மரக்காணம் உப்பளம்


தமிழ்நாட்டிலுள்ள உப்பளங்களுள் ஒன்று மரக்காணத்திலுள்ளது. இது வடக்கே ஆலம்பாறை முகத்துவாரத்திற்கும் தெற்கே கழிவெளி ஏரிக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ளது. இங்குள்ள உப்பளங்களுக்குக் கழிமுகத்தின் வழியே கடல்நீர் வருகின்றது. ஏறக்குறைய 3500 ஏக்கரில் இங்கு நடைபெறும் உப்பு உற்பத்தி, சனவரிக்குப் பிறகு துவங்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குத் தொடருகின்றது[1].

உற்பத்தி முறை தொகு

பருவமழைக்குப் பின் பாத்திகளில் தண்ணீரும் சேருமாகச் சேர்ந்திருக்கும்; துளைக்குழாய் மூலமாகவும் தண்ணீர் பாத்திகளில் தேக்கப்படுகின்றது. இவற்றிலிருந்து சேற்றை அகற்றுவது முதற்பணி. தொட்டம் என்ற அமைப்புகளில் கடல்நீர் தேக்கப்படுகின்றது. தொட்டத்திற்கும் பாத்திக்கும் இடையில் அமைந்த வாய்க்கால் பகுதி கிடங்கல் என அழைக்கப்படும். கிடங்கல் என்றால் உப்புத் தண்ணீரை பாத்திகளுக்கு கொண்டு வரும் வாய்க்கால். இவற்றை சுத்தப்படுத்தி, சேற்றை அகற்றி, கடற்கரை மணல் கலந்து நன்றாகக் காலால் மிதித்துத் தரைபோல் சரிசெய்வர். ஒரு பாத்திக்கு ஒன்பது நாளுக்கு ஆறு பேர் மிதிப்பர். இந்தப் பாத்திகளை இவ்வாறாக மட்டம் செய்தால்தான் தண்ணீரைத் தேக்கி உப்பு தயாரிக்க முடியும்.

பிறகு பாத்திகளில் இருக்கும் வரப்புகளை மொழுகி அவற்றைத் தயாரிக்க வேண்டும். வெயில் தொடங்கிய பின்பு கிடங்கல் வழியாக தண்ணீர் பாத்திகளுக்கு கொண்டு வரப்படும்; முதலில் கடல்நீரைக் கொண்டு வந்தால் அதில் மழைநீர் கலந்து இருக்கும் என்பதால் உப்புத்தன்மை குறைவா இருக்கும். அதனால நிலத்தடியில் 10 அடியிலிருந்து குழாய்கிணற்றின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும். அந்த தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமா இருக்கும். அப்படி வருகிற தண்ணீர் பாத்திகளில் தேங்க வைக்கப்பட்டு, சூரிய வெப்பத்தில் கொஞ்சம் கொஞ்சமா உப்பாக மாறும். உப்பு படிகங்கள் பால் ஏடை போல மிதக்கும். அப்படி மிதக்கும் படிகங்களை வார்ப்பலகை கொண்டு வரப்பு ஓரத்தில் சேர்த்து வைக்கப்படும். இப்படி சேர்த்து வைக்கப்படும் உப்பு ஐந்து நாளைக்கு ஒருமுறை மொத்தமாக சேகரிக்கப்பட்டு (கிட்டத்தட்ட 60 கிலோ) தரையில் கொட்டி வைக்கப்படும்; அவ்வாறு தரையில் கொட்டி வைக்கப்படும் இடத்திற்கு அம்பாரம் என்று பெயர் [2].


மேற்கோள்கள் தொகு

  1. புதிய தலைமுறை [1]
  2. புதிய தலைமுறை [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரக்காணம்_உப்பளம்&oldid=3847637" இலிருந்து மீள்விக்கப்பட்டது