துங்கு அப்துல் ரகுமான்

மலேசியாவின் முதல் பிரதமர்

துங்கு அப்துல் ரகுமான் அல்லது துங்கு அப்துல் ரகுமான் புத்ரா அல்-ஹாஜ் (Tunku Abdul Rahman Putra Al-Haj ibni Almarhum Sultan Abdul Hamid Halim Shah பிப்ரவரி 8, 1903 — டிசம்பர் 6, 1990) என்பவர் மலேசியாவின் முதல் பிரதமர் ஆவார். மன்னர் பரம்பரை வழி பிறந்த துங்கு அப்துல் ரகுமான் சுதந்திர தந்தை எனவும் மலேசிய தந்தை (மலாய்: Bapa Kemerdekaan), (ஆங்கில மொழி: Father of Independence) எனவும் இன்று வரை போற்றப்படுகிறார்.[1]

துங்கு அப்துல் ரகுமான்
Tunku Abdul Rahman
东姑阿都拉曼
முதலாவது
மலேசியப் பிரதமர்
பதவியில்
1957 ஆகஸ்ட் 31 – 1970 செப்டம்பர் 22
ஆட்சியாளர்கள்1. அப்துல் ரஹ்மான் நெகிரி செம்பிலான்
2. அகமட் ஷா பகாங்
3. ஹிஷாமுடின் சிலாங்கூர்
4. இஸ்மாயில் நசிருடின் திரங்கானு
Deputyதுன் அப்துல் ரசாக் உசேன்
பின்னவர்துன் அப்துல் ரசாக் உசேன்
முதலாவது
மலேசியத் துணைப் பிரதமர்
பின்னவர்துன் அப்துல் ரசாக் உசேன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1903-02-08)8 பெப்ரவரி 1903
அலோர் ஸ்டார், கெடா, மலாயா (இப்போது மலேசியா)
இறப்பு6 திசம்பர் 1990(1990-12-06) (அகவை 87)
கோலாலம்பூர், மலேசியா
அரசியல் கட்சிதேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு
துணைவர்(கள்)1. மரியம் சோங் (1933–1935)
2. வயலட் கால்சன் (1935–1946)
3. ஷாரிபா ரோட்சியா (1939–1990)
4. பிபி சோங்
பிள்ளைகள்எட்டு பிள்ளைகள்
(4 வளர்ப்பு பிள்ளைகள்)
முன்னாள் கல்லூரி1. அலோர் ஸ்டார் மலாய்ப் பள்ளி (1909) 2. தெப்சிரின் பள்ளி பாங்காக் (1913)
3. பினாங்கு பிரி ஸ்கூல் (1916)
4. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் (1925)
5. இன்னர் டெம்பிள் (1949) (சட்டத் துறை)
தொழில்வழக்குரைஞர்

இவர் 31-ஆம் திகதி ஆகத்து மாதம் 1957 இல், மலேசியா என்று அழைக்கப்படும் அன்றைய மலாயாவிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தார். இவர் மலாய், சீனர் மற்றும் இந்தியர் ஆகிய இனங்களை ஒருமைப்படுத்தி மலேசிய கூட்டணி கட்சியை உருவாக்கி ஆயுதங்களைப் பயன்படுத்தாமல், அறிவு பூர்வமாக ஆங்கிலேயர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுதந்திரத்திற்கு வழி வகுத்தவர்.[2]

துங்கு அப்துல் ரகுமான், துன் டான் செங் லோக் மற்றும் துன் வீ.தி. சம்பந்தன் ஆகிய தலைவர்களின் கூட்டு முயற்சியினால் மலேசிய நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1963 இல் மலாயாவுடன் சபா, சரவாக் மாநிலங்களை இணைத்து மலேசியாவை உருவாக்க, துங்கு அப்துல் ரகுமான் பெரும் பங்கு வகித்தார். இவர் 1955 இல் இருந்து 1957 வரை மலாயா கூட்டரசு பிரதேசத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்.

வாழ்க்கை வரலாறு

தொகு

1900களில் கெடா மாநிலத்தின் 24-வது மன்னராக இருந்த சுல்தான் அப்துல் ஹமீட் ஹலீம் ஷா அவர்களுக்கு, மலாயா, கெடா, அலோர் ஸ்டார் நகரில் 1903 ஆம் ஆண்டு, துங்கு அப்துல் ரகுமான் 21-வது மகனாகப் பிறந்தார்.[3] அப்போது சுல்தான் அப்துல் ஹமீட் ஹலீம் ஷாவிற்கு 8 மனைவிமார்கள்.

தாயாரின் பெயர் செ மஞ்சலாரா (ஆங்கில மொழி: Nueng Nonthanakhon), (தாய் மொழி: เนื่อง นนทนาคร). செ மஞ்சலாரா என்பது கெடா மாநிலத்தைச் சார்ந்த ஒரு மலாய் வழக்குச் சொல் ஆகும். செ மஞ்சலாரா, மியான்மார் ஷான் பரம்பரையைச் சேர்ந்தவராகும். இவர் சுல்தான் அப்துல் ஹமீட் ஹலீம் ஷாவிற்கு ஆறாவது மனைவியாவார்.

செ மஞ்சலாரா

தொகு

செ மஞ்சலாராவின் தகப்பனாரின் பெயர் லுவாங் நாரா போரிராக் (ஆங்கில மொழி: Luang Nara Borirak). இவர் தாய்லாந்து - மியான்மார் எல்லையைச் சார்ந்த மாத்தாபான் எனும் நிலப்பகுதிக்குத் தலைவராக இருந்தார்.[4] பின்னர், பாங்காக்கிற்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதிக்கு மாவட்ட அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். இவருடைய மூதாதையர்கள் மியான்மார் பெகு எனும் பகுதியில் இருந்து குடியேறியவர்கள்.[5]

கெடா சுல்தான் அப்துல் ஹமீட் ஹலீம் ஷாவைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம், செ மஞ்சலாரா 12 குழந்தைகளைப் பெற்றார். அவர்களில் துங்கு ஆறாவது குழந்தையாகும். செ மஞ்சலாரா 1941 ஆம் ஆண்டு காலமானார்.[6]

துங்குவிற்கு மலேரியா காய்ச்சல்

தொகு

மன்னரின் அரண்மனையில் இருந்த புத்தவிகாரத்தில், துங்குவும் அவருடைய உடன் பிறப்புகளும் வசித்து வந்தனர். துங்குவிற்குச் சின்ன வயதாக இருக்கும் போது, அவர் அரண்மனையைவிட்டு அடிக்கடி தப்பித்து வெளியேறி, நகரத்தில் இருக்கும் தன் வயதுச் சிறுவர்களுடன் விளையாடுவார். அதைத் தாயார் விரும்பவில்லை. அரண்மனையில் வேலைகள் அதிகமாக இருந்ததால் துங்குவைக் கண்காணிக்க முடியவில்லை.

அந்தக் காலகட்டத்தில் கெடா மாநிலத்தில் காலரா, மலேரியா நோய்கள் மிகப் பரவலாக பரவி இருந்தன. துங்குவின் இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும்கூட காலரா நோயினால் இறந்து போனார்கள். துங்குவிற்கும் மலேரியா காய்ச்சல் அடிக்கடி ஏற்பட்டது.[7]

கல்வி வாழ்க்கை

தொகு

துங்குவிற்கு ஆறு வயதாக இருக்கும் போதே அவருடைய கல்வி வாழ்க்கையும் தொடங்கிவிட்டது. 1909 ஆம் ஆண்டு அலோர் ஸ்டார் மலாய்ப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்படியாவது துங்குவின் குறும்புத்தனங்கள் குறையும் என்று அவருடைய தாயார் நினைத்தார். ஆனால், அவர் ஏமாந்ததுதான் மிச்சம். துங்கு வகுப்பைவிட்டு அடிக்கடி வெளியே ஓடிவிடுவது ஒரு வழக்கமாகிப் போனது.

அலோர் ஸ்டார் நகரில் ஒரு சிறிய ஆங்கிலப் பள்ளி முகமட் இஸ்கந்தர் என்பவரால் திறக்கப்பட்டது. முகமட் இஸ்கந்தர் என்பவர்தான் மலேசியாவின் நான்காவது பிரதமரான மகாதீர் பின் முகமதுவின் தந்தையாகும். அந்த ஆங்கிலப் பள்ளிக்கு துங்கு அனுப்பப்பட்டார். மதிய நேரங்களில் திருக்குர்ஆன் கற்றுத் தரப்பட்டது.

பாங்காக் பயணம்

தொகு

துங்குவின் மூத்தச் சகோதரர் துங்கு யூசோப், இங்கிலாந்தில் இருந்து தன் மேல்படிப்பை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய போது, தன்னுடைய தம்பியின் கல்வித் தரம் வளர்ச்சி இல்லாமல் இருப்பதைக் கண்டறிந்தார். அதற்கு மாற்றுப் பரிகாரமாக அவரை பாங்காக்கிற்கு அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. 1913 ஆம் ஆண்டு, சிங்கப்பூர் வழியாக, கடல் மார்க்கமாக துங்குவைப் பாங்காக்கிற்கு துங்கு யூசோப் அழைத்துச் சென்றார்.[8]

பாங்காக்கில் இருந்த தெப்சிரின் பள்ளியில் துங்கு சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்கு சயாமிய மொழி போதிக்கப்பட்டது. வெளிநாட்டில் இருக்கும் போது துங்கு தனிமையினால் பாதிக்கப்படவில்லை. எல்லோருடனும் எளிதாகப் பழகி அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது துங்குவிற்கு கைவந்த கலையாக இருந்தது.

சகோதரர் மரணம்

தொகு

தெப்சிரின் பள்ளியில் துங்கு பயின்று கொண்டிருக்கும் போது, அவருடைய அண்ணன் துங்கு யூசோப், தாய்லாந்து காடுகளில் தொல்லைகள் கொடுத்து வந்த கொள்ளையர்களைப் பிடிக்கும் காவல் துறைப் பணியில் ஈடுபட்டிருந்தார். துங்கு யூசோப், அப்போதைய தாய்லாந்து அரசர் சூலாலோங்கோனின் தத்துப் பிள்ளையாக இருந்தார். அதனால் அவருக்கு சயாமிய இராணுவத்தில் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டிருந்தது.

1915 இல் காட்டில் பணியில் இருக்கும் போது துங்கு யூசோப்பிற்கு மலேரியா காய்ச்சல் கண்டது. அவரைத் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கிற்கு கொண்டு சென்றார்கள். போகும் வழியிலேயே அவர் இறந்து போனார். அப்போது துங்குவிற்கு 12 வயது.[9]

பினாங்கு பிரி ஸ்கூல்

தொகு

பின்னர், விதவையான தன் சகோதரரின் மனைவியுடன் கெடாவிற்கே துங்கு திரும்பினார். 1916 இல், பினாங்கில் உள்ள பினாங்கு பிரி ஸ்கூலில் (ஆங்கில மொழி: Penang Free School) சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளிதான் துங்குவின் கல்விப் பயணத்தையே மாற்றி அமைத்தது. கல்வி கேள்விகளில் தீவிரக் கவனம் செலுத்தத் தொடங்கினார். இருமுறை அவருக்கு இரட்டிப்பு உயர்வும் கிடைத்தது.[10]

அந்தச் சமயத்தில் அவருடைய சகோதரகள் சிலரும் அதே பினாங்கு பிரி ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தனர். இந்தப் பள்ளி தென் கிழக்கு ஆசியாவிலேயே தோற்றுவிக்கப்பட்ட முதல் ஆங்கிலப் பள்ளியாகும். கிழக்கிந்திய நிறுவனத்தினரால் 1816 அக்டோபர் 16இல் தோற்றுவிக்கப்பட்டது. இங்கு படிக்கும் போது தனது குறும்புத்தனத்திற்காக துங்கு, கைகளில் பிரம்படிகளும் வாங்கியுள்ளார். இங்கு அவர் சாரணர் இயக்கத்தில் சிறந்து விளங்கினார். துப்பாகிகளைப் பயன்படுத்தும் முறைகளையும் கற்றுக் கொண்டார்.

இங்கிலாந்து பயணம்

தொகு

1919இல், கல்வித் துறையில் நன்கு சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி உதவிநிதி வழங்கி, அவர்களை இங்கிலாந்தில் படிக்க வைக்க கெடா அரசாங்கம் முன்வந்தது. துங்குவிற்கும் கல்வி உதவிநிதி கிடைத்தது.[11] ஒரு சரக்குக் கப்பலில் இங்கிலாந்து செல்ல வேண்டி வந்தது.

சிங்கப்பூருக்குச் சென்று அங்கு இருந்து கப்பல் ஏறினார். பினாங்கிற்குச் செல்லும் வழியில் கப்பல் கிள்ளான் ஆற்றில் நங்கூரமிட்டு சரக்குகளை ஏற்றிக் கொண்டிருக்கும் போது, துங்குவிற்கு மலேரியா காய்ச்சல் கண்டது.[12] 1920 ஜூன் 1 ஆம் தேதி இங்கிலாந்து சென்றடையும் போதுதான் காய்ச்சல் நின்றது.

லிட்டல் ஸ்டுக்கிலி

தொகு

இங்கிலாந்தில் லிட்டல் ஸ்டுக்கிலி எனும் இடத்தில் தங்கிப் படித்தார். அங்கு ஏற்கனவே மூன்று சயாமிய மாணவர்களும் இருந்தனர். அவர்களுடன் துங்கு நண்பன் ஆனார். காலப் போக்கில் அங்குள்ள பிரித்தானிய சிறுவர்களின் நட்பு கிடைத்தது. அவர்கள் துங்குவை போபி என்று அழைத்தனர். மலாயா எனும் சொல்லை அவர்கள் அதுவரையில் கேட்டதே இல்லை. சில மாணவர்களுக்கு பகுதி நேரமாகப் பாடங்களையும் சொல்லிக் கொடுத்தார்.

பின்னர், லிட்டல் ஸ்டுக்கிலி சிறுநகரில் இருந்து லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரில் கல்வியைத் தொடர்ந்தார். சட்டக் கல்வியைக் கற்குமாறு துங்கு பணிக்கப்பட்டார். இருப்பினும் துங்குவிற்கு சட்டக் கல்வி சரியாக அமையவில்லை. அவருடைய அம்மா அனுப்பி வைத்த பணத்தைக் கொண்டு ஒரு சிறு பந்தயக் காரை வாங்கிக் கொண்டு கேம்பிரிட்ஜ் நகரை வலம் வருவது அவருடைய பொழுது போக்குகளில் ஒன்றாகிப் போனது. 1923 இல் மாணவர்கள் கார் வைத்திருப்பது ஓர் அதிசயம். அதனால், துங்கு மாணவர்கள் வட்டாரத்தில் பிரபலமானார்.

மறுபடியும் கப்பல் பயணம்

தொகு

சட்டம் படிப்பதற்குப் பதிலாக அவர் வரலாற்றுத் துறையில் படித்தார். 1924 இல் இளநிலை பட்டம் கிடைத்தது. மலாயாவை விட்டுப் போய் ஐந்து ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பினார். அந்தச் சமயத்தில் அவருடைய மூத்த சகோதரர் துங்கு இப்ராஹிம், கெடா சுல்தானகத்தின் இளவரசராக இருந்தார். பினாங்கில் சகோதரரைப் பார்த்த துங்கு, தான் ஏன் சட்டம் படிக்காமல் வரலாற்றுத் துறையில் படித்ததாக விளக்கம் சொன்னார்.

கெடா மாநிலத்தின் கல்வி உதவி நிதியில் துங்கு படிக்கப் போனதால், அவருக்கு உறுதியாக அரசு துறையில் வேலை கிடைக்கும். இருப்பினும் இளவரசர் துங்கு இப்ராஹிமுக்கு அது பிடிக்கவில்லை. துங்குவை மறுபடியும் இங்கிலாந்திற்குப் போய் சட்டம் படித்து முடிக்குமாறு கட்டளையிட்டார். வேறு வழியில்லாமல் துங்கு மறுபடியும் இங்கிலாந்திற்குப் பயணமானார்.

வாய்லெட் கால்சன்

தொகு

1926 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பதிந்து கொண்டார். இந்தக் காலகட்டத்தில் மலாய்க்காரர்கள் பலர் சட்டம் படிக்க இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டனர். இங்கிலாந்தில் தங்கியிருந்த காலத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் துங்கு சொந்தமாகவே சமைப்பார். மலாய் நண்பர்களை சாப்பிட அழைப்பார். அந்தச் சந்தர்ப்பத்தில் துங்குவின் முயற்சியால், ஐக்கிய இராச்சிய மலாய்க் கழகம் (ஆங்கில மொழி: Malay Society of Great Britain) உருவானது.

துங்கு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது வயலட் கால்சன் எனும் ஆங்கிலேயப் பெண்ணைச் சந்தித்தார். வயலட் கால்சன் லண்டனில் ஓர் உணவகத்தை நடத்திக் கொண்டிருந்தார். அந்த உணவகத்தில் மலாயாவில் இருந்து படிக்கப் போன மலாய்க்கார மாணவர்கள் பலர் உணவருந்துவது வழக்கம். படிக்கும் காலகட்டத்தில் துங்குவிற்கு மன உலைச்சல் ஏற்படும் போது, அவர் வயலட் கால்சனைச் சந்திப்பார். மனம் விட்டுப் பேசுவார். சமயங்களில் இருவரும் கேளிக்கை நிலையங்களுக்கும் செல்வார்கள்.

அரசு சேவை

தொகு

1930 இல், தனது சட்டத் தேர்வில் மூன்று தாட்களில் தேர்ச்சி அடைந்த துங்கு, நான்காவது தாளில் மோசமான முடிவைப் பெற்றார். வருத்தத்துடன் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் வயலட் கால்சனைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால், கெடா மன்னர்களின் பாரம்பரியம், அரச பரம்பரையைச் சாராத ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கவில்லை.

ஏப்ரல் 1931 இல், துங்கு கெடா அரசு சேவையில் சேர்ந்து அலோர் ஸ்டார் சட்ட ஆலோசகர் அலுவலகத்தில் ஒரு பயிற்சி அதிகாரியானார். சில மாதங்களுக்குப் பின்னர், கூலிம் உதவி மாவட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஓர் ஆண்டு கழித்து, 1932 இல் பாடாங் தெராப் மாவட்டத்தின் மாவட்ட அதிகாரியானார்.[13]

கோலா நெராங் சிறுநகரில் இருந்து தன் மாவட்டத்தைக் கால் நடையாகவும் யானை சவாரிகள் மூலமாகவும் சுற்றிப் பார்த்து, மக்களின் குறைகளைக் கண்டறிந்தார். தன் மாவட்டத்தில் மலேரியா கொசு ஒழிப்பு திட்டத்தை அமல்படுத்தினார். சுகாதார நிலைமைகளைச் சீர் செய்வதில் அக்கறை காட்டினார். ஆனால், அவருடைய திட்டங்கள் முழுமையாக வெற்றி அடையவில்லை.

மரியம் சோங் அப்துல்லா

தொகு

1933 இல் அலோர் ஸ்டாரில் ஈய வணிகராக இருந்த சோங் ஆ யோங் (ஆங்கில மொழி: Chong Ah Yong) எனும் சீனரின் மகளை துங்கு திருமணம் செய்து கொண்டார்.[14] அவருடைய பெயர் சோங் ஆ மேய் (ஆங்கில மொழி: Chong Ah Mei). சீன சயாமிய இரத்தக் கலவையைக் கொண்ட இவர், பின்னர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவி மரியம் சோங் அப்துல்லா (ஆங்கில மொழி: Meriam Chong Abdullah) என பெயரை மாற்றிக் கொண்டார். ஓராண்டு கழித்து கத்திஜா எனும் பெண் மகவைப் பெற்றார்கள். அடுத்த ஆண்டு துங்கு நெராங் எனும் மகன் பிறந்தார்.

கோலா நெராங் சிறுநகரின் தாக்கத்தினால் தன்னுடைய மகனுடைய பெயரில் நெராங் எனும் சொல்லையும் துங்கு இணைத்துக் கொண்டார். இரண்டாவது பிள்ளையைப் பெற்ற 33வது நாளில் மரியம் சோங் அப்துல்லாவிற்கு மலேரியா காய்ச்சல் கண்டது. அவருக்குப் பினாங்கில் சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அப்போது, அலோர் ஸ்டாருக்கு வருகை புரிந்த ஓர் ஆங்கிலேய மருத்துவரும் மரியம் சோங் அப்துல்லாவிற்கு சிகிச்சை செய்தார்.

வயலட் கால்சன் சிங்கப்பூர் வருகை

தொகு

அந்த மருத்துவர் நீர்ப்பு இல்லாத குயினைன் மருந்தை மரியம் சோங் அப்துல்லாவின் உடலுக்குள் செலுத்தியதால் அவர் உயிர் துறந்தார் என்று சொல்லப்படுகிறது. மனைவியின் இறப்பைப் பற்றி துங்கு அதிகாரப்பூர்வமாகக் குற்ற அறிக்கை எதையும் சமர்ப்பிக்கவில்லை.[15] அதற்குப் பதிலாக, கோலா நெராங் பகுதியில் மலேரியா கொசு ஒழிப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கித் தருமாறு கெடா மாநிலச் செயலகத்தைக் கேட்டுக் கொண்டார்.

முன்பு அவர் நிதியுதவி கேட்ட போது மறுக்கப்பட்டது. அது வேறு செய்தி. மரியம் சோங் அப்துல்லாவின் இறப்பிற்குப் பின்னர்தான், கோலா நெராங் பகுதியில் மலேரியா கொசு ஒழிப்பு திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் மரியம் இறந்து போனதைக் கேள்விப்பட்ட வயலட் கால்சன் சிங்கப்பூருக்கு வந்தார். இங்கேதான் துங்குவின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. இங்கிலாந்தில் அவர் படிக்கும் போது வயலட் கால்சனைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

கெடா அரச பரம்பரை

தொகு

ஆனால், கெடா மன்னர்களின் பாரம்பரியம், அரச பரம்பரையைச் சாராத ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்காது. அவருடைய திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. ஆனால், கெடா அரச பரம்பரையைச் சார்ந்த துங்கு, அதையும் தாண்டிப் போய் அரச பரம்பரையைச் சாராத ஒருவரைத் திருமணம் செய்து கொள்வது செல்லுபடி ஆகாது என்று கெடா மன்னர்களின் பாரம்பரியம் அறிவித்தது.

இருப்பினும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், வயலட் கால்சனைக் கெடா சுல்தானின் அனுமதி இல்லாமலேயே இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். இது அரச பரம்பரையை வேதனையடையச் செய்தது. துங்குவின் சிற்றப்பா, கெடாவின் இளவரசராகப் பொறுப்பேற்கும் வரையில் வயலட் கால்சன் அரசக் குடும்ப உறுப்பினராகக் கருதப்ப்படவில்லை.

துங்கு - வயலட் கால்சன் திருமணம் அரச வட்டாரத்திலும் அத்தனைச் சிறப்பானதாகக் கருதப்படவில்லை. கெடா அரசாங்கத்தின் மூத்த அரசு அதிகாரிகள் அந்தத் திருமணத்தை வரவேற்கவில்லை. அரச பரம்பரையைச் சாராத ஒருவரைத் துங்கு திருமணம் செய்து கொண்டதை அவர்கள் ஒரு துரோகச் செயலாகக் கருதினர்.

லங்காவி தீவிற்குப் பணி மாற்றம்

தொகு

அதனால், துங்கு லங்காவி தீவிற்குப் பணி மாற்றம் செய்யப் பட்டார். அந்தக் காலகட்டத்தில் லங்காவி, ஓர் ஒதுக்குப் புறமான இடமாகக் கருதப்பட்டது. துங்கு லங்காவித் தீவில் தனிமைப்படுத்தப்பட்ட போதுதான் லங்காவி இளவரசி மசூரியைப் பற்றி ஒரு நாவல் எழுதினார்.

அவருடைய அந்த நாவல்தான் பின்னர், 1978 ஆம் ஆண்டு செம்மண் வயல்காட்டின் சாபம் (ஆங்கில மொழி: Sumpah Semerah Padi) எனும் தலைப்பில் ஒரு திரைப்படமாகவும், மசூரி எனும் தலைப்பில் ஒரு மேடை நாடகமாகவும் அரங்கேற்றம் கண்டன. இரண்டு வருடங்கள் லங்காவித் தீவில் இருந்தார். பின்னர், கோலா மூடா மாவட்டத்திற்கு மாவட்ட அதிகாரி எனும் பொறுப்பில் சுங்கை பட்டாணி நகருக்கு மாற்றம் செய்யப்பட்டார். நகர வாழ்க்கை அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும்,

கருத்து வேறுபாடுகள்

தொகு

மலாய்ச் சமுதாயம் அவர்களைச் சற்றே ஒதுக்கி வைத்தது. அதனால் துங்குவிற்கும் வயலட் கால்சனுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஆசிய வாழ்க்கை தமக்கு ஒத்து வராத நிலையில் 1937 ஆம் ஆண்டு, வயலட் கால்சன் தன் தாயகமான இங்கிலாந்திற்கே திரும்பிச் சென்றார். 1938 ஆம் ஆண்டு வயலட் கால்சனை மறுபடியும் லண்டனில் துங்கு சந்தித்துப் பேசினார். இருவருக்கும் ஒத்துப் போகாத நிலையில் 1946 இல் அவர்களின் திருமண முறிவு ஏற்பட்டது.

மக்களோடு மக்களாக

தொகு

கோலா மூடா மாவட்டத்தின் அதிகாரியாக இருந்த போது பொதுமக்களின் நலன்களைப் பேணிக் காப்பதில் அதிக அக்கறை காட்டினார். சுங்கை பட்டாணியில் இருந்த அவருடைய இல்லம், நகர மக்களுக்காகவும் கிராம மக்களுக்காகவும் எப்போதும் திறந்தே இருக்கும். யார் எப்போது வேண்டுமானாலும் அவரைக் கண்டு தங்களின் குறைகளைச் சொல்லலாம். உடனடியாகத் தன்னுடைய அதிகாரிகளை அழைத்து குறைகளை நிவர்த்தி செய்யச் சொல்லுவார்.

கிராமங்களுக்குச் சென்றால் சாமான்ய மக்களின் வீடுகளில் சமைக்கப்படும் உணவு என்றால் துங்குவிற்கு மிகவும் பிடிக்கும். கடைகளுக்குச் சென்றால் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து தேநீர், பலகாரங்கள் சாப்பிடுவார். அவர்களின் குறைகளைக் கண்டறிவார். அவர் ஒரு மாவட்ட அதிகாரியாக இருந்தும் தகுதி பார்க்காமல் பொதுமக்களுடன் சரிசமமாக அமர்ந்து பழகுவதை அனைவரும் அதிசயமாகப் பார்த்தனர். இத்தனைக்கும் துங்கு ஓர் அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.

சட்ட நடவடிக்கை

தொகு

பொதுமக்களுடன் அதிகமான நேரத்தைச் செலவு செய்ததால், அவருடைய அலுவலக வேலைகள் தேங்கிப் போவதும் உண்டு. அதனால் மேலதிகாரிகளின் கண்டனத்திற்கு ஆளாதும் உண்டு. மாநில அரசாங்கத்தின் குறைகளை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவிடும் பழக்கம் துங்குவிடம் இருந்தது. அப்போது மலாயா அரசாங்கம் ஆங்கிலேயர்களின் நிர்வாகப் பார்வையில் இருந்ததால், அவர்களால் துங்குவின் பட்டவர்த்தனமான குறைபாடுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அரசு நிர்வாகத்தைத் அவர் தொடர்ந்து குறை சொல்லி வந்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பலமுறை ஆங்கிலேயர்கள் சொல்லியும் பார்த்தார்கள். எச்சரிக்கையும் செய்தார்கள். கெடா அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால் ஆங்கிலேய நிர்வாகிகள், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தயங்கி நின்றனர்.

வாடகைக் கார்களின் உரிமங்கள்

தொகு

இந்தக் கட்டத்தில் ஆங்கிலேய நிர்வாகிககளின் கட்டளைகளையும் மீறி, சுங்கை பட்டாணியில் இருந்த பல வாடகைக் கார்களின் உரிமையாளர்களுக்கு உரிமங்களை துங்கு வழங்கினார். ஆங்கிலேயர்களுக்கு அது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகிவிட்டது. வாடகைக் கார்களின் உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; அதற்குப் பதிலாக அவர்கள் ஒரு வாடகைக் கார் நிறுவனத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு கட்டளையை ஆங்கிலேயர்கள் பிறப்பித்தனர்.

துங்கு மறுத்துவிட்டார். இது ஆங்கிலேயர்களுக்கு சினத்தை உண்டாக்கியது. அரசாங்கக் கொள்கைகளை மீறிய செயலாக அதைக் கருதினர். இருப்பினும், அவரைப் பணிநீக்கம் செய்யவோ அல்லது அவரை ராஜிநாமா செய்யச் சொல்லவோ தயங்கினர். கெடா அரச பரம்பரையைப் பகைத்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. அது மட்டும் அல்ல. சுங்கை பட்டாணியில் பொதுமக்கள் பெரிதும் விரும்பும் மனிதராகவும் துங்கு விளங்கினார்.

கூலிம் நகருக்கு மாற்றல்

தொகு

தீர்க்கமாக யோசித்து முடிவு செய்த ஆங்கிலேயர்கள், அவரை 24 மணி நேரத்தில் கூலிம் நகருக்குப் பணி மாற்றம் செய்தனர். ஆனால், துங்குவும் ஆங்கிலேயர்களும் எதிர்பார்க்காத வகையில், சுங்கை பட்டாணியில் இருந்த வாடகைக் கார் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை வரிசையாக அணிவகுப்புச் செய்து, 40 மைல் தொலைவில் இருந்த கூலிம் நகருக்கு துங்குவை அழைத்துச் சென்றனர்.

சுங்கை பட்டாணி வாழ் மக்கள் துங்குவின் மீது வைத்திருந்த மதிப்பு மரியாதை காரணமாகத்தான், பின்னர் 1955 இல், முதன் முறையாக கூட்டாட்சி தேர்தல் நடைபெற்ற போது, கோலா மூடாவைத் தன் தேர்தல் தொகுதியாகத் துங்கு தேர்வு செய்தார். மகத்தான வெற்றியும் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tunku Abdul Rahman (1903-1990), also called Bapa Kemerdekaan (Father of Independence) or Bapa Malaysia (Father of Malaysia)". Archived from the original on 2013-05-01. பார்க்கப்பட்ட நாள் 2013-04-28.
  2. "Tunku was tireless in his efforts to integrate the various races and work out compromises in order to maintain harmony". Archived from the original on 2010-10-27. பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.
  3. "The twenty-first son of Sultan Abdul Hamid Halim Shah, who reigned for 61 years". Archived from the original on 2013-07-07. பார்க்கப்பட்ட நாள் 2013-04-28.
  4. "Che' Menjalara; the daughter of Luang Nara Borirak, the Chief of Mataban in Thailand". Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-28.
  5. "Makche Menjelara, was the daughter of Luang Nara Boriraks, a Shan chieftain later a District Officer posted near Bangkok whose ancestors emigrated from Pegu, Burma". Archived from the original on 2013-07-07. பார்க்கப்பட்ட நாள் 2013-04-28.
  6. "The sixth of the Sultan's eight wives and his favorite until her death in 1941. Tunku was the sixth of her 12 children". Archived from the original on 2013-07-07. பார்க்கப்பட்ட நாள் 2013-04-28.
  7. He was the twentieth child of Sultan Abdul Hamid Halim Shah and Che Manjalara, the sultan’s fourth wife.
  8. "1913 - Taken by his eldest brother Tunku Yusuf to study at Debsurin School in Bangkok". Archived from the original on 2013-05-03. பார்க்கப்பட்ட நாள் 2013-04-28.
  9. Tunku Yusuf spent his time on military operations against bandits. In 1915, he contracted pneumonia in the jungle and died on his return to the Siamese capital.[தொடர்பிழந்த இணைப்பு]
  10. In 1911, little prince Abdul was sent to Debsirin School in Bangkok. He returned to Malaya in 1915 and resumed his studies at Penang Free School.
  11. "Tunku Abdul Rahman pursued his studies at St. Catherine's College, Universiti of Cambridge in 1920 with a scholarship from the Kedah State". Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-28.
  12. "After a long journey from Singapore onboard a cargo ship, during which he contracted malaria, Tunku arrives in the village of Little Stukeley". Archived from the original on 2013-05-03. பார்க்கப்பட்ட நாள் 2013-04-28.
  13. "In 1934, Tunku became District Officer of Padang Terap. Kuala Nerang was in the midst of a malaria epidemic". Archived from the original on 2011-08-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-02.
  14. Lady Meriam was the daughter of a tin mining tycoon, Chong Ah Yong, in Thailand. She was of Thai Chinese heritage but converted to Islam upon marriage to Tunku in 1933.
  15. "An English doctor from Alor Setar who visited her mistakenly gave her an injection of undiluted quinine that killed her instantly". Archived from the original on 2013-06-28. பார்க்கப்பட்ட நாள் 2013-06-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துங்கு_அப்துல்_ரகுமான்&oldid=3902563" இலிருந்து மீள்விக்கப்பட்டது