நெகிரி செம்பிலான்

மலேசிய மாநிலம்

நெகிரி செம்பிலான் நெகிரி மலாய்: Nogoghi Sombilan, Nismilan; மலாய்: Negeri Sembilan; ஆங்கிலம்: Negeri Sembilan; சீனம்: 森美兰州) என்பது மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றாகும். மலேசியத் தீபகற்பத்தின் கிழக்கு கடல் கரையில் அமைந்து உள்ள இந்த மாநிலம் மலேசியாவில் ஐந்தாவது பெரிய மாநிலம் ஆகும்.

நெகிரி செம்பிலான்
Negeri Sembilan Darul Khusus
نݢري سمبيلن دار الخصوص
நெகிரி செம்பிலான்-இன் கொடி
கொடி
நெகிரி செம்பிலான்-இன் சின்னம்
சின்னம்
பண்: ஆட்சியாளரை ஆசீர்வதிக்கவும்
Bless the Great Ruler of Negeri Sembilan
      நெகிரி செம்பிலான் in       மலேசியா
      நெகிரி செம்பிலான் in       மலேசியா
ஆள்கூறுகள்: 2°45′N 102°15′E / 2.750°N 102.250°E / 2.750; 102.250
தலைநகர்சிரம்பான்
அரச நகரம்செரி மெனாந்தி
அரசு
 • வகைமக்களாட்சி
 • யாங் டி பெர்துவான் பெசார்யாம் துவான் பெசார் துவாங்கு முக்ரிஸ்
(Muhriz of Negeri Sembilan)
 • மந்திரி பெசார்அமினுடின் அருண்
(Aminuddin Harun)
பாக்காத்தான்
பரப்பளவு
 • மொத்தம்6,686 km2 (2,581 sq mi)
உயர் புள்ளி
1,462 m (4,796 ft)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்10,98,500
மனித வளர்ச்சிக் குறியீடு
 • HDI (2019)0.829 (very high) (5th)
மலேசிய அஞ்சல் குறியீடு
70xxx to 73xxx
மலேசியத் தொலைபேசி எண்06
மலேசிய பதிவெண்கள்N
மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் இணைவு1895
மலாயாவில் ஜப்பானியர்1942
மலாயா கூட்டமைப்புடன் இணைவு1948
இணையதளம்http://www.ns.gov.my

நெகிரி செம்பிலான் என்றால் மலாய் மொழியில் ஒன்பது மாநிலங்கள் என்று பொருள். நெகிரி (Negeri) என்றால் மாநிலம்; செம்பிலான் (Sembilan) என்றால் ஒன்பது என பொருள்படும்.

சிரம்பான் மாவட்டத்தில் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பான் உள்ளது. கோலா பிலா மாவட்டத்தில் அரச நகரமான செரி மெனாந்தி உள்ளது. மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்கள் போர்டிக்சன், பகாவ், கோலா பிலா மற்றும் நீலாய்.

பொது

தொகு

சொற்பிறப்பியல்

தொகு

நெகிரி செம்பிலான் என்ற பெயர் நெகிரி செம்பிலானில் உள்ள ஒன்பது மாவட்டத் தலைமைத்துவங்களில் இருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்தத் தலைமைத்துவங்கள் நோகோகி (Nogoghi) என்று அழைக்கப்படுகின்றன. அவற்றின் தலைவர்கள் உண்டாங் என்று அழைக்கப்படுகிறார்கள். உள்ளூர் பேச்சுவழக்கில் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைமைத்துவமும் லுவாக் என்று அழைக்கப்படுகிறது. மினாங்கபாவு மக்கள் மாநிலத்தின் முதல் குடியேறிகள்.

நிலவியல்

தொகு

நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு வடக்கே சிலாங்கூர், பகாங் மாநிலங்கள்;. தெற்கே மலாக்கா, ஜொகூர் மாநிலங்கள்; மேற்கே மலாக்கா நீரிணை எல்லைகளாக உள்ளன. மலாக்கா நீரிணைக்கு அடுத்து இந்தோனேசிய தீவான சுமத்திரா உள்ளது. அதற்கு அடுத்து இந்திய பெருங்கடல் பரவி உள்ளது.

நெகிரி செம்பிலான் பல்வேறு வெப்பமண்டல மழைக்காடுகளையும்; பூமத்திய ரேகை காலநிலையையும் கொண்டுள்ளது. மாநிலத்தின் மலைத்தொடர்கள் தித்திவாங்சா மலைத்தொடர்களைச் சேர்ந்தவை.

தித்திவாங்சா மலைகள், தெனாசெரிம் மலைகளின் தெற்குப் பகுதியில் இருந்து தொடங்குகின்றன. தெனாசிரிம் மலைத்தொடர் தெற்கு மியான்மர், தெற்கு தாய்லாந்து மற்றும் தீபகற்ப மலேசியா முழுவதும் பரவியுள்ளது. பெசார் அந்து மலை நெகிரி செம்பிலானில் உள்ள மிக உயரமான மலையாகும். தித்திவாங்சா மலைகள், நெகிரி செம்பிலானுக்கு தெற்கே அமைந்துள்ள தம்பின் மலையில் முடிவடைகின்றன.

வரலாறு

தொகு

பண்டைய இடைக்கால வரலாறு

தொகு

நெகிரி செம்பிலான் செலுபு மாவட்டம் சிம்பாங் பெர்த்தாங்கில் மிகப் பழைமையான சுண்ணாம்புக் குகைகளின் வளாகம் உள்ளது. இதை பாசோ குகைகளின் வளாகம் என்று அழைக்கிறார்கள். இங்கு 14,000 ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கக்கால மனித குடியேற்றம் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. குகைகளைச் சுற்றிலும் சில கலைப்பொருட்கள்; கல் கருவிகள் மற்றும் எஞ்சிய உணவு கழிவுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.[2]

கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு அடிப்படையில் கிமு 12,000-இல் கல்லான கருவிகள் அங்கு பயன்படுத்தப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நெகிரி செம்பிலானின் பிற தொடக்கக்கால மக்களான, செமலாய், செமாய், செமாங், ஜக்குன் மக்களின் மூதாதையர்கள்; அங்கு வேட்டையாடும் நாடோடிகளாக அல்லது வாழ்வாதார விவசாயிகளாக வாழ்ந்துள்ளனர்.

மலாக்கா துறைமுக நகரம்

தொகு

செஜாரா மெலாயு வரலாற்றின் படி, மலாக்கா பரமேசுவரா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான் பகுதியில் உள்ள செனிங் உஜோங் குடியேற்றத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. சுமாத்திராவைச் சேர்ந்த மினாங்கபாவு மக்கள் 15-ஆம் நூற்றாண்டில் மலாக்கா சுல்தானகத்தின் பாதுகாப்பிலும், பின்னர் ஜொகூர் சுல்தானகத்தின் பாதுகாப்பிலும் இன்றைய நெகிரி செம்பிலானில் குடியேறினர். அடாட் பெர்பாத்தே எனப்படும் அவர்களின் தாய்வழி வழக்கத்தையும் அவர்களுடன் கொண்டுவந்து உள்ளூர் வழக்கமாக மாற்றினர்.[3]

மலாக்கா சுல்தானகத்தின் காலத்திலிருந்து, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள லிங்கி ஆறு, மூவார் ஆறு ஆகிய இரு ஆறுகளும் முக்கிய வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டன. லிங்கி ஆறு, சுங்கை ஊஜோங்கின் ஈயம் நிறைந்த பகுதிகளை மலாக்கா துறைமுக நகரத்துடன் இணைத்தது; மூவார் ஆறு, கிழக்கே செர்த்திங் ஆறு வழியாக பகாங் ஆற்றுடன் இணைந்து, மலாக்கா துறைமுகத்திற்குச் செல்லும் பாதையை உருவாக்கியது.

மினாங்கபாவு மக்கள்

தொகு
 
நெகிரி செம்பிலானில் தற்போது உள்ள லுவாக் உண்டாங் தொகுதிகள்

இந்தோனேசியாவில் இருந்து 18-ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசியாவின் மினாங்கபாவு (Minangkabau) இனத்தவர்கள், இந்தோனேசியா மேற்கு சுமாத்திராவின் மலையபுரம் நிலப்பகுதியில் இருந்து; மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்தனர். அவர்கள் ரெம்பாவ்; செரி மெனாந்தி, நானிங்; செம்போல் பகுதிகளில் புதுக் குடியேற்றங்களை உருவாக்கினார்கள். அடுத்து உண்டாங் எனும் ஒரு புது நிர்வாகத் தலைவர் ஆட்சியையும் தோற்றுவித்தார்கள்.

இவர்களின் மன்னராட்சி முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சற்று மாறு பட்டு இருக்கிறது. ஒரு மன்னரின் மகன் வாரிசாக அமையாமல் ஒரு மாவட்டத்தின் தலைவர் மன்னராகப் பிரகடனம் செய்யப் படுவதே இந்த மாநிலத்தில் காணப்படும் சிறப்புத் தன்மை ஆகும்.

யாங் டி பெர்துவான் பெசார்

தொகு

நெகிரி செம்பிலான் மாநிலம் நான்கு மாவட்டப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. சுங்கை ஊஜோங் மாவட்டம், ஜெலுபு, ஜொகூல் மாவட்டம், ரெம்பாவ் மாவட்டம் என நான்கு பிரிவுகள். இந்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைவர் இருக்கின்றார்.

அந்தத் தலைவரை உண்டாங் (Undang) என்று அழைக்கிறார்கள். மாநிலத்தின் மன்னர் பதவி காலியாகும் போது நான்கு மாவட்டத் தலைவர்களும் ஒன்று கூடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய ஒருவரை மன்னராகத் தெரிவு செய்கின்றனர்.

அப்படி தெரிவு செய்யப் படும் மன்னர், சுல்தான் என அழைக்கப் படுவது இல்லை. அதற்குப் பதிலாக யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்று அழைக்கப் படுகின்றார். அவரின் பெயருக்கு முன் யாம் துவான் பெசார் (Yam Tuan Besar) எனும் உயர் அழைப்புச் சொல் பயன்படுத்தப் படுகிறது.

பூகிஸ் படையெடுப்பு

தொகு

15-ஆம் நூற்றாண்டில் மினாங்கபாவு இனத்தவர் சுமத்திராவில் இருந்து மலேசியாவில் குடியேறினர். அவர்களுக்கு மலாக்கா சுல்தான்கள் பாதுகாப்பு வழங்கினர். மலாக்கா சுல்தான்களுக்குப் பின்னர் ஜொகூர் சுல்தான்கள் உதவி வழங்கினர்.

அந்தக் காலக்கட்டத்தில் சுமத்திராவில் இருந்து வந்த பூகிஸ் எனும் மற்றோர் இனத்தவர் ஜொகூரின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். அதனால் ஜொகூர் ஆட்சி பலகீனம் அடைந்தது.

ஆகவே, நெகிரி செம்பிலானில் வாழ்ந்து வந்த மினாங்கபாவுகள் தங்களின் சொந்த சுமத்திரா சுல்தானின் உதவியைக் கோரினர். அப்போது சுமத்திராவில் மினாங்கபாவ்களுக்கு சுல்தான் அப்துல் ஜாலில் என்பவர் சுல்தானாக இருந்தார்.[4][5]

மாநிலத்தின் வரலாற்று காலவரிசை

தொகு
வரலாற்று இணைப்புகள் காலம்
மலாக்கா சுல்தானகம் 1400–1511
  ஜொகூர் சுல்தானகம் 1528–1773
நெகிரி செம்பிலான் (முதல் அமைவு) 1773- 19-ஆம் நூற்றாண்டு
செரி மெனாந்தியின் கூட்டமைப்பு 1889–1895
  நெகிரி செம்பிலான் (நவீன) 1895–தற்போது
  மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் 1895–1941
  ஜப்பான் பேரரசு 1942–1945
  மலாயா ஒன்றியம் 1946–1948
  மலாயா கூட்டமைப்பு 1948–1963
  மலேசியா 1963–தற்போது வரையில்

இராஜா மெலேவார்

தொகு
 
இராஜா மெலேவார்

நெகிரி செம்பிலான் மினாங்கபாவ் மக்களுக்கு உதவி செய்ய இராஜா மெலேவார் (Raja Mahmud ibni Almarhum Sultan Abdul Jalil) என்பவர் சுமத்திராவில் இருந்து அனுப்பப் பட்டார்.[6] ஆனால், இராஜா மெலேவார் வந்த போது இராஜா காத்திப் (Raja Khatib) என்பவர் தன்னைத் தானே மன்னராகப் பிரகடனம் செய்து கொண்டு ஆட்சியில் இருந்தார்.

சினம் அடைந்த இராஜா மெலேவார், இராஜா காத்திப் மீது போர் பிரகடனம் செய்தார். போர் நடந்தது. அதில் இராஜா மெலேவார் வெற்றியும் பெற்றார். உடனே ஜொகூர் சுல்தான் புதிய ஆட்சியாளரான யாம் துவான் பெசார் இராஜா மெலேவாரை அங்கீகரித்து புதிய யாங் டி பெர்துவான் பெசாராக அறிவித்தார். யாங் டி பெர்துவான் பெசார் என்றால் எல்லா மாநிலங்களுக்கும் தலைவர் என்று பொருள். இது 1773-இல் நடந்த நிகழ்ச்சி.[7]

இராஜா மெலேவார் இறந்ததும் அரியணைப் போட்டி தீவிரமானது. சிலர் தங்களைத் தலைவர்களாகப் பிரகடனம் செய்து கொண்டனர். அதனால், நெகிரி செம்பிலானில் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில் பிரித்தானியர்கள் நெகிரி செம்பிலான் ஆட்சியில் தலையிட்டனர்.

பிரித்தானிய ஆளுமை

தொகு
 
1949-ஆம் ஆண்டு மலாயா கூட்டமைப்பின் 5 டாலர் அஞ்சல் முத்திரை

பிரித்தானியர்களின் முதலீடுகளைப் பாதுகாக்கப் பிரித்தானியர்களுக்குச் சகல உரிமைகளும் உள்ளன எனும் காரணங்ளைச் சொல்லி சுங்கை ஊஜோங் உள்நாட்டுக் கலகத்தில் தலையிட்டனர். அதன்படி 1873-இல் சுங்கை ஊஜோங் மாவட்டம் பிரித்தானியர்களின் பாதுகாப்பின் கீழ் வந்தது.

சுங்கை ஊஜோங் மாவட்டத்திற்கு பிரித்தானிய கண்காணிப்பாளர் (British Resident) நியமிக்கப் பட்டார். 1886-இல் ஜெலுபு மாவட்டம் பிரித்தானியர்களின் ஆளுமையின் கீழ் வந்தது. இதர ஜொகூல், ரெம்பாவ் மாவட்டங்கள் 1897-இல் பிரித்தானியர்களின் கைகளுக்கு மாறின.

நெகிரி செம்பிலான் மாநிலத்தை ஜப்பானியர்கள் 1941-ஆம் ஆண்டில் இருந்து 1945-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். நெகிரி செம்பிலான் மாநிலம் 1948-இல் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் அமைப்பில் இணைந்தது. பின்னர் 1963-இல் மலேசியா கூட்டமைப்பு உருவானதும் அதில் ஒரு மாநிலமாக உறுப்பியம் பெற்றது.[8]

கலாசாரம்

தொகு
 
சிரம்பானில் ஒரு முக்கிய சாலை

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மினாங்கபாவு கலாசாரமே முதன்மை வகிக்கின்றது. மினாங்கபாவ் கலாசாரம் சுமத்திராவின் பகாருயோங் எனும் மலையபுர இராச்சியத்தில் இருந்து வந்ததாகும்.[9] மினாங்கபாவ் என்பது மெனாங் கெர்பாவ் (Menang Kerbau) எனும் மலாய்ச் சொல்லில் இருந்து வந்தது. மெனாங் (Menang) என்றால் வெற்றி. கெர்பாவ் (Kerbau) என்றால் எருமை என்று பொருள்படும். வெற்றி பெறும் எருமை என்று பொருள் படுகிறது.[10]

மினாங்கபாவு இனத்தவரின் வீட்டுக் கூரைகள் மிக அழகாகவும், ஒய்யாரமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கும். அவர்களின் கட்டிடக்கலை தனித்தன்மை வாய்ந்தது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பெரும்பாலான வீடுகள் மினாங்கபாவு கலாசாரப் பின்னணியைக் கொண்டவை. அதே அமைப்பில் சிரம்பான் நகராண்மைக் கழக இல்லம், மாநில இல்லம், மாநில அரும்பொருள் காட்சியகம் போன்றவை கட்டப்பட்டுள்ளன.

மினாங்கபாவு கலாசாரம்

தொகு
 
சிரம்பான் இரயில் நிலையம்

மினாங்கபாவு கலாசாரத்தின்படி ஆண்களைவிட, பெண்களுக்குத்தான் முதன்மையும் முக்கியத்துவமும் வழங்கப்படுகின்றன.[11] பெண்களிடம் ஆண்கள் பணிந்து போக வேண்டும். அதற்கு அடாட் பெர்பாத்தே (Adat Perpatih) என்று பெயர்.[12] இது மிகவும் பழமை வாய்ந்த பண்பு வழக்கம் ஆகும்.

பல நூற்றாண்டுகளாகப் 'பெண்மைக்கு முதன்மை' எனும் பழக்க வழக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.[13] சமூக குடும்ப நிகழ்ச்சிகள், சமூகக் கலாசார ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பெண்களுக்குத்தான் முதல் வாய்ப்புகள். பெண்களை முன்னுநிலைப் படுத்தி, ஆண்கள் அவர்களுக்குத் துணையாக இருப்பார்கள்.[14]

மினாங்கபாவு பெண்கள்

தொகு
 
சிரம்பான் சமூகச் சேவையாளர் டாக்டர் கிருஷ்ணன் பெயரில் ஒரு சாலை.

பெண்களுக்கு முதன்மைத் தன்மை வழங்கப்படுவதை மாற்றி அமைக்க, மலேசியாவில் பிரித்தானியர்களும், இந்தோனேசியாவில் டச்சுக்காரர்களும், பெரும் முயற்சி செய்தார்கள். இருப்பினும் வெற்றி பெற முடியவில்லை. மினாங்கபாவு மக்களுடன் ஆழமாய்க் கலந்துவிட்ட அந்தக் கலாசாரத்தை மாற்றி அமைக்க அவர்களால் முடியவில்லை.[15]

பொதுவாக, மினாங்கபாவு பெண்கள் தங்களின் கணவர்களை அவ்வளவு எளிதில் விவாகரத்துச் செய்யவிட மாட்டார்கள். விவாகரத்து என்பது ஒரு தப்பான செயல் என்று மினாங்கபாவு பெண்கள் கருதுகின்றனர். இந்தக் கலாசாரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தில், இன்னும் பரவலாக இருந்து வருகிறது.

தமிழ்-மினாங்கபாவு குடும்பங்கள்

தொகு
 
சிரம்பான் மகா மாரியம்மன் சாலை

அண்மைய காலங்களில் அந்த நிலைமை மாறி விட்டது. மேற்கத்திய கலாசாரத்தின் ஊடுருவல்களால் விவாகரத்து என்பது சாதாரணமாகி வருகிறது. தமிழர்கள் பலர் மினாங்கபாவு பெண்களைத் திருமணம் செய்துள்ளனர்.

கோலா பிலா, பகாவ், செலுபு போன்ற இடங்களில் தமிழ் - மினாங்கபாவு குடும்பங்களைப் பார்க்கலாம். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பலர் வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, கணினித்துறை வல்லுநர்களாகப் பணி செய்கின்றனர். இவர்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.

சின்ன வயதிலேயே தமிழர்கள் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சற்றுக் கூடுதலாக உள்ளது. அப்படி திருமணம் செய்து கொள்ளும் பலருக்கு முறையான பதிவுகள் இல்லை. பெரும்பாலான இளம் தம்பதியினர் சிரம்பான் நகருக்கு குடிபெயர்கின்றனர். இது ஒரு சமுதாய பிரச்னையாகவும் மாறி வருகின்றது.[16]

காலநிலை

தொகு

நெகிரி செம்பிலான் மாநிலம் கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் கீழ் பூமத்திய ரேகை காலநிலையைக் கொண்டு உள்ளது. ஆண்டு முழுவதும் மழை பெய்யும்; மேலும் வெப்பமாகவும் ஈரப் பதமாகவும் இருக்கும். இடியுடன் கூடிய கனத்த மழை பெரும்பாலும் ஆண்டுக்கு இரண்டு முறை ஏற்படும். அத்துடன் மாற்றத்தின் போது பருவமழை மிக அதிகமாக இருக்கும்.

வறண்ட பருவநிலை முதல் பருவமழை மாற்றத்தின் போது ஏற்படுகிறது; அதாவது ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அந்த வறண்ட பருவநிலை நீடிக்கிறது.

 
சிரம்பான் நகரில் பொதுமக்கள் உடற்பயிற்சிகள் செய்வதற்கான ஏரிப்பூங்கா

தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று

தொகு

மேலும் தென்மேற்கு இந்திய-ஆஸ்திரேலிய பருவமழைகள் கொண்டு வரும் ஈரப்பதத்தை; சுமாத்திராவில் உள்ள பாரிசான் மலைகள் தடுத்து விடுகின்றன. இதனால் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கிழக்கு கடற்கரையில் மழைக்கால நிலைமையிலும் மாற்றம் ஏற்படுகிறது.

வடகிழக்கில் இருந்து வீசும் போர்னியோ-ஆஸ்திரேலிய பருவமழையில், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மற்றும் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக்கரை கடலோர மாநிலங்களான கிளாந்தான், திராங்கானு மற்றும் பகாங் ஆகியவை பருவமழையின் எழுச்சியால் மிகவும் பாதிக்கப்படுகின்றன; அத்துடன் தென் சீனக் கடலில் கடல் சீற்றமும் ஏற்படுகிறது.


தட்பவெப்ப நிலைத் தகவல், சிரம்பான்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30.9
(87.6)
31.7
(89.1)
32.5
(90.5)
32.2
(90)
31.7
(89.1)
31.3
(88.3)
31.1
(88)
30.9
(87.6)
31.2
(88.2)
31.2
(88.2)
31.0
(87.8)
31.0
(87.8)
31.39
(88.51)
தினசரி சராசரி °C (°F) 26.6
(79.9)
27.2
(81)
27.7
(81.9)
27.8
(82)
27.5
(81.5)
27.1
(80.8)
26.9
(80.4)
26.8
(80.2)
26.9
(80.4)
27.0
(80.6)
26.9
(80.4)
26.8
(80.2)
27.1
(80.78)
தாழ் சராசரி °C (°F) 22.3
(72.1)
22.7
(72.9)
22.9
(73.2)
23.4
(74.1)
23.4
(74.1)
23.0
(73.4)
22.7
(72.9)
22.8
(73)
22.7
(72.9)
22.8
(73)
22.9
(73.2)
22.6
(72.7)
22.85
(73.13)
பொழிவு mm (inches) 114
(4.49)
110
(4.33)
178
(7.01)
232
(9.13)
180
(7.09)
119
(4.69)
127
(5)
143
(5.63)
158
(6.22)
237
(9.33)
252
(9.92)
193
(7.6)
2,043
(80.43)
ஆதாரம்: Climate-Data.org[17]

அரசியலமைப்பு

தொகு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டத் திட்டங்கள் 1959 மார்ச் 26=இல் அமலுக்கு வந்தன. அதன்படி யாங் டி பெர்துவான் பெசார் என்பவர் மாநிலத்தின் ஆட்சியாளராக இயங்குவார். அவர்தான் மாநிலத்தின் மன்னர்.

தற்சமயம் மாட்சிமிகு நெகிரி செம்பிலான் துவாங்கு முகிரிஸ் மாநில மன்னராக விளங்குகின்றார். அவருக்கு முன்பு துங்கு ஜாபார் துவாங்கு அப்துல் ரகுமான் மன்னராக இருந்தார். இவர் 27 டிசம்பர் 2008-இல் இயற்கை எய்தினார்.

ஆட்சியாளர் தேர்வு முறை

தொகு

நெகிரி செம்பிலானில் அதன் ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப் படும் முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மாறுபட்டு உள்ளது. மாநிலத்தின் உள்ள உண்டாங் எனும் மாவட்டத் தலைவர்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்கின்றனர். மாவட்டத் தலைவர்களை உண்டாங் என்று அழைக்கின்றனர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நான்கு உண்டாங்குகளுக்கு மட்டுமே ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் உரிமை உண்டு. அந்த நான்கு உண்டாங்குகள்:

 • சுங்கை ஊஜோங் உண்டாங்
 • ஜெலுபு உண்டாங்
 • ஜொகூல் உண்டாங்
 • ரெம்பாவ் உண்டாங்

ஆட்சியாளர்த் தேர்வில் உண்டாங்குகள் வாக்கு அளிக்கலாம். ஆனால், அவர்கள் ஆட்சியாளர் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது. நெகிரி செம்பிலானின் ஆட்சியாளர் தேர்தலில் நிற்க வேண்டுமானால் அவர் ஒரு மலாய்க்கார ஆணாக இருக்க வேண்டும். ராஜா ராடின் இப்னி ராஜா லெங்காங் பாரம்பரியத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

நெகிரி மாநிலச் சட்டமன்றம்

தொகு
 
விசுமா நெகிரி, சிரம்பான்
 
செரி மேனாந்தி அரண்மனை

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவில் மந்திரி பெசார் மற்றும் பத்து உறுப்பினர்கள் உள்ளனர். மாநில ஆட்சிக்குழுவின் தலைவராக இருப்பவர் மந்திரி பெசார். நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் என்பது நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் 36 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவின் மற்ற உறுப்பினர்களும் யாங் டி பெர்துவான் பெசாரால் நியமிக்கப் படுகின்றனர். மாநிலத்தின் தற்போதைய மந்திரி பெசார் அமினுடின் அருண் ஆவார்.

2023-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தல்

தொகு

நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், சிரம்பான், விசுமா நெகிரி (Wisma Negeri) சட்டமன்ற வளாகத்தில் நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டப் பேரவை கூடுகிறது. நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கு அவைத்தலைவர் (Speaker) தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார்.

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணியின் தலைமையில் மாநில அரசாங்கம் அமைக்கிறது. பின்னர் மந்திரி பெசார், நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு எனும் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார்.

 
இணைப்பு கூட்டணி/கட்சி தலைவர் நிலைப்பாடு இடங்கள்
2023 தேர்தல் தற்போது
    
    
பாக்காத்தான் அரப்பான்
பாரிசான் நேசனல்
அமினுடின் அருண் அரசாங்கம் 31 31
     பெரிக்காத்தான் நேசனல் ரிசுவான் அகமட் எதிரணி 5 5
அரசு பெரும்பான்மை 26 26

மாநிலத் துறைகள்

தொகு
 
2023 மக்களவை தொகுதிகள்
 
நெகிரி செம்பிலான் கிராமத்து வீடு
 
பழைய நெகிரி செம்பிலான் அரசு மாளிகை
 • நெகிரி செம்பிலான் மாநில நிதி அலுவலகம்
 • நெகிரி செம்பிலான் பொதுப்பணித்துறை[18]
 • நெகிரி செம்பிலான் நிலங்கள் மற்றும் சுரங்க அலுவலகம்
 • நெகிரி செம்பிலான் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை
 • நெகிரி செம்பிலான் மாநில வனவியல் துறை[19]
 • நெகிரி செம்பிலான் மாநில விவசாயத் துறை
 • நெகிரி செம்பிலான் சமூக நலத்துறை[20]
 • நெகிரி செம்பிலான் நகரம் மற்றும் நாடு திட்டமிடல் துறை
 • நெகிரி செம்பிலானின் கால்நடை மருத்துவச் சேவைகள் துறை
 • நெகிரி செம்பிலான் மாநில முப்தி துறை[21]
 • நெகிரி செம்பிலான் மாநில இசுலாமிய மத விவகாரத் துறை
 • நெகிரி செம்பிலான் சிரியா நீதித்துறை

மாநில அரசு சார்ந்த அமைப்புகள்

தொகு
 • நெகிரி செம்பிலான் மாநில இசுலாமிய மத மன்றம் (MAINS)[22]
 • நெகிரி செம்பிலான் மாநில அருங்காட்சியக மன்றம் (LMNS)
 • நெகிரி செம்பிலான் பொது நூலகக் கழகம் (PPANS)[23]
 • நெகிரி செம்பிலான் அறக்கட்டளை (YNS)[24]
 • நெகிரி செம்பிலான் மாநில வளர்ச்சிக் கழகம் (PKNNS)[25]

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மாவட்டங்கள்

தொகு

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மொத்தம் 7 மாவட்டங்கள் உள்ளன. அவை 61 முக்கிம்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

 1. சிரம்பான் மாவட்டம்
 2. போர்டிக்சன் மாவட்டம்
 3. ரெம்பாவ் மாவட்டம்
 4. செலுபு மாவட்டம்
 5. கோலா பிலா மாவட்டம்
 6. செம்போல் மாவட்டம்
 7. தம்பின் மாவட்டம்
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மாவட்டங்கள்
 
எண் மாவட்டம் இடங்கள் பரப்பளவு (கி.மீ2) முக்கிம் உள்ளூர் அரசாங்க நிலை[26]
1 சிரம்பான் மாவட்டம் சிரம்பான் 935.02 அம்பாங்கான், லாபு, லெங்கெங், பந்தாய், ராசா, ரந்தாவ், சிரம்பான் மாநகரம், செத்துல் சிரம்பான் மாநகராட்சி[27]
2 போர்டிக்சன் மாவட்டம் போர்டிக்சன் 572.35 ஜிம்மா, லிங்கி, பாசிர் பாஞ்சாங், போர்டிக்சன், சிருசா Municipality[28]
3 ரெம்பாவ் மாவட்டம் ரெம்பாவ் 415.12 பத்து அம்பார், போங்கேக், செம்பாங், செங்காவ், காடோங், குந்தூர், லெகாங் ஈலிர், லெகாங் உலு, மிக்கு, நெரசாவ், பெடாஸ், பிலின், செலிமாக், செமர்போக், செப்ரி, தஞ்சோங் கிலிங், தித்தியான் பிந்தாங்கோர் மாவட்ட ஊராட்சி[29]
4 செலுபு மாவட்டம் கோலா கெலாவாங் 1,349.89 கிளாமி லெமி, கெனாபோய், கோலா கெலாவாங், பெராடோங், பெர்த்தாங், திரியாங் ஈலிர், உலு கெலாவாங், உலு திரியாங் மாவட்ட ஊராட்சி[30]
5 கோலா பிலா மாவட்டம் கோலா பிலா 1,090.40 அம்பாங் திங்கி, ஜொகூல், சுவாசே, கெப்பிஸ், லங்காப், பாரிட் திங்கி, பிலா, செரி மெனாந்தி, தெராச்சி, உலு செம்போல், உலு முவார் மாவட்ட ஊராட்சி[31]
6 செம்போல் மாவட்டம் செம்போல் நகரம் 1,490.87 ஜெலாய், கோலா செம்போல், ரொம்பின், செர்த்திங் ஈலிர், செர்த்திங் உலு நகராட்சி[29]
7 தம்பின் மாவட்டம் தம்பின் 878.69 ஆயர் கூனிங், கெமிஞ்சே, கெரு, ரெப்பா, தம்பின்தெங்கா, தெபோங்
சுயாட்சியான துணை மாவட்டம்: கிம்மாஸ்
District council[32]

மக்கள் தொகை

தொகு
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1970 4,81,563—    
1980 5,51,442+14.5%
1991 6,92,897+25.7%
2000 8,29,774+19.8%
2010 9,86,204+18.9%
2020 11,99,974+21.7%
ஆதாரம்: [33]

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மூன்று முக்கிய இனத்தவர்கள் உள்ளனர். இவர்களில் அதிகமானோர் மலாய்க்காரர்கள்; அடுத்து அதிகமானோர் சீனர்கள்; இந்தியர்கள் 14 விழுக்காட்டினர்.

இந்தியர்க் குடும்பங்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைத் தீவிரமாகக் கடைப் பிடித்து வருவதால், அண்மைய காலங்களில் இந்தியர்களின் மக்கள் தொகை கணிசமான அளவு குறைந்து வருகிறது. இருப்பினும், மற்ற மலேசிய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் என அறியப்படுகிறது.

2015-ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள்

தொகு
நெகிரி செம்பிலானில் உள்ள மதங்கள் - 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு[34]
மதம் %
இசுலாம்
60.3%
பௌத்தம்
21.2%
இந்து
13.4%
கிறித்துவம்
2.4%
அறியப்படாத நம்பிக்கை
1.1%
மதம் சாராதவர்கள்
0.8%
தாவோயியம் அல்லது சீன மதம்
0.5%
பிற மதங்கள்
0.3%

மதங்கள்

தொகு

புள்ளிவிவரங்கள்

தொகு
 
1950-ஆம் ஆண்டுகளில்; சிரம்பான் நகரில், மூன்று தலைமுறைகளைக் கொண்ட இந்தியர்க் குடும்பம்

2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நெகிரி செம்பிலானில் உள்ள சீன மக்கள்தொகையில் 92.9% பேர் பௌத்தர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர். கணிசமான சிறுபான்மையினர் கிறித்துவர்கள் (3.6%), சீன நாட்டுப்புற மதங்கள் (1.9%) மற்றும் முசுலீம்கள் (0.8%) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர் இந்துக்கள் (89.0%); குறிப்பிடத்தக்க சிறுபான்மையினர் கிறித்துவர்கள் (5.0%), முசுலீம்கள் (3.2%) மற்றும் பௌத்தர்கள் (1.4%) என அடையாளம் காணப்படுகிறார்கள்.

மலாய் அல்லாத பூமிபுத்ரா சமூகத்தில் நாத்திகர்கள் (39.7%); குறிப்பிடத்தக்க சிறுபான்மையினர் கிறித்துவர்கள் (28.3%) மற்றும் முசுலீம்கள் (20.2%) என அடையாளம் காணப்படுகிறார்கள். மலாய்க்காரர்கள் அனைவரும் முசுலீம்கள்.

மொழிகள்

தொகு

நெகிரி செம்பிலான் ஒரு பல்லின மாநிலமாகும். இந்த மாநிலத்தின் ஒவ்வோர் இனத்தவரும் அவர்களின் இனம் சார்ந்த மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளைப் பின்பற்றுகிறார்கள். நெகிரி செம்பிலான் மக்கள் நெகிரி செம்பிலான் மலாய் மொழி (பாசோ நோகோகி) என அழைக்கப்படும் தனித்துவமான மலாய் மொழியைப் பேசுகிறார்கள்.

தீபகற்ப மலேசியாவில் உள்ள மற்ற மலாய் மொழி வகைகளுடன் நெகிரி செம்பிலான் மலாய் மொழி நெருங்கிய தொடர்புடையது அல்ல. ஆனாலும் அண்டை நாடான சுமாத்திராவில் பேசப்படும் மலாய் வகைகளுடன்; குறிப்பாக மினாங்கபாவு மொழி வகைகளுடன் நெருங்கிய தொடர்புடையது.

தமிழ் மொழி

தொகு

மலேசியச் சீன சமூகத்தினர் அவர்களின் சீன மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளைப் பின்பற்றுகிறார்கள். தெமுவான் போன்ற மலேசியப் பழங்குடியினர், மலாய் மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய மற்ற மொழிகளைப் பேசுகின்றனர். இருப்பினும் மலாய் மொழி மாநிலம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் மொழி, மலேசியத் தமிழர்கள் மற்றும் மலேசிய இலங்கைத் தமிழர்களின் தாய்மொழி ஆகும். மற்ற சிறு இந்திய சமூகங்களிடையே அவரவர்களின் மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. தவிர, நெகிரி செம்பிலான் நகரங்களில் குறைந்த எண்ணிக்கையிலான தெலுங்கு, மலையாளம் மற்றும் பஞ்சாபி மொழிகள் பேசுபவர்களும் உள்ளனர்.

போக்குவரத்து

தொகு
 
ரெம்பாவ் நகருக்கு அகில் மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் பெடாஸ்-லிங்கி இடைவழிச் சாலை

மற்ற ஆசிய நகரங்களைப் போலவே, நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் வாகனம் ஓட்டுவது, பொதுமக்களிடையே முக்கிய தேர்வாக உள்ளது.

மலேசியாவில் மக்கள் தொகையைவிட வாகனங்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. 2022-ஆம் ஆண்டில் மலேசியாவின் மக்கள் தொகை 32.6 மில்லியன். ஆனால், அதே ஆண்டில் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை 33.3 மில்லியன்.[35]

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மூன்று அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளன.


பொது போக்குவரத்து என்பது பேருந்து, தொடருந்து மற்றும் வாடகையுந்து போன்ற பல்வேறு போக்குவரத்து முறைகளை உள்ளடக்கியது.

 
இலவச பேருந்து சேவைகள்

இலவச பேருந்து சேவைகள்

தொகு

பேருந்து சேவைகளுக்காக, மைபாஸ் (myBAS} பேருந்து சேவை மாநில அரசாங்கத்தால் இயக்கப்படுகிறது. மாநில அரசின் நிதியுதவியுடன் சிரம்பான் மாவட்டம் மற்றும் செம்போல் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் மூன்று வழித்தடங்களில் இலவச பேருந்து சேவைகள் உள்ளன. இப்போது மாரா லைனர் மூலம் இயக்கப்படுகிறது. மாரா லைனர் ரெம்பாவ் மாவட்டம் மற்றும் தம்பின் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் 4 கிராமப்புற வழித்தடங்களையும் இயக்கி வருகிறது.

சிரம்பான் நகரில் மாநிலத்தின் முதன்மையான பேருந்து முனையம் உள்ளது. அதற்கு சிரம்பான் பேருந்து நிலையம் என்று பெயர். இந்தப் பேருந்து முனையம், நெகிரி செம்பிலானில் உள்ள மற்ற முக்கிய இடங்களான கோலா பிலா, பகாவ், ரெம்பாவ்; மற்றும் மலேசியாவின் இதர நகரங்களான அலோர் ஸ்டார், ஈப்போ, மலாக்கா ஆகிய நகரங்களுடன் இணைக்கும் முனையமாகத் திகழ்கிறது. மாநிலத்திற்கான பேருந்து சேவைகளை வழங்கும் அனைத்துப் பேருந்து நிறுவனங்களும் இந்த சிரம்பான் முனையத்தில்தான் உள்ளன.

தொடருந்து சேவைகள்

தொகு
 
சிரம்பான் பேருந்து நிலையம்

தொடருந்து சேவைகளைப் பொருத்த வரையில், சிரம்பான் தொடருந்து நிலையம் என்பது மாநிலத் தலைநகரான சிரம்பான் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் ஒரு பகுதிக்கான முக்கிய நிலையமாக விளங்குகிறது. அதே வேளையில், தம்பின் மாவட்டத்தில், கிம்மாஸ் தொடருந்து நிலையம் ஒரு பரிமாற்ற நிலையமாகவும் இயங்குகிறது.

1995-ஆம் ஆண்டில், கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவை, கோலாலம்பூர் மாநகருக்கும்; மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு புறநகர் பகுதிகளுக்கும்; உள்ளூர் தொடருந்து சேவைகளை வழங்கும் முதல் தொடருந்து போக்குவரத்து அமைப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. 175 கி.மீ. நீளத்திற்கு தொடருந்து வழித்தடங்களைக் கொண்ட கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவை, தற்போது கிள்ளான் பள்ளத்தாக்கில் 53 தொடருந்து நிலையங்களைக் கொண்டுள்ளது.

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

தொகு

கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவை, இரண்டு குறுக்கு-நகர வழித்தடங்களைக் கொண்டுள்ளது; அதாவது கிள்ளான் துறைமுக வழித்தடம்; தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம் - கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையம் வரை); மற்றும் சிரம்பான் வழித்தடம் (பத்துமலை கொமுட்டர் நிலையம் - புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் வரை); அந்தச் சேவைகள் இன்று வரையில் நடைபெறுகின்றன.

தற்போது நெகிரி செம்பிலான் மாநிலத்தில், பொது விமான நிலையங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் சிலாங்கூர், சிப்பாங் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை (KLIA); நீலாய் கொமுட்டர் நிலையத்தில் சேவைகள் வழங்கும் பேருந்துகள் வழியாக அந்தப் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குச் செல்லலாம்.[36]

2008-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்

தொகு

மலேசியாவின் 12-வது பொதுத் தேர்தல் 2008-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியான பாரிசான் நேசனல் 21 இடங்களைப் பெற்று முதன்மை வகித்தது. ஐந்து தமிழர்கள் வெற்றி பெற்றனர். ஆளும் கட்சியைச் சார்ந்தவர் ஒருவர். எதிர்க் கட்சியைச் சார்ந்தவர்கள் நால்வர்.


2008 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் விவரம்.
பாரிசான் நேசனல் 21 | ஜனநாயக செயல் கட்சி 10 | மக்கள் நீதிக் கட்சி 4 | மலேசிய இஸ்லாமியக் கட்சி 1
எண் சட்டமன்றத் தொகுதி தேர்வு செய்யப் பட்ட உறுப்பினர் தேர்வு செய்யப் பட்ட கட்சி
N1
சென்னா
சியோவ் சென் பின்
பாரிசான் நேசனல்
N2
பெர்த்தாங்
ரசாக் மான்சூர்
பாரிசான் நேசனல்
N3
சுங்கை லூயி
ஜைனல் அபிடின் அகமட்
பாரிசான் நேசனல்
N4
கெலாவாங்
யூனோஸ் ரஹ்மாட்
பாரிசான் நேசனல்
N5
செர்த்திங்
சம்சுல்கார் முமட் டெலி
பாரிசான் நேசனல்
N6
பாலோங்
அசீஸ் சம்சுடின்
பாரிசான் நேசனல்
N7
ஜெராம் பாடாங்
வி.எஸ்.மோகன்
பாரிசான் நேசனல்
N8
பகாவ்
தியோ கோக் சியோங்
ஜனநாயக செயல் கட்சி
N9
லெங்கேங்
முஸ்தபா சலீம்
பாரிசான் நேசனல்
N10
நீலாய்
யாப் இவ் வெங்
ஜனநாயக செயல் கட்சி
N11
லோபாக்
லோக் சியூ பூக்
ஜனநாயக செயல் கட்சி
N12
தெமியாங்
நிங் சின் சாய்
ஜனநாயக செயல் கட்சி
N13
சிக்காமட்
அமினுடின் ஹருன்
மக்கள் நீதிக் கட்சி
N14
அம்பாங்கான்
ரசீட் லத்தீப்
மக்கள் நீதிக் கட்சி
N15
ஜுவாசே
முகமட் ராட்சி காயில்
பாரிசான் நேசனல்
N16
ஸ்ரீ மெனாந்தி
டத்தோ அப்துல் சாமாட் இப்ராஹிம்
பாரிசான் நேசனல்
N17
செனாலிங்
இஸ்மாயில் லாசிம்
பாரிசான் நேசனல்
N18
பிலா
அட்னான் அபு ஹாசன்
பாரிசான் நேசனல்
N19
ஜொகூல்
ர்ரொஸ்லான் முகமட் யூசோப்
பாரிசான் நேசனல்
N20
லாபு
ஹாசிம் ருஷ்டி
பாரிசான் நேசனல்
N21
புக்கிட் கெப்பாயாங்
சா கீ சின்
ஜனநாயக செயல் கட்சி
N22
ரஹாங்
எம்.கே.ஆறுமுகம்
ஜனநாயக செயல் கட்சி
N23
மம்பாவ்
ஓங் மே மே
ஜனநாயக செயல் கட்சி
N24
செனாவாங்
பி.குணசேகரன்
ஜனநாயக செயல் கட்சி
N25
பாரோய்
முகமட் தவுபெக் அப்துல் கனி
மலேசிய இஸ்லாமிய கட்சி
N26
செம்போங்
ஜைபுல்பகாரி இட்ரிஸ்
பாரிசான் நேசனல்
N27
ரந்தாவ்
டத்தோ ஸ்ரீ உத்தாமா முகமட் அசான்
பாரிசான் நேசனல்
N28
கோத்தா
அவாலுடின் சாயிட்
பாரிசான் நேசனல்
N29
சுவா
சாய் தோங் சாய்
மக்கள் நீதிக் கட்சி
N30
லுக்குட்
இயான் தின் சின்
ஜனநாயக செயல் கட்சி
N31
பாகான் பினாங்
டான்ஸ்ரீ முகமட் இசா சாமாட்
பாரிசான் நேசனல்
N32
லிங்கி
இஸ்மாயில் தாயிப்
பாரிசான் நேசனல்
N33
போர்ட்டிக்சன்
ரவி முனுசாமி
மக்கள் நீதிக் கட்சி
N34
கிம்மாஸ்
ஜைனாப் நாசீர்
பாரிசான் நேசனல்
N35
கெமேஞ்சே
முகமட் காமில் அப்துல் அசீஸ்
பாரிசான் நேசனல்
N36
ரெப்பா
வீரப்பன் சுப்ரமணியம்
ஜனநாயக செயல் கட்சி

மேற்கோள்கள்

தொகு
 1. "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. p. 27. Archived from the original on 27 December 2010. பார்க்கப்பட்ட நாள் 24 January 2011.
 2. Ziauddin Sharuddin (December 22, 2015). "Penemuan artifak dapat rungkai asal usul Jelebu" (in ms). Berita Harian: p. 4. https://www.bharian.com.my/bhplus-old/2015/12/107252/artifak-14000-tahun-di-gua-pelangi-jelebu. 
 3. "The Minangkabau of Negeri Sembilan". 4 April 2016.
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-28. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
 5. https://museumvolunteersjmm.com/2016/04/04/the-minangkabau-of-negeri-sembilan/
 6. History behind Negri's unique selection of ruler பரணிடப்பட்டது 2009-01-22 at the வந்தவழி இயந்திரம், The New Straits Times, 29 December 2008.
 7. History behind Negri's unique selection of ruler பரணிடப்பட்டது 2009-01-22 at the வந்தவழி இயந்திரம், The New Straits Times, 29 December 2008.
 8. "Colonial Reports--annual, Issues 1570-1599". 1931. பார்க்கப்பட்ட நாள் 9 January 2021.
 9. The Minangkabau (also called the Minang) come from West Sumatra Province.
 10. The word Minangkabau can actually be interpreted as a compound of the words menang (win) and kerbau (buffalo).
 11. With no men, this leaves women to take care of the home and economic life of their communities.
 12. "N.Sembilan adalah satu-satunya negeri di Malaysia yang mengamalkan sistem adat perpatih atau dikenali juga sebagai sistem matrilineal". Archived from the original on 2012-04-20. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02.
 13. In their matrilineal culture, the family name and the family wealth is inherited by the daughter.
 14. "The Minangkabau from Sumatra settled in Negeri Sembilan in the 15th century under the protection of the Melaka Sultanate". Archived from the original on 2012-07-21. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02.
 15. "Adat pepatih lebih mementingkan kaum wanita daripada lelaki". Archived from the original on 2012-02-13. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02.
 16. "Child marriages are not uncommon in the Indian community residing at rubber estates in Negeri Sembilan". Archived from the original on 2010-11-25. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02.
 17. "Climate: Seremban". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் August 1, 2020.
 18. "JKR Negeri Sembilan - Selamat Datang Laman Web JKR Negeri Sembilan".
 19. "Utama".
 20. "Jabatan Kebajikan Masyarakat". www.jkm.gov.my.
 21. "Halaman Utama". Jabatan Mufti Kerajaan Negeri Sembilan.
 22. "Majlis Agama Islam Negeri Sembilan - UTAMA". www.mains.gov.my.
 23. "Portal Rasmi Perbadanan Perpustakaan Awam Negeri Sembilan". nslibrary.gov.my.
 24. "Utama". Yayasan Negeri Sembilan.
 25. "Perbadanan Kemajuan Negeri, Negeri Sembilan - Utama". www.pknns.gov.my.
 26. "Local governments".
 27. "Portal Rasmi Majlis Bandaraya Seremban (MBS)". www.mbs.gov.my.
 28. "Portal Rasmi Majlis Perbandaran Post Dickson".
 29. 29.0 29.1 "Portal Rasmi Majlis Perbandaran Jempol (MPJL)". Portal Rasmi Majlis Perbandaran Jempol (MPJL).
 30. "Portal Rasmi Majlis Daerah Rembau (MDR) |". Portal Rasmi Majlis Daerah Rembau (MDR).
 31. "Portal Rasmi Majlis Daerah Kuala Pilah (MDKP)". Portal Rasmi Majlis Daerah Kuala Pilah (MDKP).
 32. "Portal Rasmi Majlis Daerah Tampin (MDT)". Portal Rasmi Majlis Daerah Tampin (MDT).
 33. "TABURAN PENDUDUK MENGIKUT PBT & MUKIM 2010". Department of Statistics, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
 34. "2010 Population and Housing Census of Malaysia" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 13 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2012. p. 13
 35. Chan, Dawn (9 June 2022). "Vehicles outnumber people in Malaysia - 33.3 million registered vehicles nationwide versus the human population, which stood at 32.6 million, according to road safety expert Professor Dr Kulanthayan K.C. Mani of Universiti Putra Malaysia". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 March 2024.
 36. admin (2004-12-27). "About Airport Liner". lcct.com.my (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-25.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகிரி_செம்பிலான்&oldid=3907664" இலிருந்து மீள்விக்கப்பட்டது