மின்னூல் வர்த்தகம்
கணினிகளின் பயன்பாடு பரவலாகி விட்டபின் புத்தகங்கள் மின்வடிவில் வரத்தொடங்கின. முதலில் காகிதப் புத்தகங்கள் கணினியில் படிப்பதற்காக ஒளிபடுத்தப்பட்டு (scan) ஆவணக் கோப்புகளாகத் தயார் செய்யப்பட்டன. பின்னர் மின் புத்தகங்களை படிப்பதற்காக கருவிகள் பல கண்டுபிடிக்கப்பட்டதால் பல கோப்பமைப்புகளில் மின்னூல்கள் இப்போது விற்கப்படுகின்றன.
வரலாறு
தொகுகாகிதப் புத்தகங்களை எண்முறைப் படுத்த தொடங்கப்பட்ட முதல் திட்டம் குடன்பர்க திட்டமாகும். 1971 இல் மேஜைக் கணினிகளில் புத்தகங்களைப் படிப்பதற்காக இது தொடங்கப் பட்டது.[1] 1990 இல், இணையம் விரிவுபடத் தொடங்கிய போது, மின்புத்தகங்கள் குறுந்தகடுகளில் விற்கப்பட ஆரம்பித்தன. 1993 ஆம் ஆண்டு மின் புத்தகங்களைப் படிப்பதெற்கென தனி மென்பொருள் வெளியிடப்பட்டது. அவ்வாண்டு வெளியான On Murder Considered as one of the Fine Arts என்ற புத்தகமே முதல் மின்புத்தகமாகக் கருதப்படுகிறது. அவ்வாண்டே இணையத்தின் மூலம் மின் புத்தகங்களின் விற்பனை தொடங்கியது. 1998 இல் ஐஎஸ்பின் (சர்வதேச புத்தகக் குறியீட்டு எண்) முதன் முதலில் ஒரு மின் புத்தகத்துக்கு வழங்கப்பட்டது.
1998 ஆம் ஆண்டு மின் புத்தகங்களைப் படிப்பதெற்கென ராக்கெட் ஈபுக் மற்றும் சாஃட்புக் என்ற கருவிகள் சந்தையிடப்பட்டன. 1998-99 இல் மின்புத்தகம் விற்கும் வலைத்தளங்கள் தொடங்கப்பட்டன. அறிவியல் புனைவு கதைகளை வெளியிடும் பீன் பதிப்பகம், ஒர் சோதனை முயற்சியாக, தனது புத்தகங்கள் சிலவற்றை மின் புத்தகங்களாக்கி இணையத்தில் இலவசமாக வெளியிட்டது. 2000 இல் காப்புரிமைத் தளைகள் ஏதுமின்றி வெப்ஸ்கிருப்ஷன் நிறுவனம் மின்புத்தகங்களைத் விற்கத் தொடங்கியது. 2005 இல் மோபிபாக்கெட் மின் புத்தக நிறுவனத்தை வாங்கியதன் மூலம், உலகின் மிகப் பெரிய புத்தக விற்பனையாளரான அமேசான், மின் புத்தகச் சந்தைக்குள் நுழைந்தது. இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில், சோனி ரீடர், இலியட், ஐரீட் போன்ற பல மின்புத்தக படிப்புக் கருவிகள் வெளியாகின. 2009 ஆம் ஆண்டு அமேசானின் கிண்டில் கருவி வெளியாகி மின்புத்தக விற்பனை சூடு பிடித்தது. 2010 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் பலகைக் கணினி ஐ-பேடு வெளியான பின், மின் புத்தக வர்த்தகத்தில் பெரும் போட்டி நிலவுகிறது. கூகுள் நிறுவனமும் தற்போது மின் புத்தக வர்த்தகத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.[2][3][4][5][6][7]
காப்புரிமைப் பிரச்சனைகள்
தொகுமின் புத்தக வர்த்தகத்தில் பெரும் பிரச்சனையாக விளங்குவது காப்புரிமை மீறல். காகிதப் புத்தகங்களை அவ்வளவு எளிதில் பிரதி எடுத்து எவராலும் விற்க முடியாது. ஆனால் இணையத்தில் மின் புத்தகங்களை வாங்கும் ஒருவர் எளிதாக அதனை பிறருக்கு இலவசமாக தந்து விட முடியும். இசை வர்த்தகத்தில் நடைபெறும் அறிவுசார் திருட்டைப் போன்றே மின் புத்தகக் கோப்புகள் எளிதில் பயனர்களால் பகிர்ந்துக் கொள்ளப் படுகின்றன. எனவே விற்கப்படும் மின் புத்தகங்கள் எண்முறைக் காப்புரிமை மேலாண்மை மென்பொருட்கள் (Digital Rights Management software) மூலம், வாங்குபவர் மட்டும் படிக்கும் வண்ணம் முடக்கப் படுகின்றன. இத்தீர்வு அனைவருக்கும் ஏற்புடையதாக இருப்பதில்லை. காகிதப் புத்தகங்களை வாங்குபவருக்கு அதனை மறுவிற்பனை செய்யும் உரிமை உள்ளது (en:First-sale doctrine), அதே போல இரவல் தரும் உரிமையும் உள்ளது. ஆனால் எண்முறைக் காப்புரிமை கொண்ட மின்புத்தகங்களை விற்கவும் முடியாது, இரவல் தரவும் முடியாது. எனவே மின் புத்தகங்கள் “விற்கப்” படுவதில்லை மாறாக நிரந்தர குத்தகைக்கே விடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விற்பனையாளர் எந்நேரமும் மின் புத்தகத்தை வாடிக்கையாளரின் கருவியிலிருந்து (படிப்பான் அல்லது கணினி) அழித்து விட முடியும்.[8][9]
மேலும் காப்புரிமைக்காக, மின் புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்கள் அவர்கள் காப்புரிமை பெற்றிருக்கும் கோப்பமைப்புகளில், அவர்கள் விற்பனை செய்யும் கருவிகளில் மட்டுமே படிக்கக்கூடிய மின் புத்தகங்களை வெளியிடுகின்றன. இதனால் வாடிக்கையாளருக்கு வாங்கிய மின் புத்தகத்தை சுதந்திரமாக வேறு கணினிகளிலோ, கருவிகளிலோ படிக்க முடிவதில்லை. அச்சில் இல்லாத ஆனால் காப்புரிமை காலாவதியாகாத அல்லது எழுத்தாளர் அறியப்படாத புத்தகங்களை யார் விற்பது என்ற கேள்விக்கும் தெளிவான விடை இதுவரை கிடைக்கவில்லை.[10][11]
விலை நிர்ணயம்
தொகுகாகிதப் புத்தகங்கள் பொதுவாக ஹார்ட்பேக் (தடித்த அட்டை) எனப்படும் உயர்தரப் பதிப்புகளில் முதலில் வெளியாகுகின்றன. அவற்றின் விலை பதினைந்து முதல் முப்பது அமெரிக்க டாலர்கள் வரை நிர்ணயிக்கப் படுகிறது. சில ஆண்டுகள் கழித்து ஆறு முதல் பன்னிரெண்டு டாலர் விலையுள்ள மலிவு விலைப் பதிப்புகள் வெளியாகுகின்றன. இவ்விரண்டு பதிப்பு வகைகளுக்கும் இடையே உள்ள விலை வித்தியாசத்தின் காரணங்கள் தயாரிப்பு செலவுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கிராக்கி. ஆனால், மின் புத்தகங்களுக்கு அச்சு மற்றும் போக்குவரத்து செலவுகள் கிடையாது. எனவே அவற்றின் விலை உயர்தரப் பதிப்புகளை விட குறைவாக இருக்க வேண்டுமென அமேசான் போன்ற புத்தக விற்பனையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் உலகின் முன்னணி பதிப்பாளர்கள் இதனை ஒப்புக் கொள்வதில்லை. வெளியாகும் காலமும், கிராக்கியும் மட்டுமே புத்தகத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றன என்பது அவர்களது கருத்து. எனவே மின் புத்தகங்களின் விலை உயர்தரப் பதிப்புகளின் விலையை ஒத்தே இருக்கிறது.[12][13]
போட்டி
தொகுதற்போது உலகில் மின் புத்தக விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் அமேசான். அமேசானின் கிண்டில் என்ற மின்புத்தகப் படிப்பான், உலகில் மிகவும் அதிகம் விற்பனையாகியுள்ள படிப்பானாகும். கிண்டிலுக்கு போட்டியாக சோனி நிறுவனத்தின் ஈ-ரீடர், பார்ன்ஸ் அன் நோபிள் நிறுவனத்தின் நூக், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடு பலகைக் கணினி ஆகியவை உள்ளன. இவற்றுள், அமேசான், சோனி, பார்ன்ஸ் அன் நோபிள் ஆகியவை மின் புத்தகங்கள், கருவிகள் இரண்டையும் விற்கின்றன. ஆனால் ஆப்பிள் கருவியை மட்டும் விற்கின்றது; புத்தகம் விற்பதில்லை. மே 2010 இல் கூகுள் நிறுவனம் அனைத்து கருவிகளில் படிக்கக் கூடிய மின் புத்தகங்களை விற்கப் போவதாக அறிவித்துள்ளது.[14][15]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hart, Michael S. (23 October 2004). "Gutenberg Mission Statement by Michael Hart". Project Gutenberg. Archived from the original on 2 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 15 August 2007.
- ↑ "History of ebooks". Archived from the original on 2010-06-28. பார்க்கப்பட்ட நாள் 2010-06-22.
- ↑ "History of ebooks". Archived from the original on 2011-04-10. பார்க்கப்பட்ட நாள் 2010-06-22.
- ↑ "Introducing the Baen free library". Archived from the original on 2010-05-24. பார்க்கப்பட்ட நாள் 2010-06-22.
- ↑ "Bookeen Cybook OPUS". Archived from the original on 2009-10-04. பார்க்கப்பட்ட நாள் 2010-06-22.
- ↑ [1]
- ↑ Apple Launches iPad
- ↑ Amazon Kindle and Sony Reader Locked Up: Why Your Books Are No Longer Yours
- ↑ How Do I Sell My eBook: Kindle, Rights Management, and First Sale
- ↑ E-books to bring prices of books down?[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Don't Judge an eBook Case By Its Coverage
- ↑ iPad vs. Kindle: Can Amazon keep its e-book edge?
- ↑ Apple Courts Publishers, While Kindle Adds Apps
- ↑ The iPad Vs. The Kindle: How Should Amazon Respond?
- ↑ "Google Editions eBook store coming". Archived from the original on 2010-05-10. பார்க்கப்பட்ட நாள் 2010-06-22.