பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்
பேளூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் (Thanthondreeswarar Temple) தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் பேளூர் என்னுமிடத்தில் உள்ளது.
தேவார வைப்புத்தலம் பாடல் பெற்ற அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோயில், பேளூர், சேலம் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°42′28.7″N 78°24′15.9″E / 11.707972°N 78.404417°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | பேளூர் |
பெயர்: | அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோயில், பேளூர், சேலம் |
அமைவிடம் | |
ஊர்: | பேளூர் |
மாவட்டம்: | சேலம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | தான்தோன்றீஸ்வரர் |
தாயார்: | கற்பகாம்பாள் |
பாடல் | |
பாடல் வகை: | தேவார வைப்புத்தலம் |
தல வரலாறு
தொகுபஞ்சபாண்டவர்களில் ஒருவரான அருச்சுனன், ஒரு முறை தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தான். அதன் ஒரு பகுதியாக இங்குள்ள தீர்த்த மலைக்கு வந்தான். அப்போது கிருட்டிணன், அர்ச்சுனனிடம் ‘உனது பாணத்தை இப்பகுதியில் செலுத்துவாயாக’ என்றார். உடனேசிவனை நினைத்து, பிறை வடிவமான பாணத்தை மலை அடிவாரத்தில் செலுத்தினான் அர்ச்சுனன். இதனால் சிவன் மகிழ்ந்து, அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை வழங்கினார். மேலும் தனது திருமுடியில் இருந்து கங்கையின் ஒரு பகுதியை இங்கே ஓடச் செய்தார். அந்த நதியே ‘வெள்ளாறு’ என்று பெயர் பெற்றது.
ஒரு முறை இறைவனின் திருவுளப்படி, வசிட்ட முனிவர், இந்த நதிக்கரையில் தங்கி வேள்வி செய்தார். வசிட்டரின் வேள்வியில் மிஞ்சிய சாம்பலே குன்றாக மாறி, ‘கோட்டை மேடு’ என்ற பெயரில் விளங்குவதாக கூறப்படுகிறது. அந்த குன்று மண்ணே, இந்த ஆலயத்தின் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
வசிட்டர் உலக நலனுக்காக தவம் செய்ய முன்வந்தார். அப்போது குபேரன், தாமரை பீடத்தில் எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி பொன் மாரி பொழிந்தார். இதனை நினைவுறுத்தும் வகையில், தாமரையில் எழுந்தருளியுள்ள குபேரலிங்கத்தை ஆலயத்தில் தரிசிக்கலாம்.
கோவில் அமைப்பு
தொகுமூலவரான தான்தோன்றீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்குநோக்கி காட்சி தருகிறார். இவரை வணங்கினால் கல்வி, செல்வம், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஆண்டுதோறும் சித்திரை 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை, சூரியன் தனது ஒளிக்கதிர்களால் மூலவரை வழிபடுவது சிறப்புக்குரியது. அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் ஈசனின் சன்னிதிக்கு இடதுபுறம் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார். மா, பலா, இலுப்பை மூன்றும் இணைந்த அதிசய மரம் இங்கு தல விருட்சமாக இருக்கிறது. தீர்த்தம் வசிட்ட நதி.
இந்த ஆலயம் 97 அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோயிலின் முன்பகுதியில் உள்ள பதினாறு கால் மண்டபத்தில், யாழி மற்றும் குதிரைவீரன் சிற்பங்கள் கலை நுணுக்கத்துடன் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பஞ்சபூத லிங்கங்கள், அறுபத்து மூவர், குபேரலிங்கம், தட்சிணாமூர்த்தி, சகஸ்ரலிங்கம், ஆறுமுகசாமி, கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, துர்க்கை, பிச்சாடனர், காலபைரவர் போன்ற சன்னிதிகளும் உள்ளன. வன்னி மரத்தடியில் நவக்கிரகங்கள் வீற்றிருக்கின்றன. சனீஸ்வரர் காக வாகனத்தில் ஒற்றைக்காலுடன் நின்றபடி காட்சி தருவது சிறப்பம்சமாகும்.
இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந் திருக்கும்.
கல்யாண விநாயகர்
தொகுஇந்தக் கோவிலில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என இரட்டை விநாயகர்கள் உள்ளனர். இவரை கல்யாண விநாயகர்கள் என்று அழைக்கிறார்கள். சங்கடகர சதுர்த்தியின் போது இந்த இரட்டை விநாயகரை வழிபட்டு அபிஷேகம், அர்ச்சனை செய்து அருகு அல்லது வெள்ளெருக்கு மாலை அணிவித்தால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். இந்த விநாயகர் சன்னிதி முன்பாக திருமணங்கள் நடைபெறும். இந்த தலத்தில் வசிட்டரும், அருந்ததியும் நேரடியாக இருந்து ஆசீர்வதிப்பதால், இங்கு நடக்கும் திருமணங்களில் அம்மி மிதித்து, அருந்ததி பார்ப்பது கிடையாது.
உளுந்தாக மாறிய மிளகு
தொகுமுன்னொரு காலத்தில், இந்தப் பகுதியில் மாணிக்கம் செட்டியார் என்பவர் வசித்து வந்தார். மிளகு வியாபாரியான இவர் மிளகு செட்டியார் என்றே அழைக்கப்பட்டார். அவர் தினமும் மிளகு மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிச்சென்று சந்தையில் விற்று வருவார். ஒரு நாள் களைப்பு காரணமாக, அடர்ந்த காட்டுப் பகுதியில் தங்கினார். அப்போது சமையல் செய்ய, சுண்டைக்காய்களை ஒரு கல்லில் நசுக்கும்போது ‘எனக்கு கல்லடி பட்டு தலை வலிக்கிறது. உன் மிளகை அரைத்து பற்றுப்போடு’ என்று ஒரு குரல் கேட்டது. இதனால் பயந்துபோன அவர் ‘என்னிடம் உளுந்துதான் இருக்கிறது’ என்று கூறியபடி, அங்கிருந்து அவசரமாக ஊருக்கு திரும்பினார். வீட்டிற்கு சென்றதும் மிளகு மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி.. மிளகு முழுவதும் உளுந்தாக மாறி இருந்தது.
பதறிப்போன அந்த வியாபாரி அசரீரி ஒலித்த இடத்திற்குச் சென்று இறைவனை வேண்டினார். அப்போது, ‘நீ சுண்டைக்காய் நசுக்கிய இடத்து மண்ணை எடுத்து, உளுந்தின் மீது தூவு’ என்று குரல் ஒலித்தது. அதன்படியே செய்ய, உளுந்து மீண்டும் மிளகாக மாறியது. இதையடுத்து அந்த வியாபாரி தான் சுண்டைக்காய் நசுக்கிய கல்லை பார்த்தபோது, அது சுயம்புலிங்கம் என தெரியவந்தது. இதையடுத்து மிளகு செட்டியார் அந்தப் பகுதியில் இந்தக் கோவிலை கட்டியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
முகவரி
தொகுசேலம் மாநகரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், வாழப்பாடியில் இருந்து வடக்கில் 6 கிலோமீட்டர் தூரத்திலும், அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள பேளூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.