பூச்சு வேலை
பூச்சு வேலை அல்லது மணியாசம் (Plasterwork) என்பது கட்டுமானத்தின் உட்புறத்தைப் பாதுகாத்து அழகுபடுத்துவதற்காகவும், கட்டிடத்தின் வெளிப்புறத்தை மழை, வெயிலிலிருந்து பாதுகாத்து அழகுபடுத்துவதற்காகவும் செய்யப்படும் பூச்சு ஆகும். பூச்சு வேலை செயல்முறையானது கட்டடங்களின் கட்டமைப்பில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
வரலாறு
தொகுநமக்கு தெரிந்த துவக்க கால பூச்சுகளுக்கு சுண்ணாம்பே அடிப்படையானதாக இருந்தது. சுமார் கி.மு. 7500 காலகட்டத்தில் இருந்து, ஜோர்டானின் இருந்த ஐன் கசால் மக்கள் சுத்திகரித்த சுண்ணாம்பு கலந்த கலவையை தங்கள் வீடுகளில் சுவர்கள், மாடி போன்றவற்றில் பூசுவேலைக்கு பெரிய அளவில் பயன்படுத்தினர். பண்டைய இந்தியாவிலும் சீனாவிலும் களிமண் மற்றும் ஜிப்சம் பூச்சுகளைப் பயன்படுத்தி சொரசொரப்பான கல், மண், செங்கல் சுவர்களின் மீது வழவழப்பான மேற்பரப்பை உருவாக்கினர். துவக்கக் கால எகிப்திய கல்லறைகள், சுவர்கள் போன்றவற்றை சுண்ணாம்பு மற்றும் ஜிப்சம் போன்றவற்றைப் பயன்படுத்தி பூசப்பட்ட மேற்பரப்பரனது பெரும்பாலும் ஓவியம் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டது.
ரோமானியர்ள் சுண்ணாம்பு, மணல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பூச்சுகளை செய்தனர். மேலும் ஜிப்சம், சுண்ணாம்பு, மணல், பளிங்குப் பொடி ஆகியவற்றை பயன்படுத்தியும் பூச்சுவேலை செய்தனர். கி.மு. 4 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீமைக் காரையை ரோமானியர்கள் கண்டுபிடித்தனர். இதை சுண்ணாம்பு மற்றும் எரிமலைப் பகுதியில் கிடைத்த சிலிக்கா மணல் மற்றும் அலுமினா ஆகியவற்றின் கலவையைக் கொண்டு உருவாக்கினர். ரோமானியர்கள் காலத்துக்குப் பிறகு 18 ஆம் நூற்றாண்டு வரை சீமைக்காரை குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஐரோப்பாவில் இடைக்காலக்கிதில் பரவலாக பூச்சுவேலை செய்யப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, ஜிப்சம் பிளாஸ்டர் ஜிப்சம் பூச்சு உள் மற்றும் வெளிப்புற பூச்சுக்கு பயன்படுத்தப்பட்டது. பூச்சுக் கலவையை வலுவூட்ட மாவு, சிறுநீர், பீர், பால், முட்டை போன்றவை பயன்படுத்தப்பட்டன.
தற்கால பூச்சு
தொகுதற்காலத்தில் பூச்சு வேலையை மூன்றாகப் பிரிக்கின்றனர். அவை உட்புறப் பூச்சு, வெளிப்புறப் பூச்சு, உட்புறக் கூரைப் பூச்சு என்பவை ஆகும். உட்புறப் பூச்சு வேலைக்கு சிமெண்ட் மணல் கலவை 1:5 என்கிற விகிதத்திலும், வெளிப்புறப் பூச்சு வேலைக்கு 1:6 என்கிற விகிதத்திலும் உட்புற கூரைப் பூச்சு வேலைக்கு 1:3 என்கிற விகிதத்திலும் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். அதேபோல உட்புறப்பூச்சு மற்றும் கூரையின் உட்புறப் பூச்சு போன்றவை 12 மிமீ (அரை அங்குலம்) அளவுக்கு மிகாமல் கலவைக் கனம் இருப்பது சிறப்பு எனப்படுகிறது. இந்த அளவைவிட அதிகமாகக் கனம் ஏற்படும் சூழல் வந்தால் இரண்டு முறையாகப் பூச்சு பூசுவது சரியான முறையாகும். வெளிப்புறப் பூச்சின் கனம் 16 மிமீ அளவுக்கு மிகாமல் வருவது நல்லது. பூச்சுவேலை ஆரம்பிக்கும் முன்பு கனத்தை முடிவு செய்ய ஓட்டு சில்லுகளைச் சுவரில் ஆதாரப் புள்ளிகளாக அமைத்து சுவர் நேராகப் பூசப்படுவதை உறுதிசெய்துகொண்டே வேலையை துவக்குவர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ எம். செந்தில்குமார் (15 திசம்பர் 2018). "பூச்சு வேலை எப்படிச் செய்வது?". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2018.