மாகரெபு (Maghreb, /ˈmæɡrɪb/[1] or /ˈmʌɡrəb/;நேரடிப் பொருள்: "பொழுது சாய்தல்";[1] அரபு மொழி: المغرب العربيal-Maghrib al-ʻArabī, "அராபிய மேற்கு"'; முன்பு பார்பரி கடற்கரை என அறியப்பட்டது),[2][3] அல்லது பெரும் மாகரெபு (அரபு மொழி: المغرب الكبيرal-Maghrib al-Kabīr), பெரும்பான்மையான மேற்கத்திய வடக்கு ஆப்பிரிக்கா அல்லது எகிப்திற்கு மேற்கிலுள்ள வடமேற்கு ஆப்பிரிக்கா பகுதிகளைக் குறிக்கும். மரபுப்படியான வரையறை அட்லாசு மலைகளையும் மொரோக்கோ, அல்சீரியா, தூனிசியா, லிபியாவின் கடலோரப் பகுதிகளையும் உள்ளடக்கியது. 1989இல் அராபிய மாகரெபு ஒன்றியம் உருவானபிறகு தற்போதைய மாகரெபிற்கான வரையறையில் மூரித்தானியாவும் சர்ச்சைக்குரிய (பெரும்பாலும் மொராக்கோவின் கட்டுப்பாட்டிலுள்ள) மேற்கு சகாராவும் உள்ளடங்கி உள்ளன. எசுப்பானியாவில் (711–1492) அல்-அன்டாலுசு காலத்தில் மாகரெபின் குடிகள் "மூர்கள்" எனப்பட்டனர்.[4] அக்காலத்தில் எசுப்பானியாவின் இசுலாமியப் பகுதிகள் பொதுவாக மாகரெபில் சேர்க்கப்பட்டன. இதனாலேயே எசுப்பானிய இசுலாமியரை மேற்கத்திய ஆவணங்கள் மூர்கள் எனக் குறிப்பிடுகின்றன.

அராபிய மாகரெபு ஒன்றிய நாடுகள்

வரலாற்றில் இந்தப் பகுதியை குறிப்பிடுகையில் மூரித்தானியா, நுமிடியா, புராதன லிபியா, உரோமோனிய ஆபிரிக்கா பகுதிகளை உள்ளடக்கியதாக காட்டுகின்றன. மாக்ரிப் என்ற அராபியச் சொல்லிற்கு "மேற்கு" என்று பொருள்படும். எனவே அல்-மாகரெபு என்பது ஞாயிறு மறையும் மேற்குப் பகுதி எனப்பொருள்படும்.[5][6] இது ஏழாம் நூற்றாண்டில் இசுலாமியர் கைப்பற்றிய பகுதிகளின் மிக மேற்கான பகுதியாக இருந்தது.[7]

பெர்பர் மொழியில் இது தமாசுகா எனப்படுகின்றது; இது பெர்பர்களின் நாடு எனப் பொருள்படும்.[8] இந்தப் பெயர் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெர்பர் செயற்பாட்டாளர்களால் பரப்பப்பட்டுள்ளது. தற்போதைய நாடுகள் இப்பகுதியில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் நிறுவப்படுவதற்கு முன்பாக மாகரெபு மிகவும் பரவலாக தெற்கில் அட்லாசு மலைக்கும் நடுநிலக் கடலுக்கும் இடைப்பட்ட சிறு பகுதியைக் குறித்தது. கிழக்கு லிபியாவை உள்ளடக்கியும் தற்கால மூரித்தானாவை விலக்கியும் குறிப்பிடப்பட்டு வந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கூட வட ஆப்பிரிக்காவின் மேற்கு நடுநிலக் கடலின் கடலோரப் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அல்சீரியா, மொரக்கோ, துனிசியா பகுதிகளைக் குறிக்க குறிப்பாக பயன்படுத்தப்பட்டது.[7]

ஆப்பிரிகக் கண்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து அட்லாசு மலைகளாலும் சகாரா பாலைவனத்தாலும் விலகியிருந்ததால் மாகரெபு மக்கள் தெற்கு ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் நடுநிலக் கடல் நாடுகளுடன் வணிக, பண்பாட்டு தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.

பெர்பர்களின் நுமிடியா இராச்சியத்திலும் பின்னதாக உரோமைப் பேரரசு காலத்திலும் இப்பகுதி தனித்த அரசியல் அடையாளத்தைக் கொண்டிருந்தது. இடையில் சிறிது காலத்திற்கு செருமானிய வாண்டல்கள் ஆக்கிரமித்தனர்; பின்னர் சிறிது காலத்திற்கு பைசாந்தியப் பேரரசு ஆட்சியின் கீழ் இருந்தது. இசுலாமிய கலீபகங்கள், உமையா கலீபகம், அப்பாசியக் கலீபகம், மற்றும் பாத்திம கலீபகங்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. 8ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை வெவ்வேறு பெர்பிய இராச்சியங்கள் ஆண்டு வந்தன. ஓட்டோமான் துருக்கியர்களும் சிறிது காலத்திற்கு இப்பகுதியை ஆண்டுள்ளனர்.

மூரித்தானியா, மொராக்கோ, துனீசியா, அல்சீரியா, மற்றும் லிபியா1989இல் மாகரெபு ஒன்றியத்தை நிறுவின; பொதுச் சந்தையில் கூட்டுறவை வளர்க்கவும் பொருளியல் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இம்முனைவு மேற்கொள்ளப்பட்டது. துவக்கத்தில் இதனை முன்மொழிந்த முஅம்மர் அல் கதாஃபி இதனை அரபு வல்லரசாக்க கனவு கண்டார். மொராக்கோவின் வற்புறுத்தலால் மேற்கு சகாரா ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டது.[9]

மேற்கு சகாரா குறித்து அல்சீரியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையேயான பிணக்கு வலிதாக மீளெழுந்தபோது இருநாடுகளுக்கும் இடையேயான தீரா எல்லைப் பிரச்சினைகளும் மீண்டும் எழுந்தன. இந்தப் பிணக்கினால் ஒன்றியத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு தற்போது செயலிழந்துள்ளது.[10] இருப்பினும், இப்பகுதியிலுள்ள நிலையற்றத் தன்மையும் வளரும் அண்டைநாட்டு அச்சுறுத்தல்களும் இப்பகுதியில் கூட்டுறவின் இன்றியமையாமையை வலுப்படுத்துகின்றது – அராபிய மாகரெபு ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்கள் மே 2015இல் ஒருங்கிணைந்த பாதுகாப்பு கொள்கைக்கான தேவையை வலியுறுத்தி உள்ளனர்.[11]

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Maghreb: definition of Maghreb in Oxford dictionary (British & World English)". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-01-21.
  2. வார்ப்புரு:Cite eb
  3. "Antique Maps of North Africa". Archived from the original on 2008-10-11. பார்க்கப்பட்ட நாள் 2014-06-04.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "The Moors were simply Maghrebis, inhabitants of the maghreb, the western part of the Islamic world, that extends from Spain to Tunisia, and represents a homogeneous cultural entity", Titus Burckhardt, "Moorish culture in Spain". Suhail Academy. 1997, p.7
  5. Alvarez, Lourdes María (2009). Abu Al-Ḥasan Al-Shushtarī. Paulist Press. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8091-0582-3.
  6. Peek, Philip M.; Yankah, Kwesi (2003-12-12). African Folklore: An Encyclopedia. Routledge. p. 442. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-94873-3.
  7. 7.0 7.1 Elisee Reclus, Africa, edited by A. H. Keane, B. A., Vol. II, North-West Africa, Appleton and company, 1880, New York, p.95
  8. "Tamazgha, North African Berbers". பார்க்கப்பட்ட நாள் 2010-02-09.; McDougall, James (2006-07-31). History and the culture of nationalism in Algeria, By James McDougall (Page: 189). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-84373-7. பார்க்கப்பட்ட நாள் 2011-01-14.
  9. "L'Union du Maghreb arabe". Archived from the original on 2010-04-20. பார்க்கப்பட்ட நாள் 2010-05-17.
  10. "Maghreb". The Columbia Encyclopedia, Sixth Edition. 2001-05. பார்க்கப்பட்ட நாள் 2007-07-11.
  11. North Africa Post (2015) "Maghreb Countries Urged to Devise Common Security Strategy, Integration Project Remains Deadlocked" http://northafricapost.com/7594-maghreb-countries-urged-to-devise-common-security-strategy-integration-project-remains-deadlocked.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்ரிபு&oldid=3565913" இலிருந்து மீள்விக்கப்பட்டது