யாம் துவான் பெசார்
யாம் துவான் பெசார் (ஆங்கிலம்: Yamtuan Besar (Grand Ruler); மலாய்: Yang di-Pertuan Besar of Negeri Sembilan) என்பது மலேசியா; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளரின் அரச பட்டமாகும். அந்த மாநிலத்தின் ஆளும் தலைவர்கள் அல்லது உண்டாங் (Undang) எனும் குழுவினரால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.[1]
யாம் துவான் பெசார் Yamtuan Besar | |
---|---|
Duli Yang Maha Mulia | |
![]() மாட்சிமை மிகுந்த துவாங்கு முக்ரிஸ் | |
முடிசூட்டுதல் | 26 அக்டோபர் 2009 |
முன்னையவர் | ராஜா மெலாவார் |
இந்த அரச நடைமுறை 1773-ஆண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது. யாம் துவான் பெசார், நெகிரி செம்பிலானின் நான்கு முன்னணி இளவரசர்களில் (Putera Yang Empat) இருந்து தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
வரலாறுதொகு
இந்தோனேசியாவில் இருந்து 18-ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசிய மினாங்கபாவ் இனத்தவர்கள் மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்தனர். அவர்கள் நெகிரி செம்பிலானில் புதுக் குடியேற்றங்களை உருவாக்கினார்கள். அடுத்து புது மன்னராட்சியையும் தோற்றுவித்தார்கள்.[2]
இவர்களின் மன்னராட்சி முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சற்று மாறு பட்டு இருக்கிறது. ஒரு மன்னரின் மகன் வாரிசாக அமையாமல் ஒரு மாவட்டத்தின் தலைவர் மன்னராகப் பிரகடனம் செய்யப் படுவதே இந்த மாநிலத்தில் காணப்படும் சிறப்புத் தன்மை ஆகும்.
ஆட்சியாளர் தேர்வு முறைதொகு
நெகிரி செம்பிலானில் அதன் சுல்தான் எனும் ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப் படும் முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மாறுபட்டு உள்ளது. மாநிலத்தின் உள்ள மாவட்டத் தலைவர்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்கின்றனர். மாவட்டத் தலைவர்களை உண்டாங் என்று அழைக்கின்றனர்.[3]
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நான்கு உண்டாங்குகளுக்கு மட்டுமே ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் உரிமை உண்டு. அந்த நான்கு உண்டாங்குகள்:
- சுங்கை ஊஜோங் உண்டாங்
- ஜெலுபு உண்டாங்
- ஜொகூல் உண்டாங்
- ரெம்பாவ் உண்டாங்
ஆட்சியாளர்த் தேர்வில் உண்டாங்குகள் வாக்கு அளிக்கலாம். ஆனால், அவர்கள் ஆட்சியாளர் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது.
நெகிரி செம்பிலானின் ஆட்சியாளர் தேர்தலில் நிற்க வேண்டுமானால் அவர் ஒரு மலாய்க்கார ஆணாக இருக்க வேண்டும். ராஜா ராடின் இப்னி ராஜா லெங்காங் பாரம்பரியத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
யாங் டி பெர்துவான் பெசார்தொகு
நெகிரி செம்பிலான் மாநிலம் நான்கு மாவட்டப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. சுங்கை ஊஜோங், ஜெலுபு, ஜொகூல், ரெம்பாவ் என நான்கு பிரிவுகள். இந்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைவர் இருக்கின்றார்.
அந்தத் தலைவரை உண்டாங் என்று அழைக்கிறார்கள். மாநிலத்தின் மன்னர் பதவி காலியாகும் போது நான்கு மாவட்டத் தலைவர்களும் ஒன்று கூடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய ஒருவரை மன்னராகத் தெரிவு செய்கின்றனர்.
அப்படி தெரிவு செய்யப் படும் மன்னர், சுல்தான் என அழைக்கப் படுவது இல்லை. அதற்குப் பதிலாக யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்று அழைக்கப் படுகின்றார்.
பூகிஸ் படையெடுப்புதொகு
15-ஆம் நூற்றாண்டில் மினாங்கபாவ் இனத்தவர் சுமத்திராவில் இருந்து மலேசியாவில் குடியேறினர். அவர்களுக்கு மலாக்கா சுல்தான்கள் பாதுகாப்பு வழங்கினர். மலாக்கா சுல்தான்களுக்குப் பின்னர் ஜொகூர் சுல்தான்கள் உதவி வழங்கினர்.
அந்தக் காலக்கட்டத்தில் சுமத்திராவில் இருந்து வந்த பூகிஸ் எனும் மற்றோர் இனத்தவர் ஜொகூரின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். அதனால் ஜொகூர் ஆட்சி பலகீனம் அடைந்தது.
ஆகவே, நெகிரி செம்பிலானில் வாழ்ந்து வந்த மினாங்கபாவ் மக்கள் தங்களின் சொந்த சுமத்திரா சுல்தானின் உதவியைக் கோரினர். அப்போது சுமத்திராவில் மினாங்கபாவ்களுக்கு சுல்தான் அப்துல் ஜாலில் என்பவர் சுல்தானாக இருந்தார்.[4]
ராஜா மெலாவார்தொகு
நெகிரி செம்பிலான் மினாங்கபாவ் மக்களுக்கு உதவி செய்ய ராஜா மெலாவார் என்பவர் சுமத்திராவில் இருந்து அனுப்பப் பட்டார். ஆனால், ராஜா மெலாவார் வந்த போது ராஜா காத்திப் (Raja Khatib) என்பவர் தன்னைத் தானே மன்னராகப் பிரகடனம் செய்து கொண்டு ஆட்சியில் இருந்தார்.
சினம் அடைந்த ராஜா மெலாவார், ராஜா காத்திப் மீது போர் பிரகடனம் செய்தார். போர் நடந்தது. அதில் ராஜா மெலாவார் வெற்றியும் பெற்றார். உடனே ஜொகூர் சுல்தான் புதிய ஆட்சியாளரான ராஜா மெலாவாரை அங்கீகரித்து புதிய யாங் டி பெர்துவான் பெசாராக அறிவித்தார். யாங் டி பெர்துவான் பெசார் என்றால் எல்லா மாநிலங்களுக்கும் தலைவர் என்று பொருள். இது 1773-இல் நடந்த நிகழ்ச்சி.
ராஜா மெலாவார் இறந்ததும் அரியணைப் போட்டி தீவிரமானது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆனது போல ஆளாளுக்குத் தங்களைத் தலைவர்களாகப் பிரகடனம் செய்து கொண்டனர். அதனால், நெகிரி செம்பிலானில் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில் பிரித்தானியர்கள் நெகிரி செம்பிலான் ஆட்சியில் தலையிட்டனர்.
பிரித்தானிய ஆளுமைதொகு
பிரித்தானியர்களின் முதலீடுகளைப் பாதுகாக்கப் பிரித்தானியர்களுக்குச் சகல உரிமைகளும் உள்ளன எனும் சாக்குப் போக்குகளைச் சொல்லி சுங்கை ஊஜோங் உள்நாட்டுக் கலகத்தில் தலையிட்டனர். அதன்படி 1873-இல் சுங்கை ஊஜோங் மாவட்டம் பிரித்தானியர்களின் பாதுகாப்பின் கீழ் வந்தது.
சுங்கை ஊஜோங் மாவட்டத்திற்கு British Resident எனும் பிரிட்டிஷ் கண்காணிப்பாளர் நியமிக்கப் பட்டார். 1886-இல் ஜெலுபு மாவட்டம் பிரித்தானியர்களின் ஆளுமையின் கீழ் வந்தது. இதர ஜொகூல், ரெம்பாவ் எனும் மாவட்டங்கள் 1897-இல் பிரித்தானியர்களின் கைகளுக்கு மாறின.
நெகிரி செம்பிலான் மாநிலத்தை ஜப்பானியர்கள் 1941-இல் இருந்து 1945 வரை ஆட்சி செய்தனர். 1948-இல் மலாயாக் கூட்டரசில் இணைந்தது. பின்னர் 1963-இல், நெகிரி செம்பிலான் மாநிலம் மலேசியாவின் ஒரு மாநிலமாக உறுப்பியம் பெற்றது.[5]
மேற்கோள்கள்தொகு
- ↑ Radin, Tunku Halim (2018). Prince called "Charlie", a. Malaysia: M Parallax. பக். 13–22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789671651506.
- ↑ Birch, E.W. (1906). Election and Installation of Tungku Muhammad, C.M.G. Bin Tungku Antah, as the Yang Di Per Tuan Bĕsár, Negri Sembilan, the (JRASSB v.46 ). Malaya: Royal Asiatic Society - Straits Branch. பக். 9–22. https://archive.org/details/journalofstrait461906roya/page/n27/mode/2up.
- ↑ https://museumvolunteersjmm.com/2016/04/04/the-minangkabau-of-negeri-sembilan/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-07-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-11-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Colonial Reports--annual, Issues 1570-1599". 1931. 9 January 2021 அன்று பார்க்கப்பட்டது.