மாவீரர் நாள்
மாவீரர் நாள் (Martyrs' Day) என்பது தாய் நாட்டின் விடுதலைக்காகப் போராடி தமது உயிரை ஈந்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் ஒரு நாள் ஆகும். இது உலகின் பல நாடுகளிலும் அந்தந்த நாட்டு வீரர்களுக்காக நினைவு கூரப்படுகிறது. ஒவ்வொரு நாட்டவரும் தத்தமக்கென ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து அந்த நாளை மாவீரர் நாளாகப் பிரகடனம் செய்து இந்த அஞ்சலியைச் செய்வார்கள். குறிப்பிட்ட சில நாடுகளில் அந்த நாள் விடுமுறை நாளாகக் கூடப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.[1][2][3]
தமிழீழத்தில் மாவீரர் நாள்
தொகுதமிழீழத்தில் மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 இல் பிரகடனம் செய்யப்பட்டது. நினைவுகூரும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூறும் நாடுகளுக்கு மாவீரர் நாள் ஒத்தது. ஈழத் தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.
விடுதலைப் புலிகளின் லெப். சங்கர் (எ) சத்தியநாதன் என்ற முதல் மாவீரனின் நினைவு நாள் தான், நவம்பர் 27. விடுதலைப் புலிகளின் சிறந்த தளபதியாக விளங்கிய சங்கர் மீது சிங்கள இராணுவம் கடும் கோபம் கொண்டிருந்தது. 1982-ம் ஆண்டு இராணுவத்தின் தேடுதல் வேட்டைக்கு இலக்கானான். 1982-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதியன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்படுகிறார். சங்கர் தப்பி ஓட முயன்ற போது, வயிற்றில் குண்டு பாய்கிறது. அப்படியும் சிங்கள இராணுவத்தினரிடம் சிக்காமல் தப்பிக்கிறார். மேற்சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார். ஆனால், சிகிச்சை பலனின்றி தலைவர் பிரபாகரனின் மடியிலேயே சங்கரின் உயிர் பிரிந்தது.
ஏனைய நாடுகளில் மாவீரர் நாள்
தொகு- ஈரான்: மே 24, 1982 ஆம் ஆண்டு ஈரான்-ஈராக் போரின் போது கொரம்ஷார் துறைமுக நகரம் ஈராக்க்கியப் படைகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாள் ஈரானில் மாவீரர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- அல்பேனியா: மே 5, 1942 இல் அல்பேனிய கம்யூனிஸ்ட் தலைவர் கெமால்ல் ஸ்டாஃப்ஃ கொல்லப்பட்ட நாள், மற்றும் இரண்டாம் உலகப் போரில் இறந்த 28,000 மாவீரர்களை நினைவுகூரல்.
- பர்மா: ஜூலை 19, இந்நாளில் 1947 ஆம் ஆண்டு ஏழு பர்மிய விடுதலைப் போராளித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Yahoo. "Ahmad Shah Massoud Day Declared Again in The United States". Yahoo. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.
- ↑ Dinah Shelton, ed. (2005). Encyclopedia of Genocide and Crimes Against Humanity. Vol. 1. Macmillan Reference USA. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0028658483.
- ↑ "ANZAC Day". Australian War Memorial. Archived from the original on 1 May 2013. பார்க்கப்பட்ட நாள் 24 April 2013.