போடம் சாகோர் தேசிய பூங்கா

போடம் சாகோர் தேசிய பூங்கா (Botum Sakor National Park) என்பது கம்போடியாவில் உள்ள மிகப்பெரிய தேசியப் பூங்காவாகும். தாய்லாந்து வளைகுடாவின் கடற்கரையில் இப்பூங்கா அமைந்துள்ளது. ஏலக்காய் மலைகளில் இருந்து தென் மேற்கு திசையில் ஒரு நீட்சியாக போடம் சாகோர் என்ற இம்மூவலந்தீவு காணப்படுகிறது. 171,250 எக்டரை தன்னகத்தே கொண்டுள்ள இத்தேசியப் பூங்கா, கம்போடியாவின் கிரி சாகோர், போடம் சாகோர் மற்றும் கோ கோங் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய கோ கோங் மாகாணத்தில் பரந்து விரிந்திருக்கிறது. கம்போடிய சுற்றுச்சூழல் அமைச்சகம் இத்தேசியப் பூங்காவை நிர்வகிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.[1]

போடம் சாகோர் தேசிய பூங்கா
Botum Sakor National Park
Map showing the location of போடம் சாகோர் தேசிய பூங்கா Botum Sakor National Park
Map showing the location of போடம் சாகோர் தேசிய பூங்கா Botum Sakor National Park
அமைவிடம்கோ கோங் மாகாணம், கம்போடியா
அருகாமை நகரம்சிகானௌக்வில்லே
ஆள்கூறுகள்11°06′56″N 103°14′59″E / 11.11553035°N 103.24969205°E / 11.11553035; 103.24969205
பரப்பளவு171,250 எக்டர்
நிறுவப்பட்டது1993
நிருவாக அமைப்புகம்போடிய சுற்றுச்சூழல் அமைச்சகம், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் பயன்படுத்துதல் துறை.

நிலத்தோற்றம்

தொகு

போடம் சாகோர் தேசிய பூங்காவின் பெரும்பான்மையான இடம் பசுமைமாறா மரங்கள் மற்றும் புல்வெளிகளால் மூடப்பட்ட சற்றே சாய்ந்துள்ள தாழ்நிலப்பகுதியால் ஆகியுள்ளது. மாங்குரோவ் மற்றும் சதுப்பு நிலக்காடுகள் இடம்பெற்றுள்ள கடலோர வெள்ளச் சமவெளியில் இப்பகுதி வளர்ந்துள்ளது. இப்பகுதி வெப்பமண்டல பருவக்காற்று காலநிலையில் அமைந்துள்ளது. மேலும், இப்பகுதியில் தோராயமாக 1.5 மீட்டர் உயரம் வீச்செல்லை கொண்ட அலைகள் ஒருநாளைக்கு இரண்டாவது வந்து போவதுண்டு. இப்பூங்காவின் மக்கள் தொகை அளவு தொடர்பான தகவல்கள் ஏதும் அறியப்படவில்லை[2].

வனவிலங்குகள்

தொகு

போடம் சாகோர் தேசிய பூங்காவில் உலகின் பிரத்தியேகமானதும் தனித்துவம் பெற்றதுமான வனவிலங்குகள் அதிக அளவில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுவரையில் இப்பகுதியின் மிகக்குறைவான இருப்பிடம் மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல்லுயிரியம் தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன[1]. மிகவும் கடினமான தரைப்பகுதியை இப்பகுதி கொண்டிருப்பதால் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் ஏதும் இப்பூங்காவின் தனி உட்புறப்பகுதிகளில் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும், இதுவரையிலும் கிடைத்துள்ள அறிவு மற்றும் வளர்ந்து வரும் புரிதல்களின் அடிப்படையில் நோக்கினால், இந்த பகுதியில் உலக அளவில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த, இவ்விடத்திற்கே உரிய பல அருகிவரும் இனங்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதைத் தெளிவாகக் கூறமுடியும். இவற்றில் சிலவகை இனங்கள் மிக அருகிய இனம் என்று சர்வதேச செம்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இனமாகும். எனவே, புவியின் பல்லுயிரியத்தைக் காக்கும் நடவடிக்கையின் ஒரு படியாகவே 1993 இல் இப்பூங்கா உருவாக்கப்பட்டது எனக்கருதலாம்.

பாலூட்டிகள்

தொகு

2009 ஆம் ஆண்டு நிலவரப்படி 44 வகைப் பாலூட்டி இனங்கள் இத்தேசிய பூங்கா எல்லைக்குள் கண்டறியப்பட்டுள்ளன, இவற்றில் எட்டு வகை இனங்கள் சர்வதேச [செம்பட்டியல்|செம்பட்டியலில்]] சிவப்புப் பட்டியல் அருகிவரும் இனம் எனப் பட்டியலிடப்பட்டவை ஆகும். இவை உயர் பாதுகாப்பு முன்னுரிமையில் பாதுகாக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன. சிலவகை இனங்கள் மிக அருகிய இனங்களாகவும் உள்ளன. சுந்தா எறுபுண்ணி, மந்த வங்காள் தேவாங்கு, இந்தோ சீன குரங்கினம்,வராகமான், செந்நாய், மீன்கொல்லிப்பூனை, ஆசிய யானை மற்றும் கிப்பன் குரங்கினம் முதலியன அருகி வரும் இனங்களில் அடங்கும்[3][4]. உலகத்தில் உள்ள கிப்பன் குரங்கினங்களில் 10 சதவீதம் குரங்குகள் இப்பூங்காவில் இருக்கலாம் என நம்பப்படுகிறது[5][6]. தவிர இந்தோசீன புலிகளுக்கும் இப்பூங்காவே தாயகமாக இருக்கலாம் என்று சமீபத்திய புகைப்படக் கருவி பொறி ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

அச்சுறுத்தலில் இருக்கும் பல இனங்கள் போடம் சாகோர் தேசிய பூங்காவை தாயகமாகக் கொண்டுள்ளன. உண்மையில் நான்கில் ஒருபங்கு பாலூட்டிகள் உலகளாவிய கவனிப்பில் இருப்பதால் அவற்றை அருகிப் போகாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் கூடுதலாக இருக்கிறது. ஏராளமான பற்களைக் கொண்ட கீரிமுகத் தரைக்கரடி, முடிமூக்கு நீர்நாய், வழவழப்புத் தோல் நீர்நாய், கடமான், புள்ளிப் புனுகு போன்றவை இதற்கு சில உதாரணங்களாகும்[1]. சூரியக் கரடி மற்றும் சந்திரக் கரடி முதலிய கரடி இனங்களும் இப்பட்டியலில் இடம்பெற வாய்ப்புண்டு[7]

நீர்நில வாழ்விகள் மற்றும் ஊர்வன

தொகு

போடம் சாகோர் தேசிய பூங்காவில் நீர்நில வாழ்விகள் சிறிய எண்ணிக்கையிலேயே காணப்படுவது ஆச்சரியமளிக்கின்றது. ஏலக்காய் மலைகளில் இத்தகைய ஈருடக வாழ்விகள் அதிகமாக வசிப்பதால் இப்பூங்காவிலும் அவை அதிக எண்ணிக்கையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்பூங்காவில் இருக்கும் நீர்நில வாழ்விகள் பல அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. உதாரணமாக மோர்டென்சென்சு தவளை மற்றும் முதுகுத்தண்டு சுரப்பித் தவளை இரண்டும் ஏலக்காய் மலைத்தொடரில் உள்ள தாய்லாந்துப் பகுதியிலும் தென்மேற்கு கம்போடியாவிலும் காணப்படுகின்றன. ஏலக்காய் மலை தாய்லாந்துப் பகுதியில் அச்சுறுத்தலில் இருக்கும் இரண்டு நீர் ஆமைகளும் ஒரு நில ஆமையும் வசிக்கின்றன.

போடம் சாகோர் தேசிய பூங்காவில் காணப்படும் பெரும்பாலான ஊர்வன இனங்கள் பாம்புகளாகும். மக்களறிந்த ராச நாகம், மலாய் குழி விரியன் போன்ற பாம்புகளும் அடங்கும். பாம்புகள் அடிக்கடி இங்கு காணப்பட்டாலும் உள்ளூர் மக்கள் கண்களில் பட நேர்ந்தால் அவை வெட்டிக் கொல்லப்படுகின்றன. பூங்காவில் உள்ள ஒடைகளில் சியாமிய முதலை இனங்கள் சிறிய அளவில் காணப்படுகின்றன. உண்மையில் 2007 ஆம் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட இனங்கள் கம்போடியாவில் அதிகமாகக் காணப்படுகின்றன. உதாரணமாக உப்புநீர் முதலை.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 REPORT 4; Frontier Cambodia, 2010
  2. Daltry and Traeholt
  3. REPORT 4, Frontier Cambodia 2010, p.4
  4. Botum Sakor National Park: A threatened haven of biodiversity The Earth Times, 12. August 2011 (retrieved February 2014)
  5. Note: Some scientists and sources claims that the population size is overestimated, since it was based on studies in the northern parts only, where the gibbons tend to crowd. (Source: REPORT 4, Frontier Cambodia 2010, p.4)
  6. Traeholt, C., Bonthoeun, R., Rawson, B., Samuth, M., Virak, C., and Sok Vuthin 2005. Status review of pileated gibbon, Hylobates pileatus, and yellow-cheeked crested gibbon, Nomascus gabriellae, in Cambodia, FFI Cambodia Programme Office, Phnom Penh
  7. Note: Only known from interviews and unidentified bear marks at present though. (Source: REPORT 4, Frontier Cambodia 2010, p.6)