மதுரகவி பாஸ்கர தாஸ்
பாஸ்கர தாஸ் எனப்படும் மதுரகவி பாஸ்கரதாசு (1892 - 1952) தமிழ்த்திரையுலகின் முதல் திரைப்பாடலாசிரியரும் [1] பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட கலைஞரும் ஆவார். இவர் தன்னுடைய 16-வது வயதில் பாடல்களை எழுதத் தொடங்கினார். இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் அவைக்கவிஞராக அங்கிகரிக்கப் பெற்று வெள்ளைச்சாமி என்ற இயற்பெயரை இழந்து பாஸ்கர தாஸ் என்று அழைக்கப்பெற்றார். 1931-இல் தமிழ் திரையுலகின் முதல் பேசும் படமான காளிதாஸில் அனைத்துப் பாடல்களையும் எழுதித் தமிழ் திரையுலகின் முதல் திரைப்பாடலாசிரியரானார். இத்திரைப்படத்திற்குப் பாஸ்கரதாஸ் தன்னுடைய நாடகத்திற்கு எழுதிய பாடல்களும் பயன்படுத்தப்படதாகவும் கூறப்படுகிறது.[1]
இவர் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் கைவரப்பெற்றவராக இருந்துள்ளார். இதனால் திரைக்கதை, உரையாடல், பாடல்களை எழுதுபவராகவும், நாடக நடிகராகவும், நடிப்பு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இத்துடன் கிராமிய நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிப்பவராகவும், புதிய இசையுருக்களை அமைத்தவராகவும் உள்ளார். இவருடைய பாடல்கள் 'மதுரகவி பாஸ்கரதாஸ் கீர்த்தனைகள்' என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
வரலாறு
தொகுஇளமை
தொகுதாஸ் 1892-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்ற ஊரில் பிறந்தார்.[சான்று தேவை] .
நாகலாபுரம் பள்ளிவாசல் தெருவில் இவர் பிறந்து மறைந்த வீடு சிதிலமடைந்த நிலையில் இன்றும் உள்ளது
வெள்ளைச்சாமி என்பது இவரது இயற்பெயர். இளவதிலேயே மதுரையில் தனது பாட்டி வீடு சென்று வசித்தார். அங்கு நாடகக் கலைஞராய் மலர்ந்தார். ராமனாதபுரம் சேதுபதி மன்னர் இவரைத் தனது அரசவையில் பாடவைத்து “முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாசு” என்ற பெயரைச் சூட்டினார். இதில் பாஸ்கரன் என்பது பஸ்கர சேதுபதி மன்னரைக் குறிக்கும்.
இவருக்கு ஆண் குழந்தைகள் வேல்சாமி, சேது, மருதுபாண்டி, தினகரன், மனோகரன் பெண் குழந்தைகள் சரஸ்வதி, இந்துராணி, ஜானகி, முத்துலட்சுமி, காந்திமதி, கமலா ஆகியோர் ஆகும். இவருடைய இரண்டாவது மனைவி பெயர் ஒண்டியம்மாள்
புலமை
தொகுபாஸ்கரதாஸ் தன்னுடை 16-ஆவது வயதில் பாடல்களை எழுதத்தொடங்கினார்.[1] இவரது முதல் பாடல் தொகுதி 1915-இல் பக்தி ரச கீர்த்தனை என்ற பெயரில் வெளிவந்தது. 1925-இல் இந்து தேசபிமானிகள் செந்தமிழ் திலகம் நூலை வெளியிட்டார். இதன் இரண்டாம் பாகத்தினை 1925-இல் வெளியிட்டார்.
காந்திய ஈடுபாடு
தொகுகாந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட பாஸ்கரதாசு கதராடையையே அணிந்தார். கடைசி வரை பிரித்தானிய ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாய் நின்றுள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாடல்களை எழுத மேடையில் பாடியதற்காக 29 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாததாசு, காதர்பாட்சா போன்ற கலைஞர்களும் அக்காலத்தில் காவலர்களால் மேடையில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். 1921-இல் காந்தியடிகள் மதுரை வந்த பொழுது காந்தியோ பரம ஏழை சந்நியாசி என்ற பாடலை எழுதினார். அதனைக் காந்தியடிகள் கேட்டார்.[1]
பண்பு நலன்கள்
தொகுதனக்கு மேடையிலும், தனிப்பட்ட முறையிலும் கிடைக்கும் பணம் மற்றும் பரிசுகள் சககலைஞர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக வாழ்ந்துள்ளார். சாதி வேறுபாடுகளைப் பாராமல் சக கலைஞர்கள், தலித்துகள் வீடுகளில் சாப்பிட்டு, அவர்களுக்கும் தனது வீட்டில் விருந்தளித்திருக்கிறார். தீண்டாமையை எதிர்த்தவராக இருந்துள்ளார். சாதிக்கொடுமைகள் மலிந்த அன்றைய சமூகத்தில் கலப்புத் திருமணம் செய்து வைக்கும் செல்வாக்குமிக்கவராய்த் திகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, அவ்வாறு செய்வித்த ஒரு மணப்பெண்ணுக்கு ஒரு தங்கச் சங்கிலியும் பட்டுச்சேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார். தனக்குக் கிடைக்கும் பணத்தை எல்லாம் வாரி இறைத்திருக்கிறார். பணமில்லாத போது நோட்டு எழுதியும், சொத்தை அடமானம் வைத்தும் கடன் வாங்கிக் கூட பலருக்கு உதவியுள்ளார். நாடகத் துறைப் பணிகளோடு அவர் விவசாயமும் தொடர்ந்து செய்து வந்தார்.
ஒருமுறை தேவர் எனப்படும் குலத்தவர்கள் மாநாடு ஒன்று கூட்டியிருக்கிறார்கள். அந்த மாநாட்டிற்கு மதுரகவி பாஸ்கரதாஸை அழைத்தபோது ஒரு ஜாதியின் பெயரால் கூட்டப்படும் மாநாட்டிற்கு வரமாட்டேன் என்று சொன்னார். மதுரகவி பாஸ்கரதாஸ் இந்து மதத்தைச் சேர்ந்தவராயினும், அவர் எல்லா சாதியர்களோடும் மதத்தினரோடும் நல்லுறவு கொண்டு அற்புத மனிதராகத் விளங்கினார்.
விடுதலைப் போரில் ஈடுபாடு
தொகுவிடுதலைப் போராளிகள் போராட்டங்களை நடத்திச் சிறை சென்ற காலத்தில் தாஸ் தனது நாடகங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்குத் தேசபக்தியூட்டியுள்ளார். விடுதலைப் போரில் மக்கள் உற்சாகமுடன் பங்கேற்க அவரது பாடல்கள் உதவியுள்ளன. இவரது பாடல்கள் பெரும்பாலும் விடுதலைப் போராட்ட வீரர்கள், அவர்களது தியாகங்கள், குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள் பற்றியதாகவே அமைந்தது. ஆங்கிலேயருக்கு அஞ்சாமல் ஒவ்வொரு பாடலிலும் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். மதுரை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வைத்தியநாதய்யருடன் பேசி மதுரையில் நடிகர்களைத் திரட்டி, கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தினார் தாசு. புதுச்சேரி சென்று மூன்று மாத காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
தலைவர்களுடனான தொடர்புகள்
தொகுதாஸ் தனது காலத்தில் வாழ்ந்த விடுதலைப் போராளிகள் காந்தி முதல் அனைத்துத் தலைவர்களோடும் தொடர்புடன் இருந்துள்ளார். காந்தியைப் பற்றிப்பாடல் எழுதி அவரிடமே கொடுத்தார். நாமக்கல் கவிஞர் போன்ற அவர் காலத்திய கவிஞர்களோடும் நெருக்கமாக இருந்தார். ஈ.வே.ரா, இ.மா. பாலகிருஷ்ண கோன், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், எம்.எஸ். விஜயாள், முத்துராமலிங்கத் தேவர், தண்டபாணி தேசிகர் எனப் பல தமிழ்நாட்டு வரலாற்று நாயகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
நாடகம்
தொகுநாடகத்தில் தீவிர ஈடுபாடுகொண்டவர் வெள்ளைச்சாமி என்ற பாஸ்கரதாசு. தமிழகம் முழுவதும் சுற்றிய இவர் கொழும்பு யாழ்ப்பாணம் முதல் ஆலப்புழை வரை சென்று நாடகங்கள் நடத்தியுள்ளார். பின்னாளில் கம்யூனிஸ்ட்டுத் தலைவரான கே.பி.ஜானகியம்மாள் ஸ்திரீபார்ட் நடிகையாக இவரது ஏராளமான நாடகங்களில் நடத்துள்ளார். தாஸ் மதுரை அமெரிக்கன்கல்லூரி மாணவர்கள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே நாடகப் பயிற்சியளித்துள்ளார். அவர் எழுதிய பாடல்களில் பனங்காட்டுப் பாடல்கள், சேவல் கட்டுப்பாடல், வன்னிமரப்பாடல்கள் ஆகியவைக் குறிப்பிடத்தக்கன.
அக்கால நாடகக் கலைஞர்கள் அனைவரோடும் குருபீடத்தில் மதிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.சுப்புலெட்சுமி, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற கலைஞர்கள் இவர் இயற்றிய பாடல்களைப் பாடியுள்ளனர். நடிகர்களுக்கு மனக் குவிப்பு, நடுங்காத தேகம், நினைவாற்றல், குரல் வலிமை, உடை, ஞானம் ஆகியன பற்றி வகுப்புகள் நடத்தியுள்ளார்.
இசை வெளியீடுகள்
தொகு1925-இல் 'இந்து தேசாபிமானிகள் செந்தமிழ் திலகம்' என்னும் பாடல் நூலை வெளியிட்டார். இவரது பாடல்கள் சாதாரண வர்ண மெட்டுகளுடன் எளிதாகப் பாடக் கூடியவையாயிருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்றன. இவரின் இசைப் பாடலகளைக் கேட்ட மகாத்மா காந்தி இவரைப் பாராட்டி உள்ளார். இவரது பல நாடக மேடைப் பாட்டுகளும் தனிப் பாடல்களும் 'பிராட்காஸ்ட்' என்ற நிறுவனத்தின் கிராம்ஃபோன் தட்டுகளாக வெளிவந்தன. அதிலும் ‘வந்தே மாதரமே, நம் வாழ்விற்கோர் ஆதாரமே’ என்னும் பாட்டு மக்களிடையே மிகப் புகழடைந்தது. மதுரையில் 1940-களில் இயங்கிய சித்ரகலா என்ற ஸ்டுடியோவுடன் பாஸ்கரதாஸ் தொடர்பு கொண்டிருந்தார். எம்.எஸ். சுப்புலட்சுமிக்குப் பாஸ்கரதாஸ் பாட்டுகள் எழுதித் தந்துள்ளார்.
இறுதிக்காலம்
தொகுநடிகர்களின் அமைப்பிற்கெல்லாம் முன்னோடியாய் அமைந்த மதுரை நடிகர் சங்கத்தை 1926-இல் தோற்றுவித்தவர் பாஸ்கரதாஸ் ஆவார். இவரது இறுதிக்காலம் மருந்துகளுடனும் நோயுடனுமே கழிந்தது. இம்மாபெரும் கலைஞர் 20.12.1952-இல் நாகலாபுரத்தில் காலமானார். இவரைச் சிறப்பிக்கும் வகையில் மதுரையில் இவர் வாழ்ந்த பகுதிக்கு 'மதுரகவி பாஸ்கரதாஸ் சாலை' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சமாதி
தொகுபாஸ்கர தாஸின் சமாதி நாகலாபுபரத்தில் அமைந்துள்ளது.[1]
நூல்கள்
தொகு- பக்தி ரச கீர்த்தனை
கள் - 1915
- இந்து தேசபிமானிகள் செந்தமிழ் திலகம் - பாகம் 1 - 1925
- இந்து தேசபிமானிகள் செந்தமிழ் திலகம் - பாகம் 2 - 1928
நாட்குறிப்பு
தொகுபாஸ்கர தாஸ் நாட்குறிப்பு எழுதும் வழக்கமுடையவராக இருந்தார். இவர் 1917 முதல் 1951வரை எழுதியுள்ள நாட்குறிப்புகள் தொகுக்கப்பெற்று மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்பு எனும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை பாஸ்கர தாசின் மகள் வயிற்றுப் பேரன் ச.முருகபூபதி தொகுத்தார்.
பாடல் எழுதிய திரைப்படங்கள்
தொகுபாஸ்கர தாஸ் பத்து திரைப்படங்களுக்கு திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.[1] அவையாவன
- காளிதாஸ் - 1931
- வள்ளி திருமணம் - 1933
- போஜராஜன் - 1935
- சந்திரஹாசன் - 1936
- ராஜா தேசிங்கு - 1936
- உஷா கல்யாணம் - 1936
- தேவதாஸ் - 1937
- சதி அகல்யா - 1936
- ராஜசேகரன் - 1937
- கோதையின் காதல் - 1941
- நவீன தெனாலிராமன் - 1941
இவற்றையும் காண்க
தொகுஉசாத்துணை
தொகு- முருக பூபதி "மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்",வெளியீடு : பாரதி புத்தகாலயம்,சென்னை – 18.
- வெள்ளைச்சாமித் தேவர் என்ற மதுரகவி பாஸ்கரதாஸ், தேவர்தளம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- பெண்மையைப் போற்றிய மதுரகவி