மாசிக் கருவாடு

இலங்கையில் மாசிக் கருவாடு எனப்படுவது, ஒரு சிக்கலான செயல் முறை மூலம் தயாரிக்கப்படுகின்ற ஒருவகைக் கருவாடு ஆகும். மாலைதீவுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற இவ்வகைக் கருவாட்டுக்கான மூலப் பொருள் வரிச்சூரை (Skipjack) என்ற மீன் வகை ஆகும். மாலைதீவில், உயிர்ச்சூழலுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படாத வகையில் மரபு முறையில் பிடிக்கப்படும் இம் மீன்கள், முதலில் அவிக்கப்படுகின்றன. பின்னர் புகையூட்டப்பட்டு வெய்யிலில் உலர்த்தப்படுகின்றன. இப் பதப்படுத்தலின் போது மீன்கள் நன்றாக உலர்ந்து கருஞ் சிவப்பு நிறம் கொண்ட மரக் கட்டைகள் போல் ஆகின்றன. இதனால், இவை நீண்ட காலத்துக்குச் சேமித்து வைத்துப் பயன்படுத்தக் கூடியவையாக ஆகின்றன. சேமித்தலின் போது இவற்றைக் குளிரூட்டிகளில் வைக்கவேண்டியது இல்லை.

மாசிக் கருவாட்டின் இரு துண்டுகள்

இது பொதுவாகக் கறிகளில் முதன்மைச் சேர்பொருளாகப் பயன்படுவதில்லை. வேறு காய்கறிகளுடன் ஒரு துணைச் சேர்பொருளாகவே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. இதன் மணமும், சுவையும் இதன் சிறப்பு அம்சங்களாகும்.[1][2][3]

இலங்கையில், சிறப்பாகச் சிங்களவரால் விரும்பி உண்ணப்படும் மாசிக் கருவாடு, அவர்களுடைய சமையலில் முக்கியமான சேர்பொருள்களில் ஒன்றாக விளங்குகின்றது.

மூலப்பொருள்

தொகு

வரிச்சூரை என்ற சூரை மீனில் செய்யபடும் மாசி தான் முதல் தரமானது. எனினும் அனைத்து வகை சூரை மீனிலும் (நீல தூவி சூரை, மஞ்சல் தூவி சூரை, வரி சூரை, கட்டை சூரை) மாசி செய்யலாம். சூரையை வெட்டி, அவித்து,வெய்யிலில் காயவைத்து, புகையூட்டி மாசி தயாரிக்கப்படுகிறது.

தயாரிப்பு முறை

தொகு

சூரை மீனை தோலுரித்து செதிள், குடல் நீக்கியபின், தலை, நடுமுள் (முதுகெலும்பு) போன்றவை அகற்றி பிறகு வயிற்றுப்பாகம் தனியாகப் பிரிக்கவேண்டும்.

பின்னர் இது நான்காக துண்டாக்கி பெரிய சூரைமீனாக இருந்தால் இந்தத் துண்டங்கள் மேலும் சிறுதுண்டங்களாக்கப்படும். அரியப்பட்ட சூரைமீன் துண்டங்களை (கண்டங்கள்) அண்டாவில் அரைவேக்காடாக வேக வைக்கவேண்டும் ஒரு கொதி வந்ததும், இந்த மீன் துண்டங்களை இறக்கி, மெல்லிய ஒரு துணியில் இட்டு, திருகி திருகி சொட்டுத் தண்ணீரின்றி பிழிந்து. பின்னர் மூன்று நாள்கள் வரை இந்தத் துண்டங்கள் வெய்யிலில் காய வைக்க வேண்டும்.

வெய்யிலில் காய்ந்த பின் இந்த மீன் கண்டங்கள் பூட்டிய ஓர் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு . அங்கே அடுப்பின் மேல் பரண் அமைத்து, வைக்கோல் பரப்பி சூரை துண்டங்களை அடுக்கி புகையூட்ட வேண்டும் இந்த துண்டங்கள் இரண்டு நாள்களுக்குப்பின் மரக்கட்டை வடிவத்தில், மாசிக்கருவாடாக மாறி இருக்கும்

இதன் பூர்வீகம் மாலத்தீவு, ஆனால் இப்போது தமிழகம், கேரளம், இலங்கை, இலட்சத்தீவுகள் எனப்படும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் பகுதி மக்களுக்கு மாசிக் கருவாடு ஒரு மிகச்சிறந்த மீன் உணவு.

இதை பாதுகாக்க குளிர்சாதன பெட்டி தேவை இல்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom, Barcelona 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-7254-801-5
  2. SILAS, E.G. (August–December 2003). "HISTORY AND DEVELOPMENT OF FISHERIES RESEARCH IN INDIA". Journal of the Bombay Natural History Society 100 (2–3): 518. http://eprints.cmfri.org.in/6869/1/010-JOURNAL_OF_BOMBAY_NATURAL_HISTORY_SOCEITY.pdf. 
  3. "Fisheries | Lakshadweep | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசிக்_கருவாடு&oldid=4101783" இலிருந்து மீள்விக்கப்பட்டது