போக்குவரத்துப் பொறியியல்

போக்குவரத்துப் பொறியியல் (Transportation engineering) அறிவியல், தொழில்நுட்ப நெறிமுறைகளை எந்தவொரு போக்குவரத்து முறைமைக்குமான திட்டமிடல், வடிவமைப்பு, இயக்கம், மேலாண்மை ஆகியவற்றுக்குப் பயன்படுத்தும் பொறியியல் புலமாகும். இது மக்களையும் பொருள்களையும் சுற்றுச்சூழல் நலம் ஊறுபடாதவாறு காப்பாகவும் திறம்படவும் வேகமாகவும் பொருளியலாகச் சிக்கனமாகவும் உயரேந்துடனும் போக்குவரத்து செய்யவேண்டும் [சான்று தேவை]. இது குடிசார் பொறியியல் (கட்டிடப் பொறியியலின்) உட்புலம் ஆகும்.[1] குடிசார் பொறியியலில், இதன் முதன்மையை இதிலடங்கிய ஆறுவகை உட்புலங்களில் இருந்து உணரலாம். இதில் வான், விண்வெளிப் போக்குவரத்து, வானூர்திப் போக்குவரத்து, நெடுஞ்சாலைப் போக்குவரத்து, குழாய்வழிப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து, துறைமுகப் போக்குவரத்து கடலோரப் போக்குவரத்து, நாவாய்ப் போக்குவரத்து, நகர்ப்புறப் போக்குவரத்து ஆகியன அடங்கும்.[2]

பிரிஸ்டல், இங்கிலாந்தில் இந்தச் சந்திப் போக்குவரத்து வடிவமைப்பு ஊர்திகள் கட்டற்று இயங்க வழிவகுத்துள்ளது

போக்குவரத்துப் பொறியியலின் திட்டமிடல் கூறுபடுகள் நகரத் திட்டமிடல் அடிப்படைகளோடு உறவுடையதாகும். இதில் தொழில்நுட்ப முன்கணிப்பு முடிவுகளும் அரசியல் காரணிகளும் அடங்கும். பயணர்களின் பயன முன்கணிப்பில் வழக்கமாக நகர்ப்புறப் போக்குவரத்து படிமம் பயன்படுகிறது. இப்படிமத்தில், பயண நேர்வின் மதிப்பீடு (எந்நோக்கத்துக்காக, எத்தனை பயணங்கள்), பயணப் பரவல் (முனையத் தேர்வு, அதாவது பயணர் போகுமிடத் தேர்வு), முறைமைத் தேர்வு (எந்த போக்குவரத்து முறைமையைப் பயன்படுத்துவது எனும் முடிவு), வழித்தட தேர்வு (எந்தத் தெருக்களை அல்லது வழிகளைப் பயன்படுத்துவது எனும் முடிவு) ஆகியவை தேவையாகின்றன. மேலும் நுட்பமான முன்கணிப்பில் பயணர் முடிவுகள் (தானி உரிமை உட்பட), பயணப்பிணைப்பு (ஒரு முறையிலேயே தனிப் பயணங்களை இணைக்கும் முடிவுகள்) வீடு அல்லது வணிக இருப்பிடத் தேர்வு( இது நிலப் பயன் முன்கணிப்பு எனப்படுகிறது) ஆகியனவும் உள்ளடங்கும். பயணர்களின் பயணங்களே, போக்குவரத்து அமைப்பின் உச்ச நெரிசலை முடிவு செய்வதால், போக்குவரத்துப் பொறியியலின் குவிமையமாகின்றன.

போக்குவரத்துப் பொறியியல் சார்ந்த வடிவமைப்புக் கூறுபாடுகள் போக்குவரத்து வசதிகளின் அளவுகளைத் தீர்மானித்தல், தொடர்புடைய கட்டுமானக் கூறுபாடுகளின் அளவுகளைத் தீர்மானித்தல், சாலைகள் முதலியவற்றின் வடிவவியல் கூறுபாடுகளைத் தீர்மானித்தல் போன்றவற்றை உள்ளடக்கியவை ஆகும்.

நெடுஞ்சாலைப் பொறியியல்

தொகு

நெடுஞ்சாலைப் பொறியாளர்கள் பின்வரும் பணிகளை மேற்கொள்கின்றனர்:

  • நெடுஞ்சாலைகள், சாலைகள், மற்ற ஊர்திப் பயண ஏந்துகள், பயணர் நடைபாதை, மிதிவண்டிப் பயண வசதி ஆகியவற்றின் திட்டமிடல், வடிவமைப்பு, கட்டுமானம், இயக்கம் ஆகிய பணிகளைக் கையாளல்
  • பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை மதிப்பிட்டு அவற்றை நிறைவேற்றும் திட்டங்களுக்கான நிதிவளத்தைப் பெறுதல்.
  • பாதுகாப்புக்காகவும் போக்குவரத்து அளவை மதிப்பிடவும் உயர்நெரிசல் இடங்களையும் மோதல்கள் நேரும் இடங்களையும் பகுத்தாய்தல்.
  • போக்குவரத்து முறையை மேம்படுத்த கட்டிடப் பொறியிய்ல் நெறிமுறைகளைப் பயன்படுத்தல்.
  • ஊர்திகள், ஓட்டுநர்கள், சாலைவழிகள் ஆகிய மூன்று வடிவமைப்புக் கட்டுபாடுகளையும் உகந்தநிலையில் பயன்படுத்தல்.

தொடர்வண்டித்தடப் பொறியியல்

தொகு

இருப்புப் பாதைப் பொறியாளர்கள், இர்ட்டைத் தண்டவாளங்கள் அல்லது ஒற்றைத் தண்டவாளம் அமைந்த தொடர்வண்டித் தடத்தையும் பெருந்திரள் போக்குவரத்து அமைப்பையும் வடிவமைத்து, கட்டி, இயக்குகின்றனர். முதன்மைப் பணிகளாக கிடைநிலை, குத்துநிலைத் திசை ஒருங்கிணைப்பு வடிவமைப்பு, தொடர்வண்டி நிலைய இருப்பிடத் தேர்வும் வடிவமைப்பும் இவற்றைக் கட்டியமைப்பதற்கான செலவு மதிப்பீடு ஆகியன அடங்கும். இவர்கள் மேலும் நுட்பமான தொடர்வண்டி இயக்க்க் கட்டுபாட்டையும் கையாள்கின்றனர்.

இவர்கள் எதிர்காலத் தேவைகளைச் சந்திக்க, மறுமுதலீடு செய்து, தடவலிமையைக் கூட்டி,பாதுகாப்பான தூய்மையான போக்குவரத்தை உருவாக்கலாம். ஐக்கிய அமெரிக்காவில் இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களை அடிக்கடி கூட்டி நாட்டின் போக்குவரத்துத் தேவைகளை அறிந்து உரிய தொடர்நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.[3]

துறைமுகப் பொறியியல்

தொகு

துறைமுகப் பொறியாளர்கள் துறைமுகங்கள் அவைசார்ந்த கால்வாய்கள், பிற கடல்சார் ஏந்துகள் ஆகியவற்றை வடிவமைத்து கட்டுகின்றனர். இதைக் கடல்சார் பொறியியலுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது.

விமானதளப் பொறியியல்

தொகு

விமானதளப் பொறியாளர்கள் விமானதளத்தை வடிவமைத்து கட்டுகின்றனர். இவர்கள் விமானதள ஏந்துகளின் வடிவமைப்பில் வானூர்தித் தேவைகளையும் கணத்தாக்கு நிலைமைகளையும் கருத வேண்டும். விமான ஓடுதளச் சாலையின் வழித்தடத் திசையை வடிவமைக்க முதன்மையான காற்றோட்டத் திசையையும் முன்கணிக்கவேண்டும். அவர்கள் ஓடுதள விளிம்பளவையும் பாதுகாப்புப் பகுதிகளையும் தீர்மானிக்கவேண்டும். இவர்கள் பல்வேறு சிறகு நுனிகளின் அளவுகளையும் அளந்து அனைத்து வாயில்களின் சிறகு நுனி இடைவெளியை வடிவமைக்க வேண்டும். ஒட்டுமொத்த விமானதள காப்பன இடங்களைக் குறிப்பிட வேண்டும்.

மேலும் காண்க

தொகு

குடிசார் பொறியியல்

கட்டமைப்புப் பொறியியல்

கட்டுமானப் பொறியியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "ITE – The Transportation Profession". ITE. Archived from the original on 2009-03-03. பார்க்கப்பட்ட நாள் 2010-06-27.
  2. "ASCE – About Civil Engineering". ASCE. Archived from the original on 2010-07-02. பார்க்கப்பட்ட நாள் 2010-06-28.
  3. "Association of American Railroads". AAR. பார்க்கப்பட்ட நாள் 2011-06-30.

வெளி இணைப்புகள்

தொகு