பெக்கி கிரிப்ஸ் அப்பையா
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
பெக்கி கிரிப்ஸ் அப்பையா (Peggy Cripps Appiah அல்லது Enid Margaret “Peggy” Cripps Appiah, 1921 - பெப்ரவரி 11, 2006), இங்கிலாந்தில் பிறந்தவர். இவருடைய தந்தை இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இங்கிலாந்தின் நிதியமைச்சராகவிருந்த ஸ்டஃபோர்ட் கிரிப்ஸ்(Stafford Cripps). குடும்பத்தின் இரண்டு பக்கத்திலும் அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள் நிறைந்திருந்தார்கள். அரசியல் ஈடுபாட்டோடு கிறிஸ்தவ சமயத்திலும் அக்குடும்பத்தாருக்குப் பெரும் ஈடுபாடு இருந்திருக்கிறது. இதனால், மேல் மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த பெக்கி அதற்கேற்றபடி கல்வி கற்றாலும் இங்கிலாந்துக்கு வெளியே இருக்கும் உலகத்தையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. பெக்கியும் அந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.
பெக்கி கிரிப்ஸ் அப்பையா | |
---|---|
பிறப்பு | 21 மே 1921 Lechlade-on-Thames |
இறப்பு | 11 பெப்பிரவரி 2006 (அகவை 84) |
வாழ்க்கைத் துணை/கள் | ஜோசப் எமானுவேல் அப்பையா |
குழந்தைகள் | குவாம் ஆந்தனி அப்பையா, Isobel Takyiwah Appiah, Amy Adwoa Appiah, Theresa Jane Appiah, Abena Appiah, Adwoa Appiah, Ama Appiah |
குடும்பம் | John Cripps, Isobel Diana Cripps, Anne Theresa Cripps |
விருதுகள் | Member of the Order of the British Empire |
1938ஆம் ஆண்டு ஜமேய்க்காவில் பல மாதங்களைச் செலவழித்த பெக்கிக்கு தந்தையின் அரசியல் தொடர்புகள் காரணமாக ஜவஹர்லால் நேருவுடனும் இந்திரா காந்தியுடனும் தொடர்பு ஏற்பட்டது. 1939இல் இத்தாலிக்கு ஃப்ளோரன்ஸ் நகரின் கலை வரலாறு ஆகியவை பற்றி அறிந்துகொள்ளச் சென்றிருந்த பெக்கி இரண்டாம் உலகப்போர் தொடங்குமோ என்றிருந்தபடியால் நாடு திரும்ப நேரிடுகிறது.
பின்னர் மாஸ்கோவில் பிரித்தானிய தூதுவராகவிருந்த அவருடைய தந்தைக்கு உதவியாளராக இருந்திருக்கிறார். அப்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஜேர்மனியின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருந்தபடியால் கனடா வந்து, கனேடிய ரயில்வே மூலம் கிழக்கிலிருந்து மேற்கே பயணம் செய்து, அங்கிருந்து ஜப்பான், சீனா ஆகிய நாடுகளைக் கடந்து சோவியத் யூனியனை ரயிலில் கடந்து மாஸ்கோ சென்றடைந்திருக்கிறார். அங்கிருந்த காலகட்டத்தில் அங்கே யூகோஸ்லாவியா, சீனா மற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்த தூதுவர்களின் மகள்களோடு நெருங்கிய நட்பு ஏற்பட்டிருக்கிறது.
1942இல் இந்தியாவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த தந்தையோடு முதன் முறையாக ஆப்பிரிக்க கண்டத்துக்குச் செல்கிறார். இரண்டாம் உலகப்போரின் மீதிக்காலத்தில் செய்தித்துறையில் - முதலில் இந்தியா தொடர்பான அலுவலகத்திலும் பிறகு சோவியத் உறவுகளுக்கான துறையிலும் - வேலை செய்கிறார். இரண்டாம் உலகப்போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு, இங்கிலாந்தில் பணம் சேர்த்து உதவுகிறார் பெக்கியின் தாய். 1948இல், அவ்வாறு சேகரித்துக்கொடுத்த பணம், மக்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை நேரில் பார்த்துத் தெரிந்துகொள்வதற்காக அவரை சீனாவுக்கு வந்துபோகுமாறு சீன அரசாங்கம் கேட்கிறது. பெக்கியும் அவருடைய தாயும் சீனாவுக்குச் செல்கிறார்கள். இங்கிலாந்து திரும்பும் வழியில் இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் போகிறார்கள்.
சிறுவயதிலிருந்தே, ஐரோப்பாவுக்கு வெளியேயிருக்கும் நாடுகளான ஜமேய்க்கா, ரஷ்யா, ஈரான், சீனா, பர்மா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்று பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்த அனுபவங்கள் பெக்கிக்கு பல புரிதல்களை ஏற்படுத்தியிருந்தது. இதன்காரணமாக மக்களி¨டையே ஒற்றுமை ஏற்படுத்த விழைந்த பெக்கி, Racial Unity என்ற நிறுவனத்தில் சேர்ந்து பணி புரியத்தொடங்கினார். இந்த ‘Racial Unity’ நிறுவனம், இங்கிலாந்துப் பிரதமராகவிருந்த Clement Atleeயின் சகோதரியால் தொடங்கப்பட்ட நிறுவனம். Racial Unityயில் வேலை செய்துகொண்டிருந்தபோதுதான் ஜோ அப்பையாவுடனான அறிமுகம் நடக்கிறது. அந்நேரம் ஜோ, மேற்கு ஆப்பிரிக்க மாணவர்கள் சங்கத்தின் தலைவராகவிருந்திருக்கிறார். நண்பர்களாக இருந்தவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். ஆனால், ஸ்டஃபோர்ட் கிரிப்ஸ் உடல்நலமில்லாமல் இருந்தபடியால் திருமணம் நடக்கத் தாமதமானது. இதனால், பெக்கியும் ஜோ அப்பையாவும் திருமணம் செய்யவிருந்த விதயம் பொதுவில் தெரிவிக்கப்படவில்லை.
1952இல் சுவிட்ஸர்லாந்துக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட ஸ்டஃபோர்ட் கிரிப்ஸ் அங்கேயே மரணமடைந்தார். அப்போதைய கலாசார சூழலின்படி ஒரு வருடத்திற்கு திருமணம் செய்யக்கூடாது என்றிருந்தபடியால், பெக்கியை அப்போதைய கானா நாட்டைச் சுற்றிப் பார்த்துவரும்படி பெக்கியின் தாய் அனுப்பினார். கானா நாட்டையும் அதன் மக்களையும் பெக்கிக்கு மிகவும் பிடித்துப்போனது. அரசியல்ரீதியாகப் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றபடியால், பெக்கியின் ஆப்பிரிக்க விஜயம்பற்றிப் பலருக்கும் ஆர்வமிருந்தது. பெக்கி இப்பயணத்தின்போது கானாவின் விடுதலைக்காகப் பாடுபட்டுக்கொண்டிருந்த பல முக்கிய தலைவர்களைச் சந்தித்தார்.
1953இல் பெக்கி கிரிப்ஸும் ஜோ அப்பையாவும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்ற செய்தி இங்கிலாந்து முழுவதும், உலகம் முழுவதும் பரவியது. பலரையும் இச்செய்தி கோபத்துக்கு உள்ளாக்கியது. அப்போது தென்னாப்பிரிக்காவின் நீதியமைச்சராகவிருந்து அபார்தெயிட்(apartheid)ஐப் பரப்பிக்கொண்டிருந்த சார்லஸ் ஸ்வார்ட்(Charles Swart), இந்தத் திருமணம் அருவருக்கத்தக்கது என்றார். நைஜீரியாவின்(அப்போதைய வடக்கு ரொடீ்ஷியா) பத்திரிகையாளரொருவர், திருமணப் புகைப்படங்களைப் பார்த்தால் பன்றிக்கும் வயிற்றுக் கோளாறு வருமென்றார். (’turn the stomach of a pig’). இவர்களின் திருமணத்தில் மாப்பிள்ளைத்தோழனாக (Best Man) நின்றவர் மேற்கிந்தியாவைச் சேர்ந்த ஜோர்ஜ் பாட்மோர் (George Padmore). பிற்காலத்தில் லேபர் கட்சியில் தலைவராகவிருந்த மைக்கேல் ஃபூட் (Michael Foot), ஸ்டஃபோர்ட் கிரிப்ஸைத் தொடர்ந்து நிதியமைச்சராகவிருந்த ஹ்யூக் கெயிட்ஸ்கில் (Hugh Gaitskill), யூ.என்-இன் இந்தியத்தூதுவராகவிருந்த கிரிஷ்ண மேனன் மற்றும்பலர். ஜமேய்க்கன் பத்திரிகைச் செய்தியொன்று இப்படிச் சொல்கிறது - “top-hatted and frock-coated British aristocrats… ex-Cabinet Ministers… as well as several Tory and Socialist members of Parliament.”
இங்கிலாந்தில் வாழ்க்கையைத் தொடங்கிய அப்பையா குடும்பம், மே 1954-இல் பிறந்த அவர்களது முதலாவது பிள்ளை குவாம் ஆந்தனி அப்பையாவுடன் நவம்பர் 1954-இல் கானா திரும்பியது. திருமணத்திற்குப்பிறகு கானாவைத் தனது சொந்த நாடாகக் கருதிய பெக்கி, அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு அங்கேயே தொடர்ந்து வாழ்ந்தார். ஜோ அப்பையா தன்னையொரு வக்கீலாகவும் அரசியல்வாதியாகவும் நிலைநாட்டிக்கொள்ள முயன்றுகொண்டிருக்கும்போது பெக்கி கானாவின் கலாசாரத்தைக் கற்பதில் ஈடுபட்டிருந்தார். கூடவே, தந்தைக்கு உதவியதுபோல ஜோ அப்பையாவிற்கும் பல விதங்களில் உதவியாகவிருந்தார்.
1950களிலிருந்து அடுத்துவந்த முப்பதாண்டுகளுக்கு அப்பையா குடும்பத்தின் நூலகம், அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் திறந்துவிடப்பட்டது. சிறு குழந்தைகளிலிருந்து வளர்ந்த பிள்ளைகள் வரை அந்நூலகத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். இதைத்தவிர இன்னும் சில குழந்தைகளின் கல்வியிலும் பெக்கி கவனம் செலுத்தினார்.
1956-இல் ஜோ அப்பையா பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயத்தில் பெக்கி குமாசிக்கு (Kumasi) அருகிலிருந்த Church of St. George என்ற சிறிய தேவாலத்தில் சேர்ந்து மக்களுக்காக உழைக்கத் தொடங்கினார். கூடவே டாக்டர் அலெக்ஸ் கியெர்மாடெனுடன் (Alex Kyerematen) சேர்ந்த் கலாசார நிலையமொன்றை குமாசியில் தொடங்கினார். கூடவே சிறுவர்களுக்கான தங்குமிடம் மற்றும் அனாதைகளுக்கான தங்குமிடம் போன்றவற்றை மேம்படுத்தவும் பாடுபட்டார். பிற்காலத்தில் கானாவின் கண்தெரியாதவர்களுக்கான தேசிய அமைப்புக்கும் தன்னாலான உதவிகளைச் செய்துவந்தார்.
1961-இல் ஜோ அப்பையா, குவாம் ந்க்ருமாஹ்வின் (Kwame Nkrumah) உத்தரவின்பேரில் சிறைப்படுத்தப்பட்டபோதும் நாட்டை விட்டுச் செல்ல மறுத்தார். அவரை, நாடு கடத்துவதற்கான ஆணை, பிரித்தானிய பத்திரிகைகள் இதைப்பற்றி ஆர்வத்தோடு பேசத்தொடங்கியதும் கைவிடப்பட்டது. கணவன் சிறையில், மகன் சுகயீனமாக மருத்துவமனையில் என்ற நிலையில் பெக்கி மனதாலும் உடல்ரீதியாகவும் பலவித துன்பங்களுக்கு ஆளானார். அச்சமயத்தில், அவர் கர்ப்பமாகவிருந்ததும் ஒரு காரணம். 1962-இல் ஜோ அப்பையாவை சிறையில் சந்தித்த பெக்கியின் தாயார் லேடி கிரிப்ஸ், சுகயீனமாகவிருந்த பேரனுடன் இங்கிலாந்து திரும்பினார். கிறிஸ்துமஸ் 1962க்கு முன்னர் ஜோ அப்பையா சிறையிலிருந்த் விடுவிக்கப்பட்டதும் வக்கீல் தொழிலுக்குத் திரும்பினார். 1966-இல் குவாம் ந்க்ருமாஹ்வின் (Kwame Nkrumah) ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்த நாட்களில் பிள்ளைகளைனவரும் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல, கணவர் மறுபடியும் அரசியலில் ஈடுபட பெக்கி குமாசியில் தங்கி தன்னுடைய சமூக சேவைகளைத் தொடர்ந்தார்.
இதற்கிடையில், பெக்கி அவரது கணவர், குடும்பத்தினர் மற்றும் சந்தித்த குழந்தைகள் மூலமாக நிறைய விதயங்களைத் தெரிந்துகொண்டிருந்தார். அகான் (Akan) ஓவியங்கள் மற்றும் நாட்டார் வழக்கியல், சொலவடைகள், அனான்சி (Ananse) கதைகள் ஆகியன இவற்றிலடங்கும். 1960களின் இடைப்பட்ட காலத்திலிருந்து அனான்சி (Ananse) கதைகளைச் சிறுவர்களுக்காக எழுதி வெளியிடத் தொடங்கினார். இக்கதைகள் ஆபிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆங்கிலம் தெரிந்த உலக நாட்டு மக்களிடையே பரவத் தொடங்கியது. கூடவே கானா நாட்டுக் குழந்தைகள் ஆங்கிலம் கற்க வசதியாகச் சில நூல்களையும் வெளியிட்டார். இதுபோக குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமென்று சில நாவல்களையும் வெளியிட்டார். கவிதைகள் சிலவற்றை இரண்டு தொகுதிகளாகவும் வெளியிட்டிருக்கிறார். இவரது உழைப்பில் மிகவும் சிறந்தது, மகன் குவாம் ஆந்தனி அப்பையாவுடன் சேர்ந்து 2002இல் வெளியிட்ட ‘பு மெ பெ: அகான் சொலவடைகள்’ (Bu Me Be: Proverbs of the Akan) என்ற தொகுப்புத்தான். ஏறக்குறைய ஐம்பதாண்டுகளாகச் சேர்த்த ஏழாயிரத்துக்கும் அதிகமான சொலவடைகளின் தொகுப்பு அது.
199-இல் ஜோ அப்பையா புற்று நோயால் இறந்து போனார். எப்போது நாடு திரும்பப் போகிறாய் என்று பெக்கியிடம் யாராவது கேட்டால், தான் தன்னுடைய நாட்டில்/வீட்டில் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டார். கானாவிலேயே தொடர்ந்து தங்கி, அவருடைய சமூகத் தொண்டுகளையும் அகான் நாட்டார் வழக்கியல்களைத் தெரிந்துகொள்வதிலும் தன்னுடைய நேரத்தைச் செலவழித்தார். 1996-இல் இங்கிலாந்து மகாராணி இவருக்கு MBE பட்டத்தை ‘இங்கிலாந்துக்கும் கானாவுக்குமான தொடர்புகளைப்பேணியதற்கும் சமூக சேவைகளுக்காகவும்’ கொடுத்தது.
ஆன்டி பெக்கி (Auntie Peggy) என்று எல்லோராலும் நேசிக்கப்பட்ட இவர் பெப்ரவரி 11, 2006 அன்று குமாசியில் இறந்துபோனார்.
நூல்கள்
தொகு- Bu Me Be: Akan Proverbs. Africa World Press, 2006.
- Busy body. Accra: Asempa, 1995.
- Rattletat. New Namibia Books, 1995.
- The Rubbish Heap. Accra: Asempa, 1995.
- Kyekyekulee, Grandmother's Tales. Accra: Quick Service Books, 1993.
- Kofi and the Crow. Accra: Quick Service Books, 1991.
- Afua and the Mouse. Accra: Quick Service Books, 1991.
- Abena and the Python. Accra: Quick Service Books, 1991.
- The Twins. Accra: Quick Service Books, 1991.
- Tales of an Ashanti Father. Boston: Beacon Press, 1989.
- A Dirge too Soon. Accra: Ghana Publishing, 1976.
- Ring of Gold. London: Deutsch, 1976.
- Why there are so many Roads. Lagos: African University Press, 1972.
- Gift of the Mmoatia. Accra: Ghana Publishing, 1972.
- Why the Hyena does not care for Fish and other tales from the Ashanti gold weights. London: Deutsch, 1971.
- A Smell of Onions. London: Longman, 1971.
- The Lost Earring. London: Evans, 1971.
- Yao and the Python. London: Evans, 1971.
- The Pineapple child and other tales from Ashanti. London: Evans, 1969.
- The Children of Ananse. London: Evans, 1968.
- Ananse the Spider: Tales fron an Ashanti village. New York: Pantheon, 1966.