மாத்தளை கணேஸ்வரா வித்தியாலயம்

மாத்தளை கணேஸ்வரா வித்தியாலயம் இலங்கையில் மாத்தளை நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தம்பலகல என்னுமிடத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பாடசாலையாகும். பாடசாலை உருவாகிய காலத்தை அறுதியாகக் கூறமுடியாவிட்டாலும் இது ஏறத்தாழ 1920 ஆண்டளவில் உருவாகப்பட்டதாக நம்பப்படுகின்றபோதிலும் சிலர் அக்காலத்திற்கு முன்னேரே இந்தப்பாடசாலை உருவாகிவிட்டதாகக் கூறுகின்றனர். ஆரம்பத்தில் தேயிலைக் கொழுந்து சேகரிக்கும் இடமாக இருந்த கட்டிடம் பின்னர் ஆங்கிலேயரினால் பிட்டகந்த இலக்கம் 01 தமிழ் மகாவித்தியாலயம் என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டில் சின்னத்தம்பி ஆசிரியரின் கீழ் 30 மாணவர்கள் கல்வி கற்றனர். 1950 ஆம் ஆண்டளவில் பிட்டகந்தையில் பிட்டகந்த இலக்கம் 02 தமிழ் மகாவித்தியாலயம் என்ற ஓர் பாடசாலையும் உதயமாகியது. இக்காலப்பகுதியில் ஓரே ஆசிரியர்களே இரண்டு பாடசாலையிலும் கல்விகற்பித்தனர். பிட்டகந்த இலக்கம் 01 தமிழ் மகாவித்தியாலயத்தில் காலை 8:00 மதியம் 12:00 மணிவரையும் பின்னர் பிட்டகந்த இலக்கம் 02 தமிழ் வித்தியாலயத்தில் பிற்பகல் 1 மணிமுதல் 4 மணிவரை கற்பித்தல்கள் நடைபெற்றன.

1987, 1988 காலப்பகுதியில் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டளவில் சீடா திட்டம் மூலம் மாடிக்கட்டடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டுப்படி இப்பாடசாலை 14 ஆசிரியர்களையும் 200 மாணவர்களையும் கொண்டுள்ளது.

உசாத்துணை தொகு

  1. ஞாயிறு தினக்குரல் மாணவர் இதழ் பரிசு, 24 ஜூன், 2007