மரியம் சோங்

சீமாட்டி மரியம் சோங் அல்லது சோங் ஆ மேய் (ஆங்கில மொழி: Chong Ah Mei) என்பவர் மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் அவர்களின் முதல் மனைவியாவார். துங்கு மலேசியத் தந்தை என்று அன்பாக அழைக்கப்படுகிறவர். மரியம் சோங் இஸ்லாமிய சமயத்தைத் தழுவிய பின்னர் அவருடைய பெயர் மரியம் சோங் அப்துல்லா என பெயர் மாற்றம் கண்டது.

சீமாட்டி மரியம் சோங் அப்துல்லாவின் தந்தையாரின் பெயர் சோங் ஆ யோங் (ஆங்கில மொழி: Chong Ah Yong). இவர் கெடா, அலோர் ஸ்டாரில் ஈய வணிகராகவும் செல்வந்தராகவும் இருந்தார்.[1] 1933 இல், துங்குவைத் திருமணம் செய்து கொண்டதும் இஸ்லாமிய சமயத்தைத் தழுவினார்.

சீன சயாமிய இரத்தக் கலவையைக் கொண்ட மரியம் சோங், திருமணத்திற்குப் பின்னர் மரியம் சோங் அப்துல்லா (ஆங்கில மொழி: Meriam Chong Abdullah) என தம் பெயரை மாற்றிக் கொண்டார்.

வாழ்க்கை குறிப்புகள்தொகு

துங்கு அப்துல் ரகுமான், கூலிமில் துணை மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கிய போது மரியம் சோங் அப்துல்லாவைச் சந்தித்தார். துங்குவின் தாயார் செ மஞ்சரேலா தான், மரியம் சோங் அப்துல்லாவை மருமகளாகத் தேர்வு செய்தார் என்று சில வரலாற்று ஆவணங்களில் சொல்லப்படுகிறது.

துங்கு மறுப்பு தெரிவித்தும், அவர் பலவந்தப்படுத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும், அரச வழக்கப்படி, கெடா அரண்மனையில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.[2]

இவர்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவர் துங்கு கத்திஜா. அடுத்தவர் துங்கு அகமட் நெராங். துங்குவிற்கு 1935 இல் பாடாங் தெராப் வட்டாரத்தின் மாவட்ட அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. பாடாங் தெராப் மலேரியா நோயினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட இடமாகும். இங்குதான் மரியம் சோங் அப்துல்லா, தம்முடைய இரண்டாவது குழந்தை துங்கு அகமட் நெராங்கை ஈன்றெடுத்தார்.

மலேரியா காய்ச்சல்தொகு

கோலா நெராங் பகுதியில் மாவட்ட அதிகாரியாக துங்கு பணிபுரிந்ததின் தாக்கத்தினால் தன்னுடைய மகனுடைய பெயரிலும் நெராங் எனும் சொல்லை துங்கு இணைத்துக் கொண்டார். இரண்டாவது குழந்தை துங்கு அகமட் நெராங்கை ஈன்றெடுத்த 33வது நாளில், சீமாட்டி மரியம் சோங் அப்துல்லாவிற்கு, மிக மோசமான மலேரியா காய்ச்சல் கண்டது.

அவருக்கு பினாங்கில் சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அப்போது, அலோர் ஸ்டாருக்கு வருகை புரிந்த ஓர் ஆங்கிலேய மருத்துவரும் மரியம் சோங் அப்துல்லாவிற்கு மருத்துவ சிகிச்சைகள் செய்தார். அந்த மருத்துவர் நீர்ப்பு இல்லாத குயினைன் மருந்தை மரியம் சோங் அப்துல்லாவின் உடலுக்குள் செலுத்தியதால் அவர் உயிர் துறந்தார் என்று சொல்லப்படுகிறது.

தம் மனைவியின் இறப்பைப் பற்றி துங்கு அதிகாரப்பூர்வமாக குற்றப் பத்திரிகை எதையும் சமர்ப்பிக்கவில்லை.[3] அதற்குப் பதிலாக, கோலா நெராங் பகுதியில் மலேரியா கொசு ஒழிப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கித் தருமாறு மாநிலச் செயலகத்தைக் கேட்டுக் கொண்டார்.

முன்பு துங்கு நிதியுதவி கேட்ட போது மறுக்கப்பட்டது. சீமாட்டி மரியம் சோங் அப்துல்லாவின் இறப்பிற்குப் பின்னர்தான், துங்குவின் கோரிக்கை நியாயப்படுத்தப்பட்டு கோலா நெராங் பகுதியில் மலேரியா கொசு ஒழிப்பு திட்டம் தீவிரமாகச் செயல் படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

மேல் தகவல்கள்தொகு

  • Putera Negara, 1987, Firma Publishing, Aziz Azarina Ahmad
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியம்_சோங்&oldid=2714822" இருந்து மீள்விக்கப்பட்டது