பைகுந்தாப்பூர் காடு
பைகுந்தாப்பூர் காடு (Baikunthapur Forest) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் துவார்ஸ் எனப்படும் வெள்ளப்பெருக்குள்ள வண்டல் சமவெளிகளின் மேற்குப் பகுதியில் இமயமலை அடிவாரத்திற்கும் தெற்குப் பகுதியில் மேற்கில் உள்ள மகாநந்தா நதிக்கும் கிழக்கில் உள்ள தீஸ்டா நதிக்கும் இடையில் பரந்துள்ள, புல்வெளிப்பகுதிகளும் காடுகளும் கொண்ட ஒரு தெராய் வனப்பகுதியாகும். இப்பகுதியின் முக்கிய நகரங்கள் சிலிகுரி மற்றும் ஜல்பைகுரி ஆகும் . காடுகளின் ஒரு பகுதி டார்ஜிலிங் மாவட்டத்திலும், மேலும் ஒரு பகுதி ஜல்பைகுரி மாவட்டத்திலும் உள்ளன .
பைகுந்தாப்பூர் இந்தியாவின் ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் மண்டலம் ஆகும். இப்பகுதி பல காட்டு யானைகளின் தாயகமாகத் திகழ்கிறது. ஆனால் உள்ளூர் மக்கட்தொகை வளர்ச்சியால் அவை அச்சுறுத்தப்படுகின்றன. மஹாநந்தா வனவிலங்கு சரணாலயத்தின் மிகச்சிறிய ஒரு பகுதியாக பைக்குந்தாப்பூர் வனப்பகுதி உள்ளது வரலாற்று ரீதியாக, கோச் பீகார் ஒரு சுதந்திர இராச்சியமாக இருந்த காலத்தில் பைக்குந்தாப்பூர் காடுகள் ராய்காட் இளவரசர்களின் பாதுகாப்பான தளமாக இருந்தன.இந்துப் புராணங்களின் படி கிருஷ்ணரும் ஒரு காலத்தில் இக்காட்டில் தஞ்சம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
புவியியல் மற்றும் காலநிலை
தொகுமேற்கு வங்கத்தின் வடக்கு பகுதி இமயமலையில் இருந்து அடித்து வரப்பட்ட வண்டல் படிவுகளால் மூடப்பட்டுள்ளது. இப்பகுதியில் பைகாந்தாப்பூர் உருவாக்கம் காலத்தால் பிற்பட்டதாகும். இது காவி மஞ்சள் நிறமுடைய ஒட்டும் மெல்லிய களிமண்ணுடன் கூடிய உட்புறத்தையும், அடர் சாம்பல் முதல் தடித்த சாம்பல் நிறமுள்ள மெல்லிய களிமண்ணால் மூடப்பட்ட வெளிப்புறத்தையும் கொண்ட, மிகச் சிறந்த வெள்ளை மணலை உள்ளடக்கியது. இங்குள்ள சகான் பகுதியின் உருவாக்கமானது வண்டல் படிவுகளால் உருவான பைகுந்தாப்பூர் உருவாக்கத்தின் நிலைகளைக் குறிக்கிறது.[1] சாகான் பகுதியின் மேற்பரப்பில் 10-30 மீ ஆழத்திற்குள் அனுமதிக்கப்பட்ட அளவிடூகளை (0.05 mg / L, இந்திய தரநிலை) விட வரம்பை மீறி அதிகபட்ச அளவுகளில் ஆர்சனிக் உள்ளடங்கி இருப்பதாகக் அளவீடுகள் காட்டியுள்ளன இது இப்பகுதியிலும் இதனைவிடத் தாழ்வான இடங்களிலும் ஆர்சனிக் விஷம் அதிகப்படுவதற்கான சாத்தியம் குறித்து கவலைகளை எழுப்புகிறது.
இப்பகுதியில் மூன்று முக்கியக் காலநிலைகள் ( பருவங்கள்) நிலவுகின்றன. அவை கோடைக்காலம், பருவமழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவையாகும். கோடை காலம் மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் இரண்டாவது வாரம் வரை நீடிக்கிறது. ஏப்ரல் மாதம் வெப்பமான மாதமாகும். இப்பகுதியில் கோடைகால வெப்பநிலை 30.செல்சியஸ்களின் மத்தியில் இருக்கும். பருவமழைக் காலமான ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இப்பகுதியில் கடுமையான மழைப் பொழிவு இருக்கும். 24 மணிநேரத்தில் 125 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழைப் பொழிவு ஏற்படும். இது உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கையின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தும். இங்கு ஆண்டு மழை அளவு 250 செ.மீ. ஆகும். இங்கு குளிர்காலம் செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதங்களாகும். இக்காலங்களில் இப்பகுதிக்கு இமயமலையில் இருந்து குளிர்ந்த காற்று வீசும். இந்த காலகட்டத்தில் வெப்பநிலை 5 °C வரை குறையக்கூடும்.
இப்பகுதியில் தேயிலை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தும், மலேரியா நோயின் பாதிப்பைக் குறைத்ததிலிருந்தும், இங்கு நிலப் பயன்பாட்டு முறை வியத்தகு முறையில் மாற்றம் அடைந்துள்ளது. ஒரு காலத்தில், இப்பகுதி அடர்ந்த காடுகள், ஏரிகள், தொடர்ந்து வழிமாறிக்கொண்டே வரும் ஆறுகளைக் கொண்ட சதுப்பு நிலங்கள் ஆகியவற்றால் இயற்கைச் சூழலோடு இருந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில், மக்கள் பெரும் எண்ணிக்கையில் வருகை புரிவது இங்குள்ள சுற்றுச்சூழலை வெகுவாக மாற்றிவிட்டது. இன்று, இப்பகுதியில் வெறும் 25% காடு, 15% தேயிலைத் தோட்டம், 43% சாகுபடி மற்றும் சாகுபடி செய்யப்படாத நிலம் மற்றும் 17% நீர்நிலைகள், குடியிருப்பு, மலை போன்றவைகளாக மாற்றம் அடைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "West Bengal Geology". Archived from the original on 23 May 2008. பார்க்கப்பட்ட நாள் 28 October 2008.