மனத்தளர்ச்சி
மனத்தளர்ச்சி அல்லது மனச்சோர்வு அல்லது உளச்சோர்வு (Depression) என்பது மன வெறுப்பு போன்ற ஒரு அசாதாரண மன நிலையைக் கொண்டிருத்தலாகும். இப்படியான மனநிலை கொண்ட மனிதர்கள் கவலையாக, குழப்பமாக, வெறுமையாக, உதவியற்றவர்களாக, எதிர்பார்ப்பற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக, குற்ற உணர்வுடையவர்களாக, எரிச்சலடைபவர்களாக, அமைதியற்றவர்களாக உணரத் தலைப்படுவர்.
இவர்கள் தாம் ஆர்வமுடன் செயற்பட்டு வந்த விடயங்களில் ஆர்வத்தை இழந்து தொழிற்படாது இருப்பர். அத்துடன் அதிக பசி அல்லது பசியின்மையை உணர்வார்கள். மேலும் அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மைக்கு உள்ளாவார்கள். விடயங்களையும் விபரங்களையும் நினைவில் நிறுத்த முடியாமை, உறுதியாகச் செயல்படவோ, முடிவுகளை எடுக்கவோ முடியாமை போன்ற நிலைக்கு ஆளாகி, தற்கொலை முயற்சிக்கும் தள்ளப்படுவர். இவற்றால் அதிகரித்த சோர்வை உணர்வதுடன், வலிகள், சமிபாட்டுத் தொகுதியில் பிரச்சனைகளை சந்திப்பர்[1].
மனத்தளர்ச்சி - விளக்கம்
தொகுமயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா என்று கேட்டு வைத்தார் ஒரு கவிஞர். இந்த மனத்தளர்ச்சி என்னும் உணர்வை மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் சில நாள் அல்லது சில கிழமைகள் நிச்சயமாக அனுபவிக்க வாய்ப்புள்ளது. ஆனால் தெளிந்த சுய உணர்வும் மனம் பற்றிய விழிப்புணர்வும் இல்லாத பல மனிதர்கள் இதை உடல் சோர்வு என்றே உணர்கின்றனர். உண்மையில் மனம், உடல் இரண்டுமே பாதிக்கப்படுகின்றன. மனத்தளர்ச்சி என்பது ஓர் உணர்ச்சியே. அதை எதிர்மறையான உணர்ச்சி என்றும் சொல்லலாம்.
பரிணாம உயிர் வளர்ச்சியில் உயிர்களுக்கு ஓர் இடையூறு ஏற்படும்போது செய் அல்லது செத்து மடி என்ற பதட்டம் உருவாகிறது. விளைவாக போராடு என்ற செயல் வெளிப்பட வேண்டும். ஆனால் வினோதமாக மனிதகுல சமூக பரிணாம வளர்ச்சியில் மனத்தளர்ச்சி என்ற எதிர்மறை உணர்வு ஏற்படுகிறது. தலைக்கு மேல் வெள்ளம் போனபின் சாணென்ன, முழமென்ன என்ற சலிப்பும், சோர்வும், ஆற்றாமையும் ஏற்படுகிறது. இடையூறு ஏற்படும் போது, இயக்கமின்மை ஏற்பட்டால், எதிர்மறை உணர்வுகளே ஏற்படும். புயலடித்து ஓய்ந்த பூமிபோல மனதின் ஆற்றல் எல்லாம் செலவழிந்து போன பின் ஏற்படும் வறட்சியும், இயக்கமின்மையுமே மனத்தளர்ச்சிக்குக் காரணமென நம்பப்படுகிறது.
அதுமட்டுமல்ல சிலர் போரிலிருந்து பின்வாங்கி போராடாமலிருப்பது, வாரிசுகள் எழுச்சியுற்று இடையூறை முறியடிக்கும் வரை ஒரு பாதுகாக்கும் முறையெனவும் சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும் மனத்தளர்ச்சி நீடிக்கும் வரை பாதிக்கபட்டவரது பலவித செயல் திறன்பாடுகள் நிச்சயமாகத் தாக்கமடைகின்றன. அதன் விளைவாகப் பல உடல்நல, குடும்பநல, சமூக நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மனத்தளர்ச்சி என்பதை விசை, மின்சார ஏற்றம் குறைந்த மின்கலத்தின் விளைவாக அந்த பொம்மையோ, உபகரணமோ எப்படிச் செயல்குறைந்து செயல்படுகிறதோ அதனுடன் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம்.
மனத்தளர்ச்சியின் அறிகுறிகள்
தொகுமனத்தளர்ச்சியின் அறிகுறிகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று மனநல அறிகுறிகள். மற்றது உடல்நல அறிகுறிகள். பெரும்பாலும் மத்ய வயது, விபரம் புரிந்த, கல்வி அறிவுள்ள, நகர்ப்புற ஆண்களுக்கே இவ்வகைப் பாதிப்பு அதிகமாக உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது(சான்று தேவை).
மனம் உற்சாகமாக இருக்க அடிப்படையாக மூன்று விதமான நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. இவை 'தான்' என்ற தன்னம்பிக்கை, அன்பு என்ற உறவுப்பிடிப்பு, எதிர்காலம் என்ற நம்பிக்கை ஆகும். நமது வாழ்க்கை மேல் உள்ள ஈடுபாடு, ஆர்வம் இந்த மூன்றிலும் இருக்கின்றது. முதலில் நான், தான் என்ற கடந்தகாலம், சாதனைகள், இனிய நினைவுகள் போன்றவை நம்மை உற்சாகப்படுத்துகின்றன. ஆனால் மனத்தளர்ச்சி ஏற்படும்போது நான் எதையும் சாதிக்கவில்லை, நான் உபயோகமில்லாதவன், நான் தாழ்வானவன், எனது இறந்த காலம் துயரமானது என்ற தாழ்வு மனப்பான்மையும், அவநம்பிக்கையும் ஏற்படுகிறது. அப்போது முதலிருந்த மனநிலையில் இருந்து விலகல் ஏற்படுகின்றது. இரண்டாவதாக பெற்றோர், உறவினர், குழந்தைகள், நண்பர்கள், சமூகத்தினர் யாராவது நம்மிடம் அன்பு பாராட்டி உதவிகள் செய்வார்கள் என்ற நிகழ்கால நம்பிக்கை துணைக்கு வருகின்றது. இதிலும் நான் ஆதரவற்றவன், எனக்கு யாருமில்லை என்ற அவநம்பிக்கை ஏற்படும்போது, எனக்கும் ஓர் எதிர்காலம் உண்டு நான் வாழ்வேன் என்ற எண்ணமும், இறை நம்பிக்கையும் தொடர்ந்து தளராமல் உழைக்கத் தூண்டுகிறது. ஆனால் நாளை நமக்கில்லை என்ற நிலை ஏற்படுமாயின், மூன்றாவது பாதுகாப்பிலிருந்தும் நழுவி விடுகின்றது. இதனால் குழப்பம், மயக்கம், கலக்கம், சஞ்சலம், துக்கம், சலிப்பு, களைப்பு, தவிப்பு, தனிமை, விரக்தி, வேதனை, அழுகை, ஆங்காரம் போன்ற பல எதிர்மறை உணர்ச்சிகள் உருவாகின்றன. விளைவாகப் பலருக்கு இயக்கமின்மை, கவனமின்மை, உற்சாகமின்மை, தெம்பின்மை, சிந்தனையின்மை, தெளிவின்மை, தீர்மானமின்மை, தன்னம்பிக்கையின்மை, ஆர்வமின்மை, உணர்ச்சியின்மை, பாசமின்மை, மகிழ்ச்சியின்மை, பொழுதுபோக்கின்மை ஏற்படுகிறது. இதனால் குற்ற உணர்வு, சுயவெறுப்பு, மற்றவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.
மனத்தளர்ச்சியினால் ஏற்படும் நோய்கள்
தொகுமனநோய் நோய்க்கூட்டறிகுறி
தொகு- இப்படியான மனத்தளர்ச்சி நிலைமை இரண்டு கிழமைகளுக்கு மேலாகவும், எந்த ஒரு விடயத்திலுமோ ஆர்வமற்று, மகிழ்ச்சியற்று இருப்பார்களாயின், அந்நிலையை பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு (MDD - Major Depressive Disorder) என அழைப்பர். அமெரிக்காவில், பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவுள்ளவர்களில் 3.4% மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும், தற்கொலை செய்துகொள்ளும் மனிதர்களில் 60% மானவர்களுக்கு மனத்தளர்ச்சியோ அல்லது வேறு உணர்ச்சிகள் தொடர்பான கோளாறோ இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது[2].
- இந்த மனத்தளர்ச்சி தொடர்ந்து இருந்து நாட்பட்ட நிலையை அடையினும், பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு நோயினளவு தீவிரமான அறிகுறிகளைக் கொண்டிராமல் இருப்பின் அது Dysthymia நோய் எனப்படும்.
- இருமுனை மனச்சீர்குலைவு (bipolar disorder) என்னும் நோயை உடையவர்களும், ஓரளவு பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு நோய்க்குரிய அனுபவத்தைக் கொண்டிருப்பர்[3].
மனநோயல்லாத நிலை
தொகுசில தொற்றுநோய்களாலும், சில மனநிலை தொடர்பான பிரச்சினைகளாலும் இப்படியான மனத்தளர்ச்சி ஏற்படலாம். தைராய்டு சுரப்புக் குறை நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இவ்வாறான மனத்தளர்ச்சி காணப்படும். இரு வேறுபட்ட வைரசினால் ஏற்படக்கூடிய Mononucleosis என்னும் நோயும், இவ்வகையான மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ "Depression". National Institute of Mental Health. 2009-09-23. Archived from the original on 2013-06-11. பார்க்கப்பட்ட நாள் 2010-05-22.
- ↑ Barlow 2005, ப. 248–49
- ↑ Gabbard, Glen O. Treatment of Psychiatric Disorders. Vol. 2 (3rd ed.). Washington, DC: American Psychiatric Publishing. p. 1296.