மல்லாண்டார்

மல்லாண்டார் எனப்படுவது தமிழ்நாட்டில் பள்ளர், வன்னியர் ஆகிய சாதி மக்களால் பல்வேறு ஊர்களில் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும். கொங்கு நாடு முழுவதிலும் அதாவது கோவை , ஈரோடு , கரூர் , திருச்சி மாவட்டம் முழுவதிலும் இவ்வழிபாடு காணப்படுகின்றது . இதில் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் வேளாண் களத்து மேட்டில் “ஓர் உருண்டை” க் கல்லை மல்லாண்டை அல்லது மல்லாண்டவர் என்று வைத்து வழிபட்டு வருகின்றனர்.[1]

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூரில் வாழும் பள்ளர்கள், மல்லாண்டார் சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகில் உள்ள நைனாம்பட்டி என்ற ஊரில் ஒரு மல்லாண்டார் கோயில் உள்ளது. இக்கோயில் தெய்வத்தை வன்னியர் சாதியின் ஒரு பிரிவினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். இக்குலதெய்வத்தை வழிபடும் பங்காளிகள் இத்தெய்வத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தெவம் என்ற திருவிழாவை நடத்தி ஆட்டுக் கிடாய்களையும், சேவல்களையும் பலியிட்டு வழிபடுவது வழக்கம். இவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முப்பூசை என்ற திருவிழாவையும், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாப்பூசை என்ற திருவிழாவையும் நடத்தி வழிபட்டு வருகிறார்கள். இதில் முப்பூசை என்பது பலியிட்டு வழிபடுவது ஆகும். மாப்பூசை என்பது சைவ வழிபாடாகும்.[1]

வேளாண் தொழிலைத் கொண்டு வாழும் மக்களின் “வேளாண் வளவழிபாடாக" இவ்வழிபாடு, மழை கொடுக்கும் மழைக் கடவுளாகக் கருதப்பட்ட மல்லாண்டவர் பின்னாளில், மாரியம்மன் திரௌபதியம்மன் வழிபாட்டோடு இணைத்து வழிபடப்படும் முறைகளை இவ்வழிபாட்டில் அறிய முடிகின்றது.[1]

சில இடங்களில் விளைநிலத்தின் ஒரு பகுதியில் மரத்தடியில் நடப்பட்ட கல்லைக் காட்டு மல்லாண்டார் என்ற பெயரில் விளைநிலங்களின் காவல் தெய்வமாகவும் இத்தெய்வத்தை வணங்குகின்றனர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சென்னை). GOVERNMENT OF TAMIL NADU.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லாண்டார்&oldid=4158735" இலிருந்து மீள்விக்கப்பட்டது