மகிளா ஆத்ம ரக்சா சமிதி

இந்தியாவின் பெண்கள் உரிமை அமைப்பு

மகிளா ஆத்ம ரக்சா சமிதி ( Mahila Atma Raksha Samiti ) ( மார்ஸ் எனவும் அறியப்படுகிறது) 'பெண்கள் சுய-பாதுகாப்பு சங்கம் ) என்பது இந்தியாவின் வங்காளத்தில் செயல்படும் ஒரு பெண்கள் இயக்கமாகும்.[1] இது இந்தியப் பொதுவுடைமைக் கட்சியுடன் இணைக்கப்பட்ட ஒரு பொதுமக்கள் அமைப்பாகும்.[2]

நிறுவுதல் தொகு

மகிளா ஆத்ம ரக்சா சமிதி 1942 இல், இரண்டாம் உலகப் போரின் நடுவிலும், பெரும் வங்காளப் பஞ்சத்தின் முன்பும் நிறுவப்பட்டது.[1] [3] கிராமப்புறங்களில் ஏற்பட்ட பஞ்சத்தில் பாதிக்கப்பட்டு அங்கிருந்து இருந்து வெளியேறும் பெண்களால் கொல்கத்தா நகரம் நிரம்பியது. மேலும் அவர்கள் பாலியல் சுரண்டலுக்கு இரையாகினர். (அவர்கள் இராணுவ முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர் அல்லது தானாக்வோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்). [3] [4] கொல்கத்தாவின் விபச்சார விடுதிகளில் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது.[4] அமெரிக்கப் படையினரால் உள்ளூர் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் அல்லது கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வநதன. இதற்கு எதிர்வினையாக, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பெண்கள் குழு மகிளா ஆத்ம ரக்சா சமிதியை ஏற்பாடு செய்தது.[3] 1939 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக தற்காப்புக்குத் தயாராகும் நோக்கத்துடன் கொல்கத்தாவில் உருவாக்கப்பட்ட மாநாட்டில் இது தோற்றம் பெற்றது. 1941 ஆம் ஆண்டில், அந்தக் குழுவில் பொதுவுடைமை பெண்களும் சேர்ந்தனர். மேலும் சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களும் இந்த அமைப்பில் இருந்தனர்.[4]

தலைமை தொகு

இராணி மித்ரா தாசுகுப்தா, மணிகுந்தலா சென் மற்றும் ரேணு சக்கரவர்த்தி ஆகியோர் மகிளா ஆத்ம ரக்சா சமிதியின் முக்கிய தலைவர்களாக இருந்தனர். ஆனால் இந்த அமைப்பு ராணி மகாலனோபிசு ( பிரசாந்தா சந்திர மகாலனோபிசின் மனைவி) மற்றும் லீலா மசூம்தார் போன்ற பொதுவுடைமை அல்லாத தாராளவாத கருத்துகளைக் கொண்டவர்களையும் தங்கள் அமைப்பில் சேர்த்தது.[3] மகாலனோபிசு சிலகாலம் மகிளா ஆத்ம ரக்சா சமிதியின் தலைவராக பணியாற்றினார்.[5]

ஆரம்பகால போராட்டங்கள் தொகு

மகிளா ஆத்ம ரக்சா சமிதி, இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தை ஆதரித்தது. பெண்களுக்கு தற்காப்பு பற்றி அறிவுறுத்தியது. பாசிசத்திற்கு எதிராக எச்சரித்தது. அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியது மற்றும் மக்களை பட்டினியிலிருந்து பாதுகாக்கவும் முயன்றது.[1] [4] இந்த அமைப்பு பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரண நடவடிக்கைகளைத் திரட்டியது.[6] 1943 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி, உணவுப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து 5,000 பெண்களைத் திரட்டி வங்காள சட்டமன்றத்திற்கு அணிவகுத்துச் சென்றனர்.[1] [4] கொல்கத்தா அணிவகுப்பைத் தொடர்ந்து தினாஜ்பூர், சிட்டகொங், மிட்னாபூர், பதர்கஞ்ச், மதரிபூர், பாப்னா மற்றும் பங்குரா ஆகிய இடங்களில் உண்ணாவிரதப் பேரணிகள் நடைபெற்றன.[4] மகிளா ஆத்ம ரக்சா சமிதி தனது முதல் மாநாட்டை ஏப்ரல் 1943 இல் நடத்தியது. இதற்கு மோகினி தேவி என்பவர் தலைமை தாங்கினார், அமைப்புச் செயலாளராக எலா ரீட் என்பவர் செயல்பட்டார்.[4]

பிரிவினைக்குப் பிறகு தொகு

1947 இல், அமைப்பின் பெயர் வங்காளப் பெண்கள் தற்காப்பு சங்கம் என மாற்றப்பட்டது.[7] 27 ஏப்ரல் 1949 அன்று அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக வங்காளப் பெண்கள் தற்காப்பு சங்கம் கொல்கத்தாவில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்தது. பவ்பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.[8]

ஏப்ரல் 1954 வாக்கில் வங்காளப் பெண்கள் தற்காப்பு சங்கம் 18,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டவர்கள் அல்லது சணல் ஆலைகளில் பணிபுரிந்தவர்கள்.[2] சங்கம், இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தியப் பெண்களின் தேசிய கூட்டமைப்புக்கான முன்முயற்சியை எடுத்தது.[2] [9]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Agarwal, Bina. Gender and Land Rights in South Asia. Cambridge, England: Cambridge University Press, 1994. p. 439
  2. 2.0 2.1 2.2 Overstreet, Gene D., and Marshall Windmiller. Communism in India. Berkeley: University of California Press, 1959. p. 402
  3. 3.0 3.1 3.2 3.3 Chakravartty, Gargi. P.C. Joshi: A Biography. New Delhi: National Book Trust, 2007. p. 28
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 Johnson, Gordon, and Geraldine Hancock Forbes. The New Cambridge History of India. 4:2. Cambridge: Cambridge Univ. Press, 1996. p. 210
  5. Sarkar, Sumit, and Sabyasachi Bhattacharya. Towards Freedom: Documents on the Movement for Independence in India. 1946. New Delhi: Oxford University Press, 2007. p. 345
  6. Bandyopadhyay, Sekhar (2004). From Plassey to Partition: A History of Modern India. Orient Longman. p. 395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-2596-2.
  7. The Journal of Women's Studies, Vol. 2. Women's Studies Research Centre, Calcutta University, 1997. p. 156
  8. Desai, A. R. Expanding Governmental Lawlessness and Organized Crime: Violation of Democratic Rights of the Minorities, Women, Slum Dwellers, Press and Some Other Violations. Bombay: Popular Prakashan, 1991. p. 237
  9. Menon, Parvathi. Breaking Barriers: Stories of Twelve Women. New Delhi: LeftWord, 2005. p. 37
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிளா_ஆத்ம_ரக்சா_சமிதி&oldid=3886440" இலிருந்து மீள்விக்கப்பட்டது