மினெர்வா மேல் புனித மரியா கோவில்

மினெர்வா மேல் புனித மரியா கோவில் (Basilica of Saint Mary Above Minerva) என்பது உரோமை நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டு இடங்களுள் முக்கியமான ஒன்று ஆகும்[1]. இது புனித சாமிநாதர் சபையினரின் முதன்மைக் கோவில்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இலத்தீன் மொழியில் இக்கோவில் Basilica Sanctae Mariae supra Minervam என்றும் இத்தாலிய மொழியில் Basilica di Santa Maria sopra Minerva என்றும் அழைக்கப்படுகிறது. இது இளம் பெருங்கோவில் (minor basilica) என்னும் நிலையைச் சார்ந்ததாகும். பண்டைய உரோமை நகரில் மார்சிய நிலத்தில் அமைந்த மினெர்வா கோவிலின் மீது இக்கோவில் எழுந்ததால் இப்பெயர் உண்டாயிற்று.

மினெர்வா மேல் புனித மரியா பெருங்கோவில்
Basilica di Santa Maria sopra Minerva (இத்தாலியம்)
Basilica Sanctae Mariae supra Minervam (இலத்தீன்)
19ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட கோவில் முகப்புத் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இத்தாலி உரோமை, இத்தாலியா
புவியியல் ஆள்கூறுகள்41°53′53″N 12°28′42″E / 41.89806°N 12.47833°E / 41.89806; 12.47833
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1370
நிலைஇளம் பெருங்கோவில்
தலைமைகர்தினால் கோர்மக் மர்ஃபி-ஒக்கானர்
இணையத்
தளம்
www.basilicaminerva.it மினெர்வா மேல் புனித மரியா கோவில்

இக்கோவிலின் சிறப்புக்குக் கீழ்வருவனவும் காரணங்களாகும்:

  • இக்கோவிலில் சீயெனா நகர் புனித காதரின் என்பவரின் கல்லறை உள்ளது.
  • புகழ்பெற்ற சாமிநாதர் சபைத் துறவியும் ஓவியருமான ஃப்ரா அஞ்சேலிக்கோ (முத்திப்பேறுபெற்ற ஃபியேசொலே நகர் யோவான்) என்பவரின் கல்லறையும் இக்கோவிலில் உள்ளது.
  • பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று நவீன வானியலின் தந்தை எனப் போற்றப்பெறும் கலிலேயோ கலிலேயி கூறியது தவறான கொள்கையாகும் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்ட இடம் இக்கோவிலை அடுத்துள்ள துறவியர் இல்லம் ஆகும். பின்னர் கலிலேயோ 1633ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் நாள் தாம் கற்பித்தது தவறு என்று கூறி, தம் கொள்கையைப் பின்வாங்கிக் கொண்டது இக்கோவிலில்தான்.

இக்கோவில் எழுகின்ற இடத்தில் பண்டைக்காலத்தில் ஐஸிஸ் என்னும் எகிப்திய தெய்வத்துக்கு ஒரு கோவில் இருந்தது. அக்கோவில் கிரேக்க-உரோமை தெய்வமாகிய மினெர்வாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகத் தவறாகக் கருதப்பட்டது. அக்கோவில் இருந்த இடத்திலேயே, மரியாவுக்குக் கோவில் எழுப்பப்பட்டதால் மினெர்வா மேல் புனித மரியா கோவில் என்னும் பெயர் தோன்றிற்று. இக்கோவிலின் முகப்பு பார்வைக்கு எளிமையாக இருந்தாலும், கோவிலின் உட்பகுதியில் விலைமதிப்பற்ற கலைச் செல்வங்கள் உள்ளன. சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களைப் பின்னணியாகக் கொண்ட உட்கூரையில், விண்மீன் குறிகள் பதித்த சித்திரங்கள் உள்ளன. கோத்திக் கலைப் பாணி 19ஆம் நூற்றாண்டில் இக்கோவிலில் புகுத்தப்பட்டது. உரோமை நகரில் கோத்திக் கலைப்பாணியில் அமைந்த ஒரே கோவில் இதுவே என்பதும் சிறப்பு.

மினெர்வா மேல் புனித மரியா கோவில் உள்பகுதியின் எழில்மிகு தோற்றம்

கோவிலின் வரலாறு தொகு

இன்று மினெர்வா மேல் புனித மரியா கோவில் எழுகின்ற இடத்தைச் சூழ்ந்த பகுதியும், கோவிலை அடுத்த துறவியர் இல்லப் பகுதியும் முற்காலத்தில் உரோமை கலாச்சாரத்தைச் சார்ந்த மூன்று கோவில்களை உள்ளடக்கியிருந்தன. அக்கோவில்கள்:

  • கி.மு. 50ஆம் ஆண்டளவில் க்னேயுஸ் பொம்பேயி என்பவர் மினெர்வா தெய்வத்திற்குக் கட்டிய கோவில் ("மினெர்வியும்");
  • எகிப்திய தெய்வமாகிய ஐஸிஸ் என்னும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ("ஐசேயும்");
  • சேரப்பிஸ் என்னும் தெய்வத்திற்குக் கட்டப்பட்ட கோவில் ("சேரப்பேயும்").

இம்மூன்று பண்டைய உரோமை சமயக் கோவில்களுள் "ஐசேயும்" என்னும் கோவில் பற்றி அதிகம் அறிய முடிகிறது. "மினெர்வியும்" பற்றி அதிகச் செய்திகள் இல்லை. ஆனால், மினெர்வாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறு கோவில் இன்றைய மரியா கோவிலிலிருந்து சற்று தொலைவில் இருந்ததற்கான அகழ்வாய்வுத் தடயங்கள் கிடைத்துள்ளன.

கி.பி. 1665இல் மரியா கோவிலுக்கு அருகிலுள்ள சாமிநாதர் சபைத் துறவியர் இல்லத் தோட்டத்தில் ஓர் எகிப்திய ஊசித்தூண் (obelisk) அகழ்ந்தெடுக்கப்பட்டது. பின்னர் மரியா கோவிலருகே மேலும் பல எகிப்திய ஊசித்தூண்கள் வெவ்வேறு காலங்களில் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.பி. முதல் நூற்றாண்டில் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டு, இரண்டு இரண்டாக ஐஸிஸ் கோவில் நுழைவாயிலில் நாட்டப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.

மரியா கோவிலின் உள்பகுதி தொகு

மரியா கோவிலின் உள்ளே, அடிமட்டத்திற்குக் கீழ் பண்டைய உரோமைக் கலாச்சாரத் தடயங்கள் உள்ளன. உரோமை சமயக் கோவில்கள் அழிந்து கிடந்த நிலை திருத்தந்தை சக்கரியா காலம் வரை (741-752) நீடித்தது. அவர் காலத்தில் இப்பகுதி கிறித்தவ மயமாக்கப்பட்டது. கீழைச் சபைத் துறவியரிடம் இப்பகுதி ஒப்படைக்கப்பட்டது. அத்திருத்தந்தை காலத்தில் எழுந்த கட்டடம் இன்று இல்லை.

திருத்தந்தை நான்காம் அலக்சாண்டர் மரியா கோவில் பகுதியில் ஒரு துறவற இல்லத்தை 1255இல் நிறுவினார். கிறித்தவ சமயத்தைத் தழுவிய பெண்களுக்கென அவ்வில்லம் அமைந்தது. பின்னர் அத்துறவியர் சான் பங்கிராசியோ என்னும் பகுதிக்கு மாற்றப்பட்டனர். 1275இல் சாமிநாதர் சபைத் துறவியர் கோவிலையும் துறவற இல்லத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றனர். இத்துறவியர் இக்கோவிலையும் துறவற இல்லத்தையும் தம் தலைமையிடமாக்கினர். பிற்காலத்தில் அவர்களின் தலைமையிடம் சாந்தா சபீனா என்னும் இடத்திற்கு மாறியது. மரியா கோவிலும் துறவற இல்லமும் இன்று சாமிநாதர் சபையினரின் பொறுப்பிலேயே உள்ளன.

 
மரியா கோவில் முற்றத்தில் உள்ள ஊசித்தூண். உரோமை நகரில் உள்ள எகிப்திய ஊசித்தூண்கள் பதினொன்றில் ஒன்றாகிய இத்தூணின் அடியில் ஜான் லொரேன்சோ பெர்னீனி உருவாக்கிய புகழ்பெற்ற யானை உருவம் உள்ளது

இன்று கோத்திக் கலைப் பாணியில் அமைந்துள்ள இந்த மரியா கோவில் கட்டடம் 1280இல் வடிவமைக்கப்பட்டது. திருத்தந்தை மூன்றாம் நிக்கோலாஸ் என்பவரின் ஆட்சிக் காலத்தில் எழுந்த இந்த கோத்திக் கட்டடம் சாமிநாதர் சபைத் துறவியரால் கட்டப்பட்டது. அச்சபையைச் சார்ந்த ஃப்ரா சிஸ்தோ ஃபியரென்டீனோ, ஃப்ரா ரிஸ்தோரோ தா காம்பி என்னும் திறமைவாய்ந்த இரு துறவியர் இக்கோவில் கட்டட வரைவை உருவாக்கியதாகத் தெரிகிறது. புளோரன்சு நகரில் சாமிநாதர் சபைப் பொறுப்பில் "புனித மரியா புதிய கோவில்" என்று சீரமைக்கப்பட்ட கோவிலின் அமைப்பை மாதிரியாகக் கொண்டு இத்துறவியர் "மினெர்வா மேல் மரியா கோவிலின்" வரைவை எழுதினர். உரோமையில் கட்டப்பட்ட முதல் கோத்திக் பாணிக் கோவில் என்னும் சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு.

எட்டாம் போனிஃபாஸ் அளித்த உதவியோடு கோவில் கட்டட வேலை தொடர்ந்து, 1370இல் நிறைவுற்றது.

பின்னர் இக்கோவில் கார்லோ மதேர்னா என்னும் கட்டடக் கலைஞரால் புதுப்பிக்கப்பட்டது; பரோக்கு கலைப் பாணியில் கோவில் முகப்புப் பகுதி மாற்றம் பெற்றது. இன்றைய "புது-நடுக்காலக் கலைப் பாணி" (neo-medieval style) 19ஆம் நூற்றாண்டில் புகுத்தப்பட்டது. கோவிலின் நுழைவாயில் கம்பிக் கதவுகள் 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை.

இக்கோவிலின் திருவுடைக் காப்பகப் பேரறையில் திருத்தந்தைத் தேர்தல்கள் இருமுறை நிகழ்ந்தன. 1431இல் நான்காம் யூஜின், 1447இல் ஐந்தாம் நிக்கோலாஸ் அங்குதான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1556இல் இக்கோவில் "இளம் பெருங்கோவில்" (minor basilica) நிலைக்கு உயர்த்தப்பட்டது.

கோவிலின் வெளித் தோற்றம் தொகு

இக்கோவிலின் வெளித் தோற்றம் பரோக்கு கலைப்பாணியில் உள்ளது. இதை கார்லோ மதேர்னா 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் வடிவமைத்தார். பின்னர் "புது-நடுக்காலக் கலைப் பாணியில்" (neo-medieval style) வெளித் தோற்றம் திருத்தப்பட்டது. 16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் டைபர் ஆற்றில் வெள்ளம் எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை இக்கோவிலின் வெளி முகப்பில் பதிந்த அடையாளங்களிலிருந்து கணிக்க முடிகிறது. நீர் மட்டம் 65 அடி (20 மீட்டர்) உயர்ந்ததும் தெரிகிறது.

யானை மீது ஊசித்தூண் தொகு

கோவிலின் வெளிமுற்றத்தில் அமைந்துள்ள விசித்திரமான ஒரு கலைப் பொருள் யானை மீது எழுகின்ற ஊசித்தூண் ஆகும். இதன் வரலாற்றில் சுவையான செய்திகள் உள்ளன. உரோமை நகர் முழுவதிலும் பதினொன்று எகிப்திய ஊசித்தூண்கள் உள்ளன. அவை அனைத்திலும் மிகச் சிறியது இதுவே. இத்தூணின் உயரம் 5.47 மீட்டர். தூணின் மேல் இணைப்பு, தூண் நிற்கின்ற யானை, அடித்தளம், அதன் கீழ் உள்ள நான்கு படிகள் ஆகிய அனைத்தையும் சேர்த்தால் 12.69 மீட்டர் ஆகும்.

இத்தூணும் இதுபோன்ற இன்னொரு தூணும் எகிப்தில் "சாயிஸ்" (Sais) நகரில் கி.மு. 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுப்பப்பட்டவை ஆகும். எகிப்திலிருந்து அத்தூண்களை உரோமைப் பேரரசர் தியோக்ளேசியன் (ஆட்சி: 284-305) உரோமைக்குக் கொண்டுவந்து அவற்றை ஐசிஸ் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலின் முன் எழுப்பச் செய்தார். ஐசிஸ் கோவில் பாழடைந்தபோது ஊசித்தூண் புதைபட்டது. பின்னர் அது கண்டெடுக்கப்பட்டு இன்றைய மரியா கோவிலுக்கு முன் எழுப்பப்பட்டது. ஜான் லொரேன்சோ பெர்னீனி என்னும் கலைஞர் பளிங்கு யானை, ஊசித்தூணின் அடித்தளம் போன்றவற்றை பரோக்கு கலைப்பாணியில் வடிவமைக்க, அவர்தம் மாணவர் ஏர்க்கொலே ஃபெர்ராட்டா என்பவர் 1667இல் அவற்றைச் செதுக்கினார். யானையின் உடலின் ஊடே செல்வதுபோல் ஊசித்தூண் எழுப்பப்பட்டுள்ளது.

ஊசித்தூணின் அடியில் உள்ள தளத்தில் இலத்தீன் மொழியில் செதுக்கப்பட்டுள்ள வாசகம் இது: "விலங்குகளிலெல்லாம் பலம் பொருந்திய விலங்காகிய யானை எகிப்திய அறிவு பொறிக்கப்பட்ட இந்த ஊசித்தூணைத் தாங்கி நிற்பது திடமான அறிவைத் தாங்கிட உறுதியான உள்ளம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது."

இந்த ஊசித்தூண் சிலைத்தொகுப்பு "மினெர்வாவின் கோழிக்குஞ்சு" (இத்தாலியம்: il pulcino di Minerva) என்றும் விளையாட்டாகக் குறிக்கப்படுவதுண்டு.

ஆதாரங்கள் தொகு