பேச்சு:மஞ்சுசிறீ
Untitled
தொகுவினோ'த், இதனை மஞ்சுசிரீ அல்லது மஞ்சுசிறீ என்று எழுதலாமா? பிறமொழிகளில் பாருங்கள் எப்படி எழுதியுள்ளார்கள் என்று! மஞ்சுசிரீ அல்லது மஞ்சுசிறீ என்று எழுதுவது சரியாக இருக்கும். --செல்வா 15:41, 17 நவம்பர் 2007 (UTC)
மஞ்சுஸ்ரீ என்பதே சரி. அது சரி 'சிறீ' என்றால் என்ன? அதற்கும் ஸ்ரீக்கும் என்ன தொடர்பு. தமிழக வழக்கில் இது போன்ற பயன்பாட்டை நான் கண்டதில்லை. தமிழகத்தில் ஸ்ரீ என்றே எழுதுவோம். உதாரணமா ஸ்ரீ லங்கா முதலியன வினோத் 15:43, 17 நவம்பர் 2007 (UTC)
இன்றைக்குள் அனைத்து போதிசத்துவர்கள் குறித்த கட்டுரைகளை இயற்ற வேண்டும் என்பது எனது குறிக்கோள் வினோத் 15:46, 17 நவம்பர் 2007 (UTC)
- நல்ல குறிக்கோள். வெற்றி பெற வாழ்த்துக்கள். திருத்தங்களை வளர்முகக் கண்ணோட்டத்துடன் எதிர்நோக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.--செல்வா 16:01, 17 நவம்பர் 2007 (UTC)
- இங்கே நாம் ஈழத்தமிழர் சிறீ லங்கா என்றே எழுதுவோம். (அரசியற் காரணங்களுமுள) செல்வா பயன்படுத்துவது தமிழக வழக்குத்தான். சிரீ என்பதை ஈழத்தவர் stee என வாசிக்க இடமுண்டு :) கோபி 15:54, 17 நவம்பர் 2007 (UTC)
- பிறமொழிகளில் எப்படி எழுதியுள்ளார்கள் என்று பார்த்தீர்களா? தமிழில் சிறீதரன் (பார்க்க ஆழ்வார்கள் பாடல்கள்) என்று எழுதுவது நெடுநாளைய வழக்கம்! மஞ்சுசிறீ என்றே எழுதலாம். --செல்வா 16:01, 17 நவம்பர் 2007 (UTC)
பிற இந்தியமொழிகளில் ஸ்ரீ என்று பயன்படுத்தப்படுவது வழக்கம்(7 இந்திய மொழி எழுத்துமுறைகள் தெரிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.தவறிருப்பின் பொறுக்கவும்). லத்தீனிய எழுத்துமுறை பயன்படுத்தும் விக்கிபீடியாக்களில் சொற்களின் உச்சரிப்பை மாற்றாமலிருக்க IPA எழுத்துக்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஸ்ரீ śrī. பெரும்பாலான ஆங்கில மொழி விக்கீபீடியா கட்டுரைளை பார்த்தால் இந்திய மொழி சொல் ப்யன்படுத்தும் போது IPA பயன்படுத்துகின்றனர். மேலும் சிறீ என்பது வினோதமாக இருக்கும்(என்னைப் பொருத்த வரையில்). சிறிய என்பதின் விளி போல் எனக்கு படுகிறது. எனக்குத்தெரிந்து தமிழக வழக்கம் ப்ழக்கத்தில் உள்ளவர்களுக்கு புரிவதற்கு கடினமாக இருக்கும்(தமிழக வழக்கே பெரும்பாண்மையாக இருப்பதால்). வினோத் 16:18, 17 நவம்பர் 2007 (UTC)
- வினோ'த், நான் தமிழகத்தைச் சேர்ந்தவன். சிறீ என்பது தமிழில் கட்டாயம் உண்டு. சிறப்பு, சிறந்த சிறப்புமிகு என்னும் பொருள் ஒளிர்வதாக, சிறீ என்பதைக் கொள்ளலாம். சிரீ என்றால் சீர்-சீர்மிகு என்பதாகவும் கொள்ளலாம். தமிழில் எழுதும்பொழுது தமிழ் எழுத்துக்களில் எழுதுவதே முறை. ஒவ்வொரு மொழிக்காரர்களும் தங்கள் தங்கள் மொழி ஒலிப்புகளைக் குறிக்க புதுப்புது எழுத்துக்களை புகுத்தினால் மொழி பெரிதும் கெடும். ஆங்கிலேயர்கள் ரோமன் எழுத்தில் எழுதும்பொழுது ஒலித்திரிபு காட்டும் சிறு குறிகளைப் (டயாக்கிரிட்டிக்) பயன்படுத்துவதுபோல, நாமும் சிறு குறியீடுகள் இட்டுக்காட்டலாம். அகரவரிசையை மாற்றுவது தவறு.--செல்வா 16:40, 17 நவம்பர் 2007 (UTC)
எனது பத்தொன்பது வருட வாழ்க்கையில் இப்படிப்பட்ட பயன்பாட்டை நான் கணடதில்லை. என்னைப்பொருத்தவரையில் ஸ்ரீ எனபதன் தமிழாக்கம் திரு. மஞ்சுதிரு என குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழில் வழக்கத்தில் இருக்கும் கிரந்தங்களை உபயோகிப்பதில் தவறில்லை. தமிழகத்தில் பெருவாரியாக சிறீ என்பதை விட ஸ்ரீயே சாமானிய மக்களின் பயன்பாட்டில் உள்ளது.(நான் யாரையும் ஸ்ரீ ராம ஜெயம் என்பதை சிறீ ராம ஜெயம் என எழுதி பார்த்ததில்லை) எனவே ஸ்ரீ என்பதையே பயன்படடுத்தலாம்.தமிழ் தன்வயப்படுத்திய வடமொழி சொற்களுள், சில் சொற்களை பெரும்பாண்மயான மக்கள் கிரந்தத்துடன் பயன்படுத்தும் பட்சத்தில், அதை பின்பற்றுவது தவறேதும் இல்லை.பெருவாரியான வழக்கத்தில் இல்லாத சொற்களை பயன்படுத்தும் போது மொழி நடையில் ஒரு செயற்கைத்தன்மை வந்துவிடுகிறது.வினோத் 16:52, 17 நவம்பர் 2007 (UTC)
வினோ'த், முதலில் திரு என்பது தமிழாக்கம் அல்ல, அது தமிழில் உள்ள பழஞ்சொல். ஆந்திராவை ஆண்ட சதவாகன அரசன் கூட தன் நாணையத்தில் தமிழில் பதிப்பித்த சொல். திரு என்பதும் சிறீ என்பதும் சற்றேறக்குறைய இணையான பயன்பாட்டுக்கு வழங்கும் சொற்களாக இருக்கலாம், ஆனால் தமிழாக்கம் அல்ல. மேலும் மஞ்சுசிறீ என்பது தமிழாக்கம் அல்ல, தமிழ் எழுத்தில் கூடியவாறு வேற்றுமொழிப் பெயரை (ஒலிபெயர்த்து) எழுதுதல். ஆங்கிலத்தில் Manjumister என்று எழுதுவார்களோ?!! ரோமன் எழுத்தில் எழுதும் ஆங்கிலத்திலும் சிறீ என்பதற்கு ஒரு தனி எழுத்தில்லைதானே, எனவே அவர்கள் என்ன ஒரு புது எழுத்தையா எடுத்துக்கொண்டார்கள்? இல்லையே! சிறீ என்பது தமிழ்வழி ஒலிபெயர்ப்பு. Alagappan என்பதும் ரோமானிய எழுத்துக்களில் அழகப்பன் என்பதின் ஒலிபெயர்ப்பு (அவர்கள் எழுத்துமுறைப்படி). மஞ்சுசிறீ என்று எழுதுவதே சரியாக இருக்கும். தமிழ்நாடில் 95% மக்கள் சிறீ இராமசெயம் என்பதை ஆயிரக்கணக்காக எழுதுவார்கள் என்னும் செய்தியே தெரியாமல் இருக்கும். அங்கு எழுத்து வடிவா முக்கியம்?!! குர்ரானில் இப்படி உள்ளது, ஈபுரு விவிலியத்தில் இப்படி உள்ளது, சமணத்தில் இப்படி உள்ளது என்றும் ஒவ்வொரு மதத்தினரும், மொழியினரும் புதுப்புது ஒலிகளுக்காக தமிழ்மொழியை சிதைத்தல் எப்படிச் சரியாகும்?! --செல்வா 18:20, 17 நவம்பர் 2007 (UTC)
'ஸ்ரீ' என்னும் எழுத்து பெருவழக்கில் இருக்கும்போது அதையே பயன்படுத்தலாமே. நான் ஒன்றும் மணிப்பிரவாளம் நடையாசிரியர்களை போல் அனைத்து வடமொழி ஒலியை குறிக்க முழுமையான கிரந்ததை பயன்படுத்த சொல்லவில்லை. ஸ்ரீ என்பது தமிழக பயன்படுத்தப்படும் ஒரு எழுத்து. தற்கால தமிழில் கிரந்த எழுத்துக்களின் ப்யன்பாடு தவிர்க்க இயலாதது. 'ஜ்ர' என்பதை 'ச்சிர' என எழுதுவது தகும். ஏனெனில் இது மக்களின் வழக்கில் உள்ள ஒன்று. ஆனாம் 'ஸ்ரீ' என்பதே 'சிறீ' என் மாற்றுவது என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. நாம் மக்கள் படிப்பதற்காகவே கட்டுரைகள் எழுதுகிறோம், நமது சொந்த தேவைக்கு அன்று, எனவே பெருவாரியான வழக்கில் உள்ளவற்றையே ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு புரியும் வகையில் தான் கட்டுரைகள் இயற்ற வேண்டும், இல்லையெனில் குழப்பமே மிஞ்சும்.நற்றமிழில் எழுதுகிறேன் என்ற பெயரில் யாருக்கு புரியாத வகையில் எழுதினால் யாருக்கு என்ன லாபம்? நற்றமிழை நிச்சயமாக பயன்படுத்தவேண்டும் அதே நேரத்தில் பெருவழக்கிற்க்கு மதிப்பளிக்க வேண்டும்.
மஞ்சுஸ்ரீயை அதன் வடமொழி மூலத்திற்கு ஏற்ப 'மஞ்ஜுஸ்ரீ' என இயற்றி இருக்கும்பட்சத்தில் தங்களது வாதம் இதற்கு பொருந்தும். 'ஞ்ஜு' எனப்து பெருவழக்கில் இல்லாத ஒன்று. 'ஞ்சு' என்பதே பெருவழக்கில் உள்ள ஒன்று. எனவே வடமொழி சொற்களை தமிழில் கையளும்போது மக்களிடத்தில் உள்ள பெருவழக்கையும் க்ருத்தில் கொள்ள வேண்டும்.
நான் அறிந்தவரையில் 'சிறீ' என்பது தமிழக்கத்தில் ஏறக்குறைய யாருக்கும் புரியாத ஒரு பயன்பாடு. தமிழ்க புத்தகங்கள், பத்திரிக்கைகள் ஊடகங்கள் அனைத்து 'ஸ்ரீ' என்பதையே பயன்படுத்துகின்றன. பெருவாரியான பயன்பாட்டில் இல்லாத ஒன்றை புகுத்துவது தகாது. எனவே இந்த கட்டுரை மஞ்சுஸ்ரீ எனவே இருக்க வேண்டும். அவலோதேஷ்வரரை அவலோகிதராய் மாற்றம் செய்தபோது நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. பெருவாரியான வழக்கம் இல்லாத நிலையில், இலக்கிய வழக்கத்தை பின்பற்றுதல் தகும்.ஆகாஷகர்பர் குறித்த கட்டுரையை ஆகாயகர்பர் என்றே இயற்றி உள்ளேன். ஏனேனில் ஆகாஷம் என்ற சொல் தமிழில் ஆகாயம் என பெருவழக்கில் உள்ளது. அதுபோல் பெருவழக்கையொட்டி இந்த கட்டுரையின் தலைப்பு மஞ்சுஸ்ரீ என்றே இருக்கவேண்டும். வினோத் 18:57, 17 நவம்பர் 2007 (UTC)
வினோத், இணையத்தில் இருக்கும் தமிழர்களிலும், விக்கிபீடியாவுக்குப் பங்களிப்பு நல்குவோரிலும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் கணிசமானது. நமக்கு வினோதமாகத் தெரியும் விசேடம் போன்ற சொற்கள் இலங்கைப் பொது வழக்கில் மிகவும் இயல்பானவை. எனவே, இலங்கைப் பொது வழக்கின் தாக்கம் தமிழ் விக்கிபீடியாவில் காணப்படுவது புரிந்து கொள்ளத்தக்கது. இன்னும் கூடுதலான தமிழ்நாட்டுப் பங்களிப்பாளர்கள் வருகையில் இரு நாட்டவருக்கும் புரியும் வகையிலான ஒரு பொது மொழி நடை உருப்பெறும் என்று எதிர்ப்பார்க்கலாம். அது வரை பொறுத்திருத்தலும், இந்த பொது மொழி நடை உருவாக்கத்திற்கான நம்மாலான சிறு சிறுப் பங்களிப்புகளைச் செய்வதும் முக்கியமாகும்.
சிறீ குறித்த வினோதின் கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஸ்ரீ என்ற எழுத்துக்குப் பதிலாக சிறீ என்று எழுதுவதை நான் இலங்கை ஊடகங்களிலேயே முதன் முதலில் கண்டேன். செல்வா சொல்வது போல் சிரீ என்று எழுதும் வழக்கைத் தமிழ்நாட்டில் நான் கண்டதில்லை. குறைந்தபட்சம், அது மிகப் பொது வழக்கில் இல்லை என்பதைச் சொல்ல முடியும். எனவே, முதன்முதலில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ் விக்கிபீடியாவுக்கு வரும் ஒருவருக்கு சிறீ என்பதைப் புரிந்து கொள்ள ஒரு நொடியேனும் கூடுதலாகத் தேவைப்படும் என்பது உண்மை தான். எனவே, பொது வழக்கில் உள்ளது போலவே எழுதலாமே..ஏன் வாசகரைக் குழப்ப வேண்டும் என்ற கேள்வி எழுவது நியாயமே!
இங்கு கருத வேண்டிய முக்கியமான விசயம் - தமிழைப் பொருத்த வரை இரு முக்கிய பொது வழக்குகள் உள்ளன. தமிழகப் பொது வழக்கு, இலங்கைப் பொது வழக்கு. தமிழகத்தில் தெளிவாகப் புரியும் சில விசயங்கள் இலங்கைத் தமிழர்களைக் குழப்பும். அவர்களுக்கு எளிதாகப் புரிவது நமக்கு சில சமயம் குழப்பும். எண்ணிக்கை அடிப்படையில் தமிழகப் பொது வழக்கு பெரும்பான்மை என்றாலும், அந்த ஒரே காரணத்துக்காக, எல்லா இடங்களிலும் தமிழகப் பொது வழக்கையே திணிப்பது சரியன்று. பெரும்பான்மை வழக்கையே எல்லா இடங்களிலும் வலியுறுத்தினால் அது பிற வழக்கினரைத் தமிழ் விக்கிபீடியாவில் இருந்து அன்னியப்படுத்துவதில் போய்த் தான் முடியும். இங்கு எது பெரும்பான்மை என்று பார்ப்பதை விட அந்தந்த வழக்குகளின் தொலைநோக்கு நன்மை, தீமைகளைச் சீர் தூக்கிப் பார்த்து முடிவெடுப்பதே சரியாக இருக்கும். சிறுபான்மை என்பதற்காக ஒரு நல்ல விசயத்தைப் புறக்கணிக்கவோ, பெரும்பான்மை என்பதற்காக ஒரு தவறான விசயத்தை ஆதரிக்கவோ இயலாது தானே? கிரந்த எழுத்து தவிர்த்து எழுதும் வழக்கம் இலங்கைப் பொது வழக்கில் இருக்கிறது என்கிற போது, அதன் நன்மை தீமையை நாம் சீர்தூக்கிப் பார்க்கலாமே?
நம் முன் உள்ள கேள்வி இது தான் - தமிழ்நாட்டுப் பெரும்பான்மை பொது வழக்கில் உள்ள எழுத்து, சொல் நடையை அப்படியே தமிழ் விக்கிபீடியாவில் பின்பற்றுவதா? இல்லை, பொது வழக்கே என்றாலும் அதன் நன்மை, தீமையை கேள்விக்குட்படுத்தி ஆய்ந்த பின் தமிழ் விக்கிபீடியாவில் பயன்படுத்துவதா?
தமிழ்நாட்டு வெகுமக்கள் நாளிதழ் ஒன்றில், எடுத்துக்காட்டுக்கு, பின்வருமாறு ஒரு தமிங்கில வரி இடம்பெறுவது அன்றாடம் பார்க்கக் கூடிய ஒன்று:
உங்க கம்ப்யூட்டர்ல இன்டர்நெட் கனெக்ஷன் இருந்தா இந்த வெப்சைட்ட ப்ரவுஸ் பண்ணி சினிமா பாட்டு டவுன்லோடு பண்ணலாம். ஆன்லைன்லயும் கேக்கலாம்.
ஆனால், இதே தகவலைத் தமிழ் விக்கிபீடியாவில் பின்வருமாறு எழுத முனைகிறோம்:
உங்கள் கணினியில் இணைய இணைப்பு இருந்தால் இந்த வலைத்தளத்தில் உலாவி திரைப்படப் பாடல்களைப் பதிவிறக்கலாம். இணையத்தில் இருந்தவாறும் கேட்கலாம்.
நாம் ஏன் பொது வழக்குத் தமிங்கிலத்தை அப்படியே பின்பற்றாமல் அதைக் கேள்விக்குட்படுத்தி நல்ல தமிழில் எழுத முனைகிறோம்? பொது வழக்கு ஒன்று தவறு என்று அறியும் போது அதை மாற்றி செயல்படுவதற்கான பொறுப்பும், உரிமையும் நமக்கு இங்கு உண்டு இருப்பதால் தானே? அதே போல் கிரந்த எழுத்துக்களின் நன்மை தீமையையும் நாம் ஆய்ந்து முடிவெடுக்க முடியும் தானே?
தொலைக்காட்சி, அச்சு இதழ்கள் என்று அனைத்து ஊடகங்களும் இது காறும் வணிக, அரசியல், வரலாற்றுக் காரணிகளால் கட்டி அமைக்கப்படவை. அவற்றுக்கு மொழி சார்ந்த பொறுப்புணர்வைக் காட்டிலும் வேறு நலன்களே முதன்மை ஆனவை. தற்போது இணையம் மூலம், மேற்கண்ட எந்த காரணங்களாலும் கட்டுப்படாத, பொது மக்கள் ஊடகமாக விக்கிபீடியா உருவாகும்போது தமிங்கிலம் போல் தமிழின் மீது திணிக்கப்பட்டிருக்கும் பிற விசயங்களையும் கேள்விக்குட்படுத்துவதில் தவறில்லை.
குறிப்புக்காக, எனது சில கேள்விகள், பதிவுகள், புரிதல்கள்:
1. ஸ்ரீ என்று எழுதி backspace கொண்டு அழித்துப் பார்த்தால் ஸ்ர என்று வருவதைக் கவனிக்கலாம். ஸ்+ரீ = ஸ்ரீ என்றவாறு தான் இந்த எழுத்தை ஒருங்குறியில் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
2. தமிழ் ஒரு ஒலிப்பு மொழி. ஒலிப்பதைத் தான் எழுதுகிறோம். எழுதியதை வாசிப்பதில்லை. ஸ்ரீதர், ஹரீஷ் என்று எழுதினாலும் என் அப்பத்தா அதை சிறீதரு, அரீசு என்று தான் வாசிப்பார்கள். பிற மொழி அறிமுகம் இல்லாத தமிழரை ஒரு பிற மொழிச்சொல்லை உச்சரிக்கச் சொல்லி அவர் எப்படி உச்சரிக்கிறாரோ அதை அப்படியே தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதுவது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ் Tamil ஆனதும் இப்படித் தான். Tamil என்று எழுதினாலும் தமிழன் அதைத் தமிழ் என்று தான் வாசிப்பான். தமிழ் என்று எழுதினாலும் வெளிநாட்டவர் அதை Tamil என்றே வாசிப்பார்கள். சிறீதர் என்று எழுதினாலும் வட மொழி ஒலிப்பு தெரிந்தவர்கள் அதை ஸ்ரீதர் என்றே வாசிக்கப்போகிறார்கள். ஸ்ரீயின் ஒலிப்பு கெடும் என்று வடமொழியாளர்கள் கவலை கொள்ளத் தேவை இராது. எழுத்து இங்கு ஒரு குறியீடே என்பதால் தேவையற்று புதுக் குறியீடுகளைத் தமிழ் மீது திணிக்கத் தேவை இல்லை.
3. வட மொழியின் குறிப்பிட்ட ஒலிகளான ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ ஆகியவற்றை உச்சரிப்பதற்காகத் தமிழில் இந்த கிரந்த எழுத்துக்கள் இருக்கின்றன. ஆனால், தமிழின் எல்லா ஒலிகளையும் எழுதிக் காட்டுவதற்கு வட மொழியில் எழுத்துக்கள் உண்டா? தமிழுக்காக இல்லாவிட்டாலும் வேறு பிற மொழிகளின் ஒலிகளை எழுதிக்காட்டுவதற்காக வட மொழியில் இவ்வாறு எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுண்டா? அப்படி எழுத்துக்கள் இல்லாத பட்சத்தில், பிற மொழி ஒலிப்புகளை சிதைக்காமல் வட மொழியால் உச்சரிக்க இயல்கிறதா? இல்லை, சிதைத்துத் தான் உச்சரிக்கிறார்கள் என்றால், பிறகு மற்ற மொழிகள் மட்டும் ஏன் வட மொழி உச்சரிப்புக்காகப் புது எழுத்துக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்? கிரந்ந எழுத்துக்கள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டதின் வரலாற்று, சமய, சமூக ஆதிக்கக் காரணிகள் என்ன?
4. ஸ, ஷ, ஜ, ஹ போன்ற எழுத்துக்கள் வட மொழி ஒலிப்புக்கு மட்டும் அல்லாமல் ரோமானிய மொழிக் குடும்ப ஒலிப்புகளுக்கும் பயன்படுகிறது என்பது உண்மை தான். ஆனால், செல்வா சுட்டி காட்டுகிற படி, பிற பெரிய உலக மொழிகளில் இப்படி வேற்று மொழி ஒலிப்பைக் காட்டுவதற்காக புது எழுத்துக்களை உருவாக்கி அகர வரிசையை மாற்றுவதில்லை. உலகின் எந்த மொழியாலும் பிற உலக மொழி ஒலிப்புகள் அனைத்துக்கும் துல்லியமாக எழுதிக் காட்டவும் முடியாது என்கிற போது ஒரு சில மொழிகளுக்காக சலுகை காட்டி இப்படிப்பட்ட சொற்களை உருவாக்குவதும் தொடர்ந்து ஆதரிப்பதும் தேவை அற்றது.
செல்வா, கோபி - கருத்தளவில் உங்களுடன் நான் ஒத்துப் போகிறேன் என்றாலும், வினோத் எடுத்துரைக்கும் கருத்துப் பாங்கும் பரவலாக தமிழிணையத்தில் முன்வைக்கப்படும் ஒன்று என்பதை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள். அது அவரது தனிப்பட்ட கருத்து இல்லை. ஸ்ரீ - க்குப் பதில் சிறீ என்று ஒரு கொள்கை முடிவு எடுக்கிறோம் என்றால் அதில் தமிழ்நாட்டில் பலருக்கும் இன்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவும் அதிர்ச்சியானதாகவும் இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கிறேன். அவரைப் போன்ற கருத்துப் பாங்கு உள்ள இன்னும் பலரும் விக்கிபீடியாவுக்கு வந்த பிறகு இன்னும் பலரை உள்ளடக்கி உரையாடி எடுக்க வேண்டிய கொள்கை முடிவாகவே இது இருக்கும். இல்லாவிடில், குறித்த சிலர் தமிழ் விக்கிபீடியாவில் கொள்கை முடிவுகளைத் திணிக்கிறார்கள் என்பது போன்ற தோற்றம் வரும் அபாயம் உண்டு. எடுக்கப்பட்ட முடிவு சரியே என்றாலும், முக்கியமான இது போன்ற முடிவுகளை இன்னும் கூடிய பங்களிப்பாளர்கள் வந்த பிறகு எடுப்பதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
வினோத் - இது போன்ற உரையாடல்கள் அவ்வப்போது விக்கிபீடியாவில் எழுவது உண்டு. உங்கள் தனியொருவர் மீதான விமர்சனமாகவோ உங்கள் கட்டுரை மீதான விமர்சனமாகவோ தயவு செய்து கருதி விட வேண்டாம். கட்டுரைப் பங்களிப்புகள் தனியாகவும் இது போன்ற உரையாடல்கள் ஒரு புறமுமாக உங்கள் பங்களிப்புகள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதா கூடாதா, எந்த அளவு தவிர்ப்பது, எங்கு தவிர்ப்பது, எப்படி தவிர்ப்பது, அவற்றுக்கு எது சரியான மாற்று என்பது முடிவில்லாத வாதமாக பல இடங்களில் கண்டிருக்கிறேன். தமிழ் விக்கிபீடியாவிலும் இதற்கு முன் இவ்வுரையாடல் வந்துள்ளது. சொற்களைப் பொருத்த வரை இயன்ற அளவு நல்ல, இனிய, எளிய தமிழ் என்று தமிழ் விக்கிபீடியாவில் ஒரு புரிந்துணர்வு இருப்பது போல் ஒரு புரிந்துணர்வை எட்ட கிரந்த எழுத்துப் பயன்பாட்டிலும் தனியொரு கட்டுரை சாராது இன்னொரு கொள்கை உரையாடல் பக்கத்தில் முழு அளவிலான உரையாடல் நடைபெறுவதே பொருத்தமானது. அங்கு கிரந்த எழுத்துப் பயன்பாட்டுக்கான வரலாற்று, மொழியியல், பண்பாட்டுக் காரணங்கள், அதன் தாக்கங்கள், அண்மைக்காலத்தில் இது போன்று பயன்படுத்தப்பட்டு வழக்கொழிந்து போன எழுத்துக்கள், இவற்றைத் தவிர்ப்பதால் வரும் சாதக பாதகங்கள், அவற்றுக்கான வாதங்கள் என்பவை தெளிவாக உரையாடப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு ஏதேனும் ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால், ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு பயனருடனும் வாதத்தைத் தொடர்ந்து நேர விரயமாகவே ஆகும்.
தனிப்பட்ட அளவில், தற்காலிகமாக, வினோத்தின் பிற கட்டுரைப் பங்களிப்புகளுக்கு கூடிய கவனம் செலுத்த ஏதுவாக, மஞ்சுஸ்ரீ என்றே கட்டுரைத் தலைப்பு இருக்கட்டும் என்று பரிந்துரைக்கிறேன். பின்னர், கிரந்த எழுத்துக்கள் குறித்து விரிவாக உரையாடி, என்ன கொள்கை முடிவு எடுக்கப்பட்டாலும் அதை விக்கிபீடியா முழுமைக்கும் செயற்படுத்தலாம்.--ரவி 19:46, 17 நவம்பர் 2007 (UTC)
கிரந்த எழுத்துக் கருத்துக்கள்
தொகுரவி, தமிழில் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவது பற்றி உள்ள "பரவலான" பல கருத்துக்களை நான் அறிவேன். கூடிய மட்டிலும் தமிழில் இல்லாத பிறமொழியின் ஒலிகளை தமிழில் ஒருவாறேனும் இயன்றவாறு குறிக்க வேண்டும் என விரும்புபவர்களில் நானும் ஒருவன். ஆனால், அதற்காக தமிழின் அகரவரிசையையே மாற்ற வேண்டும் என்பதை ஏற்க இயலாது. தமிழின் சிறப்பு அதன் எளிமையும், இனிமையும். ஒவ்வொரு மொழியினரும் அவர்கள் மொழிவழியேதான் எழுதி ஏற்றுக்கொள்ள முடியும். தமிழ் இதற்கு விதி விலக்கல்ல. அரபு மொழியிலும், சப்பானிய, சீன, ஆங்கில, எசுப்பானிய, டாய்ட்ச் மொழிகளாகிய எல்லா மொழிகளிலும் தங்கள் மொழிகளில் இல்லாத ஒலிகள் உண்டு. ஆங்கிலத்தில் தகரத்திற்கு ஒரு தனி எழுத்து இருந்தது (θ, கிரேக்க மொழி தேட்டா), ஆனால் அதனை ஒழித்துவிட்டு th என்ற இலத்தீன் ஈரெழுத்தை (digraph) ஆண்டனர். இதே போல sh என்பதற்கும் தனி எழுத்து இருந்தது. இவ்வொலிகள் எல்லாம் அவர்கள் மொழியில் இருந்தவையே (!). எளிமையை நாடுவது நல்லது. தமிழில் சிறீ என்பதே போதுமானது (வைணவ ஆழ்வார்கள் பாடல்களில் ஆளப்பட்டுள்ளது). கூகிள் தேடல் வழி கிடைக்கும் முடிவுகளைக்கொண்டு தேறக்கூடாது எனினும் கூகிளில் இருப்பதையும் நினைவில் கொள்ளலாம். சிறீலங்கா என்பது 1,150,000 பக்கங்களையும், ஸ்ரீலங்கா என்பது 70,700 பக்கங்களையும் காட்டுகின்றது. கூகிளின் பக்கங்கள் தலைகீழாக இருந்தாலும் சிறீ என்பதே பொருந்தும். திருவரங்கத்தை ஸ்ரீரங்கம் என்றும் (தவறுதலாக!) ஸ்ரீ என்னும் எழுத்து வடிவைப் பலவாறு திணித்து ம் வருவதால் அது சரியாகாது. சுவாமினாதன் என்று தமிழில் எழுதி வருவதை ஸ்வமிநாதன் என்றும் சீனிவாசன் என்று எழுதிவருவதை ஸ்ரீநிவாஸன் என்றும் எழுதித் தமிழ் எழுத்து முறைமையை நாளும் குலைத்து வருபவர்கள் செய்வதெல்லாம் ஏற்புடையதாகாது. இன்று ஒருங்குறியில் θ உள்ளதால் this என்பதை θis என்று எழுதினால் ஒப்புக்கொள்வார்களா (இத்தனைக்கும் அது அவர்களுடைய ஒலியும், முன்னர் அவர்கள் பயனபடுத்திய எழுத்துருவும் ஆகும்)? என்னால் சமசுகிருதத்தில் உள்ள எல்லா ஒலிகளையும், பிற மொழிகள் பலவற்றில் உள்ள பல எழுத்தொலிகளையும் "ஒலி பிசகாமல்" தமிழ் எழுத்துக்களை மட்டுமே கொண்டு (மிகச்சில ஒலித்திரிபுக் குறிகளையும் கொண்டு) எழுதிக்காட்ட முடியும் (இப்படித்தான் இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டு ஆங்கிலத்தில் அவர்களுடைய துறைநூல்களில் எழுதி வருகின்றனர்; அவர்கள் தங்கள் அகரவரிசையை மாற்றிக்கொண்டோ, தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்துக் கொண்டோ இருப்பதில்லை; அவ்வவ் துறையின் நூல்களின் முகப்பில் ஒலித்திரிபுக் குறிகளைப் பற்றி ஒரு அரைப்பக்கத்தில் விளக்கிவிட்டு எடுத்தாள்கின்றனர்). தமிழர்களில் பலர் இப்படி அறியாமல் பொது மக்களைக் குழப்பி வருவது வியப்பாகவுள்ளது.--செல்வா 21:21, 17 நவம்பர் 2007 (UTC)
தங்கள் மேற்கூறிய கருத்தில் ஒரு சிறிய பிழை, எனக்கு தெரிந்த வரை ஆங்கிலத்தில் 'θ'வை பயன்படுத்தியதில்லை. பழைய ஆங்கிலதத்தில் 'த' என்ற ஒலியை குறிக்க 'தார்ன்' என்ற இந்த எழுத்துக்களையே (Þ, þ) பயன்படுத்தினர். The என்பது (þe) என பழங்காலத்தில் குறிப்பிட்டனர். இந்த பழக்கமே பின்னர் 'Ye' என திரிந்தது. பின்னரே இது 'th' என ஆனது.'θ' குறித்த தங்களது கருத்து தவறான ஒன்றாகும் வினோத் 05:06, 18 நவம்பர் 2007 (UTC)
- செல்வா, தனிப்பட்ட முறையில், உங்கள் கருத்துக்களுடன் முழுக்க ஒத்துப் போகவே செய்கிறேன். நமது கட்டுரைகளில் இதன் படியே எழுதுவதில் எந்தத் தடையும் இல்லை. அதே வேளை, வினோத் போல் பொது வழக்கை ஒட்டியும், மிக அரிதாகவும் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவோரிடமும் இறுக்க நிலை எடுப்பது அவர்களது தொடக்கக் கால பங்களிப்பு உற்சாகத்துக்குத் தடையாகுமோ என்று கவலைப்படுகிறேன். இந்த உரையாடலைக் கவனித்தால் நம் கருத்து நிலையை வினோத் மேல் திணிப்பது போல் தான் படுகிறது :( வினோத்தின் கருத்து நிலை உடையவர்கள் இன்னும் பலரும் இங்கு வந்து உரையாடும் போது தான் இது குறித்து balancedஆன ஒரு உரையாடலை மேற்கொள்ள இயலும் என்று நினைக்கிறேன்.
வெளியுலகில், தமிழ் விக்கிபீடியாவின் மொழி நடை தொடர்ந்து விமர்சனதுக்கு உள்ளாகி வருவது கவனிக்கத்தக்கது. விமர்சனம் என்பதைத் தாண்டி, சராசரி வாசகனை அதிகம் குழப்பாமல் நம் முயற்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறது. தமிழ் விக்கிபீடியா தனித்தமிழ் வெறியர்களின் கையில் என்பது போன்ற தவறான தோற்றம் வருவதும் தொடக்க நிலையில் உள்ள நம் திட்டத்துக்கு உகந்ததல்ல. எந்த முக்கிய கொள்கை முடிவானாலும், விக்கிபீடியாவின் நடுநிலைமையை விளம்புவதற்காகவேனும், இன்னும் சில மாற்றுக் கருத்துடையவர்களின் கருத்தையும் பதிவு செய்து, உரையாடி, அவகாசம் கொடுத்து முடிவு எடுக்கலாம் என்று நினைக்கிறேன். தற்போது மிகக் குறைவான எண்ணிக்கையிலான பங்களிப்பாளர்களே இருக்கும் நிலையில் இது போன்ற முக்கிய கொள்கை முடிவுகளை வலியுறுத்துவது முறையாக இருக்குமா?. சரியான முடிவாகவே இருந்தாலும் ஒருதரப்பான முடிவாக இருப்பது நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன். கிரந்த எழுத்துக்கள் தொடர்பாக தற்போது எந்த கொள்கை முடிவு எடுப்பதற்கான அவசரத் தேவையும் இருப்பதாகத் தோன்றவில்லை. தற்போதைக்கு அவரவர் கருத்து நிலைக்கு ஏற்ப செயல்படும் சுதந்திரம் இருக்கட்டுமே? இன்னும் கூடிய பங்களிப்பாளர்கள் வந்த பிறகு இது குறித்து முடிவெடுக்கலாம் என்பது என் கருத்து--ரவி 21:53, 17 நவம்பர் 2007 (UTC)
சிரீ
தொகுவைணவர்களின் நூல்களில் திருவாய்மொழி புகழ்பெற்ற ஒன்று. அதில் 2 ஆம் பகுதியில் (பாடல் 2858ல்)
- தூமனத் தனனாய்ப் பிறவித்
- துழதி நீங்க என்னைத்
- துழதி நீங்க என்னைத்
- தீமனங் கெடுத்தா யுனக்கென்
- செய்கேனென் சிரீதரனே!
- செய்கேனென் சிரீதரனே!
அந்தாதியாதலால், அடுத்த பாடலில் (பாடல் 2859ல்) "சிரீஇதரன் செய்ய தாமரைக் கண்..." எனத் தொடங்குகிறார், அளபெடையுடன். இது போல இன்னும் பல இடங்களிலும் வருகின்றது. எனவே சிரீதரன் என்பது தமிழில் வழங்கும் முறைதான்.
- ரவி, முத்திரை குத்துபவர்கள் குத்திக் கொண்டுதான் இருப்பர்.
- குறை இருப்பதாகக் கருதுபவர்கள், இங்கு வந்து திருத்தலாமே. அல்லது இன்னது என்று சொல்லிக்காட்டினால் திருத்தலாம்.
- எளிய, தரமான நல்ல நடையில் கட்டுரைகள் இருப்பதும், நல்ல புதிய கருத்துக்களும் வலுவடிமானம் கொண்ட கருத்துக்களும் இருக்க வேண்டும் என்பதும் நம் எல்லோருடைய எண்ணமும் தானே. நடையைப் பொருத்தவரை, கலைக்களஞ்சியம் என்பது ஏதோ பொழுது போக்கு இதழ்களைப்போல் இருக்க முடியாது. அதற்காகக் கடினமான நடையில் இருக்க வேண்டும் என்று ஒரு சிறிதும் பொருளல்ல. ஒரு 9 ஆவது, 10 ஆவது வரையாவது படித்தவர் இங்குள்ள கட்டுரைகளைப் படித்தால் அதன் வழி புதிய கருத்தைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், அல்லது தான் ஏற்கனவே படித்து அரைகுறையாய் நினைவில் இருப்பதை மீண்டும் முழுதுமாய் வலுவாக உள்வாங்கிக்கொள்ள உதவ வேண்டும். திறனாய்வு இருக்க வேண்டியதுதான், அதனை மீளாய்வும் செய்தல் வேண்டும். வேண்டியவாறு திருத்திக் கொள்ளலாம்.
- பொதுவாக தமிழர்களில் பலர் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் புதிய சொற்களைக் கண்டால், அகராதியைப் பார்த்து பொருள் அறிந்து கொண்டு பயன்படுத்துவார்கள், அதே நேரத்தில், தமிழில் ஒரு புதிய சொல்லைக் கண்டால், கடுமையான நடையில் எழுதுகிறான், புரிந்துகொள்ளவே முடியாதவாறு எழுதுகிறான் என்பார்கள். இது அப்படிக் கூறுபவர்களின் நேமையற்ற மனப்போக்கு என்பேன்.
- கிரந்த எழுத்துக்களை இங்குள்ள (விக்கியில் பணிபுரியும்) எல்லோரும் பயன்படுத்துகிறோம். ஆயிரக்கணக்கான இடங்களிலே பயன்படுத்தியுள்ளோம். அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல், கூடிய இடங்களில் தமிழ் எழுத்துக்களாலேயே எழுதுவதுவோமே என்பதுதான் கருத்து. மஞ்சுசிரீ அல்லது மஞ்சுசிறீ என்றால் ஒன்றும் தவறில்லை. மஞ்சுஸ்ரீ என்றுதான் இருக்க வேண்டும் என்றால் இருக்கட்டும், ஆனால் அது சரியான வழியல்ல என்பது என் கருத்து. ஒலிப்பு நெருக்கம் இருக்க வேண்டும் என்று வேண்டுவது வேறு, இந்த வடிவில்தான் இருக்க வேண்டும் என்று கூறுவது வேறு. --செல்வா 02:02, 18 நவம்பர் 2007 (UTC)
செல்வா, வைணவ இலக்கியத்திலேயே சிரீ என்ற பயன்பாடு இருப்பது எனக்கு மிகவும் வியப்பளிக்கும் புதிய செய்தி. அறியத்தந்ததற்கு நன்றி. மரபுக்கவிதையில் கிரந்த எழுத்துக்களுக்கு எந்த மாத்திரை விதிகளும் இல்லாததும் தமிழ் எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தக் காரணமோ? "ஸ்ரீ ராம ஜெயம்" என்று எழுதுபவர்கள் எல்லாம் ஸ்ரீ பயன்படுத்துவது உண்மை தான். அதே வேளை ஸ்ரீ ராம ஜெயமே எழுதாமல் இருக்கும் தமிழ் மக்களின் எண்ணிக்கை மிகப் பெரும்பான்மை என்று நீங்கள் கூறி இருந்த கருத்தும் சிந்தனைக்குறியது :) --ரவி 15:43, 18 நவம்பர் 2007 (UTC)
- ரவி, ஆழ்வார்கள் சமசுகிருதத்தில் தேர்ந்தவர்களாக இருந்தும் தூய தமிழில் எழுத முற்பட்டிருப்பதை ஆங்கில விக்கியில் வடக்கன் (அரவிந்த்) விளக்கியிருந்தார். அவர் சுட்டிய மேற்கோள்களின்படி தனித்தமிழ் இயக்கத்தைத் துவக்கியவர்கள் ஆழ்வார்களே! நானும் சில எடுத்துக்காட்டுக்களைக் கண்டிருக்கிறேன். வேதம் என்ற பயன்பாட்டைக்கூட ஆழ்வார்கள் தவிர்த்து திருமறை அல்லது எழுதாக் கற்பு போன்ற மிகத்தூய தமிழ் சொற்களைப் பயன்படுத்தியுள்ளதைக் கண்டு வியந்திருக்கிறேன். இதனால் மட்டுமே எனக்கு அவர்களின் பாடல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்துள்ளது. -- Sundar \பேச்சு 16:15, 18 நவம்பர் 2007 (UTC)
வடமொழி எழுத்து முறைமையில் திராவிட ஒலி எழுத்துகள்
தொகுஆனால், தமிழின் எல்லா ஒலிகளையும் எழுதிக் காட்டுவதற்கு வட மொழியில் எழுத்துக்கள் உண்டா? என்ற ரவியின் கேள்வியை பொருத்தவரையில், தேவநாகரியில் திராவிட மொழிகளின் ஒலிகளை குறிக்க யூனிகோடில் எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன, என்பதை தெரிவித்து கொள்கிறேன்
அவ்வெழுத்துக்கள் கீழ்க்கண்டவாறு
ऱ - ற ळ - ள ऴ - ழ ऎ - எ ऒ - ஒ ऩ -ன
ஆவன ஆகும். இந்திய அரசு வெளியிட்டுள்ள இலவச இந்தி மன்பொருள் குறுந்தட்டில் உள்ள அகராதிகளில் திராவிட ஒலிகளை குறிக்க மேற்கண்ட எழுத்துகள் பயன்படுத்தியுள்ளனர். எனவே இதில் குறுகலான மனபான்மையில்லாமல் ஒரு பரந்த மனபான்மையுடன் நாம் பரிசீலிக்க வேண்டும். தமிழ் உரைநடையில் கிரந்தத்தின் தேவையற்றா பயன்பாடு கூடாதது என்பது எனது கருத்தும் கூட(ஜனநாயகம் போன்ற பொதுவழக்கு சொற்களுக்கு விதிவிலக்கு தரவேண்டும்). அதே நேரத்தில் பிற மொழி சொற்களையும், பிற மொழி பெயர்ச்சொற்கள், இடங்களை குறிக்கும் சொறக்ள் போன்றவற்றை குறிப்பிடுகையில், குழப்பத்தை தவிர்க்க கிரந்தத்தின் பயன்பாடு அவசியம் ஆகும். வினோத் 10:50, 18 நவம்பர் 2007 (UTC)
வினோத், கிரந்த எழுத்துக்கள் தொடர்பாக இணையத்தில் உரையாடுபவர்கள் பலர் குருட்டாம்போக்காக வாதிடுவதைக் கண்டு சலிப்படைந்திருக்கிறேன். உங்களால் இயன்ற அளவு ஆதாரங்களுடன் நிதானமாக நீங்கள் உரையாடுவது கண்டு மகிழ்ச்சி. இவ்வளவு இளம் வயதில், பிற மொழி எழுத்து முறைமைகள் குறித்த உங்கள் ஆர்வமும் அறிவும் தமிழ் விக்கிபீடியாவுக்கு மிகவும் உதவும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
இஷ்டம், நஷ்டம், ஜனநாயகம் போன்ற சொற்கள் பொது வழக்கில் இருந்தாலும் அவற்றுக்குப் பதில் தமிழ்ச் சொற்களான விருப்பம், இழப்பு, மக்களாட்சி போன்ற சொற்களைப் பயன்படுத்தினால் பிரச்சினை தீர்ந்து விடும். சனநாயகமா ஜனநாயகமா என்ற கேள்வியே எழாது. மொழிபெயர்க்கக்கூடாத பெயர்ச்சொற்களுக்கு கிரந்த எழுத்துக்களை விடுத்து எழுத வேண்டுமா என்பது தான் தற்போது கேள்வியாக இருக்கிறது.
வட மொழி எழுத்துக்களில் தமிழ் ஒலிகளை எழுதிக்காட்டுகிறார்கள் என்பது எனக்குப் புதிய செய்தி. அறியத்தந்ததற்கு நன்றி. என்னுடைய கேள்விகளைக் குறுகிய மனப்பான்மை என்று எண்ணாமல் நியாயமான கேள்விகள் என்று எண்ணினால் மகிழ்வேன். தமிழ் விக்கிபீடியாவின் சராசரி வாசகனைக் குழப்பக்கூடாத என்ற நடைமுறைக் காரணத்துக்காக நீங்கள் எடுத்துரைப்பதை முற்றிலும் உணர்ந்து இருக்கிறேன். அதே வேளை, இதை தமிழ் விக்கிபீடியாவுக்கான கொள்கை உரையாடலுக்காக என்று மட்டும் கருதாமல், கிரந்தம் குறித்த விக்கிபீடியா வெளிக்கு வெளியிலுமான என்னுடைய புரிதலுக்கான ஒரு முயற்சி என்று கருதலாம். இவற்றை வினோதுக்கான கேள்விகளாக கருதாமல் அறிந்தவர் விளக்கினால், தொகுத்து, கிரந்த எழுத்துக்கள் குறித்த கட்டுரையில் சேர்க்கலாம்.
1. தாங்கள் தந்த தமிழ் ஒலிகளுக்கான வட மொழி எழுத்துக்களைக் காணும்போது எளிதில் புலப்படுவது ஒன்று தான். அது - ஏற்கனவே இருக்கும் வட எழுத்துக்களுக்குடன் புள்ளி போன்ற சிறு குறியீடுகளைக் கோர்த்து தமிழ் ஒலிகளைக் குறிக்கிறார்களே தவிர, முற்றிலும் புதிய எழுத்து வடிவங்களைக் காணோம்??? நாம் மட்டும் ஏன் இது போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தாது முழு எழுத்து வடிவங்கள், அவற்றுக்கான அகர வரிசை என்று பயன்படுத்துகிறோம். கிரந்த எழுத்து அறிமுகத்தால் தமிழின் அகர வரிசையையே மாற்றி விட்டார்கள். தமிழ் ஒருங்குறி அகர வரிசையில் தமிழ் எழுத்துக்களுக்கு இடையில் கிரந்த எழுத்துக்களும் வருவதைக் கவனிக்கலாம். வட மொழி மற்றும் பிற மொழி எழுத்துக்களைக் குறிக்கவும் இது போல் சிறு குறியீடுகளே போதும் என்றும் முற்றிலும் புதிய எழுத்து வடிவங்கள் தேவை இல்லை என்றும் செல்வா போன்றோர் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர். இந்த வட மொழிக் குறியீடுகள் அகராதிகள், ஒருங்குறி தாண்டி பொது வழக்கில் உண்டா? தமிழ்நாடு என்று இந்தி நாளிதழில் எழுதும்போது ழகரத்துக்கான இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்களா? அகராதிக் காரணங்களுக்காக குறியீடுகளைப் பயன்படுத்துவதற்கும் பொது வழக்கில் இருந்து பள்ளிகளில் சொல்லித் தரப்படுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அகராதிகளுக்காக குறியீடுகள் பயன்படுத்துவது பல மொழிகளிலும் உண்டு. ஆனால், பொது வழக்கில் இப்படி இருப்பது எல்லா மொழிகளிலும் இல்லை என்று நினைக்கிறேன்.
2. ஸ, ஹ, ஷ, ஜ, ஸ்ரீ போன்ற அல்லது ஓரளவு எழுத்து வடிவங்கள் வட மொழியிலும் பிற மொழியிலும் வழங்குகின்றனவா? இல்லை, அங்கு இவற்றை வேறு எழுத்துக்களால் எழுதிக் காட்டுகிறார்களா? இந்தியில் இவற்றைச் சுட்டும் எழுத்துக்கள் வேறு வடிவம் கொண்டுள்ளன என்று அறிவேன். அதாவது, இந்த கிரந்த எழுத்துக்கள் தமிழில் மட்டும் தான் இருக்கின்றனவா? இந்த ஒலிகளுக்காக கிரந்த எழுத்து என்று ஒன்றை உருவாக்கி தமிழில் புகுத்தினார்களா? இல்லை, வேறு மொழியில் இருந்து எழுத்துக்களை தமிழுக்கு இடம் பெயர்த்தார்களா? யார், எதற்காக, எப்போது இதைச் செய்தார்கள்?
3. நீங்கள் குறித்துள்ள எடுத்துக்காட்டுக்கள், தமிழில் அடிக்கடி பல சொற்களில் பயன்படும் ஒலிகள். ஆனால், ஸ்ரீ என்ற ஒரே ஒரு ஒலிக்காக, எல்லா இடத்திலும் ஒரு பொருள் தரும் சொல்லுக்காக நாம் ஒரு புது எழுத்தைக் கற்றுக் கொள்ளவும் தொடர்ந்து பயன்படுத்தவும் தான் வேண்டுமா? மற்ற கிரந்த எழுத்துக்காளவது ரோமானிய ஒலிகளைக் குறிக்கவும் பயன்படுகிறது. ஸ்ரீக்கு அந்தப் பயனும் இல்லை.
4. ஸ்ரீ என்பதை சிறீ அல்லது சிரீ என்று எழுதினால் வட மொழி ஒலிப்பு என்று உணரக்கூடியவர்கள் தெளிவாகவே ஸ்ரீ என்று உச்சரிக்கக்கூடும். இயலாதவர்கள் சிறீ அல்லது சிரீ என்றே வாசித்து விட்டுப் போகட்டும். இந்த ஒலிப்புக் குறைவினால் யாருக்கு என்ன இழப்பு? நான் அறிந்த வரை மந்திர உச்சாடனங்களிலேயே ஒலிப்புத் துல்லியம் முக்கியமாகக் கருதப்படுகிறது.
5. அவர்கள் மொழியில் இல்லை, நாம் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்பது மேலோட்டமாகப் பார்த்தால் குறுகிய மனப்பான்மையாகப் பார்த்தாலும், உண்மையில் இந்தக் கேள்வியின் நோக்கம் மொழி ஊடான பண்பாட்டு, வரலாற்று ஆதிக்கத்தைக் கேள்வி எழுப்புவதே ஆகும். வட மொழி அறிந்தவர்கள் ஆதிக்கத்தில் தமிழ் இருந்த போது வட மொழிச் சொற்களைத் துல்லியமாகத் தமிழில் எழுதிக்காட்டுவதற்காக இந்த எழுத்துக்கள் உருவானதா? இந்தச் சொல் உருவாக்கத்தின் நோக்கத்தில் வட மொழி நலன் முதன்மையா தமிழ் மொழி நலன் முதன்மையா? தற்போது தனித்தமிழ் இயக்கத்தின் மூலம் பெரும்பாலான வட மொழிச் சொற்களை துப்புரவு செய்த பிறகும், அது தொடர்பான பண்பாட்டு, வரலாற்று ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டபிறகும், இந்த எழுத்துக்கள் தொடர்வதின் தேவை என்ன? சொல், எழுத்து இரண்டும் சேர்ந்து தானே மொழி? சொற்களைத் தூய்மை செய்து விட்டு, எழுத்துக்களை மட்டும் விட்டு வைப்பது ஏன்? வட மொழி ஆதிக்கத்தில் இல்லாமல் ஆங்கிலம், சீனம், பிரெஞ்சு என்று வெவ்வேறு மொழி ஆதிக்கத்தின் கீழ் இருந்திருந்தால் அவற்றுக்கு ஏற்பவும் தமிழில் எழுத்துக்கள் சொருகப்பட்டிருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். இப்படி ஒவ்வொரு மொழியின் ஆதிக்கத்துக்காகவும் வளைந்து கொடுப்பது ஒரு செம்மொழிக்கு அழகா?
6. தமிழுக்கு அன்னியமான எழுத்துக்கள் வழக்கொழிவது புதிது இல்லை. ௺, க்ஷ, ௶, ௵, ௴, ௸, போன்ற எண்ணற்ற எழுத்துக்கள் தமிழ் ஒருங்குறி அட்டவணையில் இருக்கின்றன. இவற்றில் சிலவற்றை எப்படி வாசிப்பது என்றே தெரியவில்லை. இவையும் ஒரு காரணத்துக்காக ஒரு காலத்தில் வழக்கில் இருந்து வழக்கொழிந்து போனவை தான்.--Ravishankar 15:37, 18 நவம்பர் 2007 (UTC)
- எனக்குத் தெரிந்தவரை "'ऴ" என்ற எழுத்தை மராத்தி மொழியில் நமது ழகரத்தை ஒத்து இருக்கும் ஒரு ஒலியைக் குறிக்கவே தேவநாகரிக்கான ஒருங்குறியில் சேர்த்துள்ளார்களேயொழிய ழகரத்திற்காக அல்ல. (இது தகவலுக்காக மட்டும். எனது நிலைப்பாட்டை வாய்ப்பு கிடைக்கும்போது எழுதுகிறேன்.) -- Sundar \பேச்சு 16:00, 18 நவம்பர் 2007 (UTC)
ஒருங்குறியில் (யுனிகோட்டில்) இருப்பது பலரும் அறிந்தது. இந்தி, மராத்திய மொழிகளில் வழக்கில் உள்ளதா? இல்லை. மேலும் எகரத்தைக் குறிக்க நேர்க்கோட்டிற்கு மாறாக சிறு நெளிவு தருதலும் கீழ்ப்புள்ளி இட்டுக் காட்டுவதும் புது எழுத்துக்களாகாது. நானும் ஒலித்திரிபு காட்ட சிறு குறிகள் இடுவோம் என்று பரிந்துரைத்திருக்கின்றேன். பரந்த-மனப்பான்மை குறுகிய மனப்பான்மை அல்ல இங்கு கேள்வி. நீங்கள் தமிழர்கள் குறுகிய மனப்பான்மையால் சிறீ, சிரீ என்று பரிந்துரைப்பதாக நினைப்பதும், புதிய முழு எழுத்துக்களை நுழைப்பதை எதிர்ப்பதாகவும் நினைப்பது தவறு. சிறு குறியீடுகள் இட்டு ஒலித்திரிபுகளைக் காட்ட நான் பலமுறை பரிந்துரைத்திருக்கின்றேன். தமிழில் வழங்கா, தமிழ் முறைக்கு ஒவ்வா ஒலிகளையும் ஓரளவிற்காவது காட்டும் படி தமிழில் முறைமை இருக்க வேண்டும் என்று கருதுபவன் நான். சாதி-சனம், சனநாயகம் என்பது தமிழ் வழக்கு. அதனை ஏற்காமல் ஜாதி, ஜனம், ஜனநாயகம் என்றுதான் சொல்லவேண்டும் என்றும் கூறுவது பரந்தமனப்பான்மையா அல்லது குறுகிய நோக்கில் திணிப்பா என்று எண்ணிப்பார்த்தல் வேண்டும். ஆங்கிலத்தில் Buddha என்று எழுதினாலும் BooDaa என்று ஒலிப்பதன் கரணியம் என்ன? அவர்கள் மொழியில் this, that, then, those, whether, weather என்று பல அடிப்படையான சொற்கள் இருந்தும், ஏன் புத்தா ('பு'த்'தா) என்று ஒலிக்கவில்லை? என் பெயரில் உள்ள ஒலியன்கள் அத்தனையும் ஆங்கிலத்தில் உள்ளது, Selvakumar என்னும் பெயரை ஒழுங்காக ஒலிக்கும் ஆங்கிலேயர்கள் மிக மிகக் குறைவு. அதாவது மொழிக்கு மொழி வேறுபாடுகள் இருக்கும். அது இயற்கை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வேற்று மொழிச்சொல்லை ஒரு மொழியில் வலியுறுத்துவது திணிப்பு, பண்பாடில்லாமை, அந்த மொழியை, மொழி மரபுகளை மதிக்காமை. மிகக் குறைவான மொழிகளே தமிழ்மொழி போல் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக மிகுந்த உயிர்ப்புடன் வழங்கி வந்துள்ளது. புதுமைகளை வரவேற்பது தமிழரின் சிறப்பு, ஆனால் புதுமை என்று கூறி தமிழை சீரழிப்பது எதிர்க்க வேண்டியது. சிரீ அல்லது சிறீ என்றெழுதுவதால், தமிழில் இல்லாது ஒருசிலரால் புகுத்தப்படும் ஒரு குழப்பமான எழுத்தைத் தவிர்க்கலாமே? உள்ள எழுத்தின் ஒரு சிறு மாற்றம் எனில் ஏற்கலாம். இது அப்படியில்லை. கூட்டெழுத்தைத் தவிர்ப்பது நல்ல முறை. சில ஒலிகள் தமிழில் இருந்தாலும், தமிழ் முறைமைக்கு மாறாக வரும் இடங்களில் வழங்கவும், தமிழில் இல்லா சில ஒலிகளையும், குறிக்க ஒலித்திரிபுக் குறிகளுடன் காட்டுவதை வரவேற்கிறேன். அப்படிப்பட்ட எழுத்தொலிகள் G, J, D, Dh, B, H, F, Sh, S, Z, Vowel "a" as in "apple". இவையனைத்திற்கும் எளிய வழிமுறைகள் தந்துள்ளேன். क ख ग घ போன்ற நால்வகை வேறுபாடுகளையும் மிக எளிதாகக் குறிக்கலாம் (புது, முழு எழுத்துக்கள் தேவை இல்லை). மஞ்சுசிறீ அல்லது மஞ்சுசிரீ என்றால் என்ன தவறு வந்துவிடும் என்று யாரும் குறிப்பிடவில்லை. Manjusri or Manjushree என்று எழுதினால் மட்டும் சரியாக இருக்குமா? இவற்றை எப்படி ஒலிப்பார்கள் என்று தெரியுமா? புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் இருக்கும் பிறமொழியாளர்கள் எத்தனை வேறுவிதமாக ஒலிக்கிறார்கள் ? பார்க்கவும்: Ch: 文殊 Wénshū or 文殊師利菩薩 Wénshūshili Púsà; Jp: Monju; Tib: Jampelyang; மஞ்சுசிரீ அல்லது மஞ்சுசிறீ என்றால் போதிய அளவு நெருக்க ஒலிப்பு இருக்கின்றதே (பிற மொழிகளை ஒப்பிடும்பொழுது!!). (இதனைப் பதிவு செய்யும் பொழுதுதான் பார்த்தேன், ரவியும் சுந்தரும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர் என்று. அதனை முழுமையாக இன்னும் படிக்க வில்லை. பின்னர் அதுர் குறித்து எழுதுகிறேன்;நாளை வரை பங்கு கொள்ள இயலாது)--செல்வா 16:27, 18 நவம்பர் 2007 (UTC)
ரவிஷங்கரின் கேள்விக்கான பதிலகள்
தொகுகேள்வி 1: தேவநாகரி(வடமொழி எழுத்துமுறையின் பெயர்) எழுத்துக்களில் புள்ளி போன்ற ஒன்றை 'நுக்தா' என அழைப்பர். இந்த நுகதாவை புதிய ஒலிகளை இயற்ற பயன்படுத்துவர். பாரசீக-அரபு ஒலிகளை குறிக்க இந்த நுக்தா பயன்பாடு காணப்படுகிறது. கிரந்த எழுத்து யூனிகோட் தான் அறிமுக படுத்தியது போல் தாங்கள் பேசுவது உள்ளது. ஏற்கனவே வழக்கத்தில் உள்ள எழுத்துக்களை தான் அவர்கள் சேர்த்துள்ளனர். தமிழ் வழக்கில் கிரந்தம் எப்போதும் நெடுங்கணக்கில் சேர்க்கப்பட்டதில்லை. அவை துணை(Auxillary) எழுத்துக்களாகவே இருந்து வந்துள்ளன. அவற்றை நெடுங்கணக்கின் நடுவில் இட்டது இந்திய அரசின் குற்றம்(யூனிகோட் குழுமத்தின் தவறு ஒன்றும் இல்லை. இந்திய அரசின் ISCII ஐ அவர்கள் யூனிகோட்டிற்கு மாற்றினர் அவ்வளவுதான்). இப்புதிய எழுத்துக்கள் இப்போதே அறிமுகபடுத்தப்பட்டுள்ளதென்பால் சிறிது சிறிதாகத்தான் வழக்கத்தில் வரும்.(இந்திய அரசு இதை பயன்படுத்தியதே பெரிய விஷயம்)
கேள்வி 2: கிரந்தம் வடமொழியை குறிக்கதான் திராவிடத்தில் இயற்றப்பட்டது(இதை தமிழ் எழுத்துக்களின் நீட்சி என சிலர் கருதினாலும். நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். மூல ப்ராஹ்மி எழுத்துக்களுக்கும் இவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பிராமி எழுத்து முறையினையும், முழு கிரந்த எழுத்துமுறையினையும் அறிந்தவன் என்ற முறையில் இதை குறிப்பிடுகிறேன். ஆனாலும் கிரந்ததில் தமிழ் வட்டெழுத்துக்களின் தாக்கம் மறுக்க முடியாது. அதேவேளையில் கிரந்த்தின் தாக்கத்தையும் தமிழ் எழுத்துகளின் மறுக்கமுடியாது). மேலும் செய்திகளுக்கு மணிப்பிரவாளம், கிரந்தம் கட்டுரை காண்க. இந்திய மொழிகளில் அனைத்தும் இவ்வொலிகளை குறிக்க எழுத்துகள் உண்டு. மேலும் நான் அறிந்தவரையில் தெபெத்திய எழுத்துமுறை, தாய் மொழி எழுத்துமுறை, பர்மிய எழுத்துமுறை, முதலியவற்றிலும் இது உண்டு. ஜப்பானில் சமஸ்கிருத ஒலியை குறிக்க சித்தம் என்ற புதிய எழுத்துமுறையினை பௌத்தர்கள் உபயோகிக்கன்றனர்(சித்தம் மிக அழகிய எழுத்துமுறை. விருப்பம் இருப்பின் கற்கவும்)
கேள்வி 3: 'ஸ்ரீ' என்பது ஏதோ புது எழுத்துல்ல. தமிழகத்தில் பரவலாக பயன்படுத்துக்கூடிய ஒன்று(ஸ்ரீநிவசன், ஸ்ரீதேவி, கவிதாஸ்ரீ என பல பெயர்ச்சொற்களில் உள்லது. இலங்கையின் நிலை குறித்து நான் அறியேன்(அங்குள்ளவர்கள் இந்த எழுத்தை முன் - பின் பார்த்தே இராதது போல் பேசுவதில் இருந்து, அங்கு பயன்பாட்டில் இல்லை என யூகிக்கிறேன்). தமிழக்த்தை பொறுத்தவரையில் இது புது எழுத்து அல்ல. அனைவரும் பெருவழக்கத்தில் உள்ள(தமிழகம் மட்டில், இலங்கை???) பயன்படுத்திக்கூடிய ஒன்று.(சிறீ எனபது தான் எங்களுக்கு வினோதமாக ஒன்றாக படும்).
கேள்வி 4: பெருவழக்கத்தில் உள்ளதை மாற்றுவதென்பது வேண்டாத காரியம். தமிழகத்தில் ஸ்ரீராம் என்றோ ஸ்ரீதேவி என்றோ ஸ்ரீயுடன் பெயர் வைத்துள்ளவர்கள்(நல்ல வேளை, என் பெயர் வினோத் ராஜன்!!!) இதை விரும்பினர் என்றால், தாராளாமாக மாற்றிக்கொள்ளலாம். அவர்கள் யாரும் தங்கள் பெயரை சிறீராம் என்றோ சிறீதேவி என்றோ எழுதப்படுவதை விருமப மாட்டார்கள். எனவே தயவு செய்து இலங்கையை மட்டும் பாராது பெரும்பாண்மை தமிழக வழக்கையும் கருத்தில் கொள்க. மாற்றம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். இங்கு மட்டும் மாற்றுவதால் பொதுவழக்கு மாறப்போவதில்லை அதையும் கருத்தில் கொள்ளவும். எனவே மாற்றம் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும். தமிழக மக்கள் முழுமையான கிரந்த்தை ஏற்காததின் காரணமாக அவ்வெழுத்துக்கள் வழக்கொழிந்து போய், மக்கள் ஏற்றுக்கொண்ட 5 கிரந்த எழுத்துக்கள் பெருவழக்கில் உள்ளன. எனவே இதை கருதாது இதை தன்னியக்கமாக உருமாற்றுவது தகாது.
கேள்வி 5: நான் சொன்னதுபோல் இவை வடமொழியை எழுதவதற்கு தான் உபயோகிக்கப்பட்டன. மணிப்பிரவாளம் தமிழில் உட்புகுத்தப்பட்டபோது இவை தமிழோடு பயன்படுத்தப்பட்டன. ஆயினும் மணிப்பிரவாளம் வெற்றிப் பெறவில்லை. மக்கள் அதை ஏற்க வில்லை. பெரும்பாண்மையான கிரந்த எழுத்துக்கள் வழக்கிழந்து போய்(ga, ba போன்றவை தமிழ் எழுத்துக்களாலே குறிக்கப்படலாம் என்பதாம் அது போன்ற எழுத்துக்கள் வழக்கிழந்தன). தமிழில் வடமொழி சொற்களை அத்தியாவசியமாக கையாள நேர்கையில் தமிழ் எழுத்துக்களால் குறிக்கமுடியாத ஒலிகளை குறிக்க இவ்வைந்து எழுத்துக்களும் மிஞ்சி உள்ளன. எனவே மக்களின் நூற்றாண்டு கால பயன்பாட்டினால் தான் இவை வழக்கில் இன்றும் பரவலாக உள்ளன. இல்லையெனில் மற்ற கிரந்த எழுத்துக்களை போல் இவை வழக்கொழிந்து எப்போது மறைந்து இருக்கும். எனவே மக்கள் ஏற்றுக்கொண்டு இன்றளவும் பெருவாரியாக அதுவும் பெரும்பாலும் பிறமொழிச் சொற்களின் அத்தியாவ்சிய பயன்பாட்டிற்கு மட்டுமே உபயோகிக்க கூடிய ஒன்றை, தன்னியகமாக மாற்றுவது சென்ற கேள்வியில் குறிப்பிட்டது போல் சற்றும் தகாது. மக்களை தயவு செய்து கருத்தில் கொள்ளுங்கள். இன்று உரைநடையில் யாரும் கிரந்தததை பயன்ப்டுத்துவது கிடையாது. பிற மொழிச் சொற்களைத்தான் குறிப்பிட பயன்படுத்துகின்றனர். இதையும் கருத்தில் கொள்க
கேள்வி 6: மக்கள் இவையை அன்னியமாக நினைக்கவில்லை. உரைநடையில் கிரந்தம் பயன்படுத்துவது பெரும்பாலும் நின்றுவிட்டது. பிறமொழிச்சொற்களை பயன்ப்டுத்ததான் அவை உபயோகித்தில் உள்ளன. பிற மொழி ஒலிகளை குறிக்க ஒலிகள் இருப்பது நலம் தானே.
செல்வா கூறுவது போல் கூறுவது போல் இவற்றை நீக்கிவிட்டு புதுக்குறியீடுகள் பயன்படுத்துதல் யதார்த்தத்திற்கு ஒத்துவரத ஒன்று. வேண்டுமென்றால் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தலாம். அதையும் மீறி மக்கள் ? இது போன்ற புது குறியீடுகளின் வெகுஜன பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் பல்வேறு அரசியல் சிக்கல்கள் உள்ளன. அவற்றை மீறி இவற்றை செயல்படுத்துவது கடினம். தமிழக அரசியலில் பொருத்தவரையிம் இதைவிட பல முக்கிய(?) விஷயங்கள் உள்ளன. புது குறியீடுகளை உருவாக்குவது நலம் தான். அவற்றின் செயல்பாட்டிலுள்ள நிதர்சனத்தை தயவு செய்து புரிந்துகொள்ளவும். இதை விக்கிப்பீடியாவில் செயல்படுத்துவோம் என வைத்துக்கொள்வோம். வாசகருக்கு இது வினோதமாக இருக்கும். விக்கிப்பீடியாவுக்காக மட்டும் இக்குறியீடுகளை கற்பது நடக்கமுடியாத ஒன்று. இது மக்களுக்குக்காக, மக்கள் மீது திணிக்கும் விதமாக இருக்கக்கூடாது. ஒருவேளை கருத்தொற்றுமை ஏற்ப்பட்டு புது குறியீடுகள் ஒட்டுமொத்த தமிழ் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெருவழக்கில் வந்தால், இங்கும் அதை பயன்படுத்துவதி எந்த எதிர்ர்ப்பும் இருக்காது.
அதுவ்ரை Status Quo.
இதையும் மீறி புது குறியீடுகளையும், பெருவழக்கத்தில் இல்லாத ஒன்றயும் செயல்படுத்துவது நல்லதல்ல. அது நமது கலைக்களஞ்சியத்தையும் மக்களையும் அன்னியப்படுத்தி விடும்.
செல்வா, ரவிஷங்கர் போன்ற அனைவரும் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே. பொதுவழக்கு, பெருவழக்கு என ஒன்று உள்ளது. தமிழ் விக்கிபீடியாவில் மட்டும் புது முறையை பயன்படுத்துவதால் அனைவரும் இதை பயன்படுத்தபோவதில்லை. இது நிதர்சனம். இதை எதிர்ப்பது நிதர்சனத்தை மீறிய ஒரு செயல். அனைவரும் கிரந்த எழுத்துக்கள் இல்லாத முறையை பயன்படுத்துகையில் இங்கு பயன்படுததலாம். அதுவரை Status Quoவை மீறக்கூடாது
குறிப்பு: மராட்டியத்தில் உள்ளது 'ळ', ऴ திராவிட பயன்பாட்டிற்காக் சேர்க்கப்பட்டது. வேண்டுமெனில் யூனிகோட் தேவநாகரி அட்டவணையை காணவும். 'ழ்'வைப்போல் இதை 'LLLa' என்றே குறிப்பிட்டிருப்பர்.
வினோத் 18:15, 18 நவம்பர் 2007 (UTC)
- வினோத், ழகரம் குறித்த எனது முந்தைய கருத்தைத் துல்லியமாகத் தெரிவிக்கவில்லை. ஆம், அக்குறியீடுகள் திராவிட ஒலியன்களைக் குறிப்பதற்காகத்தான். இருந்தாலும் அவை ஏதோ தற்கால அறிஞர்களின் பெருந்தன்மையால் ஒருங்குறியில் சேர்க்கப்பட்டவை அல்ல. மாறாக அடித்தட்டு தாக்கத்தின் (?) (substratum influence) விளைவாக இந்தோ-ஆரிய மொழிக்குடும்ப மூத்த மொழிகளில் இணைந்து விட்ட ஒலியன்களைக் குறிப்பதற்காக கிரந்த எழுத்துக்களுக்கு முன்னரிருந்தே பயன்படுத்தப்பட்டவை. தற்போது மராட்டியில் மட்டுமே ஓரளவு பயன்படுத்தப்படுகின்றன என்று நினைக்கிறேன். அதுவும் புள்ளியுடைய ழகர இனைக்குறியீடு பயன்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. பார்க்க: hi:तमिल भाषा, mr:तमिळ .
- உண்மையில் சிரீ என்ற தமிழக மற்றும் பழந்தமிழ்ப் பயன்பாடு எனக்கும் புதியதே. (சிறீ என்ற இலங்கைத் தமிழ் வழக்கு எனக்கு ஏற்கெனவே அறிமுகமாகியுள்ளது.) இருந்தாலும் பொதுவழக்கை இறுக்கமாக தமிழ் விக்கிபீடியாவில் கடைப்பிடிப்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை. ஏனெனில் தமிழில் உள்ள இருதர (diglossia) அல்லது முத்தர வழக்கத்தை நான் மதிக்கிறேன், அதன் விளைவாகவே இன்னமும் இம்மொழி உயிர்ப்புடன் விழங்குகிறது. அதாவது வட்டார வழக்குகளும் அன்றாட பயன்பாட்டு வழக்குகளும் இருந்தும் ஒரே மொழியாக தமிழர் அனைவருக்கும் புரிந்துவரக் காரணமாகத் திகழ்கிறது. தவிர பொதுவழக்கு என்பது என்ன என்பதும் சற்று கேள்விக்குறியதே. எழுத்தின்மீது கூடுதல் தாக்கம் கொண்ட ஊடகங்களின் ஆசிரியர்கள், அன்றாட வாழ்வில் ராம ஜெயம் எழுதுவதற்குட்பட பல தேவைகளுக்கு எழுத்துவடிவத்தைப் பயன்படுத்தும் நம்மைப் போன்ற சிறுபான்மையினரின் வழக்கா அல்லது இதைக்காட்டிலும் எண்ணிக்கையிலும் பயன்பாட்டிலும் பல மடங்கு மிகுதியாக உள்ள ரவியின் அப்பத்தா போன்றோரின் வழக்கா? காட்டாக, ஏனம் என்பது நல்ல தூய தமிழ்ச்சொல் என்பதெல்லாம் எனக்குத் தெரியாதிருந்தும் எனது பாட்டி மற்றும் எங்கள் ஊரைச் சேர்ந்த பலர் அதை அன்றாடம் பாத்திரத்தைக் குறிக்கப் பயன்படுத்துவதைக் கேட்டிருக்கிறேன். ஆனாலும், பொதுவழக்கை அடைப்புக்குறிகளுக்குள்ளும் வழிமாற்றுத் தலைப்புகளிலும் கண்டிப்பாகத் தர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இதையொத்த முந்தைய கொள்கை உரையாடலை விக்கிபீடியா பேச்சு:சொல் தேர்வு விக்கிபீடியா பேச்சு:சொல் தேர்வு/தொகுப்பு 1 விக்கிபீடியா பேச்சு:சொல் தேர்வு/தொகுப்பு 2 முதலிய பக்கங்களில் நீங்கள் காணலாம்.
- இவை எனது தனிப்பட்ட விருப்பமே. இது தொடர்பில் விரிவான உரையாடல் ஒன்றையடுத்தே கொள்கைகளையும் வழிகாட்டுதல்களையும் வகுக்க முடியும். அதுவரை இந்தத் தலைப்பை முதன்மைப்படுத்தலாம் என்றே எண்ணுகிறேன். மேலும் இங்குள்ள அனைவரும் புதிதாக வந்திருக்கும் உங்களைப் போன்ற நல்ல பயனர்மீது எங்கள் கொள்கைகளைத் திணிப்பதுபோன்ற உணர்வு உங்களுக்கு வர வேண்டாம். இதுபோன்ற பல உரையாடல்கள் இதற்கு முன்னர் இங்கு நடந்துள்ளன.-- Sundar \பேச்சு 03:22, 19 நவம்பர் 2007 (UTC)
சுந்தர், ஏனம் என்ற சொல் குறித்த உங்கள் குறிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரை பக்கமும் இது புழக்கத்தில் உண்டா? புதுகையில் உள்ள எங்கள் சிற்றூரிலும் இன்றும் எல்லாரும் (கவனிக்க: அப்பத்தாக்கள் மட்டும் இல்லை :)) இப்படித் தான் அழைக்கிறோம். இது போன்ற எண்ணற்ற சொற்கள் சிற்றூர்களில் இருக்கின்றன. அவை எல்லாம் பொது வழக்கில் இருந்து காணாமல் போகும் முன் எப்படியாவது குறைந்தபட்சம் ஆவணப்படுத்தி விட வேண்டும் என்பது என் விருப்பம் ..--ரவி 10:32, 19 நவம்பர் 2007 (UTC)
- ரவி, மதுரைப் பக்கத்தில் நான் கேட்டது கிடையாது. எனது தாத்தா-பாட்டி ஊரான எட்டயபுரத்தில் தான் இது வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. புதுகையிலும் பயன்பாட்டில் உள்ளது கேட்டு மகிழ்ச்சி. கண்டிப்பாக ஆவணப்படுத்தப்பட வேண்டியவை இவை. -- Sundar \பேச்சு 02:59, 20 நவம்பர் 2007 (UTC)
இதைத் தொடர்ந்து நிகழ்ந்த விக்கிபீடியாவில் கிரந்த எழுத்துப் பயன்பாடு தொடர்பான கலந்துரையாடல்' விக்கிபீடியா பேச்சு:கிரந்த எழுத்துப் பயன்பாடு கட்டுரைக்கு நகர்த்தப் பட்டுள்ளது.
ரவியின், கோபியின் கருத்துக்குக்கு முழு மடங்கு ஆமோதிக்கின்றேன். இந்த வார்த்தை, தலைப்பு பிழையானது வரலாற்றை மறைப்பது. பொருட் குற்றம் உள்ள வார்த்தை. சிறீ என்பது என்பதற்கு விளக்கம் தேவை? மஞ்சுசிறீ என்று அதிகாரப்பூர்வமாக தமிழில் பெயரிட்டத் தளம் இருந்தால் மேற்கோள்கள் காட்டவும். இதுவொரு பிழைச் சொல் எனக் கருதுகின்றேன். வேறு விளக்கங்கள் கொடுப்பதை தவிர்க்கவும்? இதற்கான ஆதாரத்தை மட்டும் கொடுக்கவும் இதை மீண்டும் மாற்றலாம் என்பதை பதிவு செய்கின்றேன். திரு என்ற சொல் மட்டும் தான் பொருளுடையது.--செல்வம் தமிழ் 06:27, 10 மே 2009 (UTC)