பேச்சு:உயிரணுக்கொள்கை

உயிரணுக்கொள்கை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
உயிரணுக்கொள்கை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நண்பரே உங்களின் கலகொள்கையேய் சில மாறுதல் செய்து உள்ளேன்.

chloroplast and mitochondria பற்றி சில வரிகள் எழுதி உள்ளேன். உங்களுக்கு இந்த மாறுதல்கள் பிடித்து உள்ளனவா? என்பதை தெரிய படுத்தவும்...

நன்றி.. --Munaivar. MakizNan 01:20, 9 ஜூலை 2009 (UTC)


அங்கி, சுயாதீனம், அனுசேபம் இவற்றின் பொருள் என்ன எனக்கு தெரியவில்லை. அங்கி- ஆடை என கேள்விபட்டுள்ளேன். மற்ற வார்த்தைகளை கேள்வி பட்டதில்லை. விளக்கம் அளித்தால், நல்ல தமிழ் சொற்களை இடலாம்.

சக்தி என்னும் சொல்லை ஆற்றல் என தமிழ் படுத்த விழைகிறேன்.

நன்றி

-- மகிழ்நன் 18:49, 4 ஏப்ரல் 2010 (UTC)

இக்கட்டுரையின் தலைப்பை உயிரணுக்கொள்கை என மாற்றிவிட்டு, கலக்கொள்கை என்பதற்கு வழிமாற்று தரலாம். இக்கட்டுரை மிகவும் செப்பமாகவும் ஆணித்தரமாகவும் எழுதவேண்டிய ஒன்று. நானும் இதில் உதவி செய்ய முடியும். அனுசேபம் முதலான சொற்கள் எதனைக்குறிக்கின்றன என்று ஒருசிறிதும் விளங்கவில்லை. மாற்றப் பரிந்துரைக்கின்றேன். அதற்கான ஆங்கிலச்சொல் தெரிந்தாலாவது ஏதாவது பொருத்தமான தமிழ்ச்சொல் பரிந்துரைக்கலாம்.--செல்வா 19:35, 4 ஏப்ரல் 2010 (UTC)

இக்கட்டுரையில் இலங்கையில் உபயோகிக்கப்படும் சொற்களை பயன்படுத்தியுள்ளேன். நீங்கள் மேற்கூறிய சொற்களின் ஆங்கில சொற்கள் அங்கி - organism, சுயாதீனம் - independent, அனுசேபம் - metabolism. இக்கட்டுரையின் தலைப்பை உயிரணுக்கொள்கை என மாற்றுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் எனக்கு வழிமாற்று எவ்வாறு செய்வது என்பது தெரியாது.−முன்நிற்கும் கருத்து Rame20002007 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நன்றி Rame. வேறு யாருக்கும் மறுப்பில்லை என்றால் கட்டுரைக்கு மேலே 'நகர்த்துக' என்றிருக்கும் தத்தலை அழுத்தி உயிரணுக் கொள்கை பக்கத்துக்கு வழிமாற்றலாம். -- சுந்தர் \பேச்சு 10:44, 5 ஏப்ரல் 2010 (UTC)
நண்பர்களே... சுயாதீனம், சுதந்திரம், அனுஷேபம், வார்த்தை, வாக்கியம் போன்ற சொற்களை கூர்ந்து நோக்கினால் அவை வடமொழிச் சொற்களை வேர்ச்சொல்லாகக் காட்டும். இந்தியில் சுவதந்ரா என்பது தமிழில் சுதந்திரம். வார்த்த- வார்த்தை, வாக்ய-வாக்கியம். உண்மையில் விடுதலை, சொல், சொற்றொடர் போன்றவையே சாலச் சிறந்த தமிழ்ச் சொற்கள். இப்படி எண்ணற்ற சொற்களை அதன் அடிப்படை வடமொழியின்பாற்பட்டது என்று அறியாமலேயே தமிழக, ஈழத் தமிழர்கள் பயன்படுத்துகின்றனர். அதே வேளை ஈழத்தில் பயன்படுத்தப்படும் அறிவியல் தமிழ்ச் சொற்கள் தமிழ்நாட்டில் பயன்படுத்தும் அறிவியல் தமிழ்ச் சொற்களுக்கு சற்றும் பொருத்தமில்லாமல் அதாவது ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியா வண்ணம் இருப்பது சரியா என்பது ஆய்வுக்குரியது. இதற்குப் பதிலாக பொதுவான அறிவியல் தமிழ்ச் சொற்களுக்கான அகரமுதலியைப் பார்த்து அவற்றைப் பயன்படுத்தினால் அனைத்துலகத் தமிழர்களுக்கும் அது உபயோகமானதாக (இது கூட வடமொழிதானே!) பயனுள்ளதாக இருக்கும். சான்றாக வளர்சிதை மாற்றம் என்ற சொல்லிலேயே அந்தக் கொள்கை குறித்து ஒரு வரியில் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அனுசேபம், அனுஷேபம் என்றால் யாருக்கும் புரியவில்லை. சில பாடங்களை பள்ளியில் நெட்டுருப் போடுவது போலத்தான் படிக்க வேண்டும். (கலக்கொள்கை என்பதையே ஆங்கிலத்தில் உள்ள சொல்லைப் படித்த பின்புதான் எனக்குப் புரிந்தது. தலைப்பை பார்த்து நான் இது ஏதோ விண்வெளிக் கலன் தொடர்புடையது என்று முதலில் நினைத்தேன்.) மிகச் சிறந்த தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவோர் ஈழத் தமிழர்களே என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதற்காக ஒரேயடியாக மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் போன்று தனித் தமிழ் இயக்கம் நடத்தினால் விக்கிப் பக்கம் யாரும் தலை காட்ட மாட்டார்கள் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. (எப்படிச் சிக்கியிருக்கிறோம் பாருங்க.)  :) --Ragunathan 20:09, 5 ஏப்ரல் 2010 (UTC)
இரகுநாதன், மிக்க அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்! நாம் தமிழில் எழுதுவதன் முக்கிய நோக்கமே, ஒரு சொல்லைப் படித்தவுடன் ஓரளவுக்கேனும் சட்டென சிறிது பொருள் விளங்கவேண்டும். முதன் முதல் எலிப்ஃசு (ellipse) என்று ஒருவர் கேள்விப்பட்டால் அது என்னவென்றே புரிந்துகொள்ள இயலாது. ஆனால் நீள்வட்டம் என்று கேட்டவுடனே அது என்னவென்று ஓரளவுக்கு உடனே புரிந்துவிடும் (சமன்பாடெல்லாம் விளங்கிவிடும் என்று சொல்லவில்லை :) ). பிறகு வரும் விளக்கங்களும் எளிதாக உள்வாங்குவனவாக இருக்க வேண்டும். தமிழில் எழுதியும் பேசியும் கருத்துறவாடிப் பழகினால் இவை இன்னும் எளிதாக நிகழும். தேவநேயப்பாவாணர், மறைமலை அடிகளை விடவும் எளிமையான நல்லதமிழில் எழுதிக் கருத்தாட இயலும்.அதுவே குறிக்கோளாகவும் இருக்க வேண்டும். --செல்வா 00:07, 6 ஏப்ரல் 2010 (UTC)
தேவையான இடங்களில் ஆங்கிலம், சமசுக்கிருதம், அரபு மொழி, என்று எந்தப் மொழிச்சொல்லையும் எடுத்து ஆள்வதில் தவறில்லை (ஓரளவுக்குத் தகுந்த தமிழ்ச்சொற்கள் இருந்தால் பிறைக்குறிகளுக்குள் தந்தும் வரலாம்). ஆனால் கூடிய மட்டிலும் நல்ல தமிழ்ச்சொற்களை ஆள்வது பல கோணங்களில் கருத்து வளர்ச்சிக்கும், எளிமையாக உள்வாங்குவதற்கும் நல்லது. தமிழுக்கு முன்னுரிமை தருவதன் நோக்கமும் இதுவே. --செல்வா 00:15, 6 ஏப்ரல் 2010 (UTC)
செல்வா, பெரும்பாலான இளைய தலைமுறையினர் பள்ளிக் கல்வி வரை மட்டுமே தமிழை ஒரு பாடமாகப் படிக்கின்றனர். பிறகு அவர்களின் வாழ்வில் தமிழின் ஊடாட்டம் குறைவாகவே இருக்கிறது. இதில் விதிவிலக்காக சிலர் தங்களுடைய ஆர்வத்தால் தமிழை நேசிக்கின்றனர். ஆங்கில வழிக் கல்வி பயின்ற தமிழார்வம் மிக்கவர் இவ்வாறான ஒரு பொதுத் தளத்திற்கு வரும்போது விக்கி கட்டுரைகளின் தமிழ் புரிந்து கொள்ள கடினம் ஏற்படுத்தக்கூடாது. அப்படி இருந்தால் எழுத ஆர்வமிருந்தும் தங்களால் இயலாது என்று அவர்கள் விட்டுவிடக் கூடும். நீங்கள் கூறியது போல பிறைக்குறிக்குள் அதற்கான தகுந்த ஆங்கில, தமிழ்ச் சொற்களைக் கொடுத்தால் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமாக இருக்காது.--Ragunathan 00:35, 6 ஏப்ரல் 2010 (UTC)

ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை மொழிமாற்றும் போது http://translate.google.com/toolkit/ என்ற கருவியை உபயோகிக்கும் போது மீண்டும் மீண்டும்ஒரே வசனங்களை மொழிபெயர்க்க வேண்டிய தேவை இருக்காது என்று நினைகின்றேன். இதைப் பற்றிய கருத்துக்கள்.

திருத்தம் தொகு

அனுசேபம் என்பது metabolism என்பதைக் குறித்த சொல். இதற்கு இணையாக த.வி யில் வளர்சிதைமாற்றம் என்று ஒரு கட்டுரை இருந்தது. அதனால் அந்த சொல்லை மாற்றியுள்ளேன்.--கலை 15:02, 5 ஏப்ரல் 2010 (UTC)

மிக்க நன்றி. --செல்வா 00:07, 6 ஏப்ரல் 2010 (UTC)

தலைப்பு மாற்றம் தொகு

உயிரணுக்கொள்கை என்னும் நல்ல ஒரு கட்டுரையில் பெரும்பகுதி பங்களிப்பை கொடுத்திருக்கும் Rame20002007 என்பவருக்கு முதலில் நன்றி. Cell என்பதற்கு இணையான சொல்லாக ‘உயிரணு' என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்பட்டு ஏற்கனவே கட்டுரைகள் இருப்பதனாலும், தலைப்பை மாற்ற எவரும் மறுப்பு தெரிவிக்காமையினாலும், தலைப்பை மாற்றியிருக்கிறேன். அத்துடன் சில சொற்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவிலும், தமிழ் அகரமுதலியிலும் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள சொற்களைக் கொடுத்து மாற்றியிருக்கிறேன். இவற்றில் எவருக்கெனும் மறுப்பு இருப்பின் தயவுசெய்து தெரிவியுங்கள்.--கலை 23:03, 5 ஏப்ரல் 2010 (UTC)

மிக்க நன்றி. --செல்வா 00:07, 6 ஏப்ரல் 2010 (UTC)
cell theory என்பதை தமிழில் செல் கொள்கை என்றே நான் பள்ளயில் படித்திருக்கிறேன். தமிழ்நாட்டு பள்ளி பாட நூல்களில் (தமிழ் வழி) செல் என்றே குறிப்பிடப்படுகிறது. அதே போல நியூக்ளியஸ், நியூக்ளியோடைடு என்றே உள்ளது. சில சமயம் உட்கரு என்பதற்கு அடைப்புக்குறிக்குள் நியூக்ளியஸ் என்று எழுதியிருப்பர். உயிரணு எனும்போது அது மரபணு என்ற சொல்லை நினைவூட்டுகிறது. தற்போது பள்ளி மாணவர்கள் கூட விக்கிப்பீடியா பக்கம் வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே. அவர்களுக்கும் புரியும்படி அறிவியற் சொற்களை ஒரு வரியில் குறிப்பிட்டால் அதை அவர்களும் உணர்ந்து குறிப்புகளை எடுத்துக் கொள்வர் என்பது என் கருத்து.--Ragunathan 23:29, 5 ஏப்ரல் 2010 (UTC)


மாற்று கருத்து என்னிடம் எதுவுமில்லை. இக்கட்டுரையேய் செம்மை படுத்திய அனைவருக்கும் நன்றி.

-- மகிழ்நன் 23:43, 5 ஏப்ரல் 2010 (UTC)

இரகுநாதன், நாம் இன்னும் பன்படங்கு அழகாக செப்பம் செய்து தரலாம். அடைப்புக்குறிகளுக்குள் நியூக்ளியசு, நியூக்ளியோட்டைடு போன்று கட்டாயம் தரலாம். அல்லது அதே சொற்களையும் பயன்படுத்தலாம். முன்பொருமுறை செல் என்பதையே பயன்படுத்துவ்வது பற்றியும் கூட நீண்ட உரையாடல் நிகழ்ந்தது. முடிவில் உயிரணு எனப் பயன்படுத்த எல்லோரும் ஒப்புக்கொண்டனர். பிறைக்குறிகளுக்குள் செல் என்று குறிப்பதில் எனக்கு மறுப்பேதும் இல்லை. அணு என்றால் மிகமிகச் சிறிய அடிக்கூறு என்பதால், உயிருடலின் அடிக்கூறாக இயங்குவதை உயிரணு என்பது மிகப்பொருத்தமான சொல். பார்க்கவும்: பேச்சு:உயிரணு--செல்வா 00:09, 6 ஏப்ரல் 2010 (UTC)
செல்வா, நீங்கள் குறிப்பிட்டிருந்த உரையாடலைப் படித்தேன். நமக்கு முன்னாடியே நிறைய பேர் சிந்தனை செய்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஒரு வகையில் விக்கிப்பீடியா நமது அறிவுக் கண்ணை திறப்பது மட்டுமல்லாமல், ஆணவக் கண்ணை மூடியும் விடுகிறது. அவ்வகையில் விக்கிப்பீடியா ஒரு ஆன்மப் பரிசோதனைத் தளமாகவே எனக்குத் தெரிகிறது. -:) உயிரணு என்ற சொல்லையே இனி பயன்படுத்துவோம். --Ragunathan 00:35, 6 ஏப்ரல் 2010 (UTC)

இக்கட்டுரையெய் செம்மை படுத்த விழைகிறேன். ஆனால், நேரம் இன்மையால் ஆர்.என்.ஏ குறுக்கீடு போன்ற கட்டுரைகள் பாதி நிலையில் உள்ளன. யாரேனும் முடிந்தால் மகிழ்ச்சியே.

மேலும் இக்கட்டுரையில் antibiotic என்பதை மருந்து என எழுதியுள்ளேன் . இது சரியான சொல்லா?

நன்றி

-- மகிழ்நன் 01:44, 6 ஏப்ரல் 2010 (UTC)

மகிழ்நன்! antibiotic என்பதற்கு மருந்து என்பது பொருத்தமான சொல்லாகத் தெரியவில்லை. மருந்து என்பது நோயைக் குணப்படுத்துவதற்கு பயன்படும் பொருளின் பொதுவான பெயர். Medicine என்பதே தமிழ் விக்சனரியில் ‘மருந்து' எனக் குறிக்கப்பட்டுள்ளது. அங்கே antibiotics, antibiotic என்னும் இரு பக்கங்கள் காணப்படுகின்றன. இவற்றில் antibiotic என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு ‘நுண்ணுயிர் எதிரிகள்' என கருதுகின்றேன். --கலை 12:08, 6 ஏப்ரல் 2010 (UTC)

Thanks Kalai. Nalla sol.

-- மகிழ்நன் 21:21, 6 ஏப்ரல் 2010 (UTC)

கலை! மகிழ்நன்! antibiotic என்பதற்கு நுண்ணுயிர் எதிரி என்ற சொல் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளீர்கள். அதே போல் தமிழ் இணையப் பல்கலை வலைதளத்தில் பல்துறை விளக்கம் இடம்பெற்றுள்ளது. அதில் மருத்துவத் துறையில் உயிர்க்கொல்லி, நுண்ணுயிர்க் கொல்லி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நுண்ணுயிர்க் கொல்லி சரியாக இருக்குமா?--Ragunathan 20:51, 7 ஏப்ரல் 2010 (UTC)
ஆம், நுண்ணுயிர்க் கொல்லி என்பது சரியான சொல். சுருக்கமாக நுண்கொல்லி எனலாம். ஆன்ட்டிபயோட்டிக் என்னும் சொல் உயிரிஎதிர்ப்பி என்று பொருள்படுகின்றது ஆனால் குறிப்பு என்னவென்றால், நுண்ணுயிரி + எதிர்ப்பி (கொல்லி). எனவே நாம் உயிரிக்கொல்லி என்று சொல்லலாம், ஆனால் நுண்ணுயிர்க் கொல்லி அல்லது நுண்கொல்லி என்பது பொருந்தும் என நினைக்கின்றேன். இங்கே நுண் என்பது நுண்ணுயிரி. நுண்ணுயிர் என்பதனையும் நுண்ணிய வடிவில் உய்யும் உயிரினம் என்னும் பொருளில் நுய் = நுண்ணுயியிர் என்றும் கொண்டால் நுய்க்கொல்லி எனலாம். தமிழில் நு என்னும் முன்னொட்டு நுட்பம், நுண்மை, நுக்கு (= பொடி), நுள்ளு = சிறுதுண்டு, நுனி (சிறுமுனை) போன்று பல சொற்களில் சிறுமையைக் குறிக்கும். எனவே நுண்ணுயிர் = நுய் எனச் சுருக்கலாம். அல்லது நுயிர், நுயிரி எனலாம். இப்படியெல்லாம் செய்யலாம் எனில் நுயிர்க் கொல்லி, நுயிரிக் கொல்லி, நுய்க்கொல்லி எனலாம். இங்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. பயனர்கள் எண்ணிப்பார்க்கலாம் என்பதற்காக எழுதுகிறேன். --செல்வா 21:46, 7 ஏப்ரல் 2010 (UTC)
செல்வா!, தலை சுற்றுகிறது.... உங்கள் தமிழார்வத்தை எண்ணும்போது :-) (கோவையில் தங்களை சந்திக்காமல் போனது வருத்தமே). நீங்கள் கூறிய அனைத்துச் சொற்களிலும் எனக்கு உடன்பாடே. ஏலவே கூறியதுபோல, நுயிர், நுயிரி என்று மேலும் மேலும் உள் சென்று மிக நுயிமிழில் (நுண் தமிழில்...சரியா? ;-) எழுதினால் பிறகு அதைப் புரிந்து கொள்ள மற்றொரு கட்டுரை வரைவதா? ஓரளவு எளிய தமிழில் இருந்தால் அனைவருக்கும் புரியம்படியும் எடுத்தாளும் படியும் இருக்கும் என நினைக்கிறேன். இருப்பினும் ஏனையோர் கருத்தையும் செவிமடுக்கலாம்.--Ragunathan 22:02, 7 ஏப்ரல் 2010 (UTC)

Antibiotic என்பதற்கு ‘நுண்ணுயிர் கொல்லி' என்பது எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய சரியான சொல்லாக இருக்கும் என்பதே எனது கருத்தும். இப்போது ‘நுண்ணுயிர் கொல்லி' என்ற சொல் ஏற்கனவே பாவித்திருப்பதாக நினைவுக்கு வருகிறது :). --கலை 23:16, 7 ஏப்ரல் 2010 (UTC)

இரகுநாதன், நான் கோவைக்கு வர இருக்கின்றேன் (சூன் 2010). முடிந்தால் சந்திக்கலாம். நுண்ணுயிர்க் கொல்லி என்பதே என் பரிந்துரை. ஆனால் சுருக்கமாக இருந்தால் வழக்கூன்றும். நுண்கொல்லி என்பதில் பெரும் இடர்ப்பாடு இருக்காது என்று நினைத்தேன். ஆங்கிலத்தில் pixel என்றால் ஏற்கின்றோம், phatic, conative என்றால் ஏற்கின்றோம், ellipse என்றால் ஏற்கின்றோம் (முதன் முறையாகக் கேட்கும்பொழுது புரியாவிட்டாலும்). pixel என்னும் சொல்லை 1969 இல் தான் முதன்முதல் பயன்படுத்தினர். ஆனால் அது இன்று எத்தனை பரவலாகப் பயன்படுகின்றது பாருங்கள் (அதுவும் சயன்சு என்னும் அறிவியல் இதழில்! - Science 15 Aug. 685/1 நன்றி ஆக்ஃசுபோர்டு அகராதி). அடிப்படையான தமிழ்ச் சொற்களில் இருந்து நாம் புதிய சொற்களை ஆக்கிப் பயன்படுத்தும் பழக்கத்தையும் சிறுபான்மையேனும் வளர்த்து வருதல் வேண்டும். தொழில்நுட்பவியல் என்று நீட்டி முழக்க்குவதைவிட நுட்பியல் என்றால் சுருக்கமாக இருக்கும். நுட்பியல் என்பது தொழில்நுட்பவியல் ஆகும் என்று ஓரிடத்தில் சொன்னால் போதும் :) எளிய தமிழில் இருபதையே நானும் விரும்புகின்றேன், வரவேற்கின்றேன், (ரொம்பவும் போட்டு படுத்தக்கூடாது :) ஒப்புக்கொள்கிறேன் ), ஆனால் சில இடங்களில் சிறிதளவு சுருக்கமும் (இயன்றால்) செய்யலாம் என்பதே என் கருத்து. நுண்மாண் நுழைபுலம் என்றாரே அது போல நுண்மை மிக்க கருத்துகளை விளக்கும் தமிழை நுண்தமிழ் எனலாம். நுயிமிழ் என்று நீங்கள் வேடிக்கையாகச் சொன்னாலும், அதில் பொருள் இல்லை. நுயிரி, நுய் என்றால் நுண்ணுயிர் என்று கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. கொள்ள இடம் உள்ளது என்றே கூற வந்தேன். தமிழில் நொய் என்றால் நுண்மை (நொய்யரிசி என்றும் கேள்விப்பட்டிருக்கலாம்). நுய் என்பதும் நொய் என்பது போன்றதே, ஆனால் நுண்ணுயிர் என்று கொள்ள இடம் உள்ளது. நுயிரி என்பதும் அப்படியானதே. இவை எல்லாமும் வெறும் பதிவாக இருக்கட்டுமே என்றுதான். எதனையும் எடுத்தாளச் சொல்லவில்லை :) கவலை கொள்ளற்க :) புதியன ஏற்கும் பண்பும் வளரவேண்டும் என்பதும் ஒரு கருத்து :) --செல்வா 23:32, 7 ஏப்ரல் 2010 (UTC)


செல்வா!, தங்கள் எண்ணவோட்டம் மிக்க பொருத்தமுடைத்து. நீங்கள் விளக்கும் நுண் தமிழ் சொற்களை கற்கையில் எனக்கு தேவநேயப் பாவாணர் இயற்றிய வேர்ச் சொல் கட்டுரைகள் தொகுப்பு நினைவு வருகிறது. நுட்பியல் என்பது பொதுவான பதமாகத் தோன்றுகிறது. technology போல. ஆனால் என்ன நுட்பியல் என்று வரும்போது தொழில்நுட்பியல் என வரும் என்று கருதுகிறேன். அல்லாமலும் இருக்கலாம். ஆனால் இப்படியே சென்றால் அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி........குறுகி. விக்கிப்பீடியா கட்டுரைகள் குறுக்கிபீடியாவாகி விடாமல் பார்க்க வேண்டும். ;-) அதே நேரம் புதியன ஏற்கும் பண்பு வளர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இரா. செம்மொழி மாநாட்டின்போது இங்கிருப்பீர்கள் என எண்ணுகிறேன். சந்திக்க விழைகிறேன். --Ragunathan 00:13, 8 ஏப்ரல் 2010 (UTC)


நண்பர்களே, செல் என்ற ஆங்கில வார்த்தைக்கு, உயிரணு என குறிப்பிட்டு பல கட்டுரைகளை எழுதியுள்ளீர்கள். ஆனால் இது தவறு என்பது எனது வாதம். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தான் தமிழ் நாட்டில் பாட நூல்களை உருவாக்கவும் அச்சிடவும் கலைச் சொற்களை சேகரிக்கவும் பயன்படுத்தவும் உள்ள ஓர் அதிகாரப்பூர்வ அமைப்பாகும். அந்நூலில் சொல்லப்பட்ட கலைச் சொற்களைத் தான் மாணவர்கள் கற்கிறார்கள். என்றால் அந்நிறுவனம் தான் எதிர்கால தமிழ் சமுதாயத்தினருக்கான தமிழ் சொற்களை படைத்து, வளர்த்து உலகிற்களிக்கிறது. அப்படியாக, அவர்கள் செல் என்ற ஆங்கில வார்த்தைக்கு, அணு எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அதே போல, ஒவ்வொரு மூலக்கூறிலும் (இயற்பியல்) அணுக்கள் (ஆங்கிலட்தில் ஆட்டம்) உள்ளன. அதில் உள்ளதும் அணுக்கருதான். உயிரியலில் உள்ள அணு (செல்)வில் உள்ளது அணுக் கருதான். ஆக உயிரணு என்பது முற்றிலும் வித்தியாசமானது. ஆண் உயிரணு விந்து, பெண் உயிரணு அண்டம். இவை உயிரைப் பிறப்பிக்கும் திறனுள்ளவையாதலால் அவ்வாறு அழைக்கப்பட்டன. பின் ஏன் இந்தக் குழப்பம் சைபர் தமிழர்களுக்கு?

டேவிட் பால் சாம்சன் தமிழ் மொழி மாற்றுநர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உயிரணுக்கொள்கை&oldid=684013" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உயிரணுக்கொள்கை" page.