள் நடப்பியல் வாழ்க்கையில் இடம்பெற முடியாதவையாக இருக்கும். இவை மனித வரலாற்றின் அனுபவங்களுக்குப் புறம்பானவையாக அல்லது இப்போதுள்ள தொழில்நுட்பங்களின் வரம்புக்குள் அடங்காதவையாக இருக்கும். தேவதைக் கதைகள், மாய மந்திரக் கதைகள் போன்றவை இந்தப் புனைகதை வகுப்புக்குள் அடங்குபவை.

அரைப் புனைகதைகள்

தொகு

இவை பெருமளவு உண்மைக் கூறுகளைக் கொண்டவை. எடுத்துக்காட்டாக, உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதைகள், புனைவாக்கம் செய்யப்பட்ட உண்மைக் கதைகள், மீட்டுருவாக்கிய வரலாறுகள் என்பன புனைகதையின் இவ்வகைக்குள் அடங்குவன.

புனைகதையின் கூறுகள்

தொகு

புனைகதையின் அடிப்படையான கூறுகள் எத்தனை, அவை எவை என்பன குறித்து இத் துறை சார்ந்தோரிடையே ஒருமித்த கருத்து இல்லை. எழுத்துப் பயிற்றுவிப்போர், அதிகம் விற்பனையான நூல்களை எழுதியோர் எனப் பல வகைப்பட்டோர் இது குறித்து வெவ்வேறான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

புனைகதை கதைப்பின்னல், கதைமாந்தர், பகைப்புலம் அல்லது பின்னணி என்னும் மூன்று முக்கியமான கூறுகளைக் கொண்டது என்பது மோரெல் என்பாரின் கருத்து.[1] புதினம் எழுதுவதற்கான எழுத்தாளரின் சுருக்கத்தொகுப்புக் கையேடு (Writer's Digest Handbook of Novel Writing) என்னும் நூல், கருப்பொருள், கதைமாந்தர், முரண்பாடு, பகைப்புலம், உரையாடல் போன்றவற்றைப் புனைகதையின் கூறுகளாகக் கொள்கிறது.[2] பெல் என்பவர், எழுத்தாளர்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் புனைகதை ஒன்றின் கதைப்பின்னலுக்குச் சேர்க்கப்பட வேண்டியவையாகக் கதைமாந்தர், பகைப்புலம், உரையாடல் என்பவற்றைக் குறிப்பிடுகிறார்.[3] கதைமாந்தர், செயல், முரண்பாடு என்பவையே புனைகதையின் முக்கியமான கூறுகள் என இவானோவிச் என்பார் கூறுகிறார்.[4] செல்கின் என்பவரோ நோக்குநிலையும் புனைகதைகளின் மிகவும் அடிப்படையான கூறுகளில் ஒன்று என்கிறார்.[5]

கருப்பொருள்

தொகு

கருப்பொருள் அல்லது கதைக்கரு என்பது படைப்பாளி தனது படைப்பு மூலம் வெளிப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட விடயம் அல்லது கருத்துரு ஆகும். இது, கதை மூலம் படைப்பாளி கொடுக்க விழையும் படிப்பினையில் இருந்து வேறுபட்டது. கருப்பொருள் சுருக்கமானதாக ஆனால் பொருள் பொதிந்ததாகவோ அல்லது வாழ்க்கை பற்றிய சிக்கலான நோக்காகவோ இருக்கலாம்.[6] எடுத்துக்காட்டாக ஒற்றை எண்ணக்கருக்களான அன்பு, பொறாமை, வேலையின்மை போன்றவை புனைகதையொன்றின் கருப்பொருளாக அமையலாம், அல்லது சோசலிசம், இறைக்கொள்கை, பகுத்தறிவுவாதம் போன்ற சிக்கலான விடயங்கள் சார்ந்தவையாக இருக்கலாம். கருப்பொருளே புனைகதை முழுவதையும் ஒருமைப்படுத்திக் கட்டுப்படுத்துகின்றது. ஒரு புனைகதையை வாசிக்கும் ஒருவர் அதிலிருந்து அதன் கருப்பொருளை உணர்ந்து கொள்ள முடியும். வாசகர்கள் இவ்வாறான உணர்வைப் பெறுவதற்காகப் படைப்பாளி, கதைப்பின்னல், கதைமாந்தர் போன்ற பல்வேறு கதைக் கூறுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

கதைப்பின்னல்

தொகு

எழுத்துத் துறையில் கதைப்பின்னல் என்பது கதைமாந்தர் செய்யும், சொல்லும், சிந்திக்கும் விடயம் ஆகும். இதுவே சூழற் செயற்பாடு (Enveloping Action), முழுநிறை செயற்பாடு (Universal Action), மூலப்படிமச் செயற்பாடு (Archetypal Action) ஆகியவற்றினால் ஒருமைத் தன்மை பெறும் முதன்மைச் செயற்பாடு. கதைப்பின்னல் புனைகதைகளின் அடிப்படையான கூறுகளில் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. இது கதையின் நிகழ்வுகள், செயற்பாடுகள் ஆகியவற்றின் ஒழுங்கமைவைக் குறிக்கும். நுண்நிலை மட்டத்தில் கதைப்பின்னல் செயற்பாடுகளையும் எதிர்ச் செயற்பாடுகளையும் கொண்டது. இவற்றைத் தூண்டல், விளைவு என்றும் அழைப்பது உண்டு. பேரியல் மட்டத்தில் நோக்கும்போது, கதைப்பின்னலுக்கு ஒரு தொடக்கம், ஒரு இடைநிலை, ஒரு முடிவு என்பன இருக்கும். கதைப்பின்னலை ஏறி இறங்கும் கோட்டுப் பகுதிகளால் ஆன வில் வடிவக் கோட்டினால் குறிப்பது உண்டு. ஏறி இறங்கும் கோட்டுப் பகுதிகள் செயற்பாடுகளின் ஏற்ற இறக்கத்தைக் குறிப்பன. கதைப்பின்னலுக்கு ஒரு இடை மட்டத்திலான அமைப்பும் உண்டு. இது காட்சி, தொகுப்பு என்னும் கூறுகளால் ஆனது. காட்சி என்பது கதை நிகழ்வின் ஒரு அலகு. இதிலேயே செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான காட்சித் தொடர்களின் பின்விளைவாக உணர்ச்சிவயமான எதிர்வினையைக் கொண்ட தொகுப்பு இருக்கும். கதைப்பின்னல் இல்லையேல் கதை இல்லை.

கதைமாந்தர்

தொகு

கதைமாந்தர் அல்லது கதாபாத்திரம் புனைகதை ஒன்றின் அடிப்படையான கூறுகளில் ஒன்று. கதைமாந்தர் கதை ஓட்டத்தில் பங்கு வகிப்பவர். பெரும்பாலும் இது மனிதர்களாக இருக்கும். சில சமயங்களில் மனிதரல்லாத பிறவும் இத்தகைய பங்கு வகிப்பது உண்டு. கதையில் வரும் கதை மாந்தர்களுக்குரிய பண்புகளையும் செயற்பாடுகளையும் கதைமாந்தப் படைப்பு மூலம் படைப்பாளி உருவாக்குகிறார். கதை மாந்தர்கள் மூலமே கதை நகர்கிறது. கதைமாந்தப் படைப்பாக்கத்தின்போது கதைமாந்தருக்கான பண்புகளைக் கொடுக்கும் படைப்பாளிகள், பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். புறத்தோற்றம், பழக்க வழக்கங்கள், பிற பாத்திரங்களுடன் கொள்ளும் உறவு, உரையாடல், செயற்பாடுகள், பெயர் ஆகியவற்றை[7] உரிய முறையில் கையாள்வதன் மூலம் குறிப்பிட்ட பண்புகளை அவர்கள் கதை மாந்தர்களுக்கு வழங்குகின்றனர்.

புனைகதைகளில் காணும் கதைமாந்தரைப் பல வகையான பகுப்புக்களுள் அடக்குவது வழக்கம். குறித்த கதையொன்றில் கதைமாந்தர் வகிக்கும் பங்கை அடிப்படையாகக் கொண்டு கதை மாந்தரைப் பிரிப்பது ஒரு முறை. இதன்படி பின்வரும் கதைமாந்த வகைகள் உள்ளன.

  • முதன்மைக் கதைமாந்தர்
  • எதிர்க் கதைமாந்தர்
  • இன்றியமையாக் கதைமாந்தர்
  • துணைக் கதைமாந்தர்
  • சிறு கதைமாந்தர்

கதையொன்றில் மிக முக்கியமான கதைமாந்தர், "முதன்மைக் கதைமாந்தர்" ஆவார். இது கதையின் தலைவன் அல்லது தலைவியாக இருக்கலாம். பொதுவாக இக்கதைமாந்தரை முதன்மைப்படுத்தி அவர்களைச் சுற்றியே கதை நகரும். "எதிர்க் கதைமாந்தர்" முதன்மைக் கதைமாந்தருக்கு எதிர் நிலையில் உள்ளவர். பொதுவாக எதிர்நிலைப் பண்புகள் இருக்கும். முதன்மைக் கதைமாந்தருக்கும் எதிர்க் கதைமாந்தருக்கும் இடையிலான முரண்பாடு கதையை நகர்த்தும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருக்கும். சில கதைமாந்தர் கதையின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள். இக் கதைமாந்தர் இல்லாமல் கதையை நகர்த்திச் செல்வது முடியாது. இத்தகைய கதைமாந்தரே "இன்றியமையாக் கதைமாந்தர்". "துணைக் கதைமாந்தர்" என்போர் கதைப் போக்குக்குத் துணை நிற்பவர்கள் எனினும் இவர்களைச் சுற்றிக் கதை நிகழ்வதில்லை. "சிறு கதைமாந்தர்" கதையில் எப்போதாவது வருபவர்கள். இவர்கள் அதிக முக்கியத்துவம் இல்லாத கதைமாந்தர்.

கதைமாந்தரை இன்னொரு முறையில், "வளர்ச்சி பெறாக் கதைமாந்தர்", "வளர்ச்சி பெறும் கதைமாந்தர்" என இரு வகையாகவும் பிரிப்பது உண்டு. வளர்ச்சி பெறாக் கதை மாந்தரை "ஒருநிலை மாந்தர்" என்றும், வளர்ச்சி பெறும் கதைமாந்தரை "முழுநிலை மாந்தர்" என்றும் குறிப்பிடுவது உண்டு. இங்கே முதல் வகையினர் கதை ஓட்டத்துடன் வளர்ச்சி அடைவதில்லை. அக்கதைமாந்தரின் பண்புகள் கதை முழுவதும் மாறாது ஒரே நிலையில் இருக்கும். அடுத்த வகைக் கதைமாந்தர் கதை ஓட்டத்தோடு வளர்ச்சி அடைவர். அவர்களின் பண்புகள் கதைக்குப் பொருத்தமான விதத்தில் மாறிச் செல்லும்.

பகைப்புலம்

தொகு

பகைப்புலம் அல்லது பின்னணி ஒரு புனைகதையின் அடிப்படையான கூறு. இது கதை நிகழும் இடம், காலம் போன்றவற்றைக் குறிக்கும். சில சமயங்களில், பகைப்புலமும் ஒரு கதைமாந்தராக உருவாவதும் உண்டு.[8] கதையின் பகைப்புலத்தைக் கதை நிகழ்விடம், கதை நிகழும் காலம், சமூகச் சூழல் என்னும் பிரிவுகளாகப் பார்க்கலாம்.

ஒரு கதையில் கதை நிகழ்விடம் அக் கதையின் கதைமாந்தர் செயற்படும் இடமாகும். இது ஒரே இடமாகவோ அல்லது பல்வேறு இடங்களாகவோ இருக்கக்கூடும். நிகழ்விடம் ஊர், நகரம், நாடு எனப் பலவாறாக வேறுபடக்கூடும். சில புனைகதைகள் ஒரு வீட்டிலோ அல்லது ஒரு கட்டிடத்திலோ கூட நடந்து முடிந்துவிடக்கூடும். ஒரு பேருந்து, ஒரு கப்பல் அல்லது ஒரு வானூர்தியில் நிகழ்ந்து விடுகின்ற புனைகதைகளையும் காண முடியும். அதே நேரம், பல்வேறு நாடுகளில் நிகழும் கதைகளும் உண்டு.

கதையின் காலம் என்பது கதையின் செயற்பாடுகள் நிகழும் காலம் ஆகும். இது ஒரு கால இடைவெளியையும், கால கட்டத்தையும் குறிக்கலாம். கதையின் செயற்பாடுகள் இடம்பெறும் மிக முந்திய காலத்துக்கும், மிகப் பிந்திய காலத்துக்கும் இடைப்பட்டதே கால இடைவெளி. ஒரு நாட் கால இடைவெளியில் நிகழ்ந்து முடிந்துவிடும் கதைகளும் பல பத்தாண்டுகள் நிகழும் கதைகளும் உள்ளன. காலகட்டங்களைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் கதை நிகழ்வதாக இருக்கக்கூடும். சமகாலத்தில் நிகழும் கதைகளும், வரலாற்றின் ஒரு கட்டத்தில் இறந்த காலத்தில் நிகழும் கதைகளும், சில வேளைகளில் எதிர்காலத்தில் நிகழ்வதாகக் கற்பனை செய்யப்படும் கதைகளும் உள்ளன. தற்காலத்தில் பரவலாக எழுதப்படும் சமூகக் கதைகளும் பிறவகைக் கதைகளும் தற்காலப் பின்னணியில் எழுதப்படுபவை. வரலாற்றுப் புனைகதைகள், 50 -100 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் முதல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரையிலான ஏதாவதொரு காலகாட்டப் பகைப்புலத்தில் எழுதப்படுபவை.

வெவ்வேறு காலகட்டங்களை மையமாக வைத்து எழுதப்படும் புனைகதைகள் அவ்வக் காலங்களின் சமூகப் பகைப்புலங்களின் இயல்புகளின் வெளிப்பாடாகவும் அமைகின்றன. ஆனாலும் ஒரே கால கட்டத்தில் நிகழும் கதைகளும் வெவ்வேறான சமூகப் பகைப்புலங்களில் நிகழ்வது சாத்தியம். ஒடுக்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பல புனைகதைகள் சாதிப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட தற்காலத்துச் சமூகப் பகைப்புலத்தில் எழுதப்பட்டவை. இது போல உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கதைகள் பல வகுப்பு முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூக அரசியல் பகைப்புலத்தில் எழுதப்பட்டவை. தற்காலத்தில் நடுத்தர வகுப்பினரின் சமூகச் சூழலில் ஏராளமான கதைகள் எழுதப்படுகின்றன. புலம்பெயர் தமிழர்களை மையமாக வைத்து எழுதப்படும் பல கதைகள் இப்போது புதிய சமூகப் பகைப்புலங்களில் எழுதப்படுகின்றன. இலங்கையில் இடம்பெற்ற இனமுரண்பாட்டு நிகழ்வுகளும், அதன் விளைவுகளும் புதிய பகைப்புலங்களுடனான புனைகதைகளின் உருவாக்கத்திற்குக் கரணமாக உள்ளன.

உரையாடல்

தொகு

உரையாடலும், புனைகதைகளின் முக்கியமான கூறுகளுள் ஒன்றாகக் கருதப்படுவது. கதைமாந்தரிடையே நிகழும் பேச்சு உரையாடல் எனப்படும். கதையின் பல்வேறு அம்சங்களை வாசிப்பவர்களுக்கு உணர்த்துவதில் உரையாடல் பெரிதும் பயன்படுகிறது. கதையை விரும்பியபடி நகர்த்திச் செல்வதில் உரையாடலின் பங்கு முக்கியமானது. கதை மாந்தர்களின் பண்புகளை வெளிப்படுத்துவதற்கும்; பகைப்புலத் தன்மைகளை உணர்த்துவதற்கும்; அந்தந்த நேரத்தில் கதைமாந்தரின் மனநிலை, உணர்வுகள், நோக்கங்கள் போன்றவற்றை வாசிப்பவர்கள் உணரச் செய்வதற்கும் உரையாடல்களைப் படைப்பாளிகள் பயன்படுத்துவர். ஒரு காலத்தில் எழுத்து மொழி நடையிலேயே உரையாடல்கள் எழுதப்பட்டன. தற்காலத்தில் உரையாடல்கள் கதைமாந்தரின் பகைப்புலத் தன்மைகளைப் பொறுத்துப் பல்வேறு பேச்சு வழக்கு மொழிகளில் எழுதப்படுகின்றன. இவ்வேளைகளில் மொழித்தூய்மையையும் படைப்பாளிகள் பலர் கருத்தில் எடுக்காது பேச்சு வழக்கில் காணும் பிற மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துகின்றனர்.

புனைகதைகளில் வரும் உரைகள் எல்லாமே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோரிடையே நிகழும் உரையாடல்களாக இருப்பதில்லை. சில வேளைகளில் படைப்பாளியே நேரடியாகக் கதையைக் கூறுவார். இது "கதை சொல்லல்" எனப்படும். கதையின் நிகழ்விடம் அல்லது ஒரு கதைமாந்தரைப் பற்றி வாசகர்களுக்குச் சொல்வதற்காக "வருணனை"களும் உரைப்பகுதியில் இருப்பதுண்டு. இவ்வருணனையைப் படைப்பாளி நேரடியாகவோ அல்லது கதைமாந்தர்களின் வாய்வழியாகவோ செய்வது உண்டு. சில கதைகளில் கதையின் சில அம்சங்களைப் படைப்பாளி தானே விளக்கும் வழக்கமும் உள்ளது. இது "விளக்கவுரை" எனப்படும். சில இடங்களில் கதைமாந்தர் தமக்குத்தாமே பேசிக்கொள்வதன் மூலம், கதையை நகர்த்த உதவுவது உண்டு. இது "தனி மொழி" எனப்படும்.

முரண்பாடு

தொகு

முரண்பாடு என்பது புனைகதை இலக்கியங்களில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்று. "முரண்பாடு இல்லையேல் கதை இல்லை" என்று புரூக்சு, வாரென் என்னும் இருவரும் தாமெழுதிய "புனைகதையை விளங்கிக் கொள்ளல்" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளனர். சிக்கல் வாய்ந்த புனைகதைகளில் முரண்பாட்டைப் பிரித்துப் பார்ப்பது வாசிப்பவர்களுக்கு எளிதாக இராது. எனினும் முரண்பாடு முதன்மைக் கதைமாந்தரையும், எதிர்க் கதைமாந்தரையும் மையமாகக்கொண்டு அமையும். பொதுவாக இம்முரண்பாடு நன்மைக்கும் தீமைக்கும் இடையானதாக இருக்கும்.

புனைகதைகளில் காணும் முரண்பாடுகளில் அடிப்படையான ஐந்து வகைகள் உள்ளன. இவை,

  • ஒருவருக்குத் தன்னுடனான முரண்பாடு,
  • ஒருவருக்கும் இன்னொருவருக்கும் உள்ள முரண்பாடு,
  • ஒருவருக்கும் சமூகத்துக்கும் இடையிலான முரண்பாடு,
  • ஒருவருக்கும் இயற்கைக்கும் இடையிலான முரண்பாடு,
  • ஒருவருக்கும் மீவியற்கைச் சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடு என்பன.

முற்காலத்தில் மனிதனுக்கும் விதிக்கும் இடையிலான முரண்பாடுகளும் புனைகதைகளில் முக்கிய இடத்தைப் பெற்றன. தற்காலத்தில் மனிதனுக்கும் இயந்திரத்துக்கும், அல்லது தொழில்நுட்பத்துக்கும் இடையிலான முரண்பாடும் முக்கியமான முரண்பாடுகளில் ஒன்றாக உள்ளது.

புனைகதைப் பகுப்புக்கள்

தொகு

புனைகதைகள் அளவின் அடிப்படையில் பல்வேறு பகுப்புகளுக்குள் அடக்கப்படுகின்றன. எனினும், வெவ்வேறு பகுப்புகளுக்குள் அடங்கும் புனைகதைகளின் நீளம் குறித்துத் தெளிவான வரையறைகள் இல்லை இதனால் பல வேளைகளில் அடுத்தடுத்த வகைகளுக்கு இடையிலான எல்லைகள் தெளிவற்றவையாக உள்ளன. இவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் அளவு மட்டும் அல்லாது, வேறு இயல்புகளின் அடிப்படையிலும் அமைகின்றன. நீள ஒப்பீட்டின் அடிப்படையில் இவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:

குறிப்புகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனைகதை&oldid=3924153" இலிருந்து மீள்விக்கப்பட்டது