மினர்வராயா பெண்டாலி
மினர்வராயா பெண்டாலி (Minervarya pentali) அல்லது பெண்டலின் மினர்வராயன் தவளை, டைக்ரோக்ளோசிடே என்ற முட்கரண்டி-நாக்கு தவளை குடும்பத்தில் உள்ள ஓர் தவளைச் சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.
சொற்பிறப்பியல்
தொகுதாவர மரபியல் நிபுணரும், தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான தீபக் பெண்டலின் நினைவாக, இப்பல்கலைக்கழகத்தில் உயிரியல் அமைப்புமுறை ஆய்வகத்தை அமைப்பதில் இவர் செய்த உதவியை அங்கீகரிக்கும் வகையில், இந்த சிற்றினத்திற்கு பெண்டாலி என்று பெயரிடப்பட்டது.[1] மினர்வராயா என்ற பொதுவான பெயர் இலத்தீன் வார்த்தையான "மினிமஸ் " என்பதன் போர்ட்மாண்டோ ஆகும். இது "மிகச்சிறியது" என்று பொருள்படும். மினர்வராயாவின் சகோத பேரினம் பெஜர்வராயா ஆகும். இந்த பெயர் பண்டைய உரோமானிய தெய்வமான மினெர்வாவையும் குறிக்கிறது. தரையில் உள்ள சேற்றிலிருந்து திடீரென மேலே குதிக்கும் தவளைகளின் நடத்தை இத்தெய்வத்தை நினைவூட்டுகிறது. மினெர்வா, அவரின் தந்தையான வியாழனின் தலையிலிருந்து திடீரென வெடித்து, முழுமையாகக் கவசத்தைப் பெற்றதாக அறியப்படுகிறது.[2]
விளக்கம்
தொகுமி. பெண்டாலி மற்ற மினர்வராயா சிற்றினங்களை விட சிறியது. ஆண்களில் உடல் நீளம் 20 மி.மீ. நீளமும்; பெண் தவளையின் நீளம் 25 மி.மீ. ஆகும். தோல் மடிப்புகளுடன் புள்ளிகளுடன் காணப்படும். உடலின் மேல் பகுதி சாம்பல்-பழுப்பு நிறமாகவும், கரடு முரடாகக் காணப்படும். அதே சமயம் கீழ்ப் பகுதிகள் மென்மையாகவும் வெளிர் நிறமாகவும் இருக்கும். தொண்டை சதை நிறமானது, அழைப்பு இணைப்பு கருப்பு. மஞ்சள்-சாம்பல் கோடு பின்புறத்தின் நடுவில் செல்கிறது. ஆண்கள் சீரான இடைவெளியில் ஒலியினை உருவாக்குகின்றன.[3]
நடத்தை
தொகுஅழைப்பு
தொகுஆண் மி. பெண்டாலி ஒரு துடிப்பான ஒலியினை உருவாக்குகிறது. இவை சீரான இடைவெளியில் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன. சராசரியாக 19 துடிப்புகளைக் கொண்ட ஒவ்வொரு அழைப்பும், ஒரு வினாடியில் ஐந்தில் ஒரு பங்கு வரை நீடிக்கும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அழைப்புகள் செய்யப்படுகின்றன.[3]
இனப்பெருக்கம்
தொகுஇனப்பெருக்க காலம் சூலை முதல் செப்டம்பர் வரை ஆகும். இந்த பருவத்தில், புல்வெளிகளிலும், நீர்நிலைகளைச் சுற்றியும் ஆண் தவளைகள் அதிக அளவில் கூடும்.[3]
பரவல் மற்றும் வாழ்விடம்
தொகுமி. பெண்டாலி மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றது. இங்கு இவை பரந்து விரிந்து கடல் மட்டத்திலிருந்து சுமார் 220 மீ உயரம் வரை காணப்படுகிறன. இதன் எல்லை வடக்கே கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்திலிருந்து தெற்கே தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் வரை பரவியுள்ளது.[3] தவளைகள் தாவரங்கள் நிறைந்த வழியோரங்களிலும், தோட்டங்களிலும், பாசன வயல்களிலும் மற்றும் இயற்கை நீர் ஆதாரங்களுக்கு அருகிலும் காணப்படுகின்றன. இவை வனப்பகுதியிலிருந்து பதிவு செய்யப்படவில்லை.[1][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "DU researchers discover new frog species in Western Ghats" (in en-IN). The Hindu. 2021-08-03 இம் மூலத்தில் இருந்து 2021-08-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210803142700/https://www.thehindu.com/news/national/karnataka/du-researchers-discover-new-frog-species-in-western-ghats/article35696317.ece.
- ↑ Dubois, A; Ohler, A; Biju, S. D. (2001). "A new genus and species of Ranidae (Amphibia, Anura) from south-western India.". Alytes 19: 53–79. https://www.researchgate.net/publication/273859259.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Garg, Sonali; Biju, S. D. (2021). "DNA Barcoding and Systematic Review of Minervaryan Frogs (Dicroglossidae: Minervarya) of Peninsular India: Resolution of a Taxonomic Conundrum with Description of a New Species". Asian Herpetological Research 12 (4): 1–34. doi:10.16373/j.cnki.ahr.210023. http://www.ahr-journal.com/en/oa/darticle.aspx?type=view&id=AHR-2021-0023.