பொத்னியா வளைகுடா

பால்ட்டிக் கடலின் வடக்கு அந்தலையில் உள்ள பகுதி

பொத்னியா வளைகுடா (Gulf of Bothnia) என்பது, பால்ட்டிக் கடலின் வடக்கு அந்தலையில் உள்ள பகுதியாகும். இது பின்லாந்தின் மேற்குக் கரைக்கும் சுவீடனின் கிழக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. இவ்வளைகுடாவுக்குத் தெற்கே ஆலந்துக் கடலுக்கும் தீவுக்கூடக் கடலுக்கும் இடையில் ஆலந்துத் தீவுகள் உள்ளன.

பால்ட்டிக் கடலைக் காட்டும் நிலப்படம். பொத்னியாக் குடாவைப் படத்தின் மேலரைப் பகுதியில் காணலாம்.
குளிர் காலத்தில் பென்னோசுக்கண்டியாவின் செய்மதிப் படம். பொத்னியா வளைகுடாவின் வடக்குப் பகுதியான பொத்னியக் குடா (Bothnian Bay) கடற் பனியால் மூடப்பட்டுள்ளது.

பெயர்தொகு

பொத்னியா என்னும் பெயர் பொத்தின்விக்கென் (Bottenviken) என்னும் சுவீடிய மொழிச் சொல்லிருந்து லத்தீன்மயமாக்கத்தின் மூலம் உருவானது. பொத்தின்விக்கென் என்பதில் உள்ள பொத்தின் (botn) பழைய நோர்சு மொழியில் "குடா" என்னும் பொருள் தரும் ஒரு சொல்.[1] அச்சொல்லிலுள்ள இரண்டாவது கூறான விக் (vik) என்பதும் அதே பொருள் கொண்டதே. பொத்னியாக் குடாவைக் குறித்த ஹெல்சிங்யாபொத்தின் (Helsingjabotn) என்னும் பழைய நோர்சு மொழிச் சொல்லில் பொத்தின் என்னும் கூறு காணப்பட்டது. பொத்தின்/பொட்டென் என்பது, ஆங்கில மொழியில் "கீழ்" எனப்பொருள்படும் பொட்டம் (bottom) என்பதுடன் ஒத்துப்போகின்றது. இச்சொல், வட ஐரோப்பாவில் தாழ்நிலங்களை உயர்நிலங்களிலிருந்து பிரித்துக்காட்டுவதற்கான பயன்பாடாக இருந்திருக்கலாம்.

புவியியல்தொகு

இந்த வளைகுடா 725 கிமீ (450 மைல்) நீளமும், 80 - 240 கிமீ (50 - 150 மைல்) அகலமும் சராசரியாக 60 மீ (200 அடி, 33 பாதம்) ஆழமும் கொண்டது. மிகக்கூடிய ஆழம் 295 மீ (965 அடி, 161 பாதம்). இதன் மேற்பரப்பளவு 117,000 கிமீ² (45,200 ச.மைல்). வடக்கு அந்தலைப் புள்ளி பொத்னியக் குடாவில் உள்ள தோரே (Töre) என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் ஆள்கூறுகள் 65° 54'07" வ 22° 39'00 கி.[2]

இறுதிப் பனி யுகத்தில் கண்டப் பனியால் அழுத்தப்பட்டு 800 - 1000 மீ (2,600 - 3,300 அடி) கீழிறங்கிய பின்னர்[3] தற்போது நிலம் உயர்ந்து வருவதால், பொத்னியாக் குடாவின் ஆழமும், பரப்பளவும் தொடர்ச்சியாகக் குறைந்து வருகின்றது. இந்த உயர்ச்சி நூறு ஆண்டுகளுக்கு 80 சமீ ஆக உள்ளது.[4] சமநிலை ஏற்படுவதற்கு முன்னர் நிலம் மேலும் 100 - 125 மீ (300 - 400 அடி) உயரும் எனக் கணக்கிட்டுள்ளனர். சமநிலையை அண்மிக்கும்போது இந்த உயர்ச்சி வீதம் குறைந்து வருகின்றது.[3]

இரண்டு பக்கங்களிலும் இருந்து பல ஆறுகள் இக்குடாவுக்குள் விழுகின்றன. இதன் விளைவாக தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நீரின் உப்புத்தன்மை படிப்படியாகக் குறைகின்றது. தெற்கில் பால்ட்டிக் கடலின் வழமையான உப்புத் தன்மையுடன் கூடிய நீர் காணப்படுகின்றது. ஆனால் வடக்கில் உள்ள பொத்னியாக் குடாவில் உப்புத்தன்மை மிகவும் குறைவு.[5] இங்கு தெற்கில் குவார்க்கின்னுக்கு அருகில் 0.4% ஆகவுள்ள உப்புத்தன்மை குடாவின் வடக்கு அந்தலையில் உப்புத்தன்மை 0.2% ஆகும்.[6] இதனால், பல ந்ன்னீர் மீன்வகைகள் இப்பகுதியில் வளர்கின்றன.[4]

ஏறத்தாழ நன்னீராக இருப்பதால், ஒவ்வோராண்டும் ஐந்து மாதங்கள் குடா உறைந்து காணப்படுகின்றது. பால்டிக் கடலின் பனிக்கட்டியாதல் வட பொத்னியா வளைகுடாவில் தொடங்கி அங்கேயே முடிவடைகின்றது. பனி உடைப்பு உதவிகளுக்காக முழுக் குடாவிலும் சனவரிப் பிற்பகுதியில் தொடங்கி ஏப்ரல் பிற்பகுதிவரை போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. வடக்குத் துறைமுகப் பகுதிகளில் இக்கட்டுப்பாடுகளை டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து மே நடுப்பகுதி வரை செயற்படுத்துவது வழக்கம்.[7]

பொருளாதாரம்தொகு

பொத்னியா வளைகுடாவைச் சூழவுள்ள நிலப்பகுதி அடர்த்தியான காடுகளைக் கொண்டது. இங்கு மரங்களைத் தறித்து அரிவதற்காக வளைகுடாக் கரைக்கு அனுப்புகின்றனர். கரையோர நகரங்களுக்கு எண்ணெய் கொண்டு செல்வதற்கும், தாதுப் பொருட்களை, ராகே போன்ற இடங்களில் உள்ள உருக்கு (எஃகு) ஆலைகளுக்கு அனுப்புவதற்கும் பொத்னியா வளைகுடா முக்கியமானது. பன்னாட்டுப் போக்குவரத்து தொடர்பில் எடுத்துச் செல்லப்படும் சுமையின் அளவின் அடிப்படையில் வளைகுடாவின் பின்லாந்துப் பக்கத்தில் உள்ள மிகப்பெரிய துறைமுகங்கள் ரவுமா, கொக்கோலா, டோர்னியோ என்பவை.[8] சுவீடன் பக்கத்தில் லுவேலா, இசுக்கெலெஃப்டியா, உமியா, சுண்ட்வால், யாவ்லே, ஆர்க்சம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்தொகு

  1. Svensk etymologisk ordbok / (சுவீடியம்)
  2. "Töre båthamn" (sv). bottenviken.se.
  3. 3.0 3.1 Geologica: Earth’s Dynamic Forces by Dr Robert R. Coenraads and John I. Koivula
  4. 4.0 4.1 "About the Bay of Bothnia". Bottenvikens Skargård. மூல முகவரியிலிருந்து 5 October 2013 அன்று பரணிடப்பட்டது.
  5. "Gulf of Bothnia". மூல முகவரியிலிருந்து 10 March 2007 அன்று பரணிடப்பட்டது.
  6. "Perämeren erityispiirteet". மூல முகவரியிலிருந்து 2012-01-21 அன்று பரணிடப்பட்டது.
  7. Typical restrictions to navigation 1994/95-2003/04 (pdf) பரணிடப்பட்டது 1 திசம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம்
  8. "Table 4. Statistics on international shipping 2014".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொத்னியா_வளைகுடா&oldid=2866532" இருந்து மீள்விக்கப்பட்டது