மகதைப் பெருமாள்

மகதைப் பெருமாள் என்பவன் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தலைவர்களில் ஒருவன். ‘வாணகோவரையன் பொன்பரப்பினான்’ என்னும் அடைமொழியுடனும் இவனது பெயரைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மகதை என்பது தமிழ்நாட்டிலுள்ள மகதம். இதனை நடுநாடு என்றும் கூறுவர். மகதை, மகதநாடு என்பதன் மரூஉ. இது வடபுலத்திலுள்ள மகத தேசம் அல்ல. தமிழ்நாட்டிலேயே மேற்கே சேர்வராயன் மலை, தெற்கில் கொல்லி மலை, வடக்கில் சவ்வாது மலை எனும் மலைகளிடைப்பட்டு செங்கம் கணவாய் வழியாக திருவண்ணாமலை மற்றும் அதன் கிழக்கில் அமைந்துள்ள பெண்ணையாறு பாயும் நிலப்பரப்பினை சார்ந்துள்ள நாட்டினைக்குறிக்கும். மலைபடுகடாமில் பாட்டுடைத் தலைவனாக பாடப்பட்ட நன்னன் சேய் நன்னன் தன் நாட்டினை சூழ்ந்துள்ள பகுதியுமாகும். வாணர்குலத் தவைர்கள் இப்பகுதியை சிலகாலம் ஆண்டுள்ளனர். இவர் நீண்ட தனி அரசமரபுடையோர் இல்லை எனினும் இடையிடையே பற்பலகாலங்களில் பெருமன்னர்களுக்கு கீழிருந்து படைத்தலைவர்களாகவும், தனியாட்சி பெற்ற குறுநில மன்னர்களாகவும் திகழ்ந்துள்ளர்.[1]வடநாட்டிலுள்ள மகதம் தமிழ் அல்லாத மொழி பேசப்படும் 17 நிலங்களில் ஒன்று. மகதைப் பெருமாள் திருவண்ணாமலைக் கோயிலில் பொன் வேய்ந்தான். இவனைப் போற்றும் 22 பாடல்கள் (வெண்பாக்கள்) திருவண்ணாமலைக் கோயில் சுவரில் கல்வெட்டுகளாக உள்ளன.

அவற்றில் எடுத்துக்காட்டுக்காக ஒரு பாடல்.

தாரும் முடியும் முரசும் தமக்குரிய
பாரும் உடன்பெறுவர் பார்வேந்தர் – வீரப்
பெருமாள் மகதேசன் பேர்எழுதித் தத்தம்
திருமார்பில் ஆளோலை செய்து.[2]

இப்பாடல் சொல்லும் செய்தி

தார், முடி, முரசு, ஆளும் நிலம் போன்றவற்றைத்தான் பார்வேந்தர் பெறுவர். மகதை வீரப்பெருமாள் காலத்திலோ இவன் பேரை எழுதிய ஆள்மாலை (ஒன்று) செய்தும் அணிந்துகொள்வர் (மகதைப் பெருமாளோ தன் மார்பில் பலர் எழுதிய ஓலைகளை (விழுப்புண்களை) அணிந்துகொண்டிருக்கிறான் எனினும் அமையும்.)

பார்வேந்தர்கள் மகதேசனை நாடிச்சென்று தார், முடி, முரசு, தமக்குரிய அரசு ஆகியவற்றைப் பெறுவர். மேலும் மகதேசனுக்கு தாங்கள் அடிமை என தம் மார்பில் ஆளோலை எழுதி அணிவர். என்னும் பொருளிலும் அமையும்.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

மேற்கோள்கள்

தொகு
  1. நூ. த. லோகசுந்தரமுதலி,கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-1, தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி, VIII, #97, (A.R. 97 of 1902)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-16. பார்க்கப்பட்ட நாள் 2012-08-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகதைப்_பெருமாள்&oldid=3565925" இலிருந்து மீள்விக்கப்பட்டது