யாங் டி பெர்துவான் பெசார்
யாங் டி பெர்துவான் பெசார் (ஆங்கிலம்: Yang di-Pertuan Besar (YDPB) ; மலாய்: Yang di-Pertuan Besar) என்பது மலாய் தீவுக்கூட்டத்தில் மலாய் மொழி பேசும் சில நாடுகளில் அரச தலைவருக்கான பதவிப் பெயர் ஆகும். அத்தகைய அரச தலைவரின் பெயர்; "தலைமை ஆட்சியாளராக ஆக்கப் பட்டவர்" (He Who Is Made Chief Ruler) எனும் பொருள் கொண்டதாகும்.[1]
மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மன்னரை யாம் துவான் பெசார் (Yamtuan Besar) என்று அழைக்கிறார்கள். இவர் மலேசியாவின் மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் பதவிக்கு தகுதி பெறும் ஒன்பது மலாய் ஆட்சியாளர்களில் ஒருவர் ஆவார்.
அத்துடன் அந்த ஒன்பது மலாய் ஆட்சியாளர்களில் ஒருவர்தான் யாங் டி பெர்துவான் அகோங் (Yang di-Pertuan Agong) பதவிக்கு தேர்வு செய்யப் படுகிறார்.
பொது
தொகுநெகிரி செம்பிலான் மாநிலம் நான்கு மாவட்டப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. சுங்கை ஊஜோங், ஜெலுபு, ஜொகூல், ரெம்பாவ் என நான்கு பிரிவுகள். இந்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைவர் இருக்கின்றார்.
அந்தத் தலைவரை உண்டாங் என்று அழைக்கிறார்கள். மாநிலத்தின் மன்னர் பதவி காலியாகும் போது நான்கு மாவட்டத் தலைவர்களும் ஒன்று கூடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய ஒருவரை மன்னராகத் தெரிவு செய்கின்றனர்.
அப்படி தெரிவு செய்யப் படும் மன்னர், சுல்தான் என அழைக்கப் படுவது இல்லை. அதற்குப் பதிலாக யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்று அழைக்கப் படுகின்றார்.
கெடா சுல்தான் (Sultan of Kedah), கிளாந்தான் சுல்தான் (Sultan of Kelantan), பேராக் சுல்தான் (Sultan of Perak) மற்றும் திராங்கானு சுல்தான் (Sultan of Terengganu) ஆகிய சுல்தான்களின் துணைப் பட்டத்திற்கும் (Subsidiary Title) யாங் டி பெர்துவான் பெசார் என்றும் பெயர் உண்டு.
வரலாறு
தொகுஇந்தோனேசியாவில் இருந்து 18-ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசிய மினாங்கபாவ் இனத்தவர்கள் மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்தனர். அவர்கள் நெகிரி செம்பிலானில் புதுக் குடியேற்றங்களை உருவாக்கினார்கள். அடுத்து புது மன்னராட்சியையும் தோற்றுவித்தார்கள்.
இவர்களின் மன்னராட்சி முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சற்று மாறு பட்டு இருக்கிறது. ஒரு மன்னரின் மகன் வாரிசாக அமையாமல் ஒரு மாவட்டத்தின் தலைவர் மன்னராகப் பிரகடனம் செய்யப் படுவதே இந்த மாநிலத்தில் காணப்படும் சிறப்புத் தன்மை ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Unlike other states in Malaysia that have a line of rulers called "sultans", Negeri Sembilan has "Yang Di-Pertuan Besar". State governments do not have power differences but are quite different in terms of electing leaders". PublicHolidays.com.my. பார்க்கப்பட்ட நாள் 16 December 2022.