பெண்ணேஸ்வர மடம் பெண்ணேஸ்வரர் கோயில்

வேதவல்லி உடனுறை பெண்ணேசுவரர் கோயில் என்பது கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் தர்மபுரியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள பெண்ணேஸ்வர மடம் என்னும் ஊரில் தென்பெண்ணை ஆற்றின் மேற்குக் கரையில் உள்ளது. இக்கோயிலுக்கு எதிராக ஸ்ரீ பெண்ணேசுவரர் மலை என்னும் மலை உள்ளது. இந்த மலையை முழுநிலவு நாளில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.[2]

பெண்ணேஸ்வரர் கோயில்
பெயர்
பெயர்:பெண்ணேஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:பெண்ணேஸ்வர மடம்
மாவட்டம்:கிருட்டிணகிரி மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பெண்ணேஸ்வரர்
தாயார்:வேதவள்ளி[1]
தல விருட்சம்:பனை
தீர்த்தம்:தென்பெண்ணை ஆறு
சிறப்பு திருவிழாக்கள்:
 • சிவராத்திரி
 • மார்கழி திருவாதிரை
 • நவராத்திரி
 • ஆடி வெள்ளிக்கிழமை
 • ஆடி அம்மாவாசை
 • கார்த்திகை சோமாவாரம்
 • பங்குனி முதல் சோமாவாரம்
 • கடைசி சோமாவாரம்
 • சித்திரை வருடப் பிறப்பு
 • ஐப்பசி அன்னாபிசேகம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:மூன்றாம் குலோத்துங்க சோழன்
வரலாறு
தொன்மை:12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு

கோயில்பற்றிய கதை தொகு

பெண்ணேசுவர மடம் ஊருக்கு அருகில் உள்ள ஊர் ஜெயினூர், இந்த ஊரில் சைன சமயத்தினர் மிகுதியாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் அருகில் வாழக்கூடிய சைவ சமய மக்களுக்கு துண்பங்களை இழைத்தனர். இதைக் கேள்வியுற்ற மூன்றாம் குலோத்துங்க சோழன் சைனர்களை ஒடுக்க தன் படைகளுடன் வந்தான். அங்கேயே சில நாட்கள் தங்கி இருந்தான், அப்போது குலோத்துங்கனின் கனவில் ஒரு சுயம்பு லிங்கத்தைக் கண்டான். அடுத்த நாள் ஒரு பனை மரத்தினடியில் ஒரு பசு தானாக பால் சொரிவதைக் கண்டு அதிசயித்து, அதன் அருகில் சென்று கவணித்தபோது அங்கு அவனது கனவில் தோன்றிய சுயம்பு லிங்கம் இருப்பதைக் கண்டு வணங்கினான். அதன் பிறகு நடந்த போரில் குலோத்துங்கன் வெற்றி கண்டான். பனை மரத்தின் அடியில் கண்ட ஈசனுக்கு கோயில் எழுப்ப மக்களிடன் உறுதியளித்து, தனது வெற்றியின் நினைவாக அவன் இக் கோயிலை எழுப்பினான்.[3]

பெயர் வரலாறு தொகு

இக்கோயில் காணப்படும் போசள மன்னன் வீர இராமநாதன் ஆட்சிக் கால கல்வெட்டில் இத்தல இறைவன் பெண்ணை நாயினார் என்று குறிக்கப்பட்டுள்ளார். பின்னர் சமசுகிருதமயமாக்கலால் பெண்ணேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.[4] இக்கோயில் பெண்ணை ஆற்றின் கிழக்குக் கரையில் உள்ளதால் பெண்ணை நாயினார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

கோயிலமைப்பு தொகு

இக் கோயிலின் கோபுரம் தென் புரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பெரிய கோபுரங்களில் ஒன்று ஆகும். கோபுரத்தின் அடிப்பகுதி கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரம் ஏழு நிலைகளுடன் 110 அடி உயரமுடையதாக அமைக்கப்பட்டுள்ளது.[3] கோபுரத்தின் வாயிலில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த துவார பாலகர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் ஒரு பெரிய திறந்த வெளி உள்ளது கோயிலில் இருந்து தெண்பெண்ணை ஆற்றுக்குச் செல்ல படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தென்கிழக்கில் ஒரு மண்டபம் உள்ளது, இது பதினாறாம் நூற்றாண்டில் வேலப்ப கந்தர் கந்தன் செட்டி என்பவரால் அமைக்கப்பட்டது. இக்கோயில் இரு பிரகாரங்களைக் கொண்டதாக உள்ளது. வெளிப் பிரகாரம் திறந்த வெளியாக உள்ளது. இன்னொரு பிரகாரம் கோயிலை ஒட்டி அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை அந்தராளம், முகமண்டபம் ஆகியவற்றுடன் உள்ளது. முக மண்டபத்தின் வடக்கு உள் சுவரை ஒட்டி ஒரு பிள்ளையார் சிலை அமைந்துள்ளது இந்தப் பிள்ளையாரை பக்தர்கள் அதியமான் பிளைளாயார் என அழைக்கின்றனர். மேலும் முகமண்டபத்தில் நந்தி, பலிபீடம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் ஒரு சிறிய சுயம்பு லிங்கம் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் பிள்ளையார், சப்மதமாதர் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது அல்லாது பிரகாரத்தில் ஒன்பது அறைகள் அமைக்கப்பட்டுள்ளன இதில் ஒரு அறையில் இராமருடன், சீதை, இலக்குவன் ஆகியோருக்கு சிறிய கோயிலும் அடுத்த ஐந்து அறைகளில் லிங்கங்கள் அமைக்கப்பட்டும், அடுத்து வள்ளி தெய்வணையுடன் முருகர், அடுத்த அறையில் அம்மன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. இது அல்லாது நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன் ஆகியோருக்கு சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோட்ட தெய்வங்களாக தென்முகக் கடவுள், துர்கை உள்ளனர்.

புலிச் சின்னம் தொகு

 
பெண்ணேஸ்வர் கோயில் பொறிக்கப்பட்டுள்ள சோழரின் புலிச் சின்னம்

சோழர்களால் நூற்றுக்கணக்கான கோயில்கள் கட்டப்பட்டுள்ள என்றாலும் எங்கும் அவர்களின் சின்னமான புலிச் சின்னத்தைப் பொறித்ததாக இதுவரை கண்டறியப்பட்டதில்லை ஆனால் பெண்ணேஸ்வர் கோயிலின் கருவறையின் வடக்குப் புறம் நான்முகனின்கீழ் குமுதப்படையில் பொறிக்கப்பட்டுள்ள சோழ பட்டத்தரசி சோழனை முழுதுடையாள் கூத்தாடும் தேவர் நாச்சியார் என்பவரின் கல்வெட்டில் அவரின் பெயருக்கு முன்னால் கோட்டுருவமாக சோழரின் புலிச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பு. இது மட்டுமல்லாது மூன்றாம் குலோத்துங்க சோழனின் சிலையும் கோயிலில் உள்ளது.

கல்வெட்டுகள் தொகு

இக்கோயிலில் முப்பது கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன இதில் பத்து கல்வெட்டுகள் சோழர் காலத்தவை (இதில் ஆறு கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவை, நான்கு மூன்றாம் இராசராசன் காலத்தவை), ஐந்து கல்வெட்டுகள் போசளர் காலத்தவை, முன்று விசயநகர மன்னர் காலத்தவை, பிற கல்வெட்டுகள் பிற்காலத்தவை ஆகும்.[3]

படவரிசை தொகு

மேற்கோள்கள் தொகு

 1. "மலைக் கோயிலில் நாளை பிரதோஷப் பூஜை". செய்தி. தினமலர். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 2. "மலைக் கோவிலில் பௌர்ணமி கிரிவலம்". செய்தி. தினமலர். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 3. 3.0 3.1 3.2 penneswrar temple in krishnagiri dist (2009). தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்டக் கருத்தரங்க மலர். தருமபுரி: ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை. பக். 158-164. 
 4. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 118.