பைராகி மடம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், ஜார்ஜ் டவுன், சென்னை

பைராகி மடம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் என்னும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் என்பது தமிழ்நாட்டின் சென்னை மாநகரம், ஜார்ஜ் டவுன், முத்தியால்பேட்டை, ஜெனரல் முத்தையா 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலாகும். [1][2]

பைராகி: வைணவ மதப்பிரிவு

தொகு

வடமொழியில் 'பைராகி' என்ற சொல்லுக்கு வைராக்கியம் கொண்டவர் என்று பொருள். இந்து மதத்தில் பைராகி என்போர் துறவு பூண்ட மதவாதிகள் (group of religious mendicants) ஆவர். துறவு வாழ்க்கை (mendicant life) மேற்கொண்ட வைராக்கியர்களே பைராகிகள் ஆவர்.[3]

கி.பி 14 -15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமானந்தர் என்பவரே பைராகி மதபிரிவை நிறுவியவர் ஆவார். புரட்சித் துறவி இராமானுசர் நிறுவிய தென்கலை வைணவப் பிரிவிலிருந்து பைராகி என்னும் பிரிவு தோன்றியது. [3] இவர் பிரயாக் (அலகாபாத்) நகரைச் சேர்ந்த கன்யாகுப்ஜா என்னும் பிராமண குடும்பத்தில் பிறந்தார். ஸ்ரீ சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்களால் வணங்கப்படும் சதுர்புஜ நாராயணர் மற்றும் லட்சுமிக்குப் பதிலாக இராமர் மற்றும் சீதையை அதன் உச்ச தெய்வமாகக் கொண்ட இராமாவத் அல்லது இராமானந்த சம்பிரதாயம் என்ற தனிப் பிரிவை அவர் தொடங்கினார். இராமானந்தர் காசியில் ஒரு ஆசிரியராக உருவெடுத்தார், இன்றுவரை கங்கைக் கரையின் பரிச்சரிகா காட் அவரது பெயருடன் தொடர்புடையதாகும். அங்கிருந்து அவரது சீடர்களான இராமநந்தி பைராகிகள், நாடு முழுவதும் அவரது இராம வழிபாடு குறித்த செய்தியைப் பரப்பினார்.[4]

பைராகி பிரிவினர் தூய வைணவத் துறவு வாழ்க்கை மேற்கொண்டவர்கள். இராமரை தங்கள் கடவுளாக ஏற்று வணங்குபவர்கள். தாடியையும் முடியையும் தலைக்கு மேல் முடிந்து கொண்டு இருப்பவர்கள். திருநாமமும் துளசி மாலையும் அணிந்துகொண்டு பயணத்தின் பொது சாளக்கிராமத்தை வழிபட்டவாறு பயணிக்கும் இவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் உணவுண்டு வாழும் வைராக்கியர்களும் ஆவர். .இவர்களுக்கு பைராகி என்றும் பாவாஜி என்றும் பெயர்களுண்டு. [3]

15 ஆம் நூற்றாண்டளவில் நிம்பர்கா, ராமானந்தி மற்றும் விஷ்ணு ஸ்வாமி ஆகிய வைணவப் பிரிவுகளில், கோவில்கள், மடங்கள் மற்றும் மத குருக்களைப் பாதுகாப்பதற்கான பயிற்சி பெற்ற சாதுக்களின் இராணுவப் படை உருவானது. பைராகி துறவிகளின் இந்தப் படையை ஒருங்கிணைத்த பெருமை சுவாமி பாலானந்தரையே சாரும். சுவாமி பாலானந்தா தனது சீடர்களான பவானந்தா, அனுபவானந்தா, விர்ஜானந்தா, மற்றும் போன்ற ஆச்சார்யர்களின் துணையுடன் இராஜஸ்தானில் பைராகி இராணுவ அமைப்பை நிறுவினார். 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில், மஹந்த் ஜெய்தாராமின் தலைமையில் பைராகி துறவிகளின் இராணுவம் மிகவும் வலுவாக இருந்தது. ஜெய்ப்பூர், ஜோத்பூர், பரத்பூர் மற்றும் குலு மன்னர்களின் படைகளில் பைராகி துறவிகள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தனர்.[5]

தல வரலாறு

தொகு

லால்தாஸ் என்ற துறவி கி.பி.1,800-ஆம் ஆண்டளவில் பாகிஸ்தானின் லாகூரிலிருந்து நடைப்பயணமாகச் சென்னை வந்தார். முத்தியால்பேட்டை பகுதியில் தங்கினார். அங்கிருந்த ஒரு கோவிலில் இராமர் மூலவர். காலைக்கடன்களை முடித்துக்கொண்டு இக்கோவிலுக்குச் சென்று இராமரை மனமுருக வழிபடுவாராம்.[6][7]

வடநாட்டில் இருந்து புனித யாத்திரை மேற்கொண்டு மதராசபட்டணம் வரும் பயணிகள் தங்கி வழிபாடு நடத்துவதற்கு ஒரு மடம் கட்டுவதற்கு தீர்மானித்தார். பயணிகள் தங்கி, உண்டு, உறங்கி வழிபாடு நடத்துவதற்கான வசதிகளை இம்மடத்தில் ஏற்படுத்தினார். மடத்தைக் கவனித்துக்கொண்டு மடத்திலேயே தங்கிவிட்டார். ஒரு நாள் இவரின் கனவில் திருமலை திருப்பதியில் குடிகொண்டுள்ள வேங்கடவன் தோன்றினாராம். கனவில் தோன்றிய வேங்கடவன் லால்தாசை அங்குள்ள கோவிலைச் செப்பனிட்டு வேங்கடவனுக்கும் அலர்மேல்மங்கைக்கும் சன்னிதி கட்டுமாறு பணித்தார்.[6][7]

லால்தாசு அங்கிருந்த பெருவணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தான் கண்ட கனவு குறித்துச் சொல்லி கோவில் சன்னிதி கட்டப் பொருளுதவி கேட்டார். அவர்கள் இவரை ஏளனம் செய்தனர். தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடியதன் மூலம் கிடைத்த சொற்பத் தொகையைக் கொண்டு திருப்பணியினைத் தொடங்கினார். வேங்கடவன் மூலம் தனக்குச் சித்தித்த சித்து வேலைகளைப் பயன்படுத்தி செம்பைப் பொன்னாக்கினார். மக்கள் இவரை சித்தராக ஏற்றுக்கொண்டு பொருளுதவி செய்யத் தொடங்கவே கோயிற்பணிகள் விரைவாக நடைபெற்றன.[6][7]

இதற்கிடையில் வேங்கடவன் இவர் கனவில் மீண்டும் தோன்றி கோவில் அருகிலுள்ள நந்தவனத்தில் பூதேவி, ஸ்ரீதேவியுடனான வேங்கடவன் சிலை புதைந்துள்ள செய்தியைக் கூறி அதனைத் தோண்டி மீட்டெடுத்து கோவிலில் நிறுவுமாறும் பணித்தார். லால்தாசு அந்த நந்தவனத்திலிருந்து மீட்டெடுத்த சிலையே இக்கோவிலின் கருவறையில் நிறுவப்பட்டுள்ளது.[6][7]

கோவில் அமைப்பு

தொகு

கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஐந்து நிலை இராஜகோபுரத்தைக் கடந்து சென்றால் கொடிமரம், பலிபீடம், விளக்குத் தூண், கருடன் சன்னிதி ஆகியவற்றைக் காணலாம். கோவிலின் தெற்கு நுழைவாயிலில் மூன்று நிலை கோபுரம் அமைந்துள்ளது. கோவிலின் வடபுறம் திருக்குளம் அமைந்துள்ளது.[7][6]

இக்கோவிலில் இரண்டு நாற்கால் மண்டபங்களும், 24 கால் மண்டபங்களும் அமைந்துள்ளன. இக்கோவிலின் மகாமண்டபம் தேரின் முன்புறம் போல வடிவமைக்கப்பட்டு இரண்டு யானைகள் இழுப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. விஜயநகர கலைப்பாணியில் அமைக்கப்பட்ட கலப்புத் தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்குகின்றன. விஜயநகர கலைப்பாணியில் நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய கலப்புத் தூண்களில் பல்வேறு தெய்வங்களின் உருவங்களும் குதிரையேறிய வீரன் புலியை ஈட்டி கொண்டு குத்துவதாகச் சித்தரிக்கும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் கூரையில் விஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபம் மற்றும் திருச்சுற்று மதிற்சுவர்களில் விஷ்ணுவின் லீலைகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.[7][6]

மூலவர் கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய அமைப்புகளைக் கொண்டுள்ளது மூலவர் கருவறை அதிட்டானம் முதல் பிரஸ்தரம் வரை கருங்கல்லாலும், இரட்டைத் தள விமானம், சிகரம், கிரீவம் மற்றும் தூபியுடனான மேற்கட்டுமானம் செங்கல் மற்றும் சுதையால் அமைக்கப்பட்டுள்ளன. விமானம் பாதபந்த அதிட்டானம் கொண்டது.

மூலவர் வேங்கடவன் திருமலை - திருப்பதிக் கோவிலின் மூலவரைப் போல சுமார் ஆறரை அடி உயரத்தில் சங்கு, சக்கரம் ஏந்திய இரு கரங்களுடன், மார்பில் உறையும் இலக்குமியுடன் நின்ற கோலத்தில் அருளபாலிக்கிறார். திருமலையில் நடைபெறுவது போலவே வைகானச ஆகம நியதிப்படி பூசைகள் மற்றும் பிரம்மோற்சவம், பவித்ரோற்சவம், ரதோற்சவம் போன்ற உற்சவங்கள் நடைபெறுகின்றன.[7][6]

அலர்மேல்மங்கைத் தாயார் பிரகாரத்தில் உற்சவர் மண்டபம் அருகே தனி சன்னிதி கொண்டுள்ளார். திருச்சானூரில் நடைபெறுவது போன்றே இங்கும் பூசைகள், பஞ்சமி தீர்த்தம் போன்ற உற்சவமும் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன. தயாருக்கான கருடவாகனம் பெண்ணின் உருவமாக அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பு. உற்சவ காலங்களில் அம்மன் இக்கருடவாகனத்தில் வீதியுலா வருகிறார். அதே போல அனுமந்த வாகனமும் பெண் குரங்கைப்போல அமைந்துள்ளது.[7][6]

அகன்று பரந்த திருச்சுற்றில் ஸ்ரீதேவி- பூதேவியுடனான வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவியுடனான வேணுகோபாலன், கோதண்டராமர் குடும்பம், அரங்கநாதர், லட்சுமி நரசிம்மர், வராகமூர்த்தி, பூரி ஜகந்நாதர், ஆண்டாள் ஆகிய தெய்வங்களுக்கும், திருமங்கை ஆழ்வார் சன்னிதி, பன்னிரு ஆழ்வார்கள் சன்னிதி, பெரியநம்பி, திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமலையாண்டான், திருக்கச்சி நம்பி ஆகிய ஆச்காரியார்களுக்கும் தனி சன்னிதிகள் உள்ளன.[7][6]

இக்கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் மேற்பார்வையில் மஹந்த் துவாரகாதாஸ் என்ற அறங்காவலர் வழிகாட்டுதலுடன் செயல்படுகிறது. [7][6]

திறக்கும் நேரம்

தொகு

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

மேற்கோள்கள்

தொகு