பெருங்கடல் நீரோட்டம்

பெருங்கடல் நீரோட்டம் (ocean current) என்பது பொதுவாக பெருங்கடலில் ஒரு குறிப்பிட்ட திசையில் பெரிய பரப்பில் நகரும் நீரினைக் குறிக்கும். வேறு வகையில் கூறுவதானால் பெருங்கடல் நீரோட்டமானது கடலில் இயல்பாக ஓடும் நீராகும். இந்த நீரோட்டங்கள் ஆறுகளைப் போல குறிப்பிட்ட பாதை, வேகத்தில் பாய்கின்றன. இவை வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் என இரு வகைப்படும். வெப்ப நீரோட்டங்கள் தாழ் அட்சரேகையிலிருந்து உருவாகி துருவங்களை நோக்கி ஓடுகின்றன. குளிர் நீரோட்டங்கள் உயர் அட்ச ரேகை பகுதிகளில் உருவாகி பூமத்தியரேகையை நோக்கி ஓடுகின்றன.[1] பெருங்கடல் நீரோட்டங்கள் காற்று, நீர் வெப்பநிலை, உப்பின் அடர்த்தி, மற்றும் நிலவின் ஈர்ப்பு விசை போன்றவற்றால் ஏற்படுகின்றன. இந்த நீரோட்டத்தின் திசையும் விரைவும் கடலோரப் பகுதி, கடலின் அடித்தரை ஆகியவற்றின் தன்மைகளைச் சார்ந்துள்ளன. இந்த நீரோட்டங்கள் பல்லாயிரக்கணக்கான தொலைவு பாய முடியும். இவை உலகின் அனைத்துப் பெருங்கடல்களிலும் காணப்படுகின்றன. ஓர் முதன்மை எடுத்துக்காட்டாக அத்லாந்திக் பெருங்கடலில் காணப்படும் வளைகுடா ஓடையைக் குறிப்பிடலாம்.

பெருங்கடல் நீரோட்டங்கள்.
உலகின் அனைத்து பெரும் நீரோட்டங்களையும் காட்டும் வரைபடம்.
பெருங்கடல் நீரோட்டங்களை அளந்திடும் கருவி

பெருங்கடல் நீரோட்டங்களை கடலின் மேல்மட்டத்திலும் காணலாம்; நீரடியில் ஆழமான பகுதிகளிலும் காணலாம்.

  • கடலின் மேற்புறத்தில் காணப்படும் நீரோட்டங்கள் காற்றைச் சார்ந்துள்ளன. இவை வட கோளத்தில் கடியாரச் சுற்றாகவும் தெற்கு அரைக்கோளம்|தென் கோளத்தில் கடிகாரச் சுற்றுக்கு எதிராகவும் பயணிக்கின்றன. இவற்றை கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர்கள் (1,300 ft) வரை காணப்படுகின்றன.
  • ஆழ்கடல் நீரோட்டங்கள் நீரழுத்தம், நீரின் வெப்பநிலை, உப்பின் அடர்த்தி இவற்றைச் சார்ந்துள்ளன.

பெருங்கடல் நீரோட்டங்கள் உலகளவிலான ஓர் செலுத்துப் பட்டையாக செயல்பட்டு புவியின் பல்வேறு மண்டலங்களின் வானிலையை தீர்மானிப்பதில் முதன்மை பங்கு கொள்கின்றன. காட்டாக பெருவிலுள்ள லிமாவின் வெப்பநிலை அதன் அமைவிடத்தினால் மிகவும் வெப்பமாக இருக்க வேண்டும்; ஆனால் அம்போல்ட்டு நீரோட்டத்தினால் இப்பகுதி குளிர்ந்து உள்ளது.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ocean currents
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஏழாம் வகுப்பு, பருவம் 3, தொகுதி 2, பக்கம் 198