ஆளோலை என்பது பண்டைய தமிழகத்தில் இருந்த ஓர் அடிமை முறையாகும். அடிமையாவோர் அடிமையாளருக்கு எழுதிக் கொடுக்கும் ஓலைக்கு ஆளோலை என்று பெயர். நானும், என் வழித் தோன்றல்களும் உங்களுக்கும் உங்கள் சந்ததியாருக்கும் அடிமை என்று ஒருவர் ஓலையில் எழுதித் தருதல் ஆகும். ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன் சாட்சிக் கையெழுத்தும் இருக்கும். தன்னை மட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையாக எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு. அடிமை தன் பணியில் தவறினால் அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றத்தில் முறையிடலாம். தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையை ஊரவை உறுதிப்படுத்தும். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.[1]

சோழர் காலம்

தொகு

ஒருசில தமிழ் ஆய்வாளரின் கருத்துப்படி, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாகக் கூறப்படுகிறது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கியுள்ளனர். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெல்குற்றுதல், வேளாண்மைப் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாக காணப்பட்டுள்ளன.[2]

அந்தணர் அடிமையாகும் வழக்கமில்லை. சோழர் காலத்தில் கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் அடிமைகள் இருந்தனர். இவற்றிற்கு அடிமைகளைத் தானமாகக் கொடுத்தனர். அடிமைகள் வேளாண்மையிலும், அது சார்ந்த தொழில்களிலும் இடம் பெற்றிருந்தனர். “உவச்சர் பறை கொட்டும் பணியினைச் செய்தனர். அடிமைகளுக்கு முத்திரையிடப்பட்டது. (சைவத்தில் உள்ள தீக்கையும், வைணவத்தில் உள்ள சமாச் சரணமும் இந்த வகையைச் சார்ந்தவை) அடிமைகளுக்குக் கடும் தண்டனைகளும் விதிக்கப்பட்டன".[1][3]

பல்லவர் காலம்

தொகு

பல்லவர்கள் காலத்தில் வேளாண் பெருக்கம் காரணமாக அடிமை முறை விரிவடைந்தது. இப்பொழுது உள்ள முறையில் “ஆள்” என்று அடிமைகள் குறிப்பிடப்பட்டனர். இந்தச் சொல்லைச் சுந்தரர் பல இடங்களில் பயன்படுத்தியதைச் சுட்டிக் காட்டுகிறார். “கூழாள்” என்ற சொல் பெரியாழ்வார் பாடலில் இடம் பெறுகிறது. இது பற்றிப் பெரிய வாச்சான் பிள்ளை தமது திருப்பல்லாண்டு வியாக்கியானத்தில் ‘கூழாள்’ என்ற சொல்லிற்கு “சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை” என்று விளக்கம் எழுதியுள்ளார் [4][5]

சுந்தரர் வரலாறு

தொகு

கங்கையு மதியும் பாம்புங் கடுக்கையு முடிமேல் வைத்த
  வங்கண ரோலை காட்டி யாண்டவர் தமக்கு நாடு.[6]

கங்கை, நிலா, பாம்பு, கொன்றை என்ற இவற்றைத் தம்முடியிலே வைத்த சிவபெருமானால் ஆளோலை காட்டி வலிய ஆட்கொள்ளப்பெற்றவராகிய ஆலாலசுந்தரர் என்பது இப்பாடல் பொருளாகும்.

சமூகத்தின் அடிமட்டத்தில் வலுவற்று இருந்தவர்களை ஆளோலை முறைப்படி அடிமைப்படுத்தும் வழக்கம் இக்காலத்தில் இருந்ததைச் சுந்தரரின் வரலாறு புலப்படுத்துகிறது. சுந்தரருக்குத் திருமணம் நிகழ இருக்கின்ற தருணத்தில் அங்கே வரும் வயது முதிர்ந்த ஒருவர், சுந்தரரின் பாட்டனார் தம்மையும், தம்வழி வருவோரையும் அவருக்கு அடிமைப்படுத்தி ஆளோலை எழுதிக் கொடுத்ததைக் கூறித் திருமணத்தைத் தடுத்து விடுகின்றார்[7].

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 http://pasumponmuthuramalingam.blogspot.in/2007/10/caste-system-in-cholas.html
  2. http://tamil.oneindia.in/art-culture/essays/2010/2-international-day-remembrance-slave-trade.html
  3. தமிழகத்தில் அடிமை முறை, ஆ. சிவசுப்பிரமணியம், காலச்சுவடு பதிப்பகம்,(பக். 40).
  4. தமிழகத்தில் அடிமை முறை, ஆ. சிவசுப்பிரமணியம், காலச்சுவடு பதிப்பகம்,(பக். 29)
  5. http://www.keetru.com/ungal_noolagam/jul06/thothathri.php
  6. சேக்கிழார், திருத்தொண்டர் புராணம்
    (பெரிய புராணம்), (பன்னிரண்டாம் திருமுறை(பெரியபுராணம்)) பாடல் 147.
  7. http://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412331.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளோலை&oldid=2952501" இலிருந்து மீள்விக்கப்பட்டது