மரியானா அகழி

மரியானா அகழி (இலங்கை வழக்கு: மரியானா ஆழி, ஆங்கிலம்:Mariana Trench) என்பது, உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் ஆகும். புவிமேலோட்டில் உள்ள மிகத் தாழ்வான பகுதியும் இதுவே. இப்பகுதி மிகக்கூடிய அளவாக 10,984 மீட்டர்கள்[1] (35,840 அடிகள்; 6.78 மைல்கள்) ஆழம் கொண்ட இப்பகுதி, வடக்குப் பசிபிக் பெருங்கடலில் மரியானா தீவுகளுக்குத் தெற்கிலும், கிழக்கிலும் குவாமுக்கு அருகில் அமைந்துள்ளது.[2]

மரியானா அகழின் அமைவிடம்

இசு-போனின்.மரியானா வளைவின் ஒரு பகுதியான இந்த அகழி, பசிபிக் புவிப்பொறைத் தட்டும், சிறிய மரியானா புவிப்பொறைத் தட்டும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த அகழியின் அடிப் பகுதியில், அதற்கு மேலுள்ள நீரினால் ஏற்படும் அழுத்தம் (அமுக்கம்) 108.6 மெகாபாசுக்கல் ஆகும். இது கடல் மட்டத்தில் உள்ள பொது வளிமண்டல அமுக்கத்திலும் 1000 மடங்குக்கும் மேலானது. இந்த ஆழத்தில் வாழக்கூடிய உயிரினங்கள் மிகக் குறைவே. சில வகை ஆழ்கடல் மீன்கள் இப்பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது.

அளவீடும் ஆய்வுகளும் தொகு

 
மரியானா அகழின் குறுக்கு வெட்டுத் தோற்றம்

மரியானா அகழி முதன் முதலாக, 1872 டிசம்பர் முதல் 1876 மே வரையான சலஞ்சர் ஆய்வுப் பயணத்தின் போது அளக்கப்பட்டது. இதன் படி இவ்வகழியின் ஆழம் 31,614 அடிகளாகப் (9,636 மீட்டர்கள்) பதிவு செய்யப்பட்டது. பின்னர் சலஞ்சர் 2 ஆய்வுப் பயணத்தின்போது, திருத்தமான எதிரொலிமானியைப் பயன்படுத்தி மீண்டும் அளக்கப்பட்டது. அப்போது இதன் அதிகூடிய ஆழம் 5,950 பாதங்கள் (10,900 மீட்டர்கள், 35,760 அடிகள்) எனப் பதிவு செய்யப்பட்டது[3]. 11°19′N 142°15′E / 11.317°N 142.250°E / 11.317; 142.250 ஆள்கூற்றால் குறிக்கப்படும் இவ்விடம் சலஞ்சர் ஆழம் எனப்படுகின்றது.[4]

1957 ஆம் ஆண்டில் வித்தியாசு (Vityaz) எனப்படும் சோவியத் கடற்கலம் இதன் ஆழம் 11,034 மீட்டர்கள் (36,200 அடிகள்) என அளவிட்டது.[5] 1962 ஆம் ஆண்டில் கடற்பரப்புக் கப்பலான எம். வி. இசுப்பென்சர் எப். பயார்ட், திருத்தமான அளவுமானிகளைப் பயன்படுத்தி இதன் ஆழத்தை 10,915 மீட்டர்கள் (35,840 அடிகள்) எனக் கணக்கிட்டது.[3] 1984 ஆம் ஆண்டில், இதற்கென உயர் சிறப்பாக்கம் பெற்ற தக்குயோ என்னும் அளவைக் கலம் ஒன்றை அனுப்பிய சப்பானியர், ஒருங்கிய பல்கதிர் எதிரொலிமானியைப் பயன்படுத்திச் சேகரித்த தரவுகளைப் பயன்படுத்தி இதன் ஆழத்தை 10,924 எனக் கணக்கிட்டதுடன் இதன் துல்லிய எல்லைகள் 10,920 ± 10 மீட்டர்கள் எனவும் அறிவித்தனர்.[3][6]

இதுவரை எடுக்கப்பட்டவற்றுள் மிகத் திருத்தமானது எனக் கொள்ளத்தக்க அளவீடு 1995 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. சப்பானின் இந்த ஆய்வுத்திட்டத்தில் கைக்கோ என்னும் ஆளில்லாக் கலம் 1995, மார்ச் 24 ஆம் தேதி அகழியின் அடித்தளத்தில் இறங்கியது. இது அகழியின் ஆழத்தை 10,911 மீட்டர்கள் (35,798 அடிகள்) என அளவிட்டது.

 
பசிபிக் பெருங்கடலில் - மரியானா அகழி

இறக்கம் தொகு

 
23 January 1960: Trieste just before the dive

சுவிட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்டு இத்தாலியில் நிர்மாணிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான டிரைஸ்டி என்ற கப்பலில் 1960, சனவரி 23 ஆம் நாள் பிற்பகல் 1:06 மணிக்கு அமெரிக்கக் கடற்படை வீரர் டொன் வால்ஷ் என்பவரும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெருங்கடல் குறிப்பு வல்லுநர் சாக் பிக்கார்ட் என்பவரும் மரியானா அகழியின் அடிப்பகுதிக்குச் சென்றனர்.[4] இவர்களுக்குப் பின்னர் 2012 ஆம் ஆண்டில் தனியொரு ஆளாக கனேடிய திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரன் அகழியின் அடிப்பகுதிக்குச் சென்று திரும்பினார். இவர் 2012 மார்ச்சு 26 ஆம் நாள்ஆத்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட டீப்சீ சாலஞ்சர் என்ற நீர்மூழ்கியில் உள்ளூர் நேரம் 07:52 மணிக்கு அகழியின் ஆழத்தை அடைந்தார்.[7][8][9][10]

குறிப்புகள் தொகு

  1. "Japan Atlas: Japan Marine Science and Technology Center". பார்க்கப்பட்ட நாள் 2007-07-04.
  2. மரியானா அகழி என்னும் ஆழ்கடல் உலகம் - காணொலிக் காட்சி
  3. 3.0 3.1 3.2 Ritchie, Steve. "The deepest depths". Archived from the original on 2007-10-27. பார்க்கப்பட்ட நாள் 2007-07-04.
  4. 4.0 4.1 "The Mariana Trench - Exploration". marianatrench.com. பார்க்கப்பட்ட நாள் 2007-07-04.
  5. "Mariana Trench". Encyclopædia Britannica. Encyclopædia Britannica. அணுகப்பட்டது 2008-02-25. 
  6. "New Chief Hydrographer of Japan". Archived from the original on 2007-11-06. பார்க்கப்பட்ட நாள் 2007-07-04.
  7. AP Staff (25 March 2012). "James Cameron has reached deepest spot on Earth". MSNBC. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. Broad, William J. (25 March 2012). "Filmmaker in Submarine Voyages to Bottom of Sea". நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2012/03/26/science/james-camerons-submarine-trip-to-challenger-deep.html. பார்த்த நாள்: 25 மார்ச் 2012. 
  9. Than, Ker (25 March 2012). "James Cameron Completes Record-Breaking Mariana Trench Dive". National Geographic Society. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
  10. இயக்குனர் ஜேம்ஸ் கேமரன் பெருங்கடலின் மிக ஆழமான பகுதிக்குத் தனியாளாகச் சென்று திரும்பினார், விக்கிசெய்தி, மார்ச்சு 26, 2012

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியானா_அகழி&oldid=3816319" இலிருந்து மீள்விக்கப்பட்டது