போர்த்தேங்காய்

போர்த்தேங்காய் அடிக்கும் போட்டி தமிழ் ஆண்டுப் பிறப்பு நாளிலும் வேறு சிறப்பு நாட்களிலும் நடக்கும். கடைகளில் இதற்கெனப் புறம்பாகச் சேர்த்து வைத்திருக்கும் உரித்த, வைரமான, தேங்காய்களை வாங்கி வைத்திருந்து, ஒரு கோயில் வாசலில் அல்லது வெளியான இடத்தில் மக்கள் கூடி, அங்கு தேங்காய் அடி நடைபெறும். இலங்கையில் தமிழர் பகுதிகளில் போர்த்தேங்காய் அடிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.

போட்டி விதிகள் தொகு

போட்டியாளர் ஒவ்வொருவரும் நான்கு அல்லது ஐந்து போர்த் தேங்காய்களை வைத்திருப்பார். ஒருவர் ஒன்றை நிலத்தில் உருட்டி விடுவார். மற்றொருவர் அதனுடைய லேசாக உடையக்கூடிய பகுதி எவ்விடத்தில் இருக்கிறதென்று சுற்றிவந்து அவதானித்துத் தனது கைத்தேங்காயை அதன்மேல் ஓங்கி அடிப்பார். நிலத்துத் தேங்காய் உடைந்து விட்டால் அவருக்கு வெற்றி; கைத்தேங்காய் உடைந்தால் அடித்தவருக்குத் தோல்வி. தோற்றவர் இன்னுமொரு தேங்காயைப் பாவிப்பார். இப்படியாகத் தேங்காய்கள் உடைந்துபோக கடைசியில் எல்லாருடைய அடிகளுக்கும் தப்பி உடையாமல் நின்று பிடிக்கும் தேங்காயின் சொந்தக்காரர் தான் வெற்றியாளர். அவருக்கு மாலை போட்டுக் கௌரவிப்பார்கள்[1].

இலங்கையில் தொகு

முற்காலத்தில் இருந்து தற்காலம் வரை நடந்து ஈழப்போர்க் காலத்தில் மறைந்து போன ஒரு விளையாட்டு போர்த்தேங்காய்ப் போட்டி. குறிப்பாக வட மாகாணத்தில் வல்வெட்டித்துறையில் பங்குனி மாதம் முழுக்க நடந்து சித்திரை ஆண்டுப்பிறப்பன்று கடைசியாட்டமாக நிறைவேறும். வல்லைச் சந்தையில் இந்த ஆட்டம் நடைபெறுவது வழக்கம்[2].

மேற்கோள்கள் தொகு

  1. சிசு. நாகேந்திரன், அந்தக்காலத்து யாழ்ப்பாணம், 2004, வெளியீடு: கலப்பை, சிட்னி.
  2. வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள், வல்வை ந. நகுலசிகாமணி, பக். 65

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்த்தேங்காய்&oldid=3252777" இலிருந்து மீள்விக்கப்பட்டது