ப. சுந்தரேசனார்

ப. சுந்தரேசனார் (குடந்தை ப. சுந்தரேசனார்', 28 மே 1914 – 9 சூன் 1981) ஒரு பண்ணாராய்ச்சி வித்தகர். தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த அரிய இசை நுட்பங்களை, குறிப்பாக சிலப்பதிகாரத்தின் இசைக்கூறுகளை[1], தமிழர்களின் செம்மாந்த இசைப்புலமையை எளிய தமிழில் எடுத்துரைத்தவர். தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களிலும், பொது அரங்குகளிலும் மக்கள் மன்றத்திலும் பாடிக்காட்டி விளக்கியவர்.

ப. சுந்தரேசனார்
பிறப்புப. சுந்தரேசனார்
(1914-05-28)28 மே 1914
சீர்காழி, தமிழ்நாடு
இறப்புசூன் 9, 1981(1981-06-09) (அகவை 67)
தேசியம்தமிழர்
அறியப்படுவதுபண்ணாராய்ச்சி வித்தகர்
பெற்றோர்பஞ்சநாதம் பிள்ளை, குப்பம்மாள்
வாழ்க்கைத்
துணை
சொர்ணத்தம்மாள்

இளமை வாழ்க்கை

தொகு

இவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குடந்தையில் வாழ்ந்த பஞ்சநாதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகன். இவரது தாயார் பிறந்த ஊர் சீர்காழி. இவ்வூரில்தான் இவரும் பிறந்தார். இவர் வறுமை காரணமாக, மேற்கொண்டு கல்வி பெற இயலாமல் நான்காம் வகுப்பு வரையே கல்வி பயின்றார். இவரது பெற்றோர் இவரை இளம் வயதிலேயே நகைக் கடை ஒன்றில் வேலைக்கு அமர்த்தினர். பாடசாலைப் படிப்பு வாய்க்காமல் போனாலும், பல நூல்களைத் தானே கற்று அறிவு பெற்றார். இசை மீது இருந்த ஈடுபாட்டால் இசைத்தட்டுகளைக் கேட்டு இசையறிவையும் பெற்றுக் கொண்டார். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம், பேராசிரியர் சாம்பமூர்த்தியின் இசைநூல்கள் போன்றவற்றைத் தொடர்ந்து கற்று, தனது இசையறிவையும் செழுமை செய்து கொண்டார்.

இவர் திருவனந்தபுரம் இலக்குமணபிள்ளையிடம் தனக்கு இசை மீது இருந்த ஈடுபாட்டைச் சொல்லி கற்பிக்க வேண்டினார். இவரிக்கு இசையில் இருந்த ஈடுபாட்டைப் பாராட்டிய இலக்குமணபிள்ளை, அங்கு தங்கிப்படிக்க வாய்ப்பின்மையைச் சொல்லி, குடந்தைக்கு அனுப்பி வைத்தார். இவர் முதன்முதல் (பிடில்) கந்தசாமி தேசிகர் என்பவரிடம் இசைபயின்றார். பின்பு வேப்பத்தூர் பாலசுப்பிரமணியத்திடமும், அதன்பின்னர் 1935 முதல் ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக, குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரனிடமும் செவ்விசை பயின்றார்.

இல்லற வாழ்க்கை

தொகு

இவர் 1944இல் சொர்ணத்தம்மாள் என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 1947இல் ஒரு குழந்தை பிறந்து, இறந்தது. அதன்பிறகு குழந்தைப்பேறு இல்லை.

இசையறிவு

தொகு

இவர் வாழ்ந்த பேட்டை நாணயக்காரத் தெருவில் வாழ்ந்தவர்கள் பலரும் சைவசமயச் சார்பும், இசையறிவும் பெற்றவர்களாக இருந்தனர். அதனால் இவருக்கு இயல்பாகவே இசைச்சூழல் வாய்த்தது. இவரது வீட்டருகே தேவாரப் பாடசாலையும், இசைவச்சார்புடைய மடத்துத் துறவியர்களின் தொடர்பும் அமைந்ததால் சைவத்திருமுறைகள், சாத்திர நூல்களில் இவருக்குப் பயிற்சி ஏற்பட்டது. அதனால் தமிழ், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளையும் அறிந்து கொண்டார். இவர் சிலப்பதிகாரம், திருமுறைகள், சிற்றிலக்கியங்கள் போன்றவற்றில் சிறந்த இசைப்பயிற்சி பெற்றவர். இந்நூல்களின் பாடல்களை இவர் வழியாகக் கேட்கவேண்டும் என்று அறிஞர்கள் புகழும் வண்ணம் பேராற்றல் பெற்றவர். இவர் ஒவ்வொரு ஊராகச் சென்று, பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களைப் பாடி விரிவுரை செய்தவர். மூவர் தேவாரத்தை முறையுறப் பாடி அதில் அமைந்து கிடக்கும் பண்ணழகையும், பண்ணியல்பையும் எடுத்துக்காட்டுவதில் வல்லவர். குமரகுருபரரின் தொடுக்கும் கடவுள் பழம்பாடலை இவர் குரலில் கேட்கத் தமிழையின் ஆற்றல் விளங்கும்.

அருள்திரு. விபுலானந்த அடிகள், தாம் எழுதிய யாழ்நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழக அரங்கில் அரங்கேற்றம் செய்தபோது சுந்தரேசனார் பண்ணிசைத்து உறுதுணை புரிந்தார்[2]

சிறப்புப்பட்டம்

தொகு

இவரது பண்ணாராய்ச்சித் திறன் அறிந்தோர் இவருக்குப் பண்ணாராய்ச்சி வித்தகர் என்னும் சிறப்புப்பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளனர்.

சொற்பொழிவுகள்

தொகு

சுந்தரேசனாரின் இசையில் ஈடுபாடுகொண்ட பலரும் பல ஊர்களில் இவரை அழைத்துத் தொடர் சொற்பொழிவாற்ற வேண்டினர். அவ்வகையில் ஆடுதுறையில் 1946 ஆண்டில் அப்பர் அருள்நெறிக்கழகம் ஏற்படுத்தப்பட்டுத் தொடர் இசைப்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. ஆடுதுறை வைத்தியலிங்கம் இப்பணியில் முன்னின்றார். நாகப்பட்டினத்தில் அந்நாள் வாழ்ந்த கவிஞர் கோ கோவை. இளஞ்சேரன் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத் தமிழ்ச்சங்கத்தில் ப .சுந்தரேசனார் சிலப்பதிகாரத்தை மாதந்தோறும் சொற்பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தினார். குறிப்பாக அனைவராலும் புறக்கணிக்கப்படும் சிலம்பின் அரங்கேற்று காதை அனைவராலும் விரும்பும்படி நடத்தப்பட்டது.

நூல்கள்

தொகு

இவர் எழுதிய நூல்கள்[3]:

  1. இசைத்தமிழ்ப் பயிற்சி நூல் (1971)
  2. முதல் ஐந்திசைப் பண்கள் (1956)
  3. முதல் ஐந்திசை நிரல்
  4. முதல் ஆறிசை நிரல்
  5. முதல் ஏழிசை நிரல்

எழுதிய தொடர்கட்டுரைகள்

தொகு
  • நித்திலம்
  • காவியங்களில் இசை நாடகம்
  • இசைத் தமிழ் நுணுக்கம்

பதிப்பித்த நூல்கள்

தொகு

நூற்றாண்டு விழா

தொகு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா 12.08.2014 நாளில் சிறப்பாக நடைபெற்றது[4]. வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் 27வது தமிழ் விழா ராபர்ட் கால்டுவெல் நூற்றாண்டு விழாவாகவும், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவாகவும், 'தமிழர் அடையாளம் காப்போம்; ஒன்றிணைந்து உயர்வோம்' என்ற மைய நோக்குடனும் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது[5].

மேற்கோள்கள்

தொகு
  1. பொதிகைச் சித்தர் (நவம்பர் 22, 2011). "சிலையெடுப்பின் அரசியலும் உளவியலும் சிலை வடிப்பின் இறையியலும் மெய்யியலும்". கீற்று. பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2015.
  2. பேராசிரியர் ந.வெற்றியழகன் (சனவரி 2013). "களவாடப்பட்ட தமிழிசையே கர்நாடக சங்கீதம்!". உண்மை இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305023513/http://www.unmaionline.com/new/64-january-unmaionline/unmai2013/january/1276-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html. பார்த்த நாள்: 4 சனவரி 2015. 
  3. முனைவர் மு. இளங்கோவன் (அக்டோபர் 20, 2013). "பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா". ஒன்இந்தியா.காம். http://tamil.oneindia.com/art-culture/essays/kudanthai-p-sundaresanar-centenary-be-celebrated-185667.html. பார்த்த நாள்: 4 சனவரி 2015. 
  4. ""இசைக் கலைஞர்களுக்கு தொடர் பயிற்சி அவசியம்"". தினமணி. ஆகஸ்டு 13, 2014. http://www.dinamani.com/edition_trichy/tanjore/2014/08/13/இசைக்-கலைஞர்களுக்கு-தொடர்-ப/article2377388.ece?service=print. பார்த்த நாள்: 4 சனவரி 2015. 
  5. "வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் தமிழ் விழா". தினகரன். 14-07-2014. http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=498&Cat=27. பார்த்த நாள்: 4 சனவரி 2015. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._சுந்தரேசனார்&oldid=4140566" இலிருந்து மீள்விக்கப்பட்டது