மாரடைப்பிற்கு பிந்தைய சிக்கல்கள்

மாரடைப்பிற்குப் பிந்தைய சிக்கல்கள் மாரடைப்பிற்கு (தீவிர கட்டத்தில்) உடனடியாகவோ அல்லது நாட்பட்ட கட்டத்தில் காலப்போக்கில் ஏற்படவும் செய்யலாம். இதயத் தசை இறப்பிற்குப் பிறகு, தெளிவான ஓர் சிக்கல் இரண்டாம் மாரடைப்பு ஏற்படுவதாகும். இது மற்றொரு கொழுப்படைத்த முடியுருத்தமனியிலோ அல்லது முன்பு மாரடைப்பு ஏற்பட்ட இடத்திலேயே இறக்காது விடுபட்ட அணுக்களிலோ ஏற்படக்கூடும்.

மாரடைப்பிற்கு பிந்தைய விளைவுகள் தொடர்ந்த குருதி ஊட்டக்குறையை அடுத்து சிறிது காலம் தாழ்ந்து திசுக்களில் மேநிலை மாற்றங்களாகவும் நுண்ணிய மாற்றங்களாகவும் வெளிப்படுகின்றன.[1] திசு இறப்பு மாரடைப்பிற்கு பின்னர் 20 மணித்துளிகளில் ஏற்படுகின்றது. குருதியூட்டக்குறையால் நான்கு மணி நேரத்தில் எந்தவோரு பெருமாற்றமோ நுண்ணிய மாற்றமோ கவனிக்கப்படவில்லை.[2] 4 முதல் 24 மணிகளில் கூழ்த்தல் நசிவு (Coagulative necrosis) துவங்குவது கண்டறியப்பட்டுள்ளது[3] சோதனையில் கூழ்த்தல் நசிவு இறந்த திசுக்கள் கரும் வண்ணமாற்றமடைந்திருப்பதைக் காணலாம். இந்தக் கட்டத்தில் மிக வழமையான சிக்கல் இதய இலயமின்மைகளாகும்.

நாள் 1 முதல் 7 வரை அழற்சி அறிகுறிகளைக் காணலாம். முதல் மூன்று நாட்கள் “கடிய அழற்சி”யைக் காணலாம். நியூட்ரோஃபில் வெள்ளணுக்கருக்கள் குருதியூட்டக்குறை திசுக்களை படையெடுக்கின்றன. இந்தக் கட்டத்தில் முதன்மையான சிக்கல் நார்ச்சத்து இதயவுறை அழற்சி ஆகும். குறிப்பாக கீழறை சுவர்தாண்டிய சேதத்தில் இதயத்தின் மூன்றடுக்குகளும் (இதயவறை மேற்சவ்வு, இதயத்தசை,இதயவறை அகச்சவ்வு) பாதிக்கப்படுவதால் இதயவுறை அழற்சி ஏற்படுகிறது.இதனால் வீக்கம் ஏற்பட்டு இதயம் இதய உறையுடன் உரசுகிறது. நான்காம் நாள் முதல் 7ஆம் நாட்களில் “நாட்பட்ட அழற்சி” ஏற்படுகிறது. நுண்ணோக்கி ஆய்வில் இரத்த விழுங்கணுக்கள் திசுவை ஆக்கிரமிப்பதைக் காணலாம். இந்த விழுங்கணுக்களின் பணி இறந்த தசைச்செல்களை நீக்குவதாகும். ஆனால், இவ்வாறு இறந்த திசுக்கள் நீக்கப்படுவதால் தசை வலுவிழக்கிறது. இந்த வலுவிழப்பினால் கீழறை சுவருடைதல், கீழறைகளிடையேயுள்ள சுவர் உடைதல், தசை உடைதல் போன்றவை நேரிடுகிறது.

வாரங்கள் 1 முதல் 3 வரை மிகுதியான குருதிநுண்குழல்களையும் நார்முன்செல் உட்புகுதலையும் நுண்ணோக்கியில் காணலாம். இழந்த இதயத்தசையணுக்களை நார்முன்செல் அணுக்கள் கொலஜன் 1 வகையாக மாற்றி புதுவளர் சிறுமணித்திசுக்கு வித்திடுகிறது. பல வாரங்களுக்குப் பிறகு இழைமப் பெருக்கம் ஏற்பட்டு கொலஜன் உருவாகிறது. இவ்வாறு இதயத்தசைக்கு மாறாக உருவான கொலஜன் இதயத்தசை போல வலுவானதோ உடன்படுதன்மை கொண்டதோ அன்று. இந்த சமநிலையின்மை காரணமாக கீழறை விரிவடைதல் உண்டாகிறது. இதன் விளைவான இரத்தத் தேக்கத்தால் சுவரில் இரத்த உறைகட்டி ஏற்படுகிறது. இந்த கட்டத்தில் டிரெசுலர் நோய்த்தொகுதி உண்டாகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Muscle Tissue. In: Mescher AL. eds. Junqueira’s Basic Histology: Text and Atlas, 15e New York, NY: McGraw-Hill
  2. Kumar, V., Abbas, A. K., & Aster, J. C. (2015). Robbins and Cotran pathologic basis of disease (Ninth edition.). Philadelphia, PA: Elsevier/Saunders.
  3. Adigun, Rotimi; Bhimji, Steve S. (2018), "Necrosis, Cell (Liquefactive, Coagulative, Caseous, Fat, Fibrinoid, and Gangrenous)", StatPearls, StatPearls Publishing, PMID 28613685, பார்க்கப்பட்ட நாள் 2018-11-03
  4. Leonard S. Lilly. Pathophysiology Of Heart Disease : a Collaborative Project of Medical Students and Faculty. Philadelphia :Lippincott Williams & Wilkins, 2003.