பூதநாதர் கோயில்கள், பாதாமி

பாதாமியின் அகத்திய தீர்த்தத்திற்கு அருகில் காணப்படும் 7 முதல் 12 ஆம் நூற்றாண்டு காலகட்டதைச் சே

பூதநாதர் குழுக் கோயில்கள் (Bhutanatha group of temples, Badami) என்பவை இந்தியாவின் கர்நாடக மாநிலம் பாதமியில் (வாதாபி) உள்ள அகத்தியர் ஏரியின் கிழக்கே காணப்படும் பொ.ஊ. 7 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டதைச் சேர்ந்த இந்துக் கோயில்களாகும். இவை இரண்டு துணைக்குழுக்களாக உள்ளன. ஒன்று கிழக்கு பூதநாதர் குழு அல்லது பூதநாதர் முதன்மைக் குழு என்பது. இது ஏழு முதல் எட்டாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. இவை பெரும்பாலும் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளன. மற்றொன்று வட பூதநாதர் குழு அல்லது மல்லிகார்ஜுனக் குழு என்பன. இவை 11 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் பெரும்பாலும் நாகர (வட இந்தியக்) கட்டிடக்கலையில் கட்டப்பட்டவை.[1][2] முந்தையது பாதாமி சாளுக்கிய கட்டிடக் கலைஞர்களையும், பிந்தையது அருகிலுள்ள எல்லம்மா கோயிலுடன் கல்யாணி சாளுக்கிய கட்டிடக் கலைஞர்களாலும் கட்டப்பட்டது.[3]

{{{building_name}}}
பாதாமியில் உள்ள பூதநாதர் கோயில்கள் வளாகம்.
பொ.ஊ. 7 முதல் 8 ஆம் நூற்றாண்டு காலகட்டத்திய இந்து கோவில்கள் வளாகம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பாதமி, கருநாடகம்
புவியியல் ஆள்கூறுகள்15°55′15″N 75°41′16″E / 15.92083°N 75.68778°E / 15.92083; 75.68778
சமயம்இந்து சமயம்

பூதநாதர் முதன்மைக் குழு

தொகு
 
பூதநாதர் கோயில் வளாகம், தரைப் படம் (ஏரியின் இடது விளிம்பில் உள்ளது)

பூதநாதர் முதன்மைக் குழு கோயில்கள் (பொ.ஊ. 700–725) அகத்திய தீர்த்தத்தின் கிழக்கே உள்ள பழைய இந்து கோயில்கள் ஆகும். இந்தக் குழுவில் உள்ள மிகப் பழமையான கோயில் பெரியதாக உள்ள கோயிலாகும். இது நான்கு பாரிய மையத் தூண்களைக் (பகுதி எண்கோணமாக, கனசதுரமாக, வட்டமாக உள்ளது) கொண்ட ஒரு குதா-மண்டபத்தைக் (மைய மண்டபம்) கொண்டுள்ளது. இந்த மண்டபம் சிவலிங்கம் உள்ள சிறிய சதுர வடிவ கருவறைக்கு முன்பாக உள்ளது. கருவறையின் உச்சியில் திராவிட கட்டடக் கலை பாணியிலான திரிதால மேற்கட்டுமானம் (மூன்று தளங்கள்) கொண்டதாக உள்ளது. அதன் கீழ் பகுதியில் பாதபந்த மற்றும் கும்பம் அமைப்பு உள்ளது. விமானச் சுவர்களில் பிரம்மகாண்ட பாணி சுவர்ச் செவ்வகத் தூண்கள் கொண்ட கர்ணங்கள் உள்ளன. மேலும் விமானச் சுவர்களில் கின்னரர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் தலைகள் சித்தரிக்கபட்டுள்ளன. விமானத்தின் இரண்டாவது தளமானது அடியில் உள்ள பெரிய தளத்தைவிட சற்று சிறியதாக உள்ளது, மூன்றாவது தளத்தின் அளவு இரண்டாவதில் பாதியாக உள்ளது, மேலும் அதே கூறுகளை ஒவ்வொரு தாளங்களும் மீண்டும் கொண்டுள்ளன. உச்சியில் குட்டையான சிகரத்துடன் கூடிய சதுர வேதி மேல்கட்டமைப்புடன் முடிகிறது.[4]

சன்னதி மற்றும் மண்டபத்தின் சுவர்களில் உள்ள மாடக்குழிகள் தற்போது காலியாக உள்ளன. இருப்பினும் நீண்ட வால்களைக் கொண்ட மகரங்கள் (தொன்மவியல் விலங்கு) போன்ற சில அலங்கார கூறுகள் எஞ்சியுள்ளன.[5] மண்டபத்தில் பலகணி உள்ளது (மண்டபத்திற்கு வெளிச்சம் வர ஏதுவாகத் துளைகள் உள்ள சாளரங்கள்).[1] சன்னதியின் வாயிலின் அடிவாரத்தில் வலதுபுறத்தில் கங்கை தேவி தன் வாகனமான மகரத்தின் மீது அமர்ந்தவாறும், இடதுபுறத்தில் யமுனா தேவி தன் வாகனமான ஆமையின் மீது அமர்ந்திருக்கும் உருவமும் உள்ளது.[1] பிள்ளையார், மகிசாசுரமர்தினி ஆகிய உருவங்கள் அருகில் காணப்படும் மற்ற கலைப்படைப்புகளாகும். இங்குள்ள ஒரு குறிப்பிடத்தக்க அம்சம், கோயிலின் வெளிப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு ஆகும், இது ஸ்ரீதர்புதேஸ்வரருக்கு (தெய்வத்தின் அடைமொழியாக இருக்கக்கூடும்) பைங்காரா குடும்பத்தின் நிவந்தம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது. அந்த நேரத்தில் முதன்மைக் கோவில் செயல்பாட்டில் இருந்ததை இது காட்டுகிறது.[4]

வெளியில் பக்தர்களுக்கான படிக்கட்டுகள் உள்ளன.[4] சிறிய சிற்றாலயங்கள் பாழடைந்துள்ளன அவை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமைக்கபட்டவை. வளாகத்தின் கிழக்கே, ஒரு பாறாங்கல் மீது, நான்கு சைவ சிற்பங்கள் வழக்கத்திற்கு மாறான கட்டிடக்கலையுடன் உள்ளன. இவை சிவன் சன்னதியின் நான்கு கட்டிடக்கலை பாணிகளின் பதிவுகளாகும். இவை பஞ்சகுட மேற்கட்டுமானத்துடன் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவையாக இருக்கலாம். இந்தக் கோயில் வளாகத்தின் தோற்றமானது இது ஒரு சைவ கோயில் வளாகம் என்பதை காட்டுவதாக உள்ளது.[4]

பிரதான கோவிலின் வடக்கே ஒரு சிறிய சிற்றாலயம் உள்ளது, இது முதலில் விஷ்ணுவுக்காக கட்டபட்டதாக இருக்கலாம் என்று 1923 இல் ஹென்றி கசன்சால் குறிப்பிடப்பட்டது. ஒரு காலக் கட்டத்தில், இந்த கோவிலை லிங்காயத்து மரபினரால் கைகொள்ளபட்டது. அவர்கள் இதற்கு ஒரு வெளிப்புற மண்டபத்தை கட்டி, கருவறைக்குள் நந்தியையும், சிவலிங்கத்தையும் நிறுவினர்.[5]

ஏரியின் கிழக்கே பூதநாத குழுக் கோயில்களின் பரந்த காட்சி

மல்லிகார்ஜுனா குழு

தொகு
 
மல்லிகார்ஜுனா குழுவில் உள்ள கோயில்கள், வடக்கு பூதநாதர் குழு என்றும் அழைக்கப்படுகின்றன.

மல்லிகார்ஜுனா குழு கோயில்கள் முதன்மை பூதநாதர் கோயில் குழுவிற்கு அருகில் உள்ளது. இவை ஏரியின் வடக்கு பின்புறத்தில் அமைந்துள்ளன. இதில் பல கோயில்கள் உள்ளன. இவை தெற்கு வாயிலைக் கொண்டவையாக உள்ளன. இவை பொ.ஊ. 11 முதல் 12 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை. இவற்றின் பிரமிடு போன்ற குறிப்பிடத்தக்க மேல்கட்டமைப்பால் பாம்சனா நாகர பாணியியைச் சேர்ந்தவை என்று குறிக்கப்படுகின்றன. இது மிகப் பெரிய விஷ்ணு கோவிலாக இருந்திருக்கலாம். இந்தக் கோயில்கள் ஒரு காலக் கட்டத்தில் பாழடைந்து வழிபாடு அற்றுப் போனது. பிற்காலத்தில் இங்கு இங்கு சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டது. இந்தக் கோயில்கள் கல்யாணி சாளுக்கிய கட்டிடக் கலைஞர்களின் கைவண்ணத்தைக் கொண்டுள்ளன. இந்தக் கோயில்களில் உள்ள மிகப்பெரிய கோயிலில் எட்டு தூண்கள் உடைய செவ்வக மண்டபம் உள்ளது, இது உள் மண்டபம், அந்தரளம், கருவறை ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. இந்தக் குழுவில் உள்ள அனைத்துக் கோயில்களும் எளிமையான சுவர்களைக் கொண்டுள்ளன. மண்டபத்தின் மேல் கோணலான இறவாணங்கள் உள்ளன. இந்த கோயில் குழுவில் காணப்படும் கலைப்படைப்புகளில் விஷ்ணு, சிவன் என இருவரும் உள்ளனர்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Cousens (1926), p. 55
  2. Hardy 1995, ப. 321.
  3. Hardy 1995, ப. 322.
  4. 4.0 4.1 4.2 4.3 M. A. Dhaky & Michael W. Meister 1983, ப. 57–59.
  5. 5.0 5.1 Cousens (1926), p. 56
  6. Michell, George (2011). Badami, Aihole, Pattadakal, Jaico Books. p. 60. ISBN 978-81-8495-600-9.

நூல் பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு