மார்க்கஸ் அரேலியஸ்
மார்கஸ் அரேலியஸ் (/ɑːˈriːliəs/ or /ɑːˈriːljəs/;[1] இலத்தீன்: Marcus Aurelius Antoninus Augustus; ( 26 ஏப்ரல் 121 - 17 மார்ச் 180) என்பவர் கி.பி 161 முதல் 180 வரை உரோமைப் பேரரசராகவும் உறுதிப்பாட்டுவாத மெய்யிலராகவும் இருந்தார். இவர் ஐந்து நல்ல பேரரசர்கள் என்று அழைக்கப்பட்ட ஆட்சியாளர்களில் கடைசி மன்னராவார். மேலும் பாக்ஸ் ரோமானாவின் கடைசி பேரரசர், உரோமைப் பேரரசின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை காலக்கட்டத்துக்குச் சொந்தக்காரர். கி.பி 140, 145 மற்றும் 161 ஆம் ஆண்டுகளில் உரோமானிய தூதராக பணியாற்றியவர்.
மார்க்கஸ் அரேலியஸ் Marcus Aurelius Antoninus | |
---|---|
பிறப்பு | 26 ஏப்பிரல் 121 உரோம் |
இறப்பு | 17 மார்ச்சு 180 (அகவை 58) விண்டோபொனா |
கல்லறை | காஸ்டல் சாண்ட்'ஏஞ்சலோ |
பணி | எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை/கள் | பாஸ்டினா தி யங்கர் |
இவர் மார்கஸ் அன்னியஸ் வெரஸ் (III) மற்றும் டொமிடியா லூசில்லா ஆகியோருக்கு மகனாக உரோமானியப் பேரரசர் ஹட்ரியன் ஆட்சியின் போது பிறந்தார். இவர் பிறந்து மூன்று மாதத்தில் இவரது தந்தை இறந்தார். இவரது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, மார்கசை இவரது தாயார் மற்றும் தாத்தா மார்கஸ் அன்னியஸ் வெரஸ் (II) ஆகியோர் வளர்த்தனர். 138 இல் உரோமப் பேரரசர் ஹட்ரியனின் வளர்ப்பு மகன் ஏலியஸ் சீசர் இறந்ததைத் தொடர்ந்து, மார்கசின் மாமாவான அன்டோனினஸ் பியசை தனது புதிய வாரிசாக மன்னர் ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு, அன்டோனினஸ் மார்கசையும் ஏலியஸின் மகனான லூசியசையும் தத்தெடுத்தார் (பின்னர் மார்கசுடன் லூசியஸ் வெரசும் இணைந்து உரோமைப் பேரரசராக ஆட்சி செய்தார்). அந்த ஆண்டு ஹட்ரியன் இறந்தார், அன்டோனினஸ் பேரரசரானார். இப்போது சிம்மாசனத்தின் வாரிசாக ஆன மார்கஸ், ஹீரோட்ஸ் அட்டிகஸ் மற்றும் மார்கஸ் கொர்னேலியஸ் ஃப்ராண்டோ போன்ற ஆசிரியர்களிடம் கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளைக் கற்றார். பின்னர் பல ஆண்டுகள் இவர் தன் ஆசிரியரான ஃபிரான்டோவுடன் நெருங்கிய கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். மார்கஸ் 145 இல் அன்டோனினசின் மகள் ஃபாஸ்டினாவை மணந்தார். அன்டோனினஸ் 161 இல் ஒரு நோய் பாதிப்பால் இறந்தார். அவர் இறந்த பிறகு மன்னரின் இன்னொரு வளர்ப்பு மகனான லூசியஸ் வெரசுடன் இணைந்து அரியாசனம் ஏறி இருவரும் சம உரிமையுடன் சக்ரவர்த்திகளாக இருந்துகொண்டு நாட்டை ஆளத் துவங்கினர். சுமார் எட்டு வருஷங்கள் இவ்வாறு ஆட்சி நடந்துவந்ததது. ஒன்பதாவது ஆண்டில் வேரஸ் இறந்தார். அதன் பிறகு மார்க்கஸ் ஏகச் சக்கரவர்த்தியாக ஆட்சியை நடத்திவந்தார்.
மார்கஸ் அரேலியஸின் ஆட்சி இராணுவ மோதல்கள் கொண்டதாகவே இருந்தது. உரோமானியப் பேரரசானது கிழக்கில் புத்துயிர் பெற்ற பார்த்தியப் பேரரசு மற்றும் கிளர்ச்சி செய்த ஆர்மீனியா இராச்சியத்துடன் வெற்றிகளை ஈட்டும்விதமாக போர்புரிந்தது . மார்கோமன்னிக் போர்களில் மார்கோமன்னி, குவாடி மற்றும் சர்மாட்டியன் ஐஸீஜெஸை மார்கஸ் தோற்கடித்தார்; இருப்பினும், இவர்களும் பிற ஜெர்மானிய மக்களும் யதார்தத்தில் பேரரசிற்கு சிரமத்தைத்தரக்கூடிய மாற்று சக்கியாகத் துவங்கினர். இவர் உரோமன் நாணய, பணத்தில் வெள்ளி தூய்மையில் மாற்றம் கொண்டுவந்தார். ரோமானியப் பேரரசில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் இவரது ஆட்சிக் காலத்தில் அதிகரித்ததாக நம்பப்படுகிறது. அன்டோனைன் பிளேக் 165 அல்லது 166 இல் வெடித்து பரவியது. இதனால் உரோமானிய பேரரசின் மக்கள் பேரழிவிற்கு ஆளாயினர், இந்த நோயின் தாக்கத்தால் ஐந்து மில்லியன் மக்கள் இறந்தனர். 169 இல் பிளேக்கினால் லூசியஸ் வெரஸ் இறந்திருக்கலாம் எனப்படுகிறது.
இவரது முன்னோடிகளில் சிலரைப் போல, மார்கஸ் ஒரு வாரிசைத் தத்தெடுக்க விரும்பவில்லை. இவரது பிள்ளைகளில் லூசியசை மணந்த லூசில்லா மற்றும் கொமோடஸ் ஆகியோர் அடங்குவர். மார்கசுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் குறித்து சமகால மற்றும் நவீன வரலாற்றாசிரியர்களிடையே விவாதத்திற்கு உட்பட்டதாக உள்ளது. இவருடைய நினைவாக ரோமாபுரியில் ஒரு கோபுரம் கட்டி அதில் இவர் குதிரைமீது அமர்ந்த தோற்றத்தில் சிலையை நிறுவினர். இச்சிலை இன்னும் ரோமில் நிற்கிறது, அங்கு இவரது இராணுவ வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் இந்த சின்னங்கள் அமைக்கப்பட்டன. மெடிடேசன்ஸ், "தத்துவஞானியின்" எழுத்துக்கள் - என்பது இவர் எழுதிய நூலாக சமகால வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நூல் பண்டைய உறுதிப்பாட்டு மெய்யலை புரிந்துகொள்ள நவீன காலத்தில் கிடைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க ஆதாரமாகும். அவர் இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எழுத்தாளர்கள், மெய்யியலாளர்கள், மன்னர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றோரால் பாராட்டப்பட்டுள்ளனர்.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 'Marcus Aurelius' பரணிடப்பட்டது 28 திசம்பர் 2018 at the வந்தவழி இயந்திரம். Dictionary.com.